(Reading time: 6 - 12 minutes)

22. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

ர்னவ் சென்றதும் திலீப் அசையாமல் இருக்க, அவனின் அருகே வந்த சுதீப்,

“அண்ணி மாதிரி ஒருத்தங்க உங்களுக்கு மனைவியா கிடைக்குறதுக்கு நீங்க புண்ணியம் பண்ணியிருக்கணும்… அண்ணியைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு நம்ம அம்மாவ பார்க்குற மாதிரி இருக்கும்… ஆனாலும் பத்தடி என்ன நூறடி நான் தள்ளிதான் நின்னேன்… யாருக்காக?... உங்களுக்காகன்னு நினைச்சீங்களா?... சத்தியமா இல்லை… அண்ணிக்காக… அண்ணி கூடப்பிறந்தவர் அர்னவ்… அவரே அண்ணிகிட்ட பேசினா உங்களுக்கு பொறுக்காது… இதுல நான் பேசினா சும்மா இருப்பீங்களா?... அவங்க என்னோட பேசி, நீங்க அவங்க மேல கோபப்பட்டு… இதெல்லாம் வேண்டாம்னு தான் இத்தனை நாள் குடும்பமே இல்லாத மாதிரி நான் தனியா ஒதுங்கியே இருந்தேன்… ஆனா இதெல்லாம் நான் சொன்னாலும் உங்களுக்கு புரியப்போறது இல்ல கொஞ்சம் கூட…”

“இருந்தும் ஏன் சொல்லுறேன்னு பார்க்குறீங்களா?... மனசு கேட்கமாட்டிக்குது… நடுராத்திரியில இப்படி அண்ணியை வீட்டை விட்டு வெளியே அனுப்பினீங்களே.. ஒரு நிமிஷம் யோசிச்சுப் பார்த்திருப்பீங்களா அண்ணி உங்க வாழ்க்கையில எவ்வளவு முக்கியம்னு?..…”

“ஆம்பள பிள்ளை வேணும்னு நினைச்சு பொண்டாட்டியை கொடுமை பண்ணி சித்திரவதை பண்ணுறீங்களே, ஒருவேளை நாளைக்கே நீங்க அண்ணியை பண்ணுற கொடுமை தாங்க முடியாம கடவுளாப் பார்த்து உங்களுக்கு ஒரு பையனை கொடுக்குறாருன்னே வச்சிப்போம்… அவனும் வளர்ந்து ஆளானபிறகு, உங்களைப் பத்தின உண்மை எல்லாம் தெரிய வந்துச்சுன்னா என்ன ஆகும்னு நினைக்குறீங்க?... உங்களை அப்பான்னு வாய் நிறைய சொல்லுவான்னு கற்பனை கூட பண்ணி பார்த்துடாதீங்க… இப்படிப்பட்ட ஒருத்தருக்கு புள்ளையா இருக்கமாட்டேன்னு சொல்லி உங்களை தலைமுழுகிடுவான்… அதையும் நியாபகம் வச்சிக்கோங்க…”

ஆதங்கமும் கோபமுமாய் பேசிவிட்டு, திலீப்பின் முகம் பார்க்க, அவன் சுதீப்பினை ஏறெடுத்தும் பார்க்கவில்லை…

“அர்னவ் ரொம்ப டீசண்டா பேசிட்டு போயிட்டார்… ஆனா அவரால பேச முடியாத விஷயங்களும் அவரோட கோபத்துல, அவரோட கண்ணுல நிறையவே பிரதிபலிச்சது… அதை உங்களால இல்லன்னு மறுக்க முடியுமா?...”

தமையனைப் பார்த்து சுதீப் கேட்க அவன் நிமிர்ந்தானில்லை…

“அர்னவ் சொன்ன மாதிரி குறை உங்களுக்குதான் இருக்கு… அதை அண்ணி மேல தூக்கி போட்டு தப்பிக்க நினைக்குற நீங்க எல்லாம் என்ன மனுஷ ஜென்மம்?... அதையும் அர்னவ் நாகரிகமா சொல்லிட்டு போனார்… உங்களை கேவலப்படுத்தவும் அவர் விரும்பலை… தான் உடன் பிறந்தவளை கேவலப்படுத்துறதையும் அவர் விரும்பலை… நீங்க செஞ்சது மன்னிக்க முடியாத தப்புன்னு தெரிஞ்சிருந்தும் உங்க மேல கை வைக்காம போயிருக்காரே அதுக்கு என்ன அர்த்தம்னு நினைக்குறீங்க?... அவருக்கு அடிக்கத்தெரியாதுன்னா?... இல்ல அடிக்கமுடியாதுன்னா?... இரண்டுமே இல்ல… ஆயிரம் தான் இருந்தாலும் நீங்க அவரோட அக்கா புருஷன்… இன்னமும் அந்த மரியாதை நெஞ்சில ஒட்டிக்கிட்டிருக்கப் போய் தான் அந்த மனுஷன் கைவைக்காம போயிட்டார்.. கோபத்தை வெறும் வார்த்தையில காட்டிட்டு போயிருக்குறார் அதும் அளவா… இதே அர்னவ் இடத்துல நான் இருந்திருந்தா நிச்சயமா அடிச்சு மூஞ்சி முகரை எல்லாம் கிழிச்சிருப்பேன்… என்ன பண்ண? அவர் அளவுக்கு எனக்கு கோபத்தை கன்ட்ரோல் பண்ணுற திறமை எல்லாம் இல்ல…”

“அர்னவ் மனசுலேயும் ஆதங்கம் மலை அளவு கொட்டி கிடக்கு… ஆனாலும் அதை அவர் அளந்து தான் கொட்டிட்டு போயிருக்குறார்… இன்னொருத்தன் மட்டும் அந்த இடத்துல இருந்திருந்தா, என் அக்கா என் கூட பேசுறதுக்கு நீ யாருடா தடை போடுறதுக்குன்னு நறுக்குன்னு கேட்டிருப்பாங்க… அவர் இப்போ வரை அதைப் பத்தி ஒரு வார்த்தை பேசியிருப்பாரா?... அவரும் உங்களை மாதிரி என்னை மாதிரி மனுஷன் தான?... அவரென்ன எல்லாம் ஆண்டு அனுபவிச்ச கிழவனா?... உங்களை விட சின்னப்பையன் அவருக்கு இருக்குற பக்குவம், விட்டுக்கொடுக்குற தன்மை ஏன் உங்களுக்கு இல்லாம போச்சு?... முடிஞ்சா பார்த்து கத்துக்கோங்க… இல்ல நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்ன்னு சொன்னதையே தான் சொல்லுவீங்கன்னா எக்கேடும் கெட்டுப்போங்க…”

வெறுப்புடன் சொல்லிவிட்டு ஒருநொடி கூட தாமதிக்காது சென்றுவிட்டான் சுதீப்…

அர்னவ் பேசியதிலிருந்து வெளிவர நொடிகள் தேவைப்பட்ட நிலையில் சுதீப் பேசியதும் சேர்ந்து கொள்ள, திலீப்பினாம் மூச்சுக்கூட விட முடியவில்லை கொஞ்ச நேரம்…

வெறும் ஏழு நாட்கள்… ஆனால் அது ஏழு யுகமாய் தெரிந்ததா திலீப்பிற்கு?... சரயூவின் அழகான முகமும், அணுசரனையான அவளது பேச்சும், அவனை அக்கறையாக பார்த்துக்கொள்ளும் விதமும், என்னதான் அவன் கொடுமை செய்தாலும் அத்தனையும் தாங்கிக்கொண்டு அவனை காதலித்த நேரங்களும் வந்து வந்து போக அவனுக்கு அந்த வீடே வெறிச்சென்று காட்சியளித்தது…

வீட்டிற்கு வந்தால் தானே அப்படி இருக்கிறது என்றெண்ணி வேலைக்கு ஓடினால், அங்கே அவனால் எந்த வேலையையும் ஒழுங்காக செய்யமுடியவில்லை… செய்த அனைத்திலும் தவறு வந்து ஒட்டிக்கொள்ள கூடவே சரயூவின் நினைவும் பிரித்திடமுடியாமல் சேர்ந்திடும்…

என்ன தான் ஆச்சு எனக்கு?.. என அவன் தலையில் கைவைத்துக்கொள்ள, அவன் அவளிடம் ஆரம்பத்தில் காட்டிய அக்கறை, கனிவு, பாசம், காதல் என அனைத்தும் ஒருசேர தலைதூக்கிய அதே வேளை, அவன் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிய நொடிகளும் கண் முன்னே வந்தாடியது…

எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு சென்றுவிட்டோம் என்ற தவிப்பு அவன் மனதில் எழ ஆரம்பிக்க, சரயூவின் மேல் அவனுக்கு இருந்த காதல் அதை உந்தி தள்ளியது மேலே….

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.