(Reading time: 23 - 45 minutes)

ங்க வீட்டுக்கு வந்ததுல இருந்து உங்க சித்தி பொண்ணுங்க, என்னை ஒரே கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க. பர்ஸ்ட் நைட் எப்படி போச்சி அண்ணி, எங்க அண்ணன் எப்படி, அப்படி இப்படின்னு, நான் அவங்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்றது. உங்களுக்கென்ன நீங்க பாட்டுக்கு எங்கேயோ போயிட்டீங்க. என்னை ஒரு மனுஷியாவாச்சும் நினைச்சி பாத்தீங்களா”

“என் அப்பா அம்மா செஞ்சது தப்பு தான். ஆனா இந்த கல்யாணத்தை தவிர அவங்க என் இஷ்டம் இல்லாம ஏதும் செஞ்சதில்லை. எல்லாமே என் இஷ்டம் தான். எதிலையுமே அவங்க விருப்பத்தை என் மேல தினிச்சதே இல்லை. ஆனா இந்த கல்யாணத்துலையும் நான் நல்லா இருப்பேன்னு நம்பி தான் அவங்க செஞ்சி வச்சாங்க.”

“எனக்கு எந்த ஸ்பெஷல் பெயர் எல்லாம் இல்லை. என் பெயருக்கு எனக்கு மீனிங் எல்லாம் தெரியாது. நான் ரொம்ப சாதாரண பொண்ணு தான். உங்க பெயர் கூட எந்த பெயர் பொருத்தமும் எனக்கு கிடையாது. ஆனா என் குடும்பம் மட்டும் தான் எனக்கு உலகமா இருந்துச்சி, அதுல நான் நட்சத்திரம் மாதிரி ஜொலிச்சிட்டு இருந்தேன். ஆனா ஆனா இப்ப பிரகாசமே இல்லாம போயிட்டேன். இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து நான் என் சுயத்தையே தொலைச்சிட்டேன். என்னோட உணர்ச்சிகளை மதிக்க இங்க யாரும் இல்லை. இப்படி செய்யறதெல்லாம் செஞ்சிட்டு பொண்டாட்டியை அடக்கி ஆள நான் நினைக்கலைன்னு மட்டும் நல்லா பேசறீங்க” என்று கதறி அழ ஆரம்பித்தாள்.

அவள் பேசியதற்கு வருண் ஏதும் பதில் கூறவில்லை. கட்டிலிற்கு சென்று படுத்து விட்டான். அவன் மனசாட்சி அவனை குத்தி கிளறிக் கொண்டிருந்தது.

அவள் கூறியது உண்மை தானே. என்னை பத்தி மட்டுமே யோசிச்சிட்டு, அவளை பத்தி சுத்தமா நினைக்காம போயிட்டேனே, எனக்கு கல்யாணம் வேண்டாம்ன்னு அப்பா அம்மா கிட்ட வேணும்னா நான் சண்டை போட்டு இந்த கல்யாணத்தை தடுத்திருக்கணும். அப்படி பண்ணாம கல்யாணம் பண்ணிக்கிட்டு, எப்படி நான் அவ என்னை நம்பி வந்தவன்ற எண்ணமே இல்லாம இப்படி நடத்தினேன் என்று வருந்தினான்.

ஆக அவளுக்கு நான் காதலிச்சது தெரிஞ்சிருக்கு. நேத்துல இருந்து தான் அவ ஒரு மாதிரி இருக்கா. அதுக்கு முன்னாடி இந்த ஒரு வாரமா நாங்க நல்லா தான் பேசிட்டு இருந்தோம். சோ நேத்து தான் அவளுக்கு இது தெரிஞ்சிருக்கு. எப்படி தெரிஞ்சிருக்கும். வீட்ல கண்டிப்பா சொல்லிருக்க மாட்டங்க.

அப்போது தான் அவள் பெயர் பொருத்தம் பற்றி பேசியது நியாபகம் வந்தது. அப்படி என்றால் அவள் டைரியை பார்த்திருப்பாள். நானே சொல்லி இருக்க வேண்டும். அவள் கூறியது போல் நான் அவளை மிகவும் வருத்தி இருக்கிறேன்.

என்னவெல்லாம் கூறிவிட்டாள். அவள் வார்த்தைகளில் எவ்வளவு வருத்தம் தெரிந்தது. இனியும் அவளை அப்படி வருந்த விடக் கூடாது என்று உறுதி பூண்டான்.

அடுத்த இரண்டு நாட்கள் இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. வருண் அமைதியாக அவளை கவனித்துக் கொண்டிருந்தான். அவள் அவனிடம் கோபமாக பேசினாலும் அவன் பெற்றோரிடம் அதை காண்பிக்கவில்லை. அவனுக்கும் எல்லாவற்றையும் அவளே செய்தாள்.  

