(Reading time: 12 - 24 minutes)

மாலை நேரம் எந்த வேலையும் இல்லாததால் ஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு நர்மதா வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள்… இவள் புத்தகத்தில் ஆழ்ந்து இருக்கும்போது கோமதி அவளை தேடிவந்தார்…

“என்ன அத்தை ஏதாவது வேணுமா..??”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா?? இதை தான் உன்கிட்ட கொடுக்க வந்தேன்..” என்று சொல்லி ஒரு பெரிய மரப் பெட்டியை திறந்து காண்பித்தார்… அதில் ஒரு மினி நகைக் கடையே இருந்தது… அதிலும் அதிலிருப்பது இவளுக்குத் தான் என்று சொன்னதும் நர்மதா அதிர்ந்து தான் போனாள்…

எப்போதும் நகை, பணம் மீது அவளுக்கு ஈர்ப்பு கிடையாது…  இவளின் அம்மா இவளுக்காக வாங்கி வைத்திருந்த சின்ன சின்ன நகைகளையே அணிந்துக் கொள்ளப் பிடிக்காது.. கம்மல் பெருசா இருக்கக் கூடாது… கொலுசு மெலிதாக இருக்க வேண்டும்… ஆரம், நெக்லஸ்ல்லாம் வேண்டாம், வெறும் செயின் போதும்… வளையல் ஏன் தடியா இருக்கனும்.. எதுக்காக தங்கத்துல நகைப் போடனும்… கல்யாணம்னா ஏன் தங்கம் கேக்கறாங்க… இதெல்லாம் அவள் அடிக்கடி கேட்கக் கூடிய கேள்விகள், அதற்காக கவரிங்ல வாங்கிக் குவிக்கலாம் என்றும் செய்யமாட்டாள்… தொங்கட்டான் இல்லாத ஸ்கூல் படிக்கும் போது வாங்கிக் கொடுத்த கம்மல் தான் திருமணத்திற்கு முன்பு வரை அவள் காதில் இருந்தது.. இப்போது தான் அம்மா சொன்னதற்காக கொஞ்சம் பெரிய கம்மலாக அணிந்திருந்தாள்… யமுனாவோடு ஷாப்பிங் சென்றாலும் தேவை என்பதை மட்டும் தான் வாங்குவாள்… அப்பா ஹெட்மாஸ்டர், நாம தனியா சம்பாதிக்கிறோம் என்று வெட்டி செலவுகள் செய்யமாட்டாள்.

“அத்தை இது மொத்தமும் எனக்கா..??”

“ஆமாம்மா.. இது உனக்கு தான்… இந்த நகையை பொதுவா கல்யாணத்தன்னைக்கே உன்கிட்ட கொடுத்திருக்க வேண்டியது… இந்த வீட்டு வழக்கமும் அதுதான்… கல்யாணத்துக்கு இந்த நகையெல்லாம் போட்டுக்க சொல்லி கொடுப்பாங்க… ஆனா இப்பல்லாம் கல்யாணத்துல தங்க நகையை யாரு போட்றாங்க..?? கட்ற புடவைக்கு மேட்சா கவரிங் நகைகளை போட்டுக்கிறாங்க… அதான் அன்னைக்கு உன்கிட்ட இதையெல்லாம் கொடுக்கல…

அடுத்து சாந்தி முகூர்த்தம் அப்போ இதுல ஒன்னு ரெண்டு நகைகளை உனக்கு போட்டு விட்டுருக்கனும்… ஆனா அந்த சூழ்நிலையிலும் இதை உனக்கு கொடுக்க தோனல.. ஒருவிதத்துல கல்யாணம் அப்போ இதை உனக்கு கொடுக்காம இருந்ததே நல்லதும்மா..”

“ஏன் அத்தை..??”

“அதுவா.. அப்போ கொடுத்திருந்தா என்னோட மூத்த மருமகளுக்குன்னு எடுத்து வச்சிருந்த நகைகளை தான் அப்போ கொடுத்திருப்பேன்… ஆனா இப்போ அதுதான் மாறிடுச்சே.. அதை தான்ம்மா சொன்னேன்…

என்னடா, அது என்ன மூத்த மருமகளுக்கு மட்டும் ஸ்பெஷலா நகைன்னு நீ நினைக்கலாம்… அந்த நகையெல்லாம் செல்வாவோட கொள்ளுப் பாட்டியோடது… இந்த வீட்ல தொடர்ந்து ஆண் வாரிசு அதுவும் ஒரே வாரிசு… அதனால அவங்க நகைங்க எல்லாம் அடுத்தடுத்து வந்த மருமகளுக்குன்னு போய் சேர்ந்துச்சு… இதுல எனக்கு தான் ரெண்டுப் பசங்க… ரெண்டு மருமகளுக்கும் இந்த நகையை பிரிச்சுக் கொடுக்கலாம்… ஆனா அவங்களோடது ஒருத்தர் கிட்டயே இருந்தா நல்லதுன்னு தோனுச்சு.. அந்த விதத்துல முதல்ல வர மூத்த மருமகளுக்கு இதை கொடுக்கனும்னு நினைச்சேன்… ஆனா நான் நினைச்சது நடக்கல.. நீ இந்த வீட்டுக்கு முதல்ல அடி எடுத்து வச்சிருந்தாலும், நான் நினைச்ச மாதிரி அதை ராஜாவோட பொண்டாட்டிக்கு கொடுக்கலாம்னு இருக்கேன்ம்மா..

இதுக்கு நீ எந்தவிதத்திலும் மறுப்பு தெரிவிக்க மாட்டங்கிற நம்பிக்கையில தான் இதை உனக்கு சொன்னேன்… ஆனா எப்போ அதை மூத்த மருமகளுக்கு கொடுக்கனும்னு முடிவு செஞ்சேனோ.. அப்பவே அந்த நகைக்கு சமமா என்னோட ரெண்டாவது மருமகளுக்கும் நான் வாங்க ஆரம்பிச்சிட்டேன்… அது மட்டுமில்ல, இதுல இருக்கறது பழைய மாடலா இருக்குன்னு நினைச்சா.. புதுசா செல்வாக்கிட்ட சொல்லி வாங்கிக்கோமா.. இதை வீட்ல ஏதாவது விஷேஷம்னா போட்டுக்கோ..” என்று அவர் சொல்லி முடிக்க,

“அய்யோ அத்தை.. இது பத்தாதுன்னு புதுசா.. இதுவே எனக்கு அதிகம் அத்தை.. இப்போல்லாம் பழைய மாடல் தான் திரும்ப புதுசா வருது… இங்கப்பாருங்க ஒவ்வொன்னும் எவ்வளவு வெய்ட்.. திரும்ப இவ்வளவு வெய்ட் நகையெல்லாம் வாங்கினா.. எவ்வளவு பணம் செலவாகும் தெரியுமா..??” வழக்கமான அவள் பட்ஜெட் மூளை எட்டிப்பார்க்க, கோமதியிடம் அதை சொல்லிக் கொண்டிருந்தபோது, அலுவலகம் முடிந்து செல்வா வந்தான்…

அதுவரையிலும் கோமதி சொன்னதை மறுத்து பேசி இந்த நகையெல்லாம் வேண்டாம் என்று அவர் மனம் வருந்தும்படி சொல்லக்கூடாது என்பதற்காக அவள் அமைதியாக இருந்தாள்.. ஆனால் செல்வாவை பார்த்ததும் அவனை கொஞ்சம் வெறுப்பேற்றி பார்க்க தோன்றியது.. அதற்குள் அவர்கள் அருகில் வந்தவன்,

“என்னம்மா.. ஒரு மினி நகைக்கடையையே இங்க பரப்பி வச்சிருக்கீங்க..” என்று அவளுக்கு தோன்றியதுப் போலவே அவனும் கேட்க..

அதை கண்டும் காணாதவள் போல் இருந்தவள், “அத்தை… இந்த நெக்லஸ் எனக்கு எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க..” என்று அதை கழுத்தில்

வைத்துக் காட்டி கோமதியிடம் கேட்டாள்… பிறகு இந்த ஆரத்துக்கு இந்த கம்மல் செட்டாகும் இல்ல… இந்த பெரிய வளையல் ரொம்ப அழகா இருக்கு… இந்த ஜிமிக்கி இன்னும் கொஞ்சம் இறக்கமா தொங்கினா நல்லா இருக்கும்.. இந்த கல்லு வச்ச நக்லஸ்ல கலர் காம்பினேஷன் சூப்பரா இருக்கு..” என்று ஒவ்வொன்றையும் தன் மேனியில் வைத்து வைத்து பார்த்தாள்… முதலிரவு அன்று இவள் சும்மா ஒரு கோபத்தில் சொன்னது என்று நினைக்காமல், இந்த பணம், நகை மேல தான் இவளுக்கு ஆசை இருக்கு என்று அவன் நினைக்க வேண்டும்… என்று நினைத்தாள்… அப்படி நினைத்து அவன் கோபப்பட வேண்டுமா..?? இல்லை வருத்தப்பட வேண்டுமா?? எதற்காக இப்படியெல்லாம் செய்கிறாள்.. அவளுக்கே அது புரியவில்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.