02. தவமின்றி கிடைத்த வரமே - லேகா
மணி இப்போது சரியாக எட்டு (என்னடா டைம் எல்லாம் சொல்றாளேன்னு பார்க்கிறீர்களா? ஒரு punctuality தான்). வேளச்சேரியில் உள்ள ஒரு தனிவீடு அது. முன்புறம் சிறிய தோட்டம், அதனைத்தாண்டி வாகனங்களை நிறுத்த இடம் என ஒவ்வொன்றும் நன்கு யோசித்துக் கட்டப்பட்டிருந்தது. கட்டடத்தைக் கட்டி பல வருடங்கள் ஆனாலும், சரியான பராமரிப்பால் புதியதாக மிளிர்ந்தது. வெளியில் கொஞ்சம் பழைய பாணியில் தோன்றினாலும், வீட்டின் உட்புற அலங்காரம் வியக்கத்தகுந்த வகையில் இருந்தது. கீழே சமையலறை, மூன்று குளியலறையுடன் கூடிய படுக்கையறை, மேலே இன்னும் இரண்டு படுக்கையறை, பால்கனி என விசாலமாகவே இருந்தது அந்த வீடு.
இங்கு தான் நாம் தேடிவந்த இருவருமே கிடைப்பர் என்று கேள்வி. எங்கிருந்தோ நல்ல மணம் வருகிறதே. அந்த மணத்தைப் பின்தொடர்ந்து நாம் சென்றால் நாம் போய்ச் சேர்ந்த இடம் சமையலறை. (இங்கேயுமா? அங்க தான ப்ரியா காஃபியில் இருந்து எஸ்கேப் ஆகி வந்தோம்? அண்ணா, நாங்க போய்ட்டு அப்புறம் வரோம் என்றால் இன்று கதை அவ்வளவு தான் என்பதால், எதுவும் சத்தம் போடாமல் வாருங்கள், என்ன நடக்கின்றது என்று காண்போம்).
அதேநேரம், தன் கையிலிருந்த சாவியால் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான் இன்னொருவன், “மச்சான்” எனக் குரல் கொடுத்துக்கொண்டே. “வாடா மச்சி” என்று கூப்பிட்டு தான் இருக்கும் இடத்திற்கு அழைத்தான் சமையல் செய்பவன்.
“என்ன ப்ரனிஷ் செய்யுற?”
“சிக்கன் மக்ரோனி மச்சான். எப்பவுமே சாதம் சாப்பிட்டு வெறுப்பாக இருக்கு. அதனால்தான்” என்று கூறிக்கொண்டே தயாராக வைத்த மக்ரோனியை வாணலியில் போட்டு தண்ணீர் வற்றியவுடன் இறக்கிவைத்தான் ப்ரனிஷ்.
“இந்த கஸ்டத்துக்குத்தான் நம்ம வீட்டுல சாப்டுக்கோன்னு சொன்னேன். எங்க கேக்குற?”
“ஒரு நாள் சாப்டலாம், இரண்டு நாள் சாப்டலாம். தினமும் முடியாதுடா. உங்களுக்கும் கஷ்டம்”
எவ்வளவு சொன்னாலும் இவன் கேட்கமாட்டான் என்பது நன்கு தெரிந்ததால், பேச்சை மாற்றும் பொருட்டு, “ஏற்கனவே PPSKPS-இடம் உன் சின்சியாரிடி, பங்க்சுவாலிடி, இன்னும் பல டீகளால் நான் திட்டு வாங்குறேன். இதில் நீ சமையல், அதுவும் அசைவம் செய்வது பார்த்தால் நான் அவ்வளவுதான்” என்று ஏகத்திற்கும் வருத்தப்பட்டான் அந்த இன்னொருவன்.
“அது யாருடா PPSKPS?”
“PPS என்றால், ப்ரனிஷினை பாராட்டும் சங்கம். KPS என்றால், கொள்கை பரப்பு செயலாளர்.” என்று ஏற்ற இறக்கத்துடன் கூறினான் அவன்.
“சகிக்கலை. சரி. யார் அந்த KPS?”
“வேறு யார்? மதிப்பிற்குரிய திருமதி வாசுகி அம்மையாரே!”
“டேய்! அவங்க உன் அம்மா” என்றான் ப்ரனிஷ்.
“அதுவும் தான் மச்சான். பட், முழு நேர வேலை உன்னை பாராட்டுவது. என் காதில் ரத்தமே வருது மச்சி” என்று சொல்லிக்கொண்டே வாசனையை முகர்ந்து பார்த்தவன், “செம வாசனையா இருக்கேடா. எப்போ இது எல்லாம் கத்துக்கிட்ட?” என்றான்.
“அம்மா புதுசா ஏதாவது செய்துட்டே இருப்பாங்கடா. அதில் இதுவும் ஒன்று”
“ஆனால் என்னிடம் சிக்கன் செய்வேன் என்று சொல்லலையே மச்சி நீ?”
“மறந்துபோச்சுடா. இப்போதான் ரொம்ப நாள் கழிச்சு செய்திருக்கேன். சரி வா சாப்பிடலாம்” என்று சொல்லி தன் நண்பனையும் அழைத்துக்கொண்டு உணவு மேசையில் சென்று அமர்ந்தான்.
இருவரும் தங்களுக்குரிய தட்டுகளை எடுத்துக்கொண்டு அந்த சிக்கன் மக்ரோனியை சுவைத்து சாப்பிடத் தொடங்கியிருந்தார்கள். (இதுக்கு நான் போய்ட்டு இன்னொரு நாளே வந்துருக்கலாம். இப்போ பாருங்க, எப்படி சாப்பிடறாங்க. வாசனையே ஆளத் தூக்குது. “ஆளுக்கு 2 ப்ளேட் பார்சல்”ன்னு சொல்ல ஆசைதான், தரமாட்டாங்களே!)
சரி. வந்ததும் வந்தாச்சு. வாங்க, இவர்கள் சாப்பிடுவதற்குள் நாம் ஒரு background check பண்ணிட்டு வந்துவிடலாம் (அதுதாங்க இவர்களைப் பற்றிய விபரங்களைப் பார்ப்பது)
ப்ரனிஷ் அபிமன்யு என்னும் பெயருடைய ப்ரனிஷின் வயது இருபத்தியெட்டு; இயற்கையில் மிகவும் அமைதியான குணமுடையவன்; மாடலிங்கினுள் மட்டும் புகுந்திருந்தால் பலபேருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருப்பது நிஜம்; அதற்கு காரணம், உடற்பயிற்சியினால் செதுக்கிய உடற்கட்டும், மாநிறம் என்றாலும் பார்ப்போரை வசீகரிக்கும் முகமும் புன்னகையும். இவனுக்கு சொந்தஊர் மலைக்கோட்டையை மையமாகக் கொண்டுள்ள திருச்சி என்னும் திருச்சிராப்பள்ளியை அடுத்த ஒரு கிராமம். ப்ரனிஷ் தன் தாய் தந்தையர்க்கு இரண்டாவது மகவு.
ப்ரனிஷின் தந்தை ராமபத்திரர் சென்னையில் பார்த்துவந்த பேராசிரியர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன் மனைவி பார்த்தவியுடன் தன் சொந்த ஊரான திருச்சியிலேயே வந்து தங்கிவிட்டார். ஆரம்பகாலத்திலிருந்தே சென்னையில் இருப்பதால் வாங்கிய வீடு தான் இப்போது இருப்பது. இவனுக்கு முன் பிறந்த தமக்கையாரின் பெயர் சுசித்ரா. அவரும் அவரது உள்ளம் கவர்ந்த கள்வனும் இப்போது திருமணமாகி டூயட் பாடிக்கொண்டிருக்கின்றனர், ஃப்ரான்ஸில் நிரந்தரமாக. இவர்களது தவப்புதல்வன் ரித்விக், வீட்டின் குட்டிக்கண்ணன்.
சொந்தமாக தோட்டம், துரவு என்று இருந்தாலும் தந்தையைப் போலவே தானும் மனதிற்குப் பிடித்த வேலையைத் தான் செய்வேன் என்று கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி ஒன்று ஆரம்பித்த இந்த எட்டு வருடங்களில் அதனை மாநிலத்தில் முன்னனி நிறுவனங்களுள் ஒன்றாக உயர்த்திவிட்டான். சிறு நிறுவனமாக ஆரம்பித்து, இன்று இந்த அளவுக்கு நிறுவனம் வளர்ந்துள்ளதன் முழுமுதற் காரணம், நம் ப்ரனிஷ். இவனின் அடுத்த இலக்கு, நாடு முழுவதும் தன் நிறுவனத்தை மேலோங்கச் செய்வது.