(Reading time: 23 - 46 minutes)

தலைச்சம்பொண்ணு....தனலட்சுமி... - தங்கமணி சுவாமினாதன்

செல்வி....

என்ன மாமா..?

இன்னிக்கி நா வியாபாரத்துக்குப் போகவா வேணாமா..?

Lakshmiஏங்கேக்குறீங்க மாமா?..

இல்ல... காலைலேந்தே ஒரு மாதிரியாயிருக்கியே?டாக்டர் வேர இன்னும் நாலு நாள்ல டெலிவரி ஆயிடும்ன்னு சொல்லீருக்காங்க..அதான்...ஒன்ன தனியா உட்டுட்டு போரதா வேணாமான்னு...

அதெல்லா ஒண்ணுமில்ல மாமா....நான் நல்லாத்தான் இருக்குறேன்..நீங்க கவலப் படாத போங்க மாமா பக்க்த்தாப்புல தேவி அக்கா, பெரியம்மா எல்லாரும் இருக்காங்க..அவங்க எதானும்ன்னா பாத்துக்குவாங்க...

அப்ப சரி கெளம்புறேன்....கொடியில் கிடந்த சட்டையை மாட்டிக்கொண்டு சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த காய்கறி மூட்டையை எடுத்தான் பாலாஜி...தள்ளு வண்டியில் காய்கறிகளை வைத்துத் த்ள்ளிக்கொண்டே போய் வியாபாரம் செய்வது அவனது தற்போதய தொழில். எத்தனையொ தொழில் பார்த்தாயிற்று.எதிலும் முன்னேற்றமில்லை.கடந்த ஆறு மாதமாகத் தள்ளுவண்டி வியாபாரம்.ஏதோ ஓடுகிறது.எத்தனை நாள் ஓடுமோ அவனுக்கே தெரியாது.

பாலாஜிக்கு முப்பது வயதிருக்கும்.நல்ல உழைப்பாளி.எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.வியாபாரத்திலும் நேர்மையாய் இருக்கவேண்டும் என்று நினைப்பவன்.இந்த நல்ல குணமே அவனுக்கு அவன் முன்னேற்றத்திற்கு எதிரியாய் இருந்தது.

காய்கறி மூட்டையை வாசலுக்கு எடுத்துவந்த பாலாஜி வாசலில் நிறுத்தியிருந்த தள்ளு வண்டியில் மூட்டையைப் பிரித்து அதிலிருந்து தனித்தனியாய்க் கட்டிவைத்திருந்த காய்களை ஒவ்வொன்றாய் எடுத்து வைத்தான்.மறக்காமல் ரெண்டு பாட்டிலில் தண்ணீரையும் நிரப்பி வைத்துக்கொண்டான்.

சற்று நிதானித்து வீட்டின் இடது பக்கத்து வீட்டின் முன்போய் நின்று..யக்கோவ்..தேவியக்கா...

குரல் கொடுத்தான்..

என்னா பாலாஜி தம்பி.?.வெளியே வந்தாள் தேவி...

யக்கா..நா வியாபாரத்துக்குப் போய்ட்டு வரேன் செல்வி தனியா இருக்கு எதுனாச்சும்ன்னா பாத்துக்குங்க...எங்க பெரியம்மாவ காணும்?வீடு பூட்டிருக்கு..?

அது ரேஷன் வாங்க போயிருக்கு...லேட்டா போனா கியூவுல நிக்கணும்ன்னு காலேல ஏழு மணிக்கே போய்ட்டு..இப்ப வந்துடும்..நீ கவலப்படாம கெளம்பு தம்பி நாங்கதான் இருக்கோம்ல?

சரிக்கா..வண்டியைத் தள்ள எத்தனித்த போது ...மாமா கூப்பிட்டபடியே வெளியே வந்தாள் செல்வி.

என்ன செல்வி..எதுனாச்சும் வரக்கொள்ள வாங்கியாரணுமா?கேட்டான்..பாலாஜி..

இல்ல மாமா..செல்போன வெச்சுட்டுப் போறீங்களே..

பாத்தியா..சார்ஜ் போட்டேன்..எடுத்துக்க மறந்துட்டேன்..நல்லவேள செல்வி..வாங்கிக்கொண்டான்.

இதோ பாரு..நான் இன்னக்கி வியாபாரத்துக்கு ரொம்ப தூரம் போவல..இந்திரா நகர் வர மட்டும் போய்ட்டு வந்துர்றேன்.அங்க ஒரு மாமி  வீட்டுல ஏதோ விசேஷமாம் நார்த்தங்கா,மின்னிலை

பலாமுஸு வாங்கிக்கிட்டு வரச்சொன்னாங்க.நேத்தே வாங்கிட்டேன்.அத கொடுக்கவாவது போய்த்தான் ஆவணும்.ஜாக்கிரதையா இரு...ஒடம்புகிடம்பு முடிலன்னா ஒடனே போன் பண்ணு..

வரேன்..வண்டியைத் தள்ளிக்கொண்டு ரெண்டு எட்டு வைத்திருப்பான்..

மாமா...

என்ன செல்வி..

பணம்..என்னதான் பிரசவம் கவர்மென்ட்டு ஆஸ்பத்திரில நடந்தாலும் கையில ஒரு ரெண்டாயிரம் மூவாயிரமாவது வேண்டாமா...என்ன பண்ணப்போறீங்க மாமா.?

துணுக்குற்றது மனம்.இருந்தாலும் முகத்தில் அதைக்காட்டாமல் ம்ம்ம்..ஒரு இடத்துல கேட்டிருக்கேன் ..இன்னக்கி வரச் சொன்னாங்க கெடச்சுடும் வரும்போது வாங்கிட்டு வரேன்..நீ கவலப்படாத செல்வி..வரவா?வண்டியை நகர்த்தினான் பாலாஜி.

இப்போதைக்கு செல்விய சமாதானப் படுத்த ஒரு பொய்யச் சொல்லியாச்சு..அனா நெஜமாவே பணத்துக்கு எங்க போருது?கவலையாய் இருந்தது பாலாஜிக்கு.இருந்த ஒரு பவுன் செயினையும் அடகு வெச்சு அடகு கடைக்காரன் வட்டியயும் எடுத்துக்கொண்டு கொடுத்த ஆறாயிரத்தோடு சிறுகச் சிறுக சேர்த்த நாலாயிரத்தையும் சேர்த்தபொது கூட இந்த தள்ளு வண்டிய சொந்தமா வாங்குற அளவு பணம் பத்தல மேக்கொண்டு ஆறாயிரம் தேவப்பட்ட போது கந்து வட்டிக்காரனங் கோவாலு கிட்ட கை நீட்டியதுதான் தான் செய்த மாபெரும் தவறாகப் பட்டது பாலாஜிக்கு.காய் வியாபரத்துல அன்னன்னிக்கு ஏதோ மிஞ்சிமிஞ்சிப் போனா இருனூறு ரூவா கைக்குக் கிடைக்கும்.முதல் ரெண்டு மாசம் கோவாலுக்கு அசலும் வட்டியுமா கஷ்டப் பட்டாவது கொடுக்க முடிஞ்சிது.அப்பறம் அப்பறம் வயித்து புள்ளக்காரி செல்விக்கு ஸ்கேன் எடுக்கவும் மருந்து மாத்தர வாங்கவுமே சரியாக இருந்தது.

கோவாலுக்கு வட்டி கொடுக்க முடில..பாலாஜிக்கு பேசியபடி கோவாலