ராமபத்திரரும் பார்த்தவியம்மாளும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்துவரும் தம்பதியர். கணவன் மனைவி உறவு என்பது ஒரு உன்னதமான நட்பின் அடித்தளத்தில் அமைவது என்று உணர்ந்து வாழ்பவர்களுக்குள் பிரிவென்பதே என்றும் வர வாய்ப்பில்லை. இவ்விருவரும் இதனை நன்கு அறிந்துவைத்திருந்தனர். அதனாலேயே தங்கள் பெண் காதலிக்கிறேன் என்று வம்சிகிருஷ்ணனுடன் வந்து நின்றபோது நல்ல இடமாக இருந்ததாலும் இருவருக்குள்ளும் இந்த புரிதலைக் கண்டதாலும், தடை ஏதும் போடாமல் தாங்களே முன்னின்று திருமணத்தை நடத்தியும் வைத்தனர்.
ப்ரனிஷுடன் அமர்ந்திருக்கும் இன்னொருவரின் பெயர் யாதவ் என்கிற யாதவேந்திரன். யாதவ் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்ததால் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறான். யாதவின் தந்தை தமிழகத்தின் பல பகுதிகளில் இயங்கும் ஒரு வெற்றிகரமான துணிக்கடலின் அதிபதி. அவரது பெயர் தமிழ்நேசன். வள்ளுவனுக்கொரு வாசுகிபோல் இவரது வாசுகியின் பெயரும் வாசுகியே. தனது விருப்பத்தை பிள்ளையின் மேல் திணிக்காமல், அவரவர்கள் விருப்பத்தை அங்கீகரிக்கும் பெற்றோர் கிடைப்பதே ஓர் வரம் தான். அத்தகைய பாக்கியம் யாதவிற்கு கிடைத்தது.
ஆம், தமிழ்நேசனுக்கு யாதவ் தனக்குத் துணையாக வியாபாரத்தை விஸ்தரிப்பதில் உதவவேண்டும் என்று அவா. ஆனால், மகனின் விருப்பம் அறிந்தபின்னர், அதற்குத் தடை ஏதும் சொல்லவில்லை. அதன் காரணம், தனக்குப் பின்னர், தன் மகன் கண்டிப்பாக நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை. என்னதான் வேறு துறையில் பணிபுரிந்தாலும் வாரம் ஒருமுறை கடைகளுக்குச் சென்று கணக்கு வழக்குகளைப் பார்த்து தன் ஆலோசனைகளையும் வழங்குபவன் அல்லவா?
ப்ரியாவிற்கு வர்ஷினி எப்படியோ, அவ்வாறே ப்ரனிஷிற்கு யாதவ். யாதவும் ப்ரனிஷும் சிறுவயதிலிருந்தே அருகருகே வசிப்பதாலும் ஒரே பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்றதாலும் இணைபிரியா தோழர்களாகிப் போயினர்; இருவருக்கும் நடுவில் கள்ளமில்லாத புனிதமான நட்பு மலர்ந்திருந்தது. ப்ரனிஷை எந்நேரமும் இரு கரம் விரித்து வரவேற்பர் யாதவின் பெற்றோர். அதேபோல, திருச்சிக்கு சென்றால், முதல் உபசரிப்பு யாதவிற்கே. இரு குடும்பத்திற்கும், அருகருகே வசித்த பந்தத்தைத் தாண்டி ஒரு மென்மையான உறவு இருந்துவருகிறது.
தினமும் காலையில் சந்திப்பது இல்லையென்றாலும், மாலை வேளை இருவருக்கும் பெரும்பாலும் ஒன்றாகவே முடியும். இன்று இந்த காலை சந்திப்பு ஏனென்றால், யாதவின் பெற்றோர் ஒரு திருமணத்திற்காக தஞ்சாவூர் சென்றிருக்கும் காரணத்தால்.
அவர்கள் இருவரும் காலையுணவை முடித்துவிட்டு எழுவதுபோல் தெரிகிறது. வாருங்கள் நாமும் அவ்விடம் செல்லலாம்.
“சமையல் சூப்பர் மச்சி. என் தங்கை ரொம்ப கொடுத்துவைச்சவள்” என்று இல்லாத தங்கச்சிக்காக பெருமைப்பட்டான் யாதவ்.
“உன் தங்கையை சீக்கிரமா வரச்சொல்லு மச்சான். தனியாக ஊர் சுற்றி போர் அடிக்குது” என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொன்னான் ப்ரனிஷ்.
“இவ்வளவு ஃபீல் செய்றியேடா. இரு என் தங்கையை இப்பவே வரச் சொல்றேன்” எனக் கூறி தன் கைப்பேசியை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைத்தான் யாதவ்.
அவன் யாருக்கு அழைக்கிறான் என்று எட்டிப் பார்த்த ப்ரனிஷ் உடனே ஃபோனைப் பிடுங்கி கட் செய்து, “உனக்கு நான் நல்லா சமைச்சு குடுத்ததுக்கு என்னை அந்த ராட்சசியிடம் மாட்டிவிடப் பாத்தியேடா” என தன் நண்பனின் முதுகில் டின்னு கட்டினான் ப்ரனிஷ். விளையாட்டாக இருவரும் இவ்வாறு அடித்துக்கொள்வது சகஜம் என்பதால், யாதவும் “அவதான் மச்சி உனக்கு கரெக்ட்டான ஆளு” என்று தன் வாயாலேயே ஆப்பு வைத்துக்கொண்டான். அதன்பின் சரமாரி அடி தான் விழுந்தது. வீட்டை சுற்றிச் சுற்றி ஓடி “சாரி மச்சான்” என இரு கை தூக்கி யாதவ் சரணாகதி அடைந்தபின் தான் விட்டான்.
இன்னும் சில நேரம் இருவரும் வளவளத்துவிட்டுக் கலைந்துசென்றனர், மாலை மீண்டும் சந்திப்பது என்ற முடிவோடு.
ஒன்பது மணி அடிக்க, வீட்டின் மேல்தளத்திலுள்ள அறையிலிருந்து கருப்புநிற கோட் சூட்டில் கையில் ப்ரீப்கேஸுடன் வெளிப்பட்டான் ப்ரனிஷ். ஒருமணி நேரத்திற்கு முன் டீ-ஷர்ட், ஷார்ட்ஸ் என பார்த்த, கலகலப்பை மட்டுமே உடுத்தி நின்றவனுக்கும், இப்போது வந்து நிற்கும் இவனுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், இவனது முகத்தில் இருந்த அந்த குறும்புத்தனம் சற்று குறைந்து, தீவிரம் ஓங்கியிருந்தது. அறைகளை சுத்தப்படுத்த வந்தவர் விடைபெற்றுச் சென்றவுடன் தன் காரில் அமர்ந்து விரைந்தான் தன் அலுவலகத்தை நோக்கி.
சென்னையின் மத்தியில் அமைந்திருந்தது அந்த வானளாவிய கட்டிடம். அதன் முகப்பில் RP CONSTRUCTIONS என்று பெரியதாக பொறிக்கப்பட்டிருந்தது. அதன் பார்கிங் லாட்டில் அந்த கார் வந்து வேகமாக நின்றது. அதன் வருகைக்காகக் காத்திருந்தது போலவே எங்கிருந்தோ ஓடிவந்து கதவைத் திறந்தார் காவலாளி.
“குட் மார்னிங் சார்” என்று கதவைத் திறந்து அவர் மரியாதை செலுத்தியதற்கு தலையசைப்புடன் கூடிய சிறு புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்து உட்புறம் நோக்கி நீள் எட்டுகளாக வைத்து நகர்ந்தான். அலுவலகப் பணியாளர்களுக்கும் இதேதான். வேலை என்று வந்துவிட்டால் மற்ற எல்லாமே இவனுக்கு இரண்டாம்பட்சம் ஆகிவிடும். அதே உத்வேகத்தைத் தன் கீழே வேலை பார்ப்பவர்களிடமும் எதிர்பார்ப்பான். அவ்வாறு இருப்பவர் என்றால் ஒன்றும் பிரச்சனையில்லை. அப்படி இல்லையென்றால், ப்ரனிஷின் இன்னொரு முகத்தைப் பார்க்க வேண்டிவரும்.
அதற்காக ப்ரனிஷை ஒரு சிங்கமாகவும் அவனது அலுவலக அறையை ஒரு சிங்கத்தின் குகையாகவும் நினைத்துப் பார்க்க வேண்டாம். ஏனென்றால், தன்னுடன் வேலை செய்பவர்கள் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் இவன் தான் முன் நிற்பான். அதேபோல், அலுவலக நேரம் முடிந்தபின்னோ, வேறு சில சமையங்களிலோ இவனைப்போல் அனைவரிடமும் அன்புடன் பழகுபவனையும் யாருமே காண முடியாது. இந்த வேதாளம் மரம் ஏறும் நேரம் அலுவலக நேரமான 9 முதல் 5 வரை மட்டுமே.
இன்று எத்தனை பேர் அவனிடம் பாராட்டுகளும் திட்டுகளும் வாங்கப்போகிறார்களோ? நான் அறியேன்.
“இரண்டாவது அத்தியாயம் இவ்வளவு தான் ஃப்ரெண்ட்ஸ். இரு அத்தியாயங்களையும் சிறிதாக கொடுத்ததற்கு மன்னிக்கவும். இருவரையும் தனித்தனியாக அறிமுகப்படுத்தவே இந்த ஏற்பாடு. இனி வருபவற்றை முடிந்தவரை நீளமாக கொடுக்க முயற்சிக்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் ப்ரனிஷும் ப்ரியாவும் சந்திப்பார்கள். சென்ற அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி நண்பர்களே!”
தொடரும்
{kunena_discuss:1075}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.