(Reading time: 7 - 13 minutes)

மனம் போல் மாங்கல்யம்

மாப்பிள்ளை படலம் ஆரம்பம்

கால் கட்டிற்கு வந்தது வேளை

காளைக்கேற்ற  கன்னி தேடி வலை (14)

 

மனதில் எவரேனும் உளரா

மணம் செய்விக்க சம்மதம்

பெற்றோர் சொல்லிவிட்ட பொழுதிலும்

பரிதவித்தன நெஞ்சங்கள் செய்வதறியா குழப்பம் (15)

 

 

அவனைப் பார்க்கும் நிமிடம்

நெஞ்சில் மாமழைப் பொழியும்

அவளை  ஸ்பரிசிக்கும் கணம்

தேகத்தை மின்னல் தாக்கும் (16)

 

பட்டியல் இட்டு வரன் வடிகட்டும்

பாரினில் இப்படியும் இரு கிறுக்குகள்

இணையத்தில் இந்நாளில் மணப் பொருத்தம்

இயற்கை இணைக்கும் என இரு மனங்கள் (17)

 

காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை

கொண்ட உறுதி  காலத்தில் மறைவதில்லை

ஆழ்மனதில் புதைந்த வைரமாய் இன்னும்

அகிலம் காண ஒளிர ஏனோ நேரம் வரவில்லை (18)

 

அன்பான புத்திமதிகள்

அக்கறையான அறிவுரைகள்

பழித்தால் ஒதுக்கலாம்

பாசமாய் விலங்கிட்டால் (19)

 

ஓடி ஒளிவதே ஒரே உபாயம்

ஓடும் மேகமா சூரியனுக்கு மறைவிடம்

தற்காலிக விடுதலை கிடைத்த ஆனந்தம்

தூரங்கள் தந்துவிடுமோ காலத்திற்கு நிர்பந்தம் (20)

 

இனி பொறுத்து போவதில்லை

இளையவர் விருப்பத்திற்கு இடமில்லை

காத்திருந்தது போதும் இனி பயனில்லை

காலம் கடந்து சென்றால் திரும்புவதில்லை (21)

 

பெற்றோர் எடுத்தனர்  அதிரடி முடிவு  

பிள்ளைகளோ விடவில்லை அவரவர் கனவு  (22)

 

மஹாரதிக்கு  மணவாளன் கைகூட 

இளமாறனுக்கு  இல்லாள் அமைந்திட 

ஆண்டவன் சந்நிதானத்தில் அர்ச்சனை கூடை 

அறியாமல் இடம் மாறியது யாரது லீலை (23)

 

வரன் பார்க்கிறீர்களா உங்கள் பிள்ளைக்கா

விருப்பமா உங்கள் பெண் பற்றி அறியலாமா

உறுதி செய்து விட்டனர் அக்கணமே

உறவு நிச்சயம் இனித் திருமணமே (24)

 

தங்கள் செல்வக் குழந்தைகள் சம்மதம்

தொட்டு விடும் தூரமென தொடுவானம்

சிந்தித்த  மூத்தவர் தீட்டிய திட்டம்

சொல்லாமல் வரவழைத்து செய்திட நிச்சயம் (25)

 

புதிய ஆண்டின் தொடக்கம்

பெற்றவரைப் பணிந்து ஆசீர்வாதம்

பெற வேண்டி வரும் சமயம்

பிணைத்திடுவோம் நல்ல சந்தர்ப்பம்(26)

 

தூய வெண் பட்டில் பச்சையும் சிவப்பும்

தாரகைகளாய் மிளிர்ந்து அழகு சேர்க்கும்

அழகிய புடவையில் யாரிவள் தேவதை

அமரிக்கையாய்  நீள்கூந்தலில் வீற்றிருக்கும் மல்லிகை (27)

 

தும்பைப்பூ  வேட்டியில் பச்சையும் சிவப்பும்

தூரிகை கொண்டு தீட்டிய ரேகைகளும்

கம்பீர முழுக்கை சட்டையில் யாரிவன் பார்வேந்தன்

கனகச்சிதமாய் மீசையின் அடியில் ஒட்டிக் கொண்ட புன்னகை (28)

 

கள்வனே!! என்னுள் மறைந்திருக்கும் மன்னனே

இதயத்தை இடைவிடாது துடிக்க செய்கிறாய்

கண்ணுக்கும் உனக்கும் என்ன பிணக்கு

காணாமல் தவிப்பது நீயிருக்கும் மனது (29)

 

கள்ளி!! என்னை ஆக்கிரமித்து கொண்ட அல்லி

நினைவில் நொடிப் பொழுதும் அகலாமல் நிற்கிறாய்

தோள்களோடு நீ கொண்டாயோ கோபம்

தாவி அணைக்க துடிப்பது நீ வாழும் தேகம் (30)

 

நான் தான் பைத்தியமோ

இப்படியும் ஓர் நிலை வருமோ

இல்லாத ஒருவனை எண்ணி எண்ணி

இப்படி நான் மறுகலாமோ! (31)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.