(Reading time: 14 - 28 minutes)

சாரதி தான் முன்னிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

அவந்திகாவையும்,யஸ்வந்த்தையும் அழைத்து கையெழுத்து வாங்கிவிட்டார்.

இந்த நான்கு நாட்களாக இவர்கள் இருவருக்கும் பேச தடை விதிக்கப்பட்டிருந்தது.

அவந்திகா சாதாரணமாய் இருக்க,யஸ்வந்த் தான் தவித்துப் போனான்.

பேசலாம் என்று முயற்சி செய்தால் சரண் நந்தி போல குறுக்கே நின்றான்.

“நாளைக்கு காலைல கல்யாணம் ஆன பின்னாடி ஒரு மணி நேரம் தான் பேச டைம்.அதுக்கு முன்னாடியோ,பின்னாடியோ உனக்கு பேசறதுக்கு அனுமதியே இல்ல.ஒரு ஆறு மாசம் பிரம்மாச்சாரியா தான் இருக்கணும் மாப்ள”கிண்டல் செய்தவனை அற்பப்புழுவை போல பார்த்தான் யஸ்வந்த்.

அதை புரிந்துகொண்டவனாய்,”எங்க வீட்டுப் பொண்ணு எங்க போனாலும்,பாடிகார்ட் மாதிரி நானும் வருவேன்..எனக்கு கல்யாணம் ஆகாம,எவனையும் வாழ விட மாட்டேன்”சபதம் போல சொல்லிவிட்டு,அதை நிறைவேற்றும் எண்ணத்துடன் உடனே அவந்திகாவை அழைத்துக்கொண்டு போய் மணப்பெண் அறையில் விட்டுவிட்டான்.

கூடவே கையில் இருந்த போனையும் பிடுங்கிக்கொண்டான்.

மாமன் மகள் முறைப்பதையும் அவன் கண்டுகொள்வதாய் இல்லை.

பெரியவர்கள் இவனின் அலம்பல்களை கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை.

யஸ்வந்த் ஒருவித ஏக்கத்தினுடன் அவளது அறையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது அப்பா வந்து தள்ளிக்கொண்டு போகும் வரை அங்கேயே நிற்க,அதன் பின் தான் சரண் அவந்திகாவிடம் சென்று போனைக் கொடுத்தான்.

திருமண நாளும் யாருக்கும் காத்திராமல் வந்துவிட,ஹாசினியும்,வர்ஷினியும் அவந்திகாவை அழகுபடுத்த முன் வர அதற்கு முன்பே அவந்திகா தயாராகி இருந்தாள்.

“ரொம்பத்தான் உனக்கு அவசரம்”கேலி செய்த ஹாசினியை புறந்தள்ளிவிட்டு,மீண்டும் ஒருமுறை மேக்அப் போட ஆரம்பித்தாள்.

வர்ஷினி தான் பொறுக்க முடியாமல்,”இங்க நாம வெட்டியா அவளை வேடிக்கை பார்க்கறதுக்கு,வெளில போய் ஏதாவது ஹெல்ப் செய்வோம்..வா”என்று ஹாசினியை இழுத்துக் கொண்டு போனாள்.

சிறிது நேரத்தில் மல்லிகா மணமேடைக்கு அவளை அழைத்து சென்றார்.

அங்கு செல்வதற்கு முன் அப்பாவின் காலிலும்,மாமாவின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு,மணமேடைக்கு சென்றாள்.

யஸ்வந்த் அவளையே கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாலும்,அவள் அதை கவனிக்கவில்லை.

திருமண பந்தம் எப்படி இருக்குமோ என்ற முதற்கட்ட பயம் அவளை அப்போது தான் ஆக்கிரமிக்கவே செய்திருந்தது.

மணமேடையில் சில சாஸ்திரங்களை செய்துவிட்டு,மணமகன் வீட்டார் எடுத்த புடவையை பெண்ணின் மடியில் வைத்து,மந்திரங்கள் சொன்ன அய்யர்,”இதை கட்டிட்டு வாங்கோ”என்று அனுப்பினார். 

இப்போதும் மல்லிகாவே அவளை அழைத்து செல்ல,”நானே கட்டிக்கறேன் அத்தை..நீங்க வர வேண்டாம்”என்றாள்.

ஆடை உடுத்தும் விஷயங்களில் சில வருடங்களாக அவள் கடைபிடிக்கும் விதிமுறையை நன்கு அறிவார்.முன்பு அப்படி இல்லை..அதனால் அவள் விருப்பத்திற்கு அவளை உள்ளே அனுப்பிவிட்டு,இவர் வெளியே காத்திருந்தார்.

வழக்கம் போல எல்லா படத்திலும் வருவது போல,மல்லிகாவும் நீண்ட நெடுநேரமாக காத்திருந்தார்...காத்திருந்தார்..காத்துக்கொண்டே இருந்தார்.

கதவை தட்டி,”வெளிய வாம்மா”என்று அவர் பலமுறை அழைத்தும் அவள் வராமல் இருக்க,அவரது பதட்டமான குரல் கீழே இருந்தவர்களுக்கும் கேட்டுவிட,அனைவருமே அங்கு கூடிவிட்டனர்.

“கதவை திறக்க மாட்டேங்குறா”கண்ணீர் குரலில் அவர் அழும் முன்,சுதாரித்துக்கொண்ட யஷ்வந்த்,அந்த மண்டபத்தின் பின்பக்க வழியாக சென்று அறையை நோட்டமிட..அங்கு இருந்த ஜன்னல் கழட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

ஜன்னல் உடைக்கப்படவில்லை.அப்படியே தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

“எப்படி நடந்தது”வாய்விட்டு அவன் கத்த...அப்போது தான் அந்த கோவிலை சுற்றி இருந்த சிலர் அவனிடம் வந்தனர்.

யஸ்வந்த்திற்கு முன்னேயே,அவர்கள் ஜன்னலை எடுத்துவிட்டு அறைக்குள் செல்ல,அங்கு அவந்திகா இருந்ததற்கான அடையாளமே இல்லை.

பாண்டியன் உச்சக்கட்ட குரலில்,”இங்க என்ன நடக்குது.என் பொண்ணு எங்க”என்று அதிர்ந்து போய் கேட்க,பதில் சொல்லத்தான் யாருமில்லை.

அனைவருமே அதிர்ந்து போயிருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.