(Reading time: 6 - 11 minutes)

05. என் காதல் பொன்னூஞ்சல் நீ - ப்ரியா

En kathal ponnunjal nee

கையை பற்றி தடுத்தவனை திகைத்து பார்த்தாள் அனன்யா. ஆனால் அவன் முகத்தில் எந்த வித உணர்வோ சலனமோ இல்லை.மாறாய் பிடிவாதம் மட்டுமே!

அவள் கேள்வியாய் நோக்குவதை கவனித்தவன்,

"உங்கிட்ட பேசணும்ன்னு சொன்னேன்" என்றான். மெல்ல அவள் கையையும் விடுவித்தான்.

அவள் அமரவும் சற்றே மௌனம் அவனிடம். அவள் காபியை இன்னும் பருகாததை கவனித்தவன் சைகையில் காப்பியை காட்டி 'ம்ம்ம்' என்று குடிக்குமாறு சொல்லி விட்டு தன் கோப்பையை எடுத்துக் கொண்டான். பேச வேண்டுமென அவளை மீட்டிங் ரூமில் பார்த்த உடனேயே தீர்மானித்து விட்டான்.

ஆனால் என்ன பேசுவது? உள்ளதை அப்படியே சொன்னால் இவள் என்ன நினைக்க கூடும்? இது  சொல்லக் கூடிய விஷயம் கூட இல்லையே. பேசப் போவதை யோசித்தவன் காபியை குடித்து முடித்து விட்டு அவள் முகம் பார்த்தான்.

அவன் பார்க்கிறான் என்பதை உணர்ந்தவள் மீதம் இருந்த காபியை அவசரமாய் அவள் பருக, அவனிடம் ஒரு சிரிப்பு. மிக மெல்லியதாய்.. சிரிக்கிறான் என்பதை மைக்ரோஸ்க்கோப் வைத்து தான் பார்க்க வேண்டும் போல..

"எ.. என்ன பேசணும்?"

"எதுக்கு இப்போ தந்தி அடிக்கிற?" நடுங்கும் அவள் விரல்களை பார்த்து அவன் கேட்க, கோபத்தின் சாயல் இவள் கண்களில்.

"என்ன பேசணும் சொல்லுங்க?" இப்போது குரலில் கூடுதல் கம்பீரம்.

"நீ இந்த ஆபிஸ் தானா?"

"அப்படி தான் நானும் நினைக்கிறேன்.. ஏன்? அன்னைக்கு என் ஸ்கூட்டியை என்கிட்ட இருந்து பிடுங்கிட்டு போனீங்களே? அதே மாதிரி இப்போ மேனேஜர் கிட்ட எதையாவது சொல்லி என் வேலையும் பிடுங்கணும்ன்னு ஏதாவது நேர்ந்துக்கிட்டிங்களா?"

இவ்வளவு பேசுவாளா இவள்? வாயாடி தான் போல..

மனதுக்குள் தேவை இல்லாத கேள்வியும் பதிலும்..

அவன் அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்தவள் ஒரு சிறு எரிச்சலுடன் தொண்டையை செரும,

"அன்னைக்கு உன் ஸ்கூட்டியை ஏன் எடுத்துட்டு போனேன்னா.."

"ஹேய் அம்மு.. இங்க தான் இருக்கியா உன்னை எங்க எல்லாம் தேடுறது?" என்ற படி பரத் வந்து சேர,

அன்று நடந்ததற்கான காரணத்தை சொல்ல வந்தவன் அப்படியே விழுங்கி விட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று விட்டான்!! அவன் போவதற்குள் அவனிடம் பேச வந்த பாரத்தையும் அவன் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.

"ஹே நம்ம புது டீம் லீட் தான?"

"ம்ம்ம் ஆமா"

"பாருடா உன்கூட மட்டும் தான் பேசுவாரா? வந்த முதல் நாளே டீம் ல அழகான பொண்ணு கூட காபி??!! ஹ்ம்ம் கலக்குறாரே"

"டேய் குரங்கு அடங்கு அதெல்லாம் ஒன்னும் இல்லை"

"இது உனக்கே நியாயமாடி? என்னை தனியா விட்டுட்டு வந்தது மட்டும் இல்லாம இங்க வந்து இவர் கூட 'காபி வித் அனு'வா?"

"நீ கண்டிப்பா இன்னைக்கு என் கையாள சாகப் போற, அவர் கூட நான் ஒன்னும் வரலை"

"ஐ.. ஐ.. இதை என்ன நம்ப சொல்றியா? ஆள் கொஞ்சம் கருப்பு தான்.. ஆனாலும் இது ஓவர் டி.."

"ஒழுங்கா ஓடி போய்டு"

"இருடி புளிமூட்டை.. பாக்க நல்ல தான் இருக்கான் ஆனா சிடுமூஞ்சி போல இருக்கே?"

"பரத்.... போதும் நிறுத்து" அனன்யா கோவம் கொப்பளிக்க சொல்ல, அதை மேலும் தூண்ட

"அந்த சப்போர்ட் டீம் ராகவ் எத்தனை நாளா இதுக்காக ஏங்கிட்டு இருக்கான்? ஒரு நாள் அவன் கூட காபி சாப்பிட வந்திருப்பியா? அட்லீஸ்ட் டீம் போகும் போது வந்துருப்பியா? இவனுக்கு ஏதோ லக் இருக்கு டி"

என்று சிரித்துக் கொண்டே அவளை பார்க்க, கண்களை உருட்டி கொண்டு அவன் கைகளில் தன் நகங்கள் பதியுமாறு கீறினால் அனன்யா.

கோபம் வந்தால் இப்படி தான்.. இது செல்ல கோவம்.. நிஜ கோபம் என்றால் ??!!  சற்றே ரத்தம் எட்டி பார்க்க அவன் மைதா மாவு நிறத்தில் இருந்த கைகளில் செவ்வரிகளாய் அவள் நகம் இழுத்த கோடுகள்.

"ஆஆஆஆஆ.. ஆ பண்ணி பண்ணி ராட்சசி பிசாசு, எரியுது டி எருமை" காத்திக் கொண்டே அவன் காயத்தை ஊதிவிட,

"ஐயையோ ரொம்ப வலிக்குதா பாத்தி?" என்று கலங்கியபடி கெட்டவள், அருகில் இருந்து தண்ணீர் டம்ளரை எடுத்து அவன் காயத்தின் மேல் தண்ணீரை ஊற்றி,

"நல்லா வேணும் இனிமேல் இப்படி பண்ணுவியா? பண்ணுவியா?"

"ஐயோ.. வலிக்குது டீ .. ஆஆஆ பண்ண மாட்டேன் கண்டிப்பா பேச மாட்டேன்" என்று சரணடைய, இப்போது நிஜமாகவே கலங்கியபடி அவன் கைகளை பற்றி தன் கைக்குட்டையால் மெல்ல துடைத்து விட்டபடி மன்னிப்பு கேட்டால்.

"சாரி டா, வலிக்குதா?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.