இரண்டாம் நாள் வருண் இரவு கொஞ்சம் லேட்டாக வந்தான். சாப்பிட அழைத்த அன்னையிடம் பசியில்லை என்று கூறி விட்டு சென்று விட்டான். நந்தினி அழைக்கும் போதும் அதையே சொன்னான். ஆனால் அவள் அமைதியாக சென்று அவனுக்கு உணவை அறைக்கே எடுத்து வந்து வைத்து சாப்பிடுங்கள் என்று கூறிவிட்டு போய் படுத்து விட்டாள். அவன் சாப்பிடுகிறானா என்று ஓரக்கண்ணால் வேறு பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அதை பார்த்த வருணுக்கு ஒரே சிரிப்பு. நல்ல பெண் இவள் என்று எண்ணிக் கொண்டான்.

அடுத்த நாளில் இருந்து வருண் அவளை சீண்ட ஆரம்பித்து விட்டான். அவன் பெற்றோர் எதிரே “அம்மா நாங்க இன்னைக்கு படத்துக்கு போறோம்” என்றான். அவளும் அவனை முறைத்தாலே தவிர ஏதும் கூறவில்லை.

தனியாக இதை பற்றி கேட்டவளிடம் கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆச்சி, இப்படி எல்லாம் இல்லன்னா எல்லாரும் என்ன நினைப்பாங்க. உனக்கு வேண்டாம்ன்னா நீயே கீழ போய் சொல்லு என்றான்.

அவளுக்கு வாயை மூடி அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி இல்லாமல் போனது.

இதே வழி முறையை பின்பற்றியே அவளை அவள் அம்மா வீட்டிற்கு அழைத்து சென்றான். அங்கு நல்ல கணவன் மனைவி போல் அவளை ஓவராக சீண்டினான். அவள் கன்னத்தை தட்டுவது, அவள் கையை பிடித்து இழுப்பது, இது போலெல்லாம் செய்தான்.

திரும்ப வீட்டிற்கு வந்து அவனை திட்டியதற்கு “அவங்க உனக்கு நல்லது தான் நினைச்சாங்கன்னு தான் உனக்கு புரியுது இல்ல அப்ப எதுக்கு அவங்களை தண்டிக்கற, உன் கோபம் எல்லாத்தையும் என் கிட்ட காட்டு” என்றான்.

அவள் என்ன தான் செய்வாள். அதற்கு வழி இல்லாமல் தானே மௌனம் ஒன்றையே கடை பிடிக்கிறாள். ஏதும் கூறாமல் சென்று விட்டாள்.

இப்படியே நாட்கள் செல்ல செல்ல நந்தினிக்கு கொடுமையாக இருந்தது. முன்னவாவது அவன் செய்தவற்றை கூறி அவன் மேல் கோப பட முடிந்தது. ஆனால் இப்போதோ அவன் அவள் மேல் பாசத்தை கொட்டினான். அதெல்லாம் தெரியாதது போல் நடந்து கொண்டாலும் நந்தினிக்கு அதெல்லாம் தெரிய தான் செய்தது.

அடிக்கடி சேலை, சுடிதார், பூ, அவளுக்கு பிடிச்ச புக்ஸ் என்று எல்லாம் அவளுக்கு அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். அதையும் தனியாக கொடுத்தால் வாங்க மாட்டாள் என்று அவன் பெற்றோர் எதிரிலேயே தருவான். நந்தினியும் வேறு வழி இல்லாமல் வாங்குவாள்.

அன்று நந்தினிக்கு காய்ச்சல் வந்தது. அவன் தாய் மகனுக்கு போன் செய்து விஷயத்தை கூறி சாயந்திரம் சீக்கிரம் வர சொல்லி, டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போகணும் என்று கூறினால், வருணோ மதியமே லீவ் போட்டு விட்டு வந்து நின்றான்.

அது மட்டுமின்றி மேலும் இரண்டு நாட்கள் லீவ் போட்டு விட்டு மனைவியுடனே இருந்தான். அவள் வேண்டாம் என்று எவ்வளவோ கூறியும் கேட்காமல் அவனே அவளை பார்த்துக் கொண்டான்.

நந்தினிக்கு ஒவ்வொரு நாளும் அவன் மேலான காதல் வளர்ந்து கொண்டே போனது. ஆனால் அவளால் அதை வெளிக் காட்ட இயலவில்லை. ஏதோ ஒன்று அவளை தடுத்தது.

வருணுக்கும் அவள் மன நிலை புரிய தான் செய்தது. ஆனால் சிறிது பொறுத்திருக்க எண்ணினான். ஆனால் அவள் மேல் அவன் காட்டும் அக்கறையை மட்டும் நிறுத்தவதாக இல்லை.

நந்தினிக்கு இது தான் கொடுமையாக இருந்தது. முன்பு போல் கணவன் பாரா முகமாக இருந்தாலும் பரவாயில்லை. அப்படி இல்லாமல் அவன் தன் மேல் இப்படி அன்பு செலுத்தியும் அதை தன்னால் முழு மனதாக ஏற்றுக் கொள்ள இயலவில்லையே என்று எண்ணி வருந்தினாள்.

