(Reading time: 20 - 39 minutes)

காதல் கதை 

 காதல் கதை

குட் மார்னிங் செல்லம்ஸ்...” என்றாள் பிரீதா சந்தோஷமாக.

அவள் சொன்னது புரிந்ததோ இல்லையோ, காற்றடிக்கவும், அந்த அழகிய ரோஜா மலர்கள் இரு பக்கமும் அசைந்தாடின. ப்ரீதாவின் கண்களுக்கு அவை அனைத்தும் அவளுக்கு மறுவணக்கம் சொல்வதாக தோன்றியது. தானாக முகத்தில் ஒரு பெரிய புன்னகை தோன்ற,

“நான் இன்னைக்கு அஞ்சு நிமிஷம் லேட், என்னை தேடுனீங்களா இல்லையா?” என்று கேட்டபடி அந்த அழகிய மலர் செடிகளுக்கு நீர் ஊற்ற தொடங்கினாள்.

செடிகளுடன் அதுவும் பூச்செடிகளுடன் பேசினால் அவற்றுக்கும் புரியும் என்று எங்கேயோ சிறு வயதில் படித்த நினைவில் இது போல் செடிகளுடன் பேசுவது பிரீதாவின் வழக்கமாக இருந்தது. மனிதர்களுக்கு எப்படி தங்களுடன் அன்புடன் பேசி பழகுபவர்களை கண்டால் பிடிக்கிறதோ, அது போல் செடிகளுக்கும் தன்னுடன் அன்புடன் பேசுபவர்களை பிடிக்கும் என்பது அவளின் நம்பிக்கை.

அவளுடைய நம்பிக்கையில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, அவள் சிறிதாக வாங்கி நட்டு வைத்த அந்த ரோஜா செடிகள், அவள் இங்கே செல்லம்மாவின் வீட்டிற்கு வேலைக்கென வந்து ஆகி இருந்த ஒன்றரை ஆண்டுகளில் செழிப்புடன் வளர்ந்து, மலர்ந்து, மணம் வீசிக் கொண்டிருந்தன.

ஒரு வழியாக எல்லா செடிகளுடனும் பேசி, செல்லம் கொஞ்சி, சீராட்டி முடித்தவளின் கண்களில், ஒரு ஓரத்தில் மொட்டாக மலர தொடங்கி இருந்த அந்த அழகிய சிகப்பு வண்ண ரோஜா பட்டது... அவளின் நினைவுகள் தானாகவே இரண்டரை வருடங்கள் பின்னே சென்றன...

அன்று,

இதே போன்ற அழகிய ரோஜா பூவை அவளிடம் நீட்டிய வினய்,

“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு ப்ரீதா... ஐ லவ் யூ...” என்றான்.

“ப்ச்... வாட் இஸ் திஸ் வினய்? நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை... நீங்க கூட இவ்வளவு சீப்பா? பட் டு ஆன்சர் யு, ஐ டோன்ட் இவன் லைக் யூ... அப்புறம் காதலாவது கத்தரிக்காயாவது...”

டந்து போன இந்த இரண்டு வருடங்களில் எத்தனையோ முறை இதே நிகழ்ச்சியை நினைத்து பார்த்திருக்கிறாள்... உண்மையில் சொல்ல போனால் தினம் தினம் ஏதேனும் ஒரு காரணத்திற்காக வினய்யும் கூடவே இந்த காட்சியும் அவளுடைய நினைவில் வர தான் செய்கின்றன...

ஒவ்வொரு முறையும் அவள் மனதில் கூடவே தோன்றும் கேள்வி ஒன்றே ஒன்று தான்! ஏன் அப்படி பட்டென்று அவனை பிடிக்கவில்லையென்று முகத்தில் அடித்தது போல் சொன்னாள்?

அன்று அப்படி பேசியதற்கு அவளிடம் ஆயிரம் காரணங்கள் இருந்தன ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை அதை பற்றி சிந்தித்து தன்னையே கேள்வி கேட்டு கடிந்துக் கொண்டிருக்கிறாள் அவள்... மென்மையாகவாவது மறுத்திருந்திருக்கலாம்!

ஒரு பெருமூச்சை வெளியேற்றியவள், பழைய நிகழ்வை நினைத்துக் கொண்டிருப்பதால் பலன் எதுவும் இல்லை என்பதை உணர்ந்து, தன்னுடைய செல்லங்களிடம் இருந்து விடை பெற்று கிளம்பினாள்.

பிரீதா வயது முதிர்ந்தவரான செல்லம்மாவிற்கு கம்பானியனாக அந்த வீட்டில் பணி புரிகிறாள். செல்லம்மாவின் வீட்டிலேயே தங்கி இருந்து அவருக்கு எல்லா வேலைகளிலும் உதவி செய்வது தான் அவளின் வேலை... பெங்களூருவை விட்டு சற்றே தள்ளி இருந்த அந்த வீட்டில் அவர்கள் இருவரை தவிர மற்ற வேலைகள் செய்ய வேலை ஆட்கள் இருவர் இருந்தனர்.

உண்மையில் மாதமொருமுறை செல்லம்மாவின் பூர்வீக நிலங்கள் குறித்த கணக்கு வழக்குகள் பார்ப்பது தவிர அவளுக்கு பெரிதாக இங்கே வேலை எதுவும் இல்லை... மற்றபடி ஒவ்வொரு நாளும் செல்லம்மாவிற்கு செய்திகள் படிப்பது, தொலைக்காட்சி பார்க்கும் போது கூட துணையாக இருப்பது என்று ஒரு உறவினர் வீட்டில் தங்கி இருப்பது போல் தான் இருந்தது அவளுக்கு...

இப்படி எதுவுமே செய்யாதிருந்தால் சரிபட்டு வராது என்று தான் பிரீதா தானாகவே செல்லம்மாவின் அனுமதியோடு தோட்டத்தை சீர் செய்து செடிகள் வளர்க்க தொடங்கியதே!

இந்த வாழ்வும் கூட அவளுக்கு வினய்யின் உதவியினால் கிடைத்தது தான்... மனம் தானாக மீண்டும் வினய்யிடம் சென்றது.

வினய் அவள் கல்லூரி இறுதி ஆண்டிற்காக ப்ராஜக்ட் செய்ய சென்ற நிறுவனத்தில் சூப்பர்வைசராக இருந்தான். மிகவும் கண்டிப்பானவன் என்று பெயர் வாங்கியவனின் டிபார்ட்மெண்டில் தான் அவள் ப்ராஜக்ட் செய்ய வேண்டி இருந்தது.

அந்த இரண்டு மாதங்களில் தினம் தினம் ஒருவரை ஒருவர் பார்க்க முடிந்தாலும் கூட, ஒரு சில முறை தான் இருவரும் பேசி இருக்கிறார்கள்...

அவளுடைய ப்ராஜக்ட் வேலையை முடித்து, ரிப்போர்டை அவனுடைய அப்ரூவலுக்கு அனுப்பினால், வினய் அதில் சின்ன ஒன்றிரண்டு பிழைகளை கண்டான்... அதை மறைக்காமல் அவனுடைய அப்ரூவல் ரிப்போர்ட்டில் எழுதி அவளிடம் தரவும் செய்தான்...

அவ்வளவு தான் பிரீதாவிற்கு அழுகை வராத குறை தான்! இதை அப்படியே கொண்டு சென்று கல்லூரியில் தந்தால் அவளுக்கு பாதி மதிப்பெண் கூட தர மாட்டார்களே! சின்ன பிழைகள் என்ற போதும், ப்ராஜக்ட் செய்த நிறுவனத்திலேயே ரிப்போர்ட்டில் அப்படி பிழைகள் இருப்பதாக சொன்னால், கல்லூரியில் என்ன மதிப்பெண் கிடைக்கும்?

அவனிடம் நிலைமையை விளக்கினால், ஒரு புன்னகையோடு,

“பிரீதா, உங்களை பற்றி நல்ல ரிமார்க் தானே கொடுத்திருக்கேன். ரிப்போர்டில் இருந்த சின்ன காஸ்மெடிக் மிஸ்டேக்ஸ் பற்றி தானே சொல்லி இருக்கேன். அதெல்லாம் பெரிய விஷயமா இருக்காது.”

அவன் சொல்வது சரி தான்... ஆனால் கல்லூரியில் மதிப்பெண், பின் வேலை தேடும் போது இதனால் ஏற்படக் கூடிய பாதிப்பு என அனைத்தும் வந்து அவளை பயமுறுத்தின. வினய்யிடம் இனம் புரியாத எரிச்சலும் கோபமும் எழுந்தது...

அதன் பின் அவள் அந்த நிறுவனத்தில் இருந்து கிளம்பிய கடைசி நாளில் தான் வினய் அவளை தனியாக பேச வேண்டும் என்று அழைத்து அவனின் காதலை சொன்னது. மனதில் குமுறிக் கொண்டிருந்த கோபத்திற்கு, பழி வாங்க அவனே ஒரு வாய்ப்பை கொடுக்க, அவனின் முகத்தில் அடிப்பதை போல் பதில் சொல்லி விட்டு அங்கே இருந்து கிளம்பினாள் அவள்!

னால் வினய் சொன்னது போலவே அந்த ஒன்றிரண்டு சிறு பிழைகளினால் எந்த பாதிப்பும் இல்லை என்பது போல் அவளுக்கு மதிப்பெண் மட்டும் அல்லாமல் உடனேயே வேலையும் கிடைத்தது.

அவளுக்கு உறவென இருந்த தந்தைக்கு இனியாவது எல்லாம் செய்ய வேண்டும் என்று அவள் நினைக்கும் போதே எதிர்பாராத விதமாக அவர் ஒரு விபத்தில் காலமாக, பிரீதா யாருமற்று தனியாக நின்றாள்!

ஆனால் பெரிய நிறுவனத்தில் கிடைத்திருந்த அக்கவுண்டன்ஸ் துறை வேலை மனதில் தன்னபிக்கை கொடுக்க, தனியே இருப்பதை பற்றி பிரீதா பெரிதாக பயம் ஏற்படவில்லை. சிறு வயது முதலே வளர்ந்த வீடு, நன்கு பழக்கமான அக்கம் பக்கம் உள்ள மக்கள் என்ற தைரியம்...

அந்த தைரியம் ஒரு முழு மாதம் கூட நிலைத்திருக்கவில்லை! அது வரை அண்ணா, மாமா என்று அன்புடன் அவள் அழைத்து பழகி இருந்தவர்கள் அவளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கி இருந்தனர். பெண்ணுக்கே உரிய எச்சரிக்கை உணர்வில், அவர்களின், பேச்சு, பார்வை, நடவடிக்கைகளில் வேறுபாடு தெரியவும், பிரீதாவின் மனதில் சிறு பயம் தோன்ற செய்தது...

அப்போதும் கூட ஏதாவது ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு செல்வது என்று தான் அவள் முதலில் நினைத்தாள். ஆனால் அவளின் கம்பெனியில் நடைபெற்ற ஒரு விழாவில் மது அருந்தி விட்டு அவளின் துறை மேலாளரே அவளிடம் தவறாக பேசி, நடக்க முயற்சிக்கவும் பிரீதாவிற்கு கலக்கம் ஏற்பட்டது.

ரவணைக்க உறவினர்கள் இல்லை... ஆறுதல் சொல்வார்கள் என்று நினைத்த நண்பர்களும் நல்லவர்கள் இல்லை... ஒரே பிடிமானமாக இருந்த வேலையிலும் பிரச்சனை! அவள் என்ன தான் செய்வாள்?

என்ன செய்வது என்று அவள் குழம்பி இருந்த போது ஏதேச்சையாக வினய் வேலை செய்த நிறுவனத்தில் அவளுக்கு பரிச்சயமாகி இருந்த சுமித்ராவை சந்தித்தாள் பிரீதா. மனதில் இருந்த பிரச்சனையை வெளியே சொல்லவும் ஆள் இல்லாமல் கலங்கிக் கொண்டிருந்தவளுக்கு வடிகாலாக சுமித்ரா வரவும், அவளிடம் தன் பிரச்சனைகளை சொல்லி கண்ணீர் விட்டாள் பிரீதா! கட்டாயம் உதவுவதாக சுமித்ரா சொன்ன போதும் கூட பிரீதாவிற்கு பெரிதாக நம்பிக்கை ஏற்படவில்லை. சுமித்ராவும் அவளை போலவே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள் தானே? கதை, திரைப்படங்களில் வருவது போல் நட்புக்கு மரியாதை தருகிறேன் என்று எதையும் செய்ய முடியாதே!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.