(Reading time: 8 - 15 minutes)

02. பூவுக்கென்னப் பூட்டு - விமலா தேவி

Poovukkenna poottu

ரு நிமிடத்தில் தன் வாழ்க்கைத் துணையை ஒரு பெண்ணால் தேர்வு செய்ய முடியுமா.. ஒரு புடவை எடுக்க ஆயிரம் முறை யோசிக்கும் பெண், ஒரு காய்கறி வாங்க கூட பலவற்றை புரட்டி கழித்து தேர்ந்தெடுக்கும் பெண், தன் எதிர்காலத்திற்கு அச்சாணியான கணவன் என்னும் ஆண்மகனை தேர்வு செய்ய இந்த சமூகம் அவ்வளவு அவகாசமோ இல்லை சுதந்திரமோ கொடுப்பதில்லை.

பையனை பிடிச்சிருக்கா என்ற ஒரு கேள்வியில் எப்படி சொல்ல முடியும். ஆயினும் பெண்ணுக்கு வரைமுறை அவ்வளவே. பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால், “ஏனாம்? அவனுக்கு என்ன குறைச்சல்? பிறகு எப்படி வேணுமாம் உனக்கு? யாரை காட்டினாலும் பிடிக்கலைன்னு கழிக்குற.”.. இளக்காரமாய் பதில் வரும்.

குனிந்தவாறே யோசித்துக்கொண்டிருந்த என்னை பிடித்துலுக்கிய அமிழ்தினி,

“ஹேய் என்னடி யோசனை?”

“பச் ஒன்னும் இல்லடி”

“இல்ல எங்கிட்ட மேரேஜ்ல இன்ட்ரெஸ்ட் இல்லன்னு சொன்ன, அங்க போய் யாருமே கேட்காம எனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு வந்து நிக்குற. ஒரே பார்வையில மாப்பிள்ளை உன்னை மயக்கிட்டாரா என்ன?.”

“வேற என்ன சொல்ல சொல்லுற?”

“என்ன சொல்லுறடி அப்போ உனக்கு மாப்பிள்ளையை பிடிக்கலையா?”

“ஐயோ அப்படிலாம் இல்ல”

“உன்னை கொல்லப்போறேன். தெளிவா குழப்புற. அவர் பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லுறதுக்கு முன்னாடியே அவரைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு இங்க மூஞ்சிய தூக்கி வச்சிருக்க. யாரும் மிரட்டுனாங்களா உன்னை?. சொல்லு ஆளை தூக்கிருவோம்.”

“ஐயோ ஏன் டென்ஷன் ஆகுற? அவருக்கு தான் என்னைப் பிடிச்சிருக்குன்னு மூஞ்சிலேயே எழுதி ஒட்டிருக்கே. அத தனியா வேற தெரிஞ்சிக்கணுமா? எங்கிட்ட வந்து எப்படியும் கேட்கப்போறாங்க பிடிச்சிருக்கான்னு. நாங்க உனக்கு நல்லதுதான் செய்வோம்னு டயலாக் வரும், எதுக்கு பெரியவங்களுக்கு அவ்வளவு சிரமம் கொடுக்கணும்னுதான். அது மட்டுமில்ல, பையங்கிட்டயும் எதும் பெருசா குறை இல்லை நல்லா தான் இருக்குறார். சோ சரின்னு சொல்லுறதை தவிர வேற சாய்ஸ் இல்லடி. இல்லன்னா பையன் பேரு கூட தெரியாம நான் ஓகே சொல்லுவேனா?”

அமிழ்தினியும் நான் கூறியதை ஆமோதிப்பவளாய் மௌனமாய் என் கையைப் பிடித்துக்கொண்டாள்.

