(Reading time: 8 - 16 minutes)

அஞ்சலி - அன்னா ஸ்வீட்டி

சி அறையிலும் சற்று வேர்த்துக்கொண்டுதான் இருக்கிறது அஞ்சலிக்கு. வரவேற்பறையை ஒட்டிய அறையில் அவள் காத்திருக்கிறாள். வரவேற்பறையில் அவர்கள். இவளை பெண்பார்க்க வந்திருக்கும் அந்த மாதவன் குடும்பத்தினர்.

சிரிப்பும் நட்புமாக அறிமுக படலம் அங்கு நிகழ்ந்து கொண்டிருக்க இவளுக்குள் இங்கு படபடப்பு ஏறிக்கொண்டு இருக்கிறது.

“அஞ்சு வாம்மா...வந்து இதை எல்லாருக்கும் குடும்மா...” அம்மாவின் குரலில் இதயம் கடிவாளம் துறந்த குதிரையாகிறது. கால்கள் நேர்மாறாக அசைய மறுக்கிறது.

Anjali

அம்மா தன் கையில் தந்த அந்த ட்ரேயுடன் வரவேற்பறைக்குள் நுழைந்தவள், குனிந்த தலை நிமிராமல் ஒவ்வொருவருக்கும் ஒரு தட்டு என்ற வகையில் கையிலிருந்த அந்த இனிப்புகளை ஒவ்வொருவர் முன்னிருந்த சிறு மேஜையில் வைத்தாள். அவள் கண்வட்டத்திற்குள் வந்தது அனைவரின் கால்கள் மட்டுமே.

இதில் எது அவனது கால்கள்?

கையில் மித நடுக்கம். அதன் காரணமாக கையிலிருக்கும் பலத்த தங்க வளையல்கள் ட்ரேயில் இடித்து சத்தமெழுப்பி தன் நிலையை மற்றவருக்கு அதுவும் குறிப்பாக அந்த மாதவனுக்கு காட்டி கொடுத்துவிடுமோ என்ற ஒரு நினைவு கைகளை இறுக செய்கிறது.

 மனதில் அந்த மாதவன் முகம் பார்க்கும் ஆவல். ஆனால் இனம் புரியாத மற்றொரு உணர்ச்சி அதற்கு தடைவிதிக்க, மனதிற்குள் சுகபோராட்டம்.  மீண்டுமாக தன் அறைக்குள் நுழையும் வரையுமே அவள் மாதவன் முகத்தை பார்த்திருக்கவில்லை. போடி பயந்தாகொள்ளி.. மனம் இடிதுரைக்கிறது.

27 வயதானாலும் அஞ்சலிக்கு இந்த பெண்பார்க்கும் வைபவம் முதல் முறை. ஏறத்தாழ திருமணம் முடிவாகிவிட்ட நிலைதான். இரண்டும் பெண்கள் என்பதால் இவள் பெற்றோருடையதில் பாதி இவளுக்குத்தான் என்பதினாலோ என்னவோ வரதட்சணை பற்றி பேச்சே எழவில்லை. மாப்பிள்ளை வீட்டிலிருந்து, உங்கள் மகள் உங்கள் இஷ்ட்டம் என்றதோடு சரி.

அறிந்தவரை பையனின் படிப்பு தொழில் குடும்பம் எதிலும் குறையாக எதுவுமில்லை.

புகைப் படம் பார்த்ததில் மனதிற்குமே அந்த மாதவனை அஞ்சலிக்கும் பிடித்துதான் இருக்கிறது. அதேபோல் அவனுக்கும் பிடித்திருந்தால்தானே இன்று இங்கு வந்திருப்பான்..?

தன் அறையில் நின்றுகொண்டு வரவேற்பறைக்கு தன் செவிகளை திறந்து வைத்தாள். மனம் இன்னும் மாதவன் அருகில் நின்றுகொண்டு முகம் பார்க்க அவளை இழுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஒருவழியாய் ஆசை ஜெயித்து கதவின் சிறு இடைவெளி வழியாக இவள் வரவேற்பறைக்குள் கண் பதித்த நேரம் ஒரு ஓரத்தில் அம்மாவும் அப்பாவும் எதோ சிறுகுரலில் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் முகத்திலிருந்து எதையும் இவளால் ஊகிக்க முடியவில்லை.

கண்களை சுழற்றினால் மொத்த வரவேற்பறையிலும் இவள் வீட்டாரைத் தவிர யாருமில்லை. என்னவாயிற்று??? மனம் தவிக்கிறது.

தற்குள் மீண்டுமாக அந்த மாதவன் குடும்பத்தினர் உள்ளே வருகிறார்கள்.

“சம்பந்தி... என் பையன்ட்டயும் கேட்டுட்டேன்...எங்களுக்கு பூரண சம்மதம்...”

இன்னும் மாதவன் முகத்தை இவள் பார்க்கவில்லைதான் ஆனால் ஆனந்த அவஸ்த்தை இதற்கும் பின்பாக அவளை அங்கு கண்பரப்ப அனுமதிக்கவில்லை. மகனின் சம்மதம் கேட்க தனியாக சென்றிருந்தார்கள் போலும்.

“ஜாதாகம் பார்த்தப்பவே சொன்னாங்க...இரண்டு ஜாதகத்துக்கும் ரொம்ப விஷேஷப் பொருத்தம் இருக்கு ...இத மாதிரி ஒரு வரன் உங்க மகனுக்கு அமையாதுன்னு....அத மாதவ்ட்ட சொல்லிட்டேதான் வந்தோம்....எங்களுக்கு பரம திருப்தி...உங்க வீட்லயும் எல்லோருக்கும் சம்மதம்னா..இப்பவே தட்ட மாத்திடலாம்...”

“எங்களுக்கு பூரண சம்மதம்...”

தன் தந்தை சொல்லிக் கொண்டிருக்கும்போதே வரவேற்ப்பறைக்குள் வேகமாக நுழைந்தாள் அஞ்சலி.

“இல்லப்பா...எனக்கு இந்த மேரேஜ் வேண்டாம்...எனக்கு சம்மதமில்ல....” அவள் முகத்தில் கோபமோ வெறுப்போ இல்லை. எதோ பெரிய ஆபத்தை தடுக்கபோகும் தீவிரமும் தவிப்பும் மட்டுமே அவளிடம்.

“சுற்றி இருந்த அனைவரையும் பார்த்து கைகூப்பினாள். மன்னிச்சுகோங்க...எனக்கு இந்த கல்யாணம் சரியா வரும்னு தோணலை....உங்களை அவமான படுத்த இத சொல்லலை...”

இப்பொழுது அந்த மாதவன் கண்ணில்பட்டான். அவன் முகம் பார்த்து சொன்னாள். “இது ஒத்து வராது...சாரி..” திரும்பி உள்ளே நடக்க ஆரம்பித்தவளைப் பார்த்துக் கேட்டான் மாதவன்.  “காரணம் என்னன்னு தெரிஞ்சகலாமா மிஸ். அஞ்சலி...?”

“இல்....” யாரோ எதையோ பேச தொடங்க சற்று அழுத்தமாக சொன்னான் மாதவன்

“ஒரு இரண்டு நிமிஷம் நான் அஞ்சலிட்ட பேசனும்...அதுக்கப்புறம் அவங்க இஷ்ட்டம்...”

ரவேற்பறையில் அனைவரும் நின்றிருக்க,  திறந்தபடி இருந்த இவளது அறை வாசலில் வந்து நின்றான் அவன். அவனிலிருந்து சில அடி தொலைவில் அறைக்குள் அவள்.

“முதல்ல நீங்க ட்ரேயோட வந்தப்ப...உங்களுக்கு சம்மதம்கிறதவிட விருப்பம்ங்கிற மாதிரிதான் எனக்கு தோணிச்சு...”

“........”

“அப்புறம் இவ்ளவு நேரத்துக்குள்ள எப்படி இப்படி மனசு மாறிட்டு...? என்ன விஷயம் அஞ்சலி...?”

“.............”

“எதாவது மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆகி இருக்கலாமில்லையா...?” அவன் முகத்தை   நிமிர்ந்து பார்த்தாள். ஏனோ எல்லாவற்றையும் சொல்ல தோன்றிவிட்டது.

“எங்க வீட்ல ஜாதகம் ஜோசியம் இதுலெல்லாம் பெரிசா நம்பிக்கை கிடையாது....ஆனா நான் நாலு படிக்கிறப்ப அப்பா ஃபிரண்டு ஒருத்தர் ..பெரிய ஜோசியர்...வீட்டுக்கு வந்திருந்தவர் சும்மா பாப்போம்னு சொல்ல....கடமைக்கு எழுதி வச்சிருந்த என் ஜாதகத்தை என் பேரணட்ஸ் அவர்ட்ட காண்பிச்சாங்க...அப்ப ஆரம்பிச்சது தொல்லை...

என் ஜாதகப் படி எனக்கு லவ்மேரேஜ்...அம்மா அப்பா சம்மதமில்லாம ஓடிப் போய்தான் நடக்கும்னு அவர் சொலிட்டார்....அவ்வளவுதான் அப்ப இருந்து அப்பாவுக்கு உள்ளூர பயம். ஜாதகத்தில நம்பிக்கை இல்லனாலும்...எதாவது தப்பு நடந்துடுமோன்னு ஒரு டென்ஷன்னு அப்பாவே பின்னால .என்ட்ட சொல்லி இருக்காங்கா...

 அதுக்கப்புறம் நான் பெரியவளானதும்.. என்ட்ட ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாதான் இருப்பாங்க...வளர வளர ...என் அக்காக்கு இருக்கிற சுதந்திரம் எனக்கு இல்லங்கிறது புரிய புரிய...ரொம்ப கஷ்டமா இருந்தது.....அவ அளவுக்கு நான் மார்டனா  ட்ரெஸ் பண்ணா அப்பாவுக்கு எரிச்சலாயிடும்.. ..அவள மாதிரி நான் வீணை கத்துக்க ஆசைபட்டதும், அவளுக்கும் க்ளாஸை நிப்பாட்டிடாங்க... ...அவ ஸைக்கில்ல அவளே ஸ்கூலுக்கு போவா...என்னை அப்பாதான் கூட்டுட்டு போய்ட்டு கூட்டிட்டு வருவாங்க... அண்ணன்மார் இருக்கிற எந்த பொண்ணுங்களும் எனக்கு ஃப்ரெண்டா இருக்க கூடாது....10த் 12த் ல கூட ட்யூஷன் வீட்ல வச்சுதான்...எந்த  காம்படிஷன்...கேம்ப்....ஸ்கூல் டூர் எதுக்கும் எனக்கு மட்டும் எப்பவுமே பெர்மிஷன் கிடைக்கலை....

க்கா மாதிரி நானும் ஸ்கூல் ஃபர்ஸ்ட் ...அவளுக்கு சென்னையில போய் ஹாஸ்ட்டல்ல இருந்து  மெடிசின் படிக்க பெர்மிஷன் குடுத்தாங்க.....ஆனா நான் லோக்கல் காலேஜ்தான்... நான் ஹாஸ்ட்டல் போனா எங்கப்பாவால தங்கிக்க முடியாதுன்னு தெரிஞ்சிது.... அதனால எனக்கு பிடிச்ச மெடிசினை படிக்க மார்க் இருந்தும், டேஸ்காலரா போகனுனும்னு அவங்க  சேர்த்துவிட்ட பி.எஸ்.ஸியில ஜாயின் செய்தேன்....

இது எல்லாத்தையும் என் அப்பா சந்தோஷமாவோ...இல்ல என் மேல கோபத்திலயோ...வெறுப்புலயோ ....திட்டமிபோட்டோ செய்யல....அதவிட அவங்க ஜோசியத்த நம்பியும் செய்யல....உள்ளூர ஒரு பயம்...ஒரு வேள எதுவும் தப்பா போயிருமோன்னு ஒரு பயம்....பெற்ற மனசோட இயல்பான பாதுகாப்பு உணர்வுல....பாச தவிப்புல.... அந்த ஜோசியம் ஒரு விஷ விதை மாதிரி விழுந்து எல்லோரையும் கஷ்ட படுத்திட்டு... பல நேரத்தில அவங்களே என் அக்கா மாதிரி என்ன நடத்த ட்ரை பண்ணிட்டு...நிம்மதி இல்லாம தவிக்கிறத பார்த்து நானே அவங்களுக்கு நான் எதை செய்தா நிம்மதியா இருக்குமோ அத செய்துருக்கேன்...எனக்காக என் அக்கா அவளுக்கு அனுமதி இருந்த விஷயங்கள கூட செய்யாம விட்டு கொடுத்துருக்கா...எனக்கு ஏக்கமா ஆயிடுமேன்னு...

நான் பி.எஸ்ஸி முடிச்சதுல இருந்து எனக்கு  மாப்பிள்ள பார்க்காங்க...இதே ஜாதகத்தால அமையாம போய்ட்டே இருந்துது... சராசரியா ஜாதகத்தை எதுக்கும் கண்டுகிடாதவங்க கூட இந்த கல்யாணம்னு வர்றப்ப கைல எடுத்துறாங்களேன்னு அப்பா புலம்புவார்....

6 வருஷமா எனக்கு மாப்பிள்ள பார்த்து பார்த்து டென்ஷன்ல என் அப்பா இப்போ ஹார்ட் பேஷண்ட்...எங்க தன் பிள்ளைக்கு கல்யாணமே ஆகாம போய்டுமோன்னு என் அம்மா எத்தனையோ நாள் நைட் தூக்கம் வராம படுத்துறக்கிறத பார்த்திருக்கேன்....எல்லாருக்கும் ஃப்ரெஸ்ட்ரேஷன் அதிகமாகறப்ப அதையும் என்ட்டதான் காண்பிப்பாங்க....என்னாலாதான் எல்லாமே தப்பா போற மாதிரி....

இப்போ ஒரு வழியா முதல் தடவையா நீங்க பெண்பார்க்க வீடு வரை வந்துட்டீங்க...நிம்மதின்னு இல்ல...உங்கள எனக்கு பிடிக்கவுமே செய்திருந்துதுதான்...ஆனால்...இப்போ ஜாதாக அடிப்படையில இத நல்ல சம்பந்தம்னு நீங்கல்லாம்...சொல்றத பார்த்தா நான் இன்னொரு தடவை நரகத்துல வந்து மாட்ற மாதிரி ....இருக்குது....நான் கல்யாணமே பண்ணாம கூட இருந்துப்பேன்...ஆனா திரும்பவும்..இந்த ஜாதகம்...ஜோசியம்னு.....நானோ என் தலைமுறையோ...இழுபடுறத  தாங்க எனக்கு தெம்பு இல்ல...”  இப்பொழுது அவள் கண்களில் நீர் கட்டி இருந்தது.

டுத்து மாதவன் சொன்ன ஒரு வாக்கியத்தில் அன்று திருமணம் நிச்சயமாகியது மட்டுமல்ல....இதோ திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகளில் தாயாகவும் ஆகிவிட்டாள் அஞ்சலி. மஞ்சள் நிறத்தில் கொழுக் மொழுக் என ஒரு ஆனந்தம் அவள் கைகளில். அழகான ஆண்குழந்தை.

குழந்தை பிறந்து இன்றோடு மூன்று நாளாகிவிட்டது. மருத்துவ மனையில் இருந்து இன்றுதான் வீடு வந்திருக்கிறாள்.

“இந்தா அஞ்சு இத வச்சுக்கோ...பிள்ள பிறந்த நாளோட காலண்டர் பேப்பர்...ஜாதகம் எழுதுறப்ப வசதியா இருக்கும்....ஆம்பிள்ள பையன்...நல்ல நடச்சத்திரத்தில.....”

பேசிக்கொண்டு போன தன் அம்மாவின் வாயை தன் கையால் பொத்தினாள் அஞ்சலி. “என்ன நட்சத்திரம்னு கூட சொல்லாதீங்கம்மா...எங்களுக்கு தெரிய வேண்டாம்....என் பிள்ளைக்கு ஜாதகம் கிடையாது...”

“அதுக்கில்ல அஞ்சு...மாப்பிள்ள வீட்ல  ஆசபடுவாங்கள்ல....”

“இல்ல அத்தை ...எங்க பிள்ளைங்களுக்கு ஜாதகம் கிடையாது... அஞ்சலி மாதவன் பிள்ளைங்களுக்கு ஜாதகம் கிடையாதுன்னு நான் சொன்ன ஒரு வாக்கியத்துலதான் எங்க கல்யாணம் ஆரம்பிச்சது...”

பதில் தன் மாமியாருக்கு சொல்லிக்கொண்டிருந்தாலும் மாதவனின் கண்கள் இருந்ததோ தன் மனையாளின் காதல் கண்களில் தான். இன்றும் அஞ்சலி மாதவனின் இரண்டு மகன்களுக்கும் ஜாதகம் கிடையாது.

குட்டீஸ் எலிமென்ட்ரி ஸ்கூல் போய்ட்டு இருக்காங்க...

திருமதி.தங்கமணி சுவாமிநாதன் எழுதிய ஜாதகம் என்ற கவிதையை படித்ததும் எனக்கு ஞாபகம் வந்த உண்மை இந்த அஞ்சலி மாதவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.