(Reading time: 9 - 17 minutes)

சிறையே உலகமாய் - சுரேஷ்

தெய்வானை பிணமாவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சிறையிலேயே அவள் உயிர் போகவேண்டும் என்பதுதான் இறைவனின் விதி போலும்! இவள் கணவன் சாரங்கனுக்கு நான் என்ன பதிலைக் கூறுவேன்? சற்று புத்தி பேதலித்துப்போயிருக்கும் அவனை, இந்தச் செய்தி மொத்தமாக அல்லவா கொன்றுவிடும். அதோ! தெய்வானையின் மறைவுக்காக வானமே மழை வடிவில் 'ஓ'வென்று அழுகின்றது. 

என் பெயர் லெனின். இந்த அந்தமான் சிறையில் இருக்கும் இந்தியக் கைதிகளுக்கு ஆலோசனையும் பாவமன்னிப்பும் வழங்க, பாதிரியாரான என்னை பிரிட்டிஷ் அரசு 1923ஆம் ஆண்டு அனுப்பிவைத்தது. என் ஐம்பது வருட வாழ்க்கைப் பயணத்தில் இத்தனை கொடுமை நிறைந்த பூலோக நரகக்குழியை நான் கண்டதேயில்லை. போலீஸார், கைதிகளை விலங்குகளைப் போல் நடத்தினார்கள்; இயந்திரங்களைப் போல் வேலை வாங்கினார்கள். நோயாலும் போலீஸாரின் கொடுமையாலும் தினம் தினம் மரணங்கள். வேலைப் பளு தாங்கமுடியாமல் பெரும்பாலானோருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. ஆக்டோபஸ் போல தன் கைகளை விரித்து மனித உயிர்களைக் குடிக்கும் இந்த அந்தமான் சிறைக்கு என்று தான் பசி அடங்குமோ?

நான் வந்து ஒரு வருடம் கழித்து தான் சாரங்கனும் அவன் மனைவி தெய்வானையும் அந்தமான் சிறைக்கு அழைத்துவரப்பட்டனர். இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் தலா பத்தாண்டுகள் சிறைத்தண்டனையைப் பெற்றிருந்த இருவரும் தனித் தனிப் பிரிவில் சிறையில் அடைக்கப்பட்டனர். சாரங்கன் முரடன். சிறை அதிகாரிகளிடம் முரண்டு பிடித்ததால் சிற்றறைச் சிறைக்கு மாற்றப்பட்டான். சிற்றறைச் சிறை என்பது குறுகிய நீளமும் அகலமும் உடையது. எப்பொழுதும் இருள் சூழ்ந்தே இருக்கும் அச்சிறையில் அடைக்கப்பட்ட பல பேர் தனிமை பயத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலையே மேல் என்று எண்ணினார்கள் என்றால் எத்துணை கொடுமை நிறைந்ததாக இருக்கும் சிற்றறைச் சிறை! 

Siraiye ulagamaai

காலங்கள் உருண்டோடின. சாரங்கன் முரட்டு சுபாவம் மறைந்து சாதுவாய் மாறினான். அவ்வப்போது சிறை அதிகாரியிடம் தன் மனைவியைப் பார்க்கவேண்டும் என்று வேண்டுவான். ஆனால், அதிகாரியோ அவன் விண்ணப்பத்தை நிராகரித்துக்கொண்டே வந்தார். 

சாரங்கனுக்கு உதவ முன்வந்த நான், பெண் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்குச் சென்று தெய்வானையைச் சந்தித்தேன். சோர்ந்து களையிழந்து போயிருந்த அவளுடன் ஒரு மணி நேரம் உரையாடினேன். அந்த உரையாடலில் பெரும்பகுதியை தன் கணவருக்கு ஒதுக்கி, 'அவர் எப்படி இருக்கிறார்? நேரம் தவறாமல் உண்ணுகிறாரா? உறங்குகிறாரா?' என்று அவனைப் பற்றியே கேட்டுக்கொண்டிருந்தாள். எல்லாவற்றிற்கும் அவளை மகிழ்விக்கும் பதிலையே கூறிய நான், அவர்கள் குடும்பச்சூழ்நிலை பற்றியும் விசாரித்தேன். இருவருக்கும் சொந்தம் என்று சொல்ல யாருமில்லை என்பதையும், ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தை மட்டுமே உறவென்றும் அக்குழந்தையைப் பக்கத்து வீட்டினில் ஒப்படைத்துவிட்டு வந்ததாகவும் கூறினாள். 'அந்த பச்சிளம் குழந்தை என்ன பாவம் செய்தது!' என்று மனதினில் எண்ணியவாறே தெயவானைக்குத் தெம்பூட்ட ஆறுதல் வார்த்தைகளை உதிர்த்துவிட்டு நான் அங்கிருந்து கிளம்பினேன்.  

