(Reading time: 1 - 2 minutes)

என்னை கொலை செய்யாதீர் - கிருஷ்ணபாபு

Save Tree

அவர்கள் நிச்சயம் நினைத்திருப்பார்கள்
இனி
பறிக்கவும் வெட்டவும்
துளியும் ஆகா
வெறும் தூர்முண்டு
நானென.

உண்மையும் அதுதானோ?
பிசின் கண்ணீராய் சுரந்தது.
எத்தனை பறவைகள்…
எத்தனை அணில்கள்…
எத்தனை கூடுகள்…

என் கைகளில் தத்திப்பழகும்
குஞ்சுகள் தவறி விழுமென
சருகு மெத்தை விரித்திருப்பேன்.

அணில்களின் அதிகாலைக் கலவிகள்
சுகமாய் விருத்தியாக
காற்றில் மென்மையாய்
தலையசைப்பேன்.

விதையுள் நானிருந்த
கருவறைக் குளுமையை
வேனலில் அண்டிய அனைவர்க்கும்
பகிர்ந்தளித்துத் தாயானேன்.

அத்தனையும் போனதோ?
இனி நான் வெறும் கானலோ?

தலையை மண்புதைத்து
உடலால் உயிர்கள் வளர்த்து
அழியுமுன் சொல்வதற்கு
இறுதிக்கேள்வி உண்டெனக்கு…

புயலிலும் வீழ்ந்துளிர்த்தேன்.
மின்னலிலும் தப்பிப்பிழைத்தேன்.
இயற்கைச் சாவு எனக்கில்லையா?
இவர்கள் கொலை யார்க்கும் புரியவில்லையா?

அடிவயிற்றில் வெட்டி உயிர்பறித்த
பாவிகளே ஒரு நிமிடம் நில்லுங்கள்.

கரையான் குடும்பம் என்னோக்கி
வருகிறது.
அவற்றின் குஞ்சுகளுக்கும்
என் உடலளித்து பெருமையாய்
உயிர் விடுவேன்.

இன்னும் என்னுள்
மண்டிக்கிடக்கிறது
தாய்மை ஏராளமாய்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.