(Reading time: 8 - 16 minutes)

மாலின் மனைவிக்கு குழந்தையைப் பார்த்ததும் அளவில்லா மகிழ்ச்சி.இருக்காதா பின்னே?எத்தனை வருட ஏக்கம்?பக்கிரியின் வாக்கு பலித்துவிட்டதாக மகிழ்ந்தார்.இஸ்லாமிய வழக்கப்படி குழந்தைக்கு கபீர் எனப் பெயரிட்டனர்.இந்து மத சுகப்பிரம்மம் இஸ்லாம் மத கபீரானார்.இன மத மொழி தேச எனும் பாகுபாடெல்லாம் இறைவனுக்கு இல்லை.எல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டவையே.கபீர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக(?) வளர ஆரம்பித்தார்.அவரோடு கூடவே இறை சிந்தனையும் வளர்ந்தது.சிறு வயது முதலே அவர் நாக்கு இறைவனின் நாமாவை உச்சரிக்க ஆரம்பித்தது.ஆனால் ஒன்று அவர் அல்லா என்று சொல்லாமல் ராமா என்று சொல்ல ஆரம்பித்தார்.அவர் முன் பிறவியில் ஸ்ரீ ராமனின் பக்தரான சுகப்பிரம்மம் அல்லவா?அந்த வாசனை அவரை விடவில்லை போலும்.அவர் இப்படி ராமா என்று அழைப்பதை தமாலும் அவரின் மனைவியும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.தங்கள் மகன் குழந்தைப் பருவத்திலேயே இறை நம்பிக்கைக் கொண்டிருப்பதை எண்ணி மகிழ்ச்சியே அடைந்தார்கள்.ஆனால் தமாலின் உறவினர்களும் ஊராரும் கபீர் ராமா என்று அழைப்பதை எதிர்த்தனர்.தமால் அதனைப் பொருட்படுத்தவில்லை.

கபீர்.. குடும்பத் தொழிலான நெசவுத் தொழிலைக் கற்றுக்கொண்டார்.ஆனாலும் நெசவு செய்யும் போது அவர் மனம் இறை தியானத்திலேயே ஈடு பட்டுவிடும்.வேலை செய்யும் போது கைகள் தொடர்ந்து நெசவு செய்யாது நின்றுவிடும்.வாயும் மனமும் இறைவனையே செபிக்கும்.ஒரு முழம் துணிதான் நெய்திருப்பார்.

அத்தோடு நின்றுவிடும் அவர் பணி.பெற்றோர் பலமுறை அவரிடம் இதமாகவும் பதமாகவும் தொழிலை நன்கு கவனிக்கும்படி கூறியும் அவர் பொருட்படுத்தவில்லை.தன் போக்கிலேயே இருந்தார் இறைவனைத் தியானித்தபடி.

பீருக்கு திருமண வயது வந்தது.பெண்பார்க்கத் தொடங்கினர்.கபீர் முன்ஜென்மத்தில் சுகப்பிரம்மமாய் இருந்த போது இந்திர லோக நடன மங்கை ரம்பை இவரை மயக்க எண்ணினார்.இவர் மசியவில்லை.

இப்போது இவர் பூமியில் கபீராய் வந்து பிறந்துள்ளதை அறிந்த ரம்பை தானும் சுந்திரா என்ற பெயருடன் ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் வந்து பிறந்தார்.

அழகும் ஒழுக்கமும் பண்பாடுமாய் வளர்ந்திருந்த சுந்திராவைப் பற்றிக் கேள்விப்பட்ட கபீரின் பெற்றோர் அவளையே கபீருக்குப் பேசி முடித்தனர்.இஸ்லாமிய வழக்கப்படி ஒரு ஆண் திருமணத்திற்கு முன் சுன்னத் செய்து கொள்ள வேண்டும்.இது மிக அவசியமானது இஸ்லாமியருக்கு.ஆனால் கபீர் சுன்னத் செய்து கொள்ள பிடிவாதமாக மறுத்து விட்டார்.தமாலின் உறவினர்களுக்கும் மற்ற இஸ்லாமிய அன்பர்களுக்கும் சுந்திராவின் குடுமபத்தினருக்கும் கபீரின் இப்பிடிவாதம் மிகுந்த கோபத்தை உண்டாக்க கபீர் இஸ்லாமுக்கு எதிராக செயல் படுகிறான் அவனை வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டுமென தமாலை வற்புறுத்தினர்.

அவர் அதற்கு மசியவில்லை.திருமணம் நின்றுபோனது.கபீர் அது பற்றிக் கவலைப் படவில்லை.ஆனால் தாயாரான ஜிஜ்ஜாபீபீ க்கு மிகவும் வருத்தம்.

வழக்க போல் தறி நெய்ய அமர்ந்தார் கபீர்.ஒரு முழம்தான் நெய்திருப்பார்.மனம் இறைவனிடம் லயிக்க கைகள் வேலை செய்ய வில்லை.அந்த ஒரு முழம் இறைவனின் அருளால் இரண்டு முழம் ஆயிற்று.

அத்தோடு இவரும் வேலை செய்ய வில்லை துணியின் நீளமும் அதிகரிக்கவில்லை.அப்போது இவர் எவ்வளவு நெய்திருக்கிறார் எனப் பார்க்க வந்த ஜிஜ்ஜாபீபீ இரண்டு முழம் மட்டுமே நெய்யப்பட்டிருப்பதையும் கபீர் கண்கள் மூடி தியானத்தில் இருப்பதையும் கண்டு அவருக்கு கடும் கோபம் ஏற்பட்டது.

கபீர்...கத்தினார் ஜிஜ்ஜாபீபீ...

சட்டெனக் கண்களைத் திறந்தார் கபீர்.

என்ன செய்து கொண்டிருக்கிறாய்..?இன்றைய பொழுதுக்கு நீ நெய்த துணி இவ்வளவுதானா?நீ இப்படி இருந்தால் குடும்பச் செலவுக்கு என்ன செய்வது?போ..நீ நெய்த இந்தத் துணியை எடுத்துச் செல்..இதனை விற்றுப் பணம் கொண்டு வா..பணம் கொண்டு வந்தால்தான் இன்று உனக்குச் சாப்பாடு..என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

பயந்து போய்விட்டார் கபீர்.தந்தையும் கோபித்தால் என்ன செய்வதென்று பயந்த கபீர் அந்த இரண்டு முழ துணியை எடுத்துக் கொண்டு கடைதெருவுக்குச் சென்றார்.யாரும் அதனை வாங்க முன் வரவில்லை.

கவலையாய் இருந்தது கபீருக்கு.இத் துணியை விற்க முடியாமல் போனால் பணம் கிடைக்காதே. வீட்டிற்குப் பணமின்றி எப்படிச் செல்வது?தாயாரின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்ற பயம் பற்றியது மனதில்.

வெகு நேரமாகிவிட்டது.இனியும் இங்கு நிற்பதில் பயனில்லை எது நடக்குமோ அது நடக்கட்டும் என எண்ணியவராய் துணியை மடித்துக் கையில் எடுத்துக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார் கபீர்.

அப்போது எங்கிருந்தோ வேகமாக ஓடிவந்த ஒருவர் கபீரின் கையிலிருந்த துணியைப் பிடுங்கிக்கொண்டு ஓட்டமெடுத்தார். 

அடுத்த வாரம் தொடரும்

கபீர் தாஸரின் கதை கொஞ்சம் பெரிய கதை ஒரே வாரத்தில் அதனை முழுவதுமாய் எழுதுவது சாத்தியமில்லை..மேலும் ஒன்றிரண்டு வாரங்கள் எழுதவேண்டியிருக்குமோ எனத் தோன்றுகிறது.உங்களுக்குப் பிடித்திருந்தால் எழுதுகிறேன் இல்லையெனில் இத்தோடு முடித்துவிடுகிறேன் நன்றி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.