(Reading time: 2 - 3 minutes)

கவிதை - ஏழு நிலையில் எந்த நிலை...? - அமுதா

Love

ஏன் நின்றாய்...என் வழியில்…?

ஏன் வந்தாய்...என் வாழ்வில்…?

 

எத்தனைமுறை மனதை சலவை செய்தும்…

ஏனோ கண்ணை விட்டு மறையவில்லை...

எப்போதும் நீ காட்டிய அக்கறைகள்…!!

 

உதறித் தள்ளிய வார்த்தைகளிலும்…

உரிமையோடு ஒளிந்து கொண்டிருக்கின்றது…

உனக்கு மட்டுமே சொந்தமான ஒரு காதல்…!!

 

கண்கள்  உனைக் காண மறுத்து காதத்தூரம்

செல்ல கங்கணம் கட்டுகிற வேகத்தில்…

எப்படி வருகின்றது உன் முன்னே என் மனம்…??

 

சொல்லெடுத்து எறிகின்றேன் தூரம் போகாமல்

கொள்ளும் மௌனத்தில் அள்ளி  உனை

அணைக்கத் துடிக்கின்றது ஒரு மனம்…!!

 

ஆழ்மனதில் அழைக்கின்றேன் அருகில் வாராமல்

கொல்லும் மௌனத்தில் கொன்று உனை

கூறுபோடத் துடிக்கின்றது மறு மனம்…!!

 

இரண்டு மனதோடு எத்தனை முறை…

இறந்து இறந்து பிறப்பது என்னோடு…??

 

வட்டிபோல் வளரும் காதலால் - கடன்

பட்டதுபோல் கதறுகின்றது நெஞ்சம்…!!

 

பிரம்மஹத்தி தோசம் பிடித்தவளாய்…

ஊர் ஊராக உனக்காய் சுற்றித் திரிகின்றேன்…

உள்ளங்கையில் ஒட்டிய உன் காதலோடு…!!

 

யார் நீ…? யார் நான்…? அறியாமல் அருகில்

நீயிருந்தும் அனாதையாகத் தவிக்கின்றேன்…

தேற்ற வராத உன் வார்த்தைகளோடு…!!

 

'காதலில் மொத்தம் ஏழு நிலை'...

என்றுதானே கணக்கறிந்து சொன்னான்...

அனுபவக் கவிஞன் அவன்…!!

 

ஏழு நிலையில் எந்த நிலையிலும் வாராத

இந்த நிலை, காதலில் எந்த நிலையென…

எனக்கும் இன்னும் புரியவில்லை…!!

 

எனக்கு வேண்டாம் இந்தக் காதல்…

எடுத்து வருகின்றேன் உன்னிடமே...

நீ தந்ததுபோல் திருப்பி அதைத் தந்துவிட…!!!

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.