“என்னது பையன் பேரு கூட தெரியாதா? சரி விடு சித்தப்பா வரட்டும். கேட்குறேன்”

“அதெல்லாம் வேணாம்டி. மெல்ல தெரிஞ்சிக்கலாம்”

“லூசு இப்படி விட்டேத்தியா இருக்காத. மேரேஜ் லைஃப் ஒருதடவை தான் வரும். மேரேஜ் முன்னாடி வர்ற நிமிஷம் ஒவ்வொன்னும் ப்ரிஷியஸ். அத அனுபவிக்கணும்டி. சரி இரு என் வுட்பீ அப்போ இருந்து கால் பண்ணிட்டே இருக்குறார். நான் பேசிட்டு வரேன்” என்றபடி வெளியே சென்றாள்.

ரூமிற்கு வெளியே பேச்சுக்குரல் கேட்டது.

பையன் வீட்டை சேர்ந்த ஒரு பெரியவர்,

“என்னப்பா பொண்ணு பிடிச்சிருக்குன்னு பட்டுன்னு சொல்லிருச்சு. உனக்கு பிடிச்சிருக்கா?”

“பிடிச்சிருக்குங்க” சிறு புன்னகையுடன் வந்தது அவனது பதில்.

“அப்போ மேற்கொண்டு பேச வேண்டியதை பேசலாம். நீங்க என்ன எதிர்பார்க்குறீங்கன்னு சொல்லுங்க. பொண்ணுக்கு அப்பா அம்மா இல்லைன்னு சாதாரணமா செய்யமாட்டோம். என்ன வேணுமோ கேளுங்க” தன்மையாக கேட்டார் சித்தப்பா.

“நீங்க செய்யுறதை செய்யுங்க. எங்க குடும்பத்துக்கு நல்ல மருமகளா இருந்தா போதும் வேற எதும் எதிர்பார்க்கலை. என் தம்பிக்கு ஏத்த பொண்ணா இருக்கா சத்யா. அதுவே சந்தோஷம்” என்றார் பையனின் அக்கா.

அப்பொழுது அங்கு இருந்த என் சித்தப்பா பையன் ரமேஷ், “மாமா என் அக்கா நம்பர் வேணாமா? நீங்க போன் பேசணும்னா தேவைப்படுமே” மாப்பிள்ளையை கலாய்க்க ஆரம்பித்துவிட்டான்.

“கல்யாணத்துக்கு முன்னாடி பேசுற பழக்கம் அவ்வளவு நல்லதில்லையே” ஏதோ ஒரு கிழவி வம்பளந்தது.

“பொண்ணு போன் நம்பர் இல்லன்னா என்ன, என் நம்பர் நோட் பண்ணிக்கோ தம்பி” என ரமேஷிடம் தன் நம்பரை கொடுத்தான் மாப்பிள்ளை.

றையில்,

போன் பேசி முடித்த அமிழ்தி என்னை நோக்கி வந்தாள்.

“என்ன சொல்லுறாரு உன் ஆளு” கண்சிமிட்டியபடி கேட்டேன்.

அவளோ அநியாய வெட்கத்துடன், “ரொம்ப மிஸ் பண்ணுறாராம். இவ்வளவு நேரம் பேசலைல்ல. இல்லன்னா பத்து நிமிஷத்துக்கு ஒருதடவை கால் வரும். நான் தான் பொண்ணு பார்க்குற இடத்துல தொந்தரவா இருக்கும் கால் பண்ணாதீங்கன்னு சொல்லி வச்சிருந்தேன். அவருக்கு என் மேல அவ்வளோ லவ் தெரியுமா?.” என்றாள்.

கண்ணில் காதல் மின்ன, கனவுகளில் சஞ்சரிக்க போனவளை செல்லமாய் தட்டி,

“அடியே அடியே போதும் போதும் ட்ரீம் லேண்டுக்கு போயிடாத. அப்பப்ப போன்ல என்னதான் பேசுவாறோ தெரியலை. புக்கும் கையுமா இருந்த உன்னை போனும் கையுமா ஆக்கி பித்து பிடிக்க வச்சிட்டாரே” என்றேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.