இப்படியே அவர்களின் வாழ்க்கை சென்றுக் கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு நாள் வருண் போன் செய்து அவன் அன்னையிடம் “நான் ஒரு மணி நேரத்துல வரேன். அதுக்குள்ளே நந்தினியை ரெடியா இருக்க சொல்லுங்க.” என்று கூறினான்.

“இந்த மதியத்தில் எங்கு தான் அழைத்துக் கொண்டு போக போகிறானோ” என்று நந்தினி எண்ணிக் கொண்டு சொன்ன படி கிளம்பி இருந்தாள்.

அவனுடன் செல்லும் போதும் தன் வாழ்க்கையை பற்றியே குழப்பத்திலேயே சென்றாள்.

இடையில் யாருடனோ போனில் பேசி விட்டு “வழியில் என் பிரண்ட் ஒருத்தரை பார்த்துட்டு போயிடலாம்” என்று மட்டும் சொன்னான். நந்தினியும் தலையை மட்டும் ஆட்டினாள்.

வண்டியை நிறுத்தி விட்டு அவன் அழைக்கவும் தான் நந்தினி அவள் எண்ணங்களில் இருந்து வெளியே வந்தாள்.

ஒரு கல்லூரிக்கு அவர்கள் வந்திருந்தார்கள். இங்கே ஏன் என்று அவனிடம் கேட்கலாம் என்று எண்ணினால் அவன் போன் பேசிக் கொண்டே அவளை வருமாறு கையசைத்தான்.

அங்கே சென்ற உடன் ஒருவர் ஒரு பார்ம் எடுத்துக் கொண்டு வர வருண் அவளிடம் கொடுத்து சைன் போட சொன்னான். அவள் என்ன என்று வினவ நீ மாஸ்டர் டிகிரி படிக்கறதுக்கு ஜாய்ன் பண்ண வந்திருக்கோம் என்று கூற நந்தினிக்கு கண்களில் நீர் நிரம்பியது. அவன் சொன்ன இடத்திலெல்லாம் கையெழுத்திட்டு திரும்ப வீடு வரும் வரை அவள் ஏதும் பேசவில்லை.

வீட்டிற்கு வந்தும் நந்தினி ஏதும் பேசவில்லை. இரவு தன் அறைக்கு சென்ற வருண் ஜன்னலில் பார்வையை பதித்தவாறு நின்றிருந்த மனைவியிடம் பேச்சுக் கொடுத்தான்.

“என்ன மேடம். சண்டையாச்சும் போட வாய் திறப்பீங்க. இப்ப என்ன அதுவும் இல்லை” என்று விட்டு அவள் முகத்தை திருப்ப அவளோ அழுதுக் கொண்டிருந்தாள்.

வருண் “என்னடா” என்று கேட்டு விட்டு அவளை அனைத்துக் கொண்டான்.

அவனை இறுக அணைத்தவாறே நந்தினி அவள் மனபாரம் குறையும் வரை அழுது தீர்த்தாள். ஆனால் ஒன்றும் பேசவில்லை. அழுகை நின்றவுடன் அவனை விட்டு விலகி அமர்ந்தாள்.

அவள் மனதில் இருப்பது தெரிந்தவாறு வருண் பேச ஆரம்பித்தான். “எனக்கு எந்த ஸ்பெஷல் நேம் இருக்கற பொண்ணும் தேவை இல்லை. என் நேம் கூட பெயர் பொருத்தம் இருக்கணும்ன்னும் எல்லாம் அவசியம் இல்லை. என் மேல அன்பு வச்சிருக்க பொண்ணு தான் எனக்கு வேணும்” என்றான்.

நந்தினி சிறு குழந்தை தேம்புவதை போல் அமர்ந்துக் கொண்டிருந்தாள். வருணோ இந்த முறை அவளை தேற்றாமல் தொடர்ந்து பேசினான்.

“நீ சொன்ன நான் என் வீட்டுல இருக்கும் போது நட்சத்திரம் மாதிரி இருந்தேன்னு, ஆனா என் வாழ்க்கைன்ற வானத்துல நீ தான் டா நிலா. உன்னால மட்டும் தான் என் வாழ்க்கைக்கு வெளிச்சம் தர முடியும்ன்னு நான் என்னைக்கோ தெரிஞ்சிகிட்டேன்”

“என்னைக்கும் தேயாத நிலாவா என் வானத்துல இருப்பியா டா நந்து” என்றவாறே அவளை நோக்கி தன் கைகளை காட்டினான்.

நந்தினியே வந்து அவனிடம் அடைக்கலமானாள். திரும்ப கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். வருண் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்ணீரை துடைத்து “நோ மோர் டியர்ஸ். ஓகே” என்று கூறி விட்டு “ஐ லவ் யூ டா. நீ இல்லாமல் என்னால இருக்க முடியாது” என்றான்.

அவளும் “நானும் தான்” என்றாள்.

வருணுக்கு திரும்பவும் அவள் செய்கை குழந்தையையே நினைவூட்டியது. அவன் மனம் நிறைந்தான்.

தன் மனைவியை குழந்தையை போல் கட்டிக் கொண்டான். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.