அடுத்த நாள், தெய்வானையிடம் பேசியதை சாரங்கனுக்குத் தெரியப்படுத்தினேன். மகிழ்ச்சியின் எல்லையை அடைந்த அவன் என் கைகளைப் பிடித்து அழத் தொடங்கினான். அவனைத் தேற்றிவிட்டு தெய்வானையிடம் கூறிய ஆறுதல் வார்த்தைகளை அவனுக்கும் கூறி அவன் மனச்சுமையை சற்று தளர்த்தினேன். அடிக்கடி இருவருக்கும் தூது செல்லும் அன்னப்பறவையாக மாறிப்போனேன் நான். அவர்களின் விடுதலை நாள் நெருங்கிக்கொண்டே வந்தது. காலம் கனிந்து வருகிறது என்று எண்ணினேன். ஆனால், அது கானல் நீராகிப் போனது. அவர்கள் இருவரின் மேலும் சில பொய்க்குற்றங்களைச் சுமத்தி அவர்களின் தண்டனையை நீட்டித்துவிட்டனர்.  

னமுடைந்து போன சாரங்கன் அன்று முதல் மௌனமாகிப்போனான். இனி, இந்தச் சிறையை விட்டு வெளியே செல்லமுடியாமல் தன் வாழ்க்கை இங்கேயே முடிந்துவிடுமோ என்ற பயத்தில் புத்திசுவாதீனம் அற்றவனாய் மாறிப்போனான். இவன் நிலை இப்படி இருக்க, தெய்வானையின் நிலையோ மோசமாகிப்போனது. நோயாலும் மனஉளைச்சலாலும் அவள் உடல் நாளுக்கு நாள் மோசமாகியது. அவள் நோயை சிறையில் உள்ள பயனற்ற மருத்துவமனையால் குணப்படுத்தமுடியவில்லை. இறுதியில் இறந்துபோனாள். இதோ! என் முன்னால் பிணமாகக் கிடக்கிறாள். யாரைக் குற்றம் சொல்வது? அவள் உடல் எரிக்கப்படும்போது கனத்த இதயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். 

பிறகு, சாரங்கன் இருக்கும் சிற்றறைச் சிறைக்கு சென்றேன். முழங்கால்களைக் கைகளால் கட்டிக்கொண்டு தலையைத் தாழ்த்தி அமர்ந்திருந்தான். "உன் மனைவி இறந்துவிட்டாள்" என்றேன். தலையை உயர்த்தி என்னைப் பார்த்தான். "தெய்வானையைப் பார்க்கவேண்டும்" என்று சொன்னான். "அவளை எரித்துவிட்டோம்" என்றேன். "அவளுக்கு வலிச்சிருக்குமே? அழுதாளா?" என்று அப்பாவியாய் கேட்டான். அவன் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் கனத்த மனதோடு நான் அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன்.

ருடங்கள் நகர்ந்தன. 1942 ஆம் ஆண்டு. அந்தமானுக்கு தன் கணவனுடன் வந்திருந்த என் தங்கை சாராவைப் பார்க்க அவள் குடியிருந்த வீட்டிற்குச் சென்றேன். நாங்கள் இருவரும் பாசப்பிணைப்பில் அணைத்துக்கொண்டோம். என் சகோதரி முன்னைவிட சற்று மெலிந்திருந்தாள். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்ததால், மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. பரிமாறியவள் ஒரு தமிழ்நாட்டு பெண். பெயர் வள்ளி. அவளைப் பற்றி என் சகோதரியிடம் விசாரித்தேன். வள்ளியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்ததாகவும், 'அந்தமான்' என்ற பெயரைக் கேட்டதும் தான் அவள் தன்னுடன் வர சம்மதித்ததாகவும் சாரா கூறினாள். மேற்கொண்டு வள்ளியைப் பற்றி எதுவும் நான் பேசவில்லை. 

நான் என் சகோதரியின் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம், வள்ளி தனியாக சோகமாய் அமர்ந்திருந்ததைப் பார்த்து ஆழ்ந்த வருத்தம் அவள் நெஞ்சில் புதைந்திருக்கிறது என்று மட்டும் புரிந்துகொண்டேன். ஒரு நாள், ஒரு புகைப்படத்தைப் பார்த்து அழுதுகொண்டிருப்பதைக் கண்டு அவளருகில் சென்றேன். என்னைக் கண்டவுடன் புகைப்படத்தை மறைத்துக்கொண்டு கண்களைத் துடைத்தபடி எழுந்தாள். நான் அது என்னவென்று விசாரித்தேன். மழுப்பலான பதில்களைச் சொன்னாள். நான் விடாப்பிடியாகக் கேட்கவே, புகைப்படத்தை என்னிடம் கொடுத்தாள். அதைக் கண்ட என் கண்கள் அதிர்ச்சியையும் வியப்பையும் மாறி மாறிக் கக்கின. 'விதியின் கரங்களுக்கு இத்துணை சக்தியா?' என்று ஒரு முறை எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். மணக்கோலத்தில் சாரங்கனும் தெய்வானையும் சிரித்தபடி புகைப்படத்தில் காட்சியளித்தனர். 

வள்ளி, 'அவர்கள் தன் தாய் தந்தையர் எனவும், தான் சிறு குழந்தையாய் இருந்தபோதே அந்தமான் சிறைச்சாலைக்கு வந்துவிட்டார்கள்' எனவும் கூறினாள். 'எல்லாம் தெரியும்' என்றேன் நான். அவள் முகம் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் உறைந்துபோனது. நான், சிறையில் அவளின் பெற்றோரோடு எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றியும் தெய்வானை இறந்துவிட்டதையும் சொன்னேன். நெடுநேரம் அழுத அவளை ஆசுவாசப்படுத்தி, "விரைவில் உன் தந்தை உன்னைப் பார்க்க வருவார்" என்று உறுதியளித்ததும் அமைதியாகி நிம்மதியடைந்தாள். ஆனால், சாரங்கனிடம் சென்று வள்ளியின் வருகையைப் பற்றிச் சொன்னபோது அவன் முகத்திலோ எந்த உணர்ச்சியுமில்லை. 

சில நாட்கள் கழித்து, அந்தமான் சிறை அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் வந்தது. இந்தியாவில் நடைபெறும் பெரும் போராட்டத்தின் எதிரொலியால் அரசியல் கைதிகளும் சில முக்கியக் கைதிகளும் இந்தியச் சிறைக்கு மாற்றப்படவேண்டும் என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. சில பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில் சாரங்கனின் பெயரும் கலந்திருந்தது. அச்செய்தியை உடனே வள்ளிக்குத் தெரியப்படுத்தினேன். அகமகிழ்ந்தாள். 'மீண்டும் சிறைச்சாலையா?' என்று கலங்கினாள். 'இந்தியா சென்றால் சில மாதங்களில் நிச்சயம் உன் தந்தை விடுதலையாவார்' என்று நான் கொடுத்த நம்பிக்கையில் தன்னைத் தேற்றிக்கொண்டாள். கைதிகளைக் கொண்டுசெல்லும் கப்பலில் சாரங்கனோடு வள்ளியும் பயணம் செய்ய அதிகாரிகளிடம் அனுமதி வாங்கினேன். சாரங்கன் அந்தமான் சிறையிலிருந்து இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படும் நாளன்று காலையில் சிறைச்சாலை அருகே வந்து நிற்கவேண்டும் என்று வள்ளியிடம் சொல்ல அவளும் சந்தோசமாக தலையாட்டினாள். 

அந்த நாளும் வந்தது. நீண்ட காலம் சிறையில் இருந்ததால் உலகமே அந்தச் சிற்றறை தான் என எண்ணியிருந்த சாரங்கன், சிறையிலிருந்து வெளியேற அடம்பிடித்தான். மீண்டும் மீண்டும் தான் இருந்த அறையை நோக்கியே ஓடிய சாரங்கன் வலுக்கட்டாயமாக வெளியில் கொண்டுவந்து விடப்பட்டான். அரசியல் கைதிகளின் பின்னால் அழுதபடி நடக்கமுடியாமல் நடந்து வந்த சாரங்கனை. நான் கைத்தாங்கலாய்ப் பிடித்துக்கொண்டு வந்தேன். அவன் உதடுகள் அடிக்கடி தெய்வானையின் பெயரை உச்சரித்தன. "ஃபாதர் தெய்வானை வரமாட்டாளா? கொஞ்சம் கேட்டுப்பாருங்களேன்" என்றான் அப்பாவியாய். நான் எதுவும் பேசாமல் அவனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன். அடிக்கடி தன் தலையைத் திருப்பி தெய்வானை வருகிறாளா என்று பார்த்தான். திடீரென அவன் நின்றான். "ஃபாதர், தெய்வானை ஓடி வரா. நான் தான் சொன்னேனே. அவ நிச்சயம் வருவான்னு" என்றான். நான் கண்ணீரை அடக்கியபடி அவனை பலவந்தமாய் இழுத்து வந்தேன்.

வெளியே வந்த தன் தந்தையைக் கண்ணீர் மல்க ஏறிட்டாள் வள்ளி. அவள் முகத்தில் பல உணர்ச்சிகள் கண நேரத்தில் உதித்தன. தன் தந்தையை நோக்கி ஓடி வந்தாள். ஓடி வரும் அவளை ஏறிட்டான் சாரங்கன். அவன் கண்களில் கண்ணீர்த் துளிகள் துளிர்த்தன. தன்னை நோக்கி ஓடி வரும் வள்ளியை, 'என்னை நெருங்காதே!' என்பது போல் கையாட்டினான் சாரங்கன். அவன் ஏன் அப்படி செய்தான் என்று தெரியவில்லை. ஆனால், வள்ளி ஓடி வருவதை நிறுத்தவில்லை. அப்பொழுது தான் அந்த கோர சம்பவம் நிகழ்ந்தது. ஓடி வந்த வள்ளி காலிடறி கீழே விழ, அவளின் தலை அருகில் கிடந்த கல்லின் மீது மோதி பலத்த காயத்துடன் கீழே விழுந்தாள். நான் பதறி அவளைத் தூக்க ஓடினேன். தன் கைகளை நீட்டி, "அப்பா.." என்று குரலெழுப்பமுடியாமல் உதடுகளை மட்டும் மெல்ல அசைத்து கண்களை மூடிக்கொண்டாள். நான் அவளைத் தூக்கி என் மடியில் கிடத்தி அவள் கன்னங்களைத் தட்டினேன். அவள் கண்களைத் திறக்கவில்லை. நிரந்தரமாக மூடிக்கொண்டாள்.

ள்ளியின் உடலைக் கண்டு சாரங்கன் கதறி அழுதான். தன் மகள் என்று தெரிந்துகொண்டு அழுகிறானா? இந்தப் பாவியை நோக்கி ஓடி வராதே என்று எச்சரித்தேனே! ஏன் ஓடி வந்தாய் என்று அழுகிறானா? குடும்பத்தையும் வாழ்வையும் தொலைத்துவிட்டோமே என்று அழுகிறானா? தன் விதியை எண்ணி அழுகிறானா? ஏன் அழுகிறான் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், நிறுத்தாமல் அழுதான்.

நாட்டு விடுதலைக்காக இத்துணை நாள் சாரங்கன் செய்த தியாகத்திற்கு சுதந்திரதேவி கூறப்போகும் பதிலை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.