(Reading time: 17 - 33 minutes)

ரண்டு கை, ஒரு கால், தலையைச் சுற்றி நான்கு திசைகளில் நான்கு கண்கள் என்று அசல் சீரஸ் வாசியாய் வந்து நின்ற தன் நண்பன் பிளாஸ்மோனை பார்த்த முதல் சில மணிநேரங்களுக்கு அவனுடன் சகஜமாய்ப் பழகச் சிரமமாகவே இருந்தது நியூட்ரினோனிற்கு. என்னதான் நண்பன் என்றாலும் ஒரு அந்நியத்தனம் சுருதி மீட்டிக்கொண்டுதான் இருந்தது.

’நண்பா’ என்று மூன்று கைகளையும் பற்றிக் குலுக்கிக் கால்களை லேசாய் உதைத்து ஆரத்தழுவிக் கொள்ள இயலாததே முதலில் பெரிய ஏமாற்றமாய் இருந்தது நியூட்ரினோனுக்கு. பிளாஸ்மோனின் ஒற்றைக் கண்ணை மட்டும் பார்த்து பேசுவதும், அவனது மற்ற மூன்று கண்கள் மற்ற திசைகளை நோட்டம் விடுவதும் நியூட்ரினோனைச் சங்கடப் படுத்தியது.

முன் பின் தெரியாத ஒரு பெண்ணிற்காக  தன் நண்பன் இத்தனை மாறியதில் ரொம்பவே வருந்தினான் அவன். ஆனாலும் நண்பனை விட்டுக்கொடுக்க மனமின்றி துணை நின்றான். அவன் இத்தனை செய்கிறான் என்றால் அந்தக் காதல் எத்தனை ஆழமானது என்று உணரத் தலைப்பட்டான் நியூட்ரினோன்.

“என்னடா ஆழ்ந்த சிந்தனைல இருக்க?” தன் புதிய ஒற்றைக் காலில் நடந்து (நெளிந்து!) பழகிக் கொண்டே கேட்டான் பிளாஸ்மோன். அவர்களின் விண்கப்பல் ‘சீரஸ்’ நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது, ஒளிக்கு ஈடான வேகத்தில்.

“ஒரு கிரகத்துக்குப் போய் பேர் ஊர் தெரியாத ஒருத்தியைக் கண்டுபிடிக்கனும்னு கிளம்பிருக்கோம்.., அது நடக்குமா? நீ அவளப் பார்த்ததே வெளின்சுல, இப்ப அவ சீரஸ்லதான் இருப்பாளா?” நியூட்ரினோன் தன் கவலைக்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சொன்னான்.

அவனே எதிரிபாராத வண்ணம் அக்கேள்விக்குத் தயாராய் விடை வைத்திருந்தான் பிளாஸ்மோன், “இருப்பா இல்ல ந்யூட், இருக்கா! நாம செனோபில் வரதுக்கு முந்தியே ஆள் வெச்சு வெளின்சுல விசாரிச்சுட்டேன். அவ பேரு நிர்ஸா, சீரஸ்ல 25° வடக்கு, 4.321° கிழக்குல அவ வீடு இருக்கு, அங்க இப்பதான் புதுசா குடிவந்திருக்காளாம். வேலை தேடிட்டு இருக்காளாம், வேலைக்காகத்தான் வெளின்சுக்கு வந்திருக்கா...” தன் புதிய இரண்டு கைகளை நாட்டியம் போல ஆட்டி ஆட்டிப் பேசினான் பிளாஸ்மோன். நியூட்ரினோன் மிகுந்த வியப்பிற்கு ஆளானான்.

“இன்னொரு விஷயம் சொல்லவா?” புதிர்போட்ட தன் நண்பனை உற்றுப் பார்த்தான் நியூட்ரினோன், ”சொல்லு!” (சொல்லித்தொலை!)

“இனி என் பேரு பிளாஸ்மோன் இல்ல, இனிமே நான் ‘நிர்ஸாப்பான்ஃகத்’” இளித்தான். அவனது குட்டையான ‘பாம்பு’க் கேசம் விரிந்து அச்சுறுத்தியது நியூட்ரினோனை.

“நிர்சாபா…? என்னது? ஏண்டா இப்படி வாய்ல நுழையாத பேர்லாம் வெச்சுக்கிட்டு கொல்ற!” எரிச்சலாய் சொன்னான்.

“அமைதி... ‘நிர்-சாப்-ஆன்-ஃகத்’” மெதுவாய் சொல்லிக்காட்டினான். “அவ மொழில நிர்ஸாவின் நாயகன்னு அர்த்தம்”

“நாசமா போ!” நியூட்ரினோன் தலையில் அடித்துக் கொண்டான்.

“இதைலாம் எப்படா கத்துக்கிட்ட?” பிளாஸ்மோன் பதில் சொல்லுமுன் அவர்களது விண்கப்பல் சீரஸின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. இருவரும் தரையிறங்க ஆயத்தமானார்கள்.

சீரஸின் அந்தப் பகுதியை (உங்களுக்கு) வர்ணிப்பது எளித்தல்ல. தென்னை மரம் போன்ற உயர்ந்த ஒல்லியான மரங்கள் நிறைய இருந்தன. சில குட்டையான பூப்பூக்கும் செடிகளும் இடையிடையே நீலநிற காகிதத்தைக் கசக்கி விரித்தாற் போன்ற சிறு சிறு பூக்களும்...

நிர்ஸாவின் வீடு இரண்டு இராட்சத பாதாம் கொட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிய வடிவில் இருந்தது (என்னால் இந்தளவிற்குத்தான் சொல்ல இயலும். மேலதிக விவரங்கள் வேண்டுபவர்கள் ஒரு நடை சீரஸ் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள், முகவரி தருகிறேன்...)

எது கதவு என்று தெரியாமல் குத்து மதிப்பாய் ஒரு இடத்தில் தட்டினான் நிர்ஸாப்பான்ஃக்த் (அட நம்ம பிளாஸ்மோன் தாங்க!) சில நிமிடங்களில் அவள் வந்தாள். இருவருமே கொஞ்சம் திகைத்து நின்றார்கள். தன் பாம்புக் கேசம் அழகாக வழிந்து, எழுந்து, விரிந்து, வழிய, அகன்ற நாற்திசை விழிகளோடு, விம்மிய முத்தனங்களோடு, காற்றில் மிதப்பதைப் போல தரையில் தவழ்ந்த ஒற்றைக் காலோடு என்னவோ ஒரு விதத்தில் மயக்கியது அவள் அழகு... நியூட்ரினோன் முதலில் தெளிந்து அறிமுகம் செய்து கொண்டான் (அனைத்து-அண்ட ஒலிபெயர்ப்புக் கருவியின் உதவியுடன், தட்டுத்தடுமாறி!)

பிளாஸ்மோனை முழுதாக ஒரு நிமிடம் நின்று நோட்டம் விட்டவள் பின் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றாள். இதற்குள் கொஞ்சம் தெளிந்திருந்த பிளாஸ்மோன் தன் கதையைத் தானே ஒருமுறை சொன்னான். கண்ணீர் விடத் தொடங்கினாள் அவள்.

“எனக்காகவா இத்தனையும் பண்ணீங்க? நம்பவே முடியல என்னால..” பேச இயலாமல் நாத் தழுதழுத்தது அவளுக்கு (இரண்டு நாக்கும்!)

பிளாஸ்மோன் அமைதியாக அவள் கையைப் பிடித்துக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் தந்தான். அவள் அடுத்து சொன்ன விஷயம் பிளாஸ்மோன் நியூட்ரினோன் இருவரையுமே அதிர்ச்சி அடையச் செய்தது.

“இத்தனை அன்பு வெச்ச உங்க காதலை என்னால ஏத்துக்க முடியலயேனு நினைச்சா ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு, ஆனா அதான் உண்மை!”

”என்ன- என்ன சொல்றீங்க நீங்க? என்ன தடை இதுல?” திகைத்து நின்ற பிளாஸ்மோனுக்குப் பதிலாய் நியூட்ரினோன்தான் பேசினான்.

”கிட்டதட்ட என் கதையும் உங்களோடதைப் போலதான், நான் பிறப்பால சீரஸ்வாசி கிடையாது, என் கிரகம் ஹே, இங்கேர்ந்து எட்டரை ஒளியாண்டு தொலைவுல இருக்கு, அங்க ஒரு அரசியல் கூட்டத்துக்கு வந்திருந்த ஒரு சீரஸ் இளைஞனைப் பார்த்து நான் காதல் கொண்டேன்...”

அவள் அதற்கு மேல் சொல்லாமல் அழுதாள், சொல்லாமலே மீதிக் கதை புரிந்தது இருவருக்கும்.

முதலில் திகைத்துப் பின்னர் அவளைச் சமாதானம் செய்வதில் இறங்கினர் பிளாஸ்மோனும் நியூட்ரினோனும். அவள் நிறுத்தாமல் அழுதாள். பாவம் அவள் காதலனும் அவளை ஏமாற்றிவிட்டான்!

மணிக்கணக்காய் அழுது ஒரு வழியாய் ஓய்ந்தாள் நிர்ஸா. அவள் கவனத்தைத் திசை திருப்ப என்னென்னவோ பேசினான் பிளாஸ்மோன். நியூட்ரினோன் வேறு அறையில் இருந்தான். பேச்சு பிறப்பு, வளர்ப்பு, தாய்நாடு, தாய் கிரகம் என்று நீண்டு அவர்களையே அறியாமல் அவர்களது காதல் கதைகளுக்கு வந்து நின்றது.

“ஏன் உன் காதலன் உன்னை ஏத்துக்கல?” ஆரம்பத்திலேர்ந்தே தன்னை அரித்துக் கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டான்.

“ஏத்துக்கலயா! நான் போய் அவனைப் பார்க்கவே இல்லையே!” ஒரு அசட்டுச் சிரிப்புடன் சொன்னாள் நிர்ஸா.

“பார்க்கவே இல்லையா? ஏன்?” வியப்பின் உச்சத்தில் கேட்டான் பிளாஸ்மோன்.

“ப்ச்! தோணல! இந்த உடம்புக்கு மாறினதும் என் பழைய காதல் அபத்தமா பட்டுச்சு! என்னவோ, பழைய உடல்லயே அது ஒட்டிக்கிச்சு போல, காணவே காணும்!” நான்கு கண்களையும் சிமிட்டினாள்.

என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றான் பிளாஸ்மோன், நான்கு கண்களையும் இமைக்காமல், நிர்ஸா மெல்ல மெல்ல அவனை நெருங்கி வந்தாள், “ஆனா உனக்கு அப்படியில்லைல? உடல் மாறியும் உன்னோட காதல் மாறவே இல்லைல! உன்னோட காதல்… நிர்ஸாப்பான்ஃகத்...” பிரபஞ்சத்தின் அத்தனை பிரகாசமும் நெருங்கியது அவனை…

ந்யூஊட்ட்…”

பக்கத்து அறையிலிருந்து கத்திய நண்பனின் குரலில் முழுக்க முழுக்க மகிழ்ச்சி மட்டுமே இருந்ததை நியூட்ரினோனால் நன்றாகவே உணர முடிந்தது!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.