“உள்ள உட்கார்ந்துண்டு இருக்கா ஜானகி... கௌரி நீ போய் அவளை வர சொல்லு”, என்று லக்ஷ்மி சொல்ல... ஹரி லக்ஷ்மியை நன்றிப் பார்வை பார்த்தான். மாப்பிள்ளையின் மனமறிந்த மாமியார். சாதரணமாகவே ஹரிக்கு லக்ஷ்மி மாமியைப் பிடிக்கும். இந்த சம்பவத்தால் இன்னும் இன்னும் அவரைப் பிடித்துப் போய்விட்டது.
கௌரி அழைத்து வர, ஸ்வேதா வந்து அம்புஜத்திற்கும் அவள் ஆத்துக்காரருக்கும் நமஸ்காரம் செய்தாள்.
உள்ளூர அவள் செயலில் மகிழ்ந்தாலும் வெளியில் கெத்தை விடாமல், “நன்னா இருடி குழந்த...... இப்படி சம்மந்தத்தை ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு முடிச்சுண்டுடுட்டேள். பொண்ணு பாக்கற படலம்ன்னு ஒண்ணும் நடக்கலையே. அதனால இன்னைக்கு பொண்ணு பாக்கற நாளா வச்சுக்கலாம். ஏண்டி குழந்த பாட்டெல்லாம் கத்துண்டு இருக்கியோ”
“நன்னாப் பாடுவேன் பாட்டி..... பதினைஞ்சு வருஷம் கத்துண்டு இருக்கேன். இப்போ வேலைக்கு போனப்பறம்தான் டைம் கிடைக்காததால கிளாஸ் போக முடியலை”
“ஓ ரொம்ப சந்தோஷம்..... அப்போ எங்க எல்லாருக்காகவும் ஒரு பாட்டுப் பாடேன்....”, என்று கூற ஸ்வேதாவும் சமர்த்தாக, ஏகப்பட்ட நிரவல்களுடன் ‘சாமஜ வர கமனாவை’ பாடினாள். ஆனானப்பட்ட அம்புஜமே ஸ்வேதாவின் குரல் வளத்தில் வாய் அடைத்துப் போய் உட்கார்ந்து விட்டாள்.
“நான் கூட கௌரியைப் பொண்ணு பாக்கும்போதோ, இல்லை கல்யாணத்தும்போதோ இல்லை, அதனால அவளையும் ஒரு பாட்டு பாட சொல்லலாமே...”, என்று பங்கஜம் கூற இந்த முறை பொக்ரான் குண்டை விட சத்தமாக அனைவரின் இதயமும் வெடித்தது. கௌரியின் பாடல் திறமை அப்படி. நம்மாளு ‘வாடா மாப்பிள்ளை வாழைப்பழ தோப்பில’ போன்ற கவித்துவமான பாடல்களையே அபஸ்வரத்தில்தான் பாடுவாள், பின் எங்கிருந்து கிளாஸிகல் பாடுவது.
“பங்கு பாட்டி செத்த நேரம் சும்மா இருக்கேளா..... எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு குழந்தைக்கூட பொறந்தாச்சு. நீங்க இப்போ எதுக்கு மறுபடியும் பொண்ணு பாக்கற ஸ்டேஜ்க்கு போறேள். இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்கோ.... கிருஷ்ணா கல்யாணத்தன்னைக்கு நலங்குல அவ பாடுவா.... காது குளிற கேக்கலாம்”, அனைவரின் வயிற்றிலும் பால் வார்த்தான் கௌஷிக். ஹரி ஏற்கனவே கெளரியிடம் அவன் கல்யாணத்தில் பாடக்கூடாது என்று 144 போட்டுவிட்டதால், கௌரியின் ஒரே சான்ஸ் கிருஷ்ணா கல்யாணம்தான். இது தெரிந்தால் அநேகமாக கிருஷ்ணா சன்யாசம் வாங்க நிறைய சான்ஸ் இருக்கிறது.
லக்ஷ்மி தாங்கள் வாங்கிய நகை மற்றும் புடவைகளைக் கொண்டு வந்து காட்ட, ஏகப்பட்ட நொட்டல் பேச்சுக்களுடன் அவற்றைப் பார்வையிட்டாள் அம்புஜம். இவர்கள் இங்கே பாத்திர பண்டங்களைப் பார்வையிட ஹரி ஸ்வேதாவைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அவளைத் தனியாக பேச வருமாறு ஜாடை செய்ய, அவளோ முடியவே முடியாது என்று தலையை எல்லாப்பக்கமும் ஆட்டிவிட்டாள். இந்த முறை ஹரி கௌஷிக்கிடம் சரணடைய அவன் தன் மச்சினனின் உதவிக்கு வந்தான்.
“அம்மா இங்க மூணாவது ஃபிளாட்ல ஒரு மாமி புடவை, வேஷ்டி எல்லாம் கஞ்சீவரத்துலேர்ந்தே நேரடியா வர வைக்கறா..... மாமி வந்தா சொல்லணும்ன்னு சொன்னியே”, கௌஷிக் லக்ஷ்மியிடம் கூற, நான் எப்போ அப்படி சொன்னேன் என்பதுப்போல் லக்ஷ்மி பார்க்க, கௌஷிக் ஹரி ஸ்வேதாவை கண்ணால் காட்டினான்.
“தேங்க்ஸ்டா கௌஷிக்.... கரெக்டா ஞாபகப்படுத்திட்ட.... மாமி நாமப் போய் பார்த்துட்டு வரலாமா....”, என்று கேட்க அனைத்துப் பெரிய தலைகளும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் மூன்றாவது ஃபிளாட் வாசலில் இருந்தார்கள்.
“தேங்க்ஸ் கௌஷிக். எப்படியோ எல்லாரையும் கிளப்பி அனுப்பிட்டேள்....”
“தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்.... உனக்கு சரியா அரை மணி டைம்..... அந்த மாமி அப்படி எல்லாம் பெரிய கலக்ஷன் வச்சுக்கலை..... சோ போனவா அதே வேகத்துல திரும்பி வந்துடுவா..... அந்த மாமி பையன் என் க்ளோஸ் friend. அங்க இருந்து அவாக் கிளம்பும்போது எனக்கு மெசேஜ் பண்ண சொல்லி இருக்கேன். அதுவரைக்கும் என்ஜாய்.... நானும் கௌரியும் இங்க மாடில இருக்கோம். நீங்க பேசிண்டு இருங்கோ...”, என்று கூறி கௌரியை அழைத்துக்கொண்டு வெளியேறினான் கௌஷிக்.
“என்னடி அரைப் பொண்டாட்டி... எப்படி இருக்க......”
“ரொம்ப நன்னா இருக்கேன்..... அது என்ன அரைப்பொண்டாட்டி”
“அதுவா கல்யாணம் ஆனா முழுப்பொண்டாட்டி.... இப்போ நிச்சயம் மட்டும்தானே முடிஞ்சிருக்கு.... அதனால அரைப்பொண்டாட்டி”
“அது சரி.... நல்ல லாஜிக்தான்...... இப்போ எதுக்கு எல்லாரையும் கிளப்பி அனுப்பினேள்.....”
“USல இருந்து வந்தப்பறம் என்னோட எங்கயானும் அவுட்டிங் வந்தியா..... OLA cab டிரைவர் மாதிரி உன்னை pickup and drop மட்டும்தான் பண்ணினேன்..... இதுல நமக்கு காதல் கல்யாணம்ன்னு வேற பேரு..... போன்லகூட சரியா பேசமாட்டேங்கற.... கேட்டா கல்யாண வேலை அது இதுன்னு சாக்கு சொல்ற..... இத்தனை நாள் என்னைக் காய விட்டதுக்கு உனக்கு punishment வேண்டாம்..... இன்னைக்கு வசமா மாட்டிண்ட... வட்டியோட வசூல் பண்ணப்போறேன்.....”