(Reading time: 11 - 21 minutes)

15. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்

srungara seendalgal sillendra oodalgal

நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்.....

உன் சுவாச காற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்.....

ஜானகி முடிந்தவரை அந்த வேலை இந்த வேலை என்று தள்ளிப் போட்டும் மாலை வந்தே தீர்ந்தது.   பாட்டியின் ஆடி காரில் ஹரியின் மொத்த குடும்பமும் ஸ்வேதாவின் வீடு சென்றடைந்தனர்.

“வாங்கோ மாமி.... வாங்கோ மாமா பிரயாணமெல்லாம் சௌகர்யமா இருந்ததா.... நீங்க ஏதோ க்ஷேத்திராடனம் எல்லாம் போயிட்டு வந்ததா ராமன் சொன்னார்.  ஸ்வாமி தரிசனம் எல்லாம் நன்னா ஆச்சு”

“ஹ்ம்ம் அதெல்லாத்துக்கும் ஒரு குறைவும் இல்லை.  அமெரிக்கால இருக்கற எம்புள்ள டாப் டு பாட்டம் எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டான்.  ஸ்வாமியை தரிசிக்கறது மட்டும்தான் எங்க வேலை”, அம்பு மாமி தன் மகனின் அமெரிக்கப் பெருமையை அள்ளி விட, ‘எவ அவ’, என்ற லுக்கை விட்டார் பங்கு மாமி.  அம்பு மாமியும், பதிலை என்னவோ  பத்துவிற்கு சொல்லிக்கொண்டிருந்தாலும் பார்வையை   பங்குவிடம்தான் வைத்திருந்தார். 

இவர்களை பார்த்தவர்களுக்கு கட்டபொம்மனையும், ஜாக்சன் துரையையும் முதன் முதலில் பார்த்த எப்ஃபெக்ட்.  அடுத்து எல்லாரும்  எதிர்ப்பார்த்தது, ‘நீர்தான் அம்புஜமோ’, ‘நீர்தான் பங்கஜமோ’, என்ற டயலாக்கைதான்.  நல்ல வேளை பத்து இருவருக்கும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தி அந்த அனர்த்தத்தைத் தவிர்த்தார்.

பார்த்த உடனேயே அம்புஜம் மற்றும் பங்கஜத்தின் ஆத்துக்காரர்கள் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டார்கள்.  பார்த்த நொடியில் காதல் மட்டும்தான் வர வேண்டுமா என்ன... நட்பும் வரலாமே.  அதுவும் இருவரும் ஒரே போல் வாழ்க்கையில் கஷ்டங்கள் அனுபவிக்கும்போது அந்த நட்பு நொடியில் இருகிவிடாதா.   நெய்யும், மைசூர்பாகும் போல..... அம்புஜத்தின் கணவர் அனந்துவும், பங்கஜத்தின் கணவர் பரமுவும் இணைந்து விட்டார்கள்.  கல்யாணத்தில் சீட்டுக் கச்சேரிக்கு இரண்டு வீட்டிலிருந்தும் யார் யாரை ஜமா சேர்ப்பது என்பது வரை பேசி முடிவெடுத்து விட்டார்கள்.

அம்புஜத்தின் பிரதாபங்களை ஏற்கனவே கௌரி மூலம் அறிந்திருந்ததால், அவரைக் கொஞ்சம் குளிர்விப்போமே என்று லக்ஷ்மி அவரைப் பார்த்து, “உங்க வைர பேஸரி ரொம்ப நன்னா இருக்கே மாமி”, என்று கூற.... அம்புஜத்தின் முகம் பெருமையில் பேஸரியைவிட டால் அடித்தது.

“இது எங்க பரம்பரைல நாலு  தலைமுறையா வரது....  என்னோட எள்ளுத் தாத்தா பிரிட்டிஷ்காராக்கிட்ட துபாஷா வேலை பார்த்தா.... அப்போ அவரோட சேவையைப் பாராட்டி அவா கொடுத்தது”

“ஓ எங்கிட்டயும் இப்படி ஒண்ணு இருக்கே.... அசல் ப்ளூ ஜாக்கர் வைரம்.  ஏதோ சமஸ்த்தானத்து மகாராஜா வச்சுண்டு இருந்தாராம்(இந்த இடத்தில் நம்ம கௌரி அந்த மகாராஜாவை யார் வச்சுண்டு இருந்து இருப்பா, என்ற உலகமகா சந்தேகத்தில் இருந்தாள்.....) அவர்க்கிட்ட இருந்து என் எள்ளுத்தாத்தா வாங்கினதா சொல்லுவா”, உனக்கு நான் குறைந்தவள் அல்ல என்று நிரூபித்தார் பங்கஜம்.  சுற்றி இருந்தவர்கள்தான் இவர்களின் பிரதாபத்தில் பேஸ்தடித்து நின்றார்கள்.

“ஏண்டிமா லக்ஷ்மி.... கல்யாணத்துக்கு வேண்டிய சீர் வரிசை எல்லாம் வாங்கிட்டேளா.... ஜானகிக்கு எதையும் விதரணையா கேக்கத் தெரியாது.  எதிர் ஜாமீன் என்ன கொடுக்கப் போறேள்”, என்று கேட்க..... ஹரி கடுப்பானான்.  அவன் ஏற்கனவே வந்து இத்தனை நேரம் ஆகியும் ஸ்வேதா வெளியில் வராமல் உள்ளேயே இருந்த கடுப்பில் இருந்தான்.  இப்பொழுது அந்தக் கடுப்பில் அம்பு மாமி கொஞ்சம் பெட்ரோல் ஊற்றினார்.

“பாட்டி என்னை ஜாமீன்லகூட வெளில வர முடியாதபடி உள்ள தள்ள முடிவு பண்ணிட்டேளா..... எதுக்கு இப்போ எதிர் ஜாமீன் பத்தி எல்லாம் பேசறேள்.... இப்படி ஒரு வார்த்தை பேசினது தெரிஞ்சாலே உங்களை உள்ளத் தூக்கி போட்டுடுவா....”, என்று கத்த அம்பு வாயை மூடிக்கொண்டார்.

“சீரெல்லாம் வாங்கியாச்சு மாமி.  இன்னும் கூரைப்புடவையும், திருமாங்கல்யமும் மட்டும் வாங்கணும்.... வர்ற புதன்கிழமை நாள் நன்னா இருக்குன்னு லக்ஷ்மி சொன்னா.  உங்க எல்லாருக்கும் தோதுப்பட்டு வரும்ன்னா அன்னைக்கே போய் வாங்கிண்டு வந்துடலாம்”, பத்து கேட்க, ராமனும் அன்று தங்களால் வரமுடியும் என்று கூற நிலைமை கொஞ்சம் சகஜ நிலைக்குத் திரும்பியது.

“லக்ஷ்மி மாமி ஸ்வேதா எங்க... வெளில போய் இருக்காளா?”, ஹரி சுரண்டிய சுரண்டலில், தாங்க முடியாமல்  ஜானகி  கேட்க வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிட்டாள் பங்கஜம்.

“என்னது வெளில போய் இருக்காளான்னு கேக்கறேள்.... கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு.... இந்த நேரத்துல யாரானும் கல்யாணப் பொண்ணை வெளில அனுப்புவாளோ.... அதெல்லாம் உங்காத்துல வழக்கமா இருக்கலாம்..... எங்காத்துல எல்லாம் அப்படி எல்லாம் அனுப்ப மாட்டோம்”, பங்கஜம் சொல்ல... ஏன் கேட்டோம் என்று ஆகிவிட்டது ஜானகிக்கு.  முடிந்தவரை தன்னை கோர்த்துவிட்ட ஹரியை முறைத்தார்.   ஹரிதான் கலங்கிவிட்டான்... ஐயோ இந்த பாட்டி நம்ம கண்ணுல ஸ்வேதாவைக் காட்ட மாட்டா போல இருக்கே என்று. 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.