(Reading time: 14 - 28 minutes)

10. வானவிழியழகே - நிஷா லக்ஷ்மி

Vaana Vizhi Azhage

ஸ்வந்த் தன்னுடைய பெற்றோரிடம் தீர்க்கமாக சொல்லிவிட்டான்.

“நம்ம குடும்பத்தை தவிர யாரையும் கூப்பிட வேண்டாம்மா.ரிஷப்ஷன் அப்போ கூப்ட்டுக்கலாம்.அவந்தி அப்பாகிட்டயும் சொல்லி சம்மதம் வாங்குங்க.அவங்க பக்கம் இருந்தும் வேற யாரும் வர வேண்டாம்.வரக் கூடாது”என்றவனை அவனது அம்மா முறைத்தார்.

“நாம என்ன திருட்டுக் கல்யாணமா செய்யறோம்.புரியாம எதையும் உளறிட்டு இருக்காதே யஷு.எல்லாரையும் கூப்பிடத்தான் வேணும்”

“அப்போ நான் கல்யாணம் செய்துக்கல.ரெண்டு வருஷம் கழிச்சு பார்த்துக்கலாம்”என்றவன் பதிலை எதிர்பார்க்காமல் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டான்.

“ஏங்க இவன் எப்படி இருக்கான்”கணவனிடம் பதிலை எதிர்பார்த்தார்.

“அவன் ஏதோ மனசில வைச்சுட்டு தான் அப்படி பேசறான் தாமரை.காரணம் இருக்கும்.நாம விட்டுப் பிடிக்கலாம்.பொண்ணு வீட்டுலையும் ஏதாவது காரணத்தை சொல்லி புரிய வைக்கலாம்.நம்ம பையன் அவன்.தப்பா எல்லாம் எதுவும் செய்திட மாட்டான்”

இவ்வளவு உறுதியாக கணவனே சொன்ன பிறகு,தாமரையால் எதுவும் சொல்ல முடியவில்லை.

பாண்டியனிடம் அவர்கள் நிலைமையை எடுத்து கூற,”எனக்கும் இது சரின்னு தான் தோணுதுங்க சம்மந்தி.படிக்கற பொண்ணு இல்லையா.இப்போவே கல்யாணம் ஆனது தெரிஞ்சா ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க..கோவில்ல தானே ஏற்பாடு செய்யறோம்.முதல் நாள் திருமணத்தை கோவில்ல பதிவு செய்திடணும்.அதுவே ஒரு சாட்சி தானே.இதுல திருட்டுத்தனத்துக்கு வாய்ப்பில்ல”என்றார்.

தன் பின் வேலைகள் அதிவிரைவாகவே நடந்தன.

அவந்திகா பெரும்பாலும் தன்னை அழகுப் படுத்திக் கொள்ளவே நேரத்தை செலவழித்தாள்.பெரும்பாலும் பெண்களுக்கு தங்களை அழகுப்படுத்திக் கொள்ள அதிகம் ஆர்வம் இருக்கும்.இவளும் விதிவிலக்கல்ல.

படங்களில் நடிக்க வேண்டும் என்று சிறுவயதிலிருந்து உடம்பை கச்சிதமாக வைத்துக்கொள்ள என்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்வாள்.அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வழியில்லாமல் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.

பாண்டியனும் மகளை ஒரு வார்த்தை குறை சொல்லமாட்டார்.அவளது விருப்பத்திற்கு மறுப்பு சொல்லவே மாட்டார்.

எப்படிப்பட்ட சூழ்நிலை என்றாலும்,மகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்.அதனாலையே அவளுக்கு பதினாறு வயதிலையே படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போதும்,

“இத விட நல்ல வாய்ப்பு வரும்ப்பா”என்று சொன்ன போதும் அமைதியாக இருந்தார்.

அதற்கு அடுத்த வருடம் பிரபலமான ஒரு நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிட்டிய போது,யாருக்குமே கிடைக்காத அதிர்ஷ்டம் என்று வீடே அதிகமாக சந்தோஷப்பட்டது.

”எனக்கு ஆர்வமில்லை”என்று காரணகாரியங்களை விளக்காமல் ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்ட போதும்,அவர் மகளின் விருப்பத்திற்கே சம்மதித்தார்.

ஏன் என்று இன்றுவரை கேட்கவில்லை.சொல்ல முடிகிற அல்லது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்றால்,மகள் சொல்லியிருப்பாள் என்று மகளின் மேல் அவருக்கு அப்படியொரு நம்பிக்கை.

இப்போது கூட மகள் விருப்பப்பட்டாள் என்று தான் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.அதற்காக யஸ்வந்த்தை பற்றி அவர் விசாரிக்காமல் இல்லை.அவனுடைய அதிகாலை பழக்கத்திலிருந்து,இரவு அவன் தூங்கும் முன் என்ன செய்வான் என்பது வரை விசாரித்து அறிந்திருந்தார்.

அம்மா இல்லை என்ற குறை அவளுக்கு வந்துவிடக் கூடாதென்று அவர் பார்த்து பார்த்து செய்ய,மல்லிகாவிற்கு இந்த திருமணத்தில் அவ்வளவு விருப்பம் இல்லையென்றாலும்,எங்கு சென்றாலும்,’இவள் தான் தூக்கி வளர்த்த பெண் தானே’என்ற நினைப்புடன் அண்ணனுடன் சேர்ந்து,அவந்திகாவிற்கு தேவையான அனைத்தையுமே வாங்கி குவித்துவிட்டார்.

அவந்திகாவும் யஷ்வந்தின் அறிவுரைப்படி கல்லூரியில் நெருங்கிய தோழிகளான,ஹாசினி மற்றும் வர்ஷினியை தவிர யாரிடமும் தனக்கு திருமணம் என்பதை சொல்லவேயில்லை.ப்ராஜெக்ட் செய்ய விடுமுறை விடப்பட்டிருந்ததால்,யாருக்கும் இந்த விஷயம் தெரியாமலும் போயிற்று.

நாளை திருமணம் என்ற நிலையில் இன்று கோவிலில்,மணமகள் மணமகன் தங்களது திருமணம்,தங்களது விருப்பத்தின்படி தான் நடக்கிறது என்று உறுதியளித்து,கையளித்திட கோவிலுக்கு குடும்பத்துடன் வந்திருந்தனர்.

அன்று இரவு கோவிலை ஒட்டியே இருந்தே மண்டபத்தில் அனைவரும் தங்குவதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.