(Reading time: 8 - 16 minutes)

03. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்

srungara seendalgal sillendra oodalgal

மலர்களை அள்ளி வந்து மகிழ்வுடன் கையில் தந்து

மனதினை பகிர்ந்திடவே ஆசை கொள்கின்றேன்

றுநாள் காலை எழுந்ததில் இருந்தே ஸ்வேதா கடைசி நிமிட பாக்கிங், போன் கால்கள் என்று ஏக பிஸியாக இருந்தாள். அவளின் உறவுகள், நட்பு என்று ஒரு ஒருவராக போன் செய்து ஹாப்பி ஜெர்னி சொல்லி, அங்கு அமெரிக்காவில் தற்போதைய தட்ப வெப்பம், அவள் எதை எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும், எங்கு எல்லாம் செல்ல வேண்டும் என்று கிளாஸ் எடுத்தார்கள்.

இந்தக் காலத்தில் குடும்பத்திற்கு ஒரு NRI இருக்கிறார். அல்மோஸ்ட் முக்கால்வாசி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்க்க, இல்லை மகள் பிரசவம் என்று விசிட் செய்து விடுகிறார்கள். அதனால் ஸ்வேதாவிற்கு அவள் கேட்காமலேயே இலவசமாக ஏகப்பட்ட டிப்ஸ்களை அவளின் சுற்றமும் நட்பும் வாரி வழங்கின. அவள் செல்லப்போவது அமெரிக்கத் தலைநகரமான நியூயார்க் என்றாலும் சான்ஃபிரான்ஸிஸ்கோ, சியாட்டில், சிலிக்கான் வேலி, அட்லாண்டா என்று ஒரு இடம் விடாமல் அத்தனை இடத்தின் பூகோள, வரலாற்றுச் சிறப்புகளை அள்ளி வீசினார்கள். அனைவரும் பேசுவதை கேட்டபின்பு சௌத் அமெரிக்காவில் விட்டால், நார்த் அமெரிக்காவிற்கு நடந்தே வரும் அளவு தேறி விட்டாள் ஸ்வேதா. இத்தனை களேபரமும் முடிய மாலை ஆகிவிட்டது.

மாலை நங்கநல்லூர் ஆஞ்சநேயருக்கு வடை மாலை கொடுத்திருந்ததால் அங்கு சென்று வந்து இரவு உணவு உண்டு சிறிது ஓய்வு எடுத்தப்பின் நடு இரவு ஒரு மணி விமானத்திற்கு வேளச்சேரி வீட்டிலிருந்து பத்து மணிக்கு கிளம்பினார்கள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

இவர்கள் ஏர்போர்ட் சென்று வண்டியிலிருந்து இறங்கும்போதே ராமனும், ஜானகியும் வந்து சேர்ந்தார்கள். பெட்டிகள் அனைத்தையும் ட்ராலியில் ஏற்றி ஸ்வேதா தள்ள மற்றவர்கள் உடன் சென்றார்கள்.

“ஸ்வேதா எல்லாம் மறக்காம எடுத்து வச்சுண்டயா. உள்ளப் போறதுக்கு முன்னாடி விசா, பாஸ்போர்ட் எல்லாம் ஒரு வாட்டி செக் பண்ணிக்கோ”

“எதையும் மறக்கலை மாமி. விசா, பாஸ்போர்ட் எல்லாம் என் லேப்டாப் பாக்ல இருக்கு”

“சரிம்மா நீ போய் செக் இன் பண்ணு. நான் எங்க எல்லாருக்கும் விசிட்டர் டிக்கெட் வாங்கிண்டு உள்ள வரேன்”

“சரிப்பா, இங்கயே கூட்டம் நிறைய இருக்கு, உள்ளேயும் அப்படித்தான் இருக்கும்ன்னு நினைக்கறேன். நீங்க உள்ள வந்துட்டு எங்கயானும் சீட் இருந்தா உக்கார்ந்துக்கோங்கோ”

“நாங்க பார்த்துக்கறோம்மா. நீ ட்ராலியை ஜாக்கிரதையா தள்ளிண்டு போ”, பத்து சொல்ல, அனைவரிடமும் தலை அசைத்து செக் இன் செய்ய உள்ளே சென்றாள் ஸ்வேதா.

ஸ்வேதா பெட்டிகளை செக் இன் செய்து, போர்டிங் பாஸ் வாங்கி வர அதற்குள் மற்றவர்களும் டிக்கெட் வாங்கி உள்ளே வந்திருந்தார்கள்.

“ஸ்வேதா செக் இன் எல்லாம் முடிஞ்சுதா. வெயிட் ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”, லக்ஷ்மி கேட்க, தன் பெட்டியில் தன் சாமான் கால் வாசியும், ஹரி சாமான் முக்கால் வாசியும் அடைத்த அம்மாவை முறைத்தாள் ஸ்வேதா.

“ஏம்மா ஸ்வேதா உங்க ஆபீஸ்ல அனுப்பறதும்தான் அனுப்பறா, வெயில்காலமா அனுப்பக்கூடாதோ. இப்படி நவம்பர் மாசம் குளிர்ல போய் மாட்டிக்கப்போறியே”

“என்ன பண்றது மாமி. ப்ராஜெக்ட் சப்போர்ட் இப்போதானே தேவைப்படறது அவாளுக்கு”

“ரொம்ப ஜாஸ்தி வெளில அலையாத ஸ்வேதா. இருக்கற மூணு மாசம் உடம்ப ஜாக்கிரதையா பார்த்துண்டு வா”, பத்து தன் பங்குக்கு கவலைப்பட்டார்.

“கவலைப்படாதீங்கோப்பா. விசா, டிக்கெட்ன்னு ஏகப்பட்ட காசு செலவழிச்சு என்னை அங்க வரவைக்கறா. அதுக்கு முழு நேரமும் வேலை வாங்காம விட மாட்டா. இதெல்லாம் மிஞ்சி சுத்திப்பாக்க எங்க டைம் இருக்கப்போறது”

“வேலை வேலைன்னு வேளைக்கு சாப்டாம உடம்ப கெடுத்துக்காத. எத்தனை வேலை இருந்தாலும் நேரத்துக்கு சாப்பிடு. அதே மாதிரி பிஸ்ஸா, பர்கர்ன்னு வெளில கண்டதைத் திங்காம ஒழுகா ஆத்துல இருந்து சமைச்சு எடுத்துண்டு போ. தினம் ஒரு வாட்டி போன் பண்ணு. செவ்வாய், வெள்ளி எண்ணைத் தேய்ச்சுக் குளி. கம்ப்யூட்டரையே கட்டிண்டு அழறதுக்கு எண்ணைத் தேய்ச்சுக் குளிக்கலைன்னா உடம்பு சூடு எடுத்துப் போகும்”, லக்ஷ்மி கூற சரி என்று தலை அசைத்தாள் ஸ்வேதா.

“அம்மா, US போகணும்ன்னு என்னைக்கு சொன்னாளோ அன்னைலேர்ந்து தினம் சுப்ரபாதம் மாதிரி இதைத் தானேம்மா பாராயணம் பண்ணிண்டு இருக்க. கேட்டு கேட்டு நேக்கு நன்னா மனப்பாடமே ஆயிடுத்து. தூக்கத்துல எழுப்பிக் கேட்டாக்கூட கரெக்டா சொல்லுவேன். இப்போக்கூட கடைசி வரி சொல்லட்டா, டைம் கிடைக்கும்போதெல்லாம் பாட்டை விடாம பிராக்டிஸ் பண்ணு. சாதகம் பண்ணப் பண்ணத்தான் சாரீரம் நன்னா வரும், கரெக்டா”, ஸ்வேதா சொல்ல லக்ஷ்மி தன் சம்மந்திக்கு நேராக தன் மானத்தை வாங்கும் பெண்ணைப் பார்த்து பல்லைக் கடித்தார்.

“ஏன் மாமி, இந்த நல்லப் பழக்கத்தை எல்லாம் உங்க மாட்டுப்பொண் கெளரிக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுக்கப்படாதா. என்பொண்ணும் கொஞ்சம் பொறுப்பா இருப்பாளோ இல்லையோ”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.