(Reading time: 17 - 34 minutes)

.... என்னை வெறுப்பேத்தாம போய்டு.  முடிஞ்சா காஃபி கொடு.  இல்லைன்னா அதுக்கூட வேணாம்.  அது சரி, உன்னோட குருஜி இன்னைக்கு ரகு ஸ்கூல் போகலைன்னா அடி பட்டுக்க மாட்டான்னு கூடத்தான் சொன்னாரு.  இப்போ அவனுக்கு கைல அடி பட்டு இருக்கே.  அதுக்கு என்ன சொல்ற”, லதாங்கியை முறைத்துக்கொண்டே கேட்டான் முரளி.

அவனுக்கு காஃபியைக் கலந்து  எடுத்து வந்த லதாங்கி, “அவன் ஸ்கூல் போயிருந்தான்னா கை உடைஞ்சு போய் இருக்கும்.  வீட்டுல இருந்ததாலதான் வெறும் ஸ்ராய்ப்போட போச்சு.  எப்பவுமே குருஜி சொன்னதைக் கேட்டா நமக்கு நன்மைதாங்க”, என்று லதாங்கி கூற இவளைத் திருத்த முடியாது என்ற அலுப்புடன் காஃபியை பருக ஆரம்பித்தான் முரளி.

அவன் பருகி முடிக்கும் வரை காத்திருந்த லதாங்கி, “ஏங்க இன்னைக்கு நீங்க குருஜி சொன்னதைக் கேக்காம ஆபீஸ் போயிட்டீங்க இல்லை, உங்களுக்கு ஏதானும் பிரச்சனை வந்துடுமோன்னு பயமாப் போச்சு  அதான் அவருக்கு ஃபோன் பண்ணி என்ன பண்ணலாம்ன்னு கேட்டேன்”

“அதானே நீ யாரு.  அப்படி என்னை நிம்மதியா விட்டுடுவியா.  இங்கப் பாரு லதா, சங்கரானந்தா சொன்னாரு சரக்கானந்தா சொன்னாருன்னு ஏதானும் செலவு இழுத்து விட்ட அவ்வளவுதான்”, முந்தைய மாதம்தான்  பரிகாரம் என்ற பெயரில் கிட்டத்தட்ட 20,000 வேட்டு வைத்த சாமியாரின் மேல் இருந்த கடுப்பில் கத்தினான் முரளி.

“ச்சே ச்சே என்னங்க இது குருஜி பேரைப் போய் கண்டதோட சேர்த்து சொல்றீங்க.  முதல்ல கன்னத்துல போட்டுக்கங்க”, என்று சொல்ல, லதாங்கியின் கன்னத்தில் நான்கு போடலாமா என்ற யோசனையில் ஆழ்ந்தான் முரளி.

“அவர் ஒண்ணும் நீங்க நினைக்கறா மாதிரி காசுக்கு அலையறவர் கிடையாது.  நம்மோட நல்லதுக்காகத்தான், போன மாசம் வெளியூர் போற வேலை இருந்தும் அதை விட்டுட்டு நம்ம வீட்டுக்கு பூஜை பண்ண வந்தாரு”, உள்ளூரிலேயே இந்தாளுக்கு சிஷ்யர்கள் இல்லையே, இதுல வெளியூர் போயி என்ன பண்ணப் போறான், என்று யோசித்த முரளி, இதை வெளியில் சொன்னால் வேப்பிலை இல்லாமலேயே தன் மனைவி ஆடுவாள் என்பதால் வாய் மூடி இருந்தான்.

“சரி விடுங்க உங்களுக்கு அவர் மகிமை எங்க தெரியப் போகுது.  இப்படி நீங்க பேசறது கூட சனியோட ஆதிக்கம்தானாம்.  அதுதான் உங்களை இப்படி நல்லவங்களை எல்லாம் எடுத்து எறிஞ்சு பேச வைக்குதாம்.  குருஜி சொன்னாரு.  இன்னைக்கு நடந்ததுக்கு  பரிகாரமா பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்குபோய்  நெய் தீபம் ஏற்றி 51 ரூபாய் உண்டியலில் போட்டுட்டு வரசொன்னாரு, அதை மட்டும் செஞ்சுட்டு வந்துடுங்க”, இந்தாளே பெரிய சனியன் இதுல தனியா வேற சனி பகவான் படுத்தணுமாக்கும் என்று நினைத்த முரளி, கோவிலுக்கு  போக முடியாது என்று மறுக்க, வழக்கம் போல் லதாங்கி டாமைத் திறக்க வேறு வழி இல்லாமல் கிளம்பிச் சென்றான்.

இரண்டு நாட்கள் எந்தப் பிரச்சனையும், புது வேண்டுதல்களும் இல்லாமல் சென்றது. 

“ஹலோ என்ன லதாங்கி இந்த நேரத்துல ஃபோன் பண்ணி இருக்கே”, மதியம் மூன்று மணிக்கு மனைவியிடம் இருந்து வந்ததால் குழம்பிப் போய்க் கேட்டான் முரளி.

“என்னங்க நம்ம ரகுநந்தனுக்கு நல்ல ஜுரம்ங்க.  மதியம் ஸ்கூல்லேர்ந்து ஃபோன் பண்ணினாங்க.  நான் போய் கூட்டிட்டு வந்துட்டேன்.  நீங்க கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா?”

“ஓ என்னாச்சு காலைல நல்லாத்தானே போனான்.  சரிம்மா நான் சீக்கிரம் வரேன்.  நீ முடிஞ்சா பக்கத்துல இருக்கற கிளினிக்ல காமிச்சுட்டு வந்துடு.  இப்போ ஊரு முழுக்க ஒரே வைரஸ் காய்ச்சலா இருக்கு”

“சரிங்க, அவனுக்கு முடியலைன்னா எப்பவுமே உங்களைத்தானே தேடுவான்.  அதுதான் உங்களை சீக்கிரம் வர சொல்றேன்”

“எனக்குப் புரியுதும்மா,  ஒரே ஒரு மெயில் மட்டும் அனுப்பணும்.  அதை முடிச்சுட்டு உடனே கிளம்பிடறேன்”

முரளி ஃபோனை வைத்தவுடன் ரகுவை பக்கத்தில் இருக்கும் டாக்டரிடம் அழைத்து சென்று அவர் கொடுத்த மருந்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்கள் ரகுவும், லதாங்கியும்.  ஒரு நாள் ஜுரத்திலேயே வாடி வதங்கிப் போய்விட்டான் ரகு.

வீட்டிற்கு வந்தவுடன் லதாங்கி குருஜிக்கு அழைத்து ரகுவைப் பற்றி சொல்ல அவர் உடனே ரகுவின் ஜாதக்கதுடன் அவரை வந்து பார்க்குமாறு கூறினார்.  அவள் குருஜியுடன் ஃபோன் பேசி வைக்கவும் முரளி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

இவளுக்கு வேற வேலையே இல்லை, சங்கரானந்தா என்ன MBBS டாக்டரா, இப்போ எதுக்கு அந்த ஆள்க்கு ஃபோன் பண்ணினா என்று யோசித்தபடியே மகன் படுத்திருந்த அறைக்குச் சென்று அவனை பார்த்து வந்தான் முரளி.

“அப்பாடா நல்ல காலம் சீக்கிரம் வந்துட்டீங்க.  நம்ம குருஜி இல்லைங்க, ரகுநந்தனோட ஜாதகத்தை எடுத்துட்டு உடனே பார்க்க வர சொன்னாரு.  அதனால நான் போயிட்டு வந்துடறேன்.  நீங்க ராத்திருக்கு இட்லி மட்டும் வச்சுடறீங்களா.  பொடி தொட்டுட்டு சாப்பிட்டுக்கலாம். ரகுக்கும் சக்கரையோட கொடுக்கலாம்”, லதாங்கி கேட்க அவள் இங்கு இருந்தாலும் ரகுவைப் பற்றி கவலைப்பட்டு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை யாரையாவது அழைத்து பேசிக்கொண்டிருப்பாள் என்று தெரிந்ததால் அவளைப் போய் வர சொன்னான்.

லதாங்கியும் குருஜியைப் பார்த்துவிட்டு அவர் கொடுத்த பிரசாதங்களையும், கூறிய பரிகாரங்களையும் கேட்டுக் கொண்டு வந்தாள்.

“என்னம்மா இத்தனை நேரம்.  நீ போய் கிட்டத்தட்ட நாலு மணி நேரம் ஆகிப் போச்சு.  சாயங்காலம் நாலு மணிக்கு கிளம்பிப் போனவ.  எட்டு மணிக்கு வர்ற”, அலுத்து களைத்து வந்த மனைவியை பார்த்தபடியே கேட்டான் முரளி.

“இல்லைங்க.  அங்க அரை மணி நேரத்துல போயிட்டேன்.  குருஜிதான் அவனுக்காக ஸ்பெஷல் பூஜை பண்ணி பிரசாதம் கொடுத்தார்.  அதுனாலதான் டைம் ஆகிடுச்சு”, உள்ளறைக்குப் போய் ரகுவிற்கு குருஜி கொடுத்த குங்குமத்தை வைத்தபடியே சொன்னாள் லதாங்கி.

“ஓ சரி. முரளி ஜாதகம் பார்த்துட்டு என்ன சொன்னாரு அவரு”

“பார்த்தீங்களா, உங்களுக்கே அவர் மேல நம்பிக்கை வந்துடுச்சு பாருங்க.  அவனுக்கு இப்போ ஜாதகத்துல ஏதோ கட்டம் சரி இல்லையாம்ங்க.  அதனால அவரு தினம் பூஜை செய்வாரு இல்லை, அந்த அம்மனுக்கு ஸ்பெஷல்லா நம்ம ரகுக்காக பூஜை செய்து அந்தக் குங்கும பிரசாதம் தந்திருக்கார்.  அப்படியே அம்மனுக்கு அபிஷேகம் பண்ணின பாலு, அங்க இருக்கற புத்து மண்ணு எல்லாம் தந்திருக்கார்.  அந்த புத்து மண்ணை தினம் கொஞ்சம் எடுத்து தண்ணில கலந்து ரகுக்கு கொடுக்க சொல்லி இருக்கார்.  ஒரே வாரத்துல ஜுரம் சரியாப் போய்டும்ன்னு சொல்லி இருக்கார்”, என்று சொல்லி முடிக்க அதிர்ந்தான் முரளி.

“ஏய் அவனுக்கு ஏற்கனவே இன்ஃபெக்ஷனால ஜுரம் வந்திருக்கு.  நீ பாட்டுக்கு பாலு, மண்ணுன்னு கண்டதையும் கொடுக்காத.  நீ சொல்றத எல்லாம் கேக்கும்போது சத்தியமா நீ படிச்ச பொண்ணுதானான்னு  பயங்கர சந்தேகம் வருது.  இதுல நீ post graduate வேற.  வெளில சொல்லிடாதே”, என்று கத்த, அவன் இருக்கும்போது தான் இவற்றைக் கொடுத்தால் சாமி ஆடி விடுவான் என்று தெரிந்ததால் பொத்தாம் பொதுவாக தலையை ஆட்டி வைத்தாள்.

தினம் முரளி அந்தப் பக்கம் ஆபீஸ் சென்றவுடன் இந்தப்பக்கம் லதாங்கி ரகுவிற்கு தண்ணீரில் குருஜி கொடுத்த மண்ணையும், பாலையும் கொடுக்க ஆரம்பித்தாள்.  ஒரு வாரம் ஆகியும் ஜுரம் குறையாமல் இருக்க, ரகு வேறு மெலிய ஆரம்பித்து விட்டான்.  இப்பொழுது ஜுரத்துடன் கூட வயிற்று வலியும் சேர, என்ன செய்வது என்று தெரியாமல் மறுபடியும் பக்கத்தில் இருக்கும் டாக்டரிடம் கணவனும், மனைவியுமாக அழைத்துச் சென்றார்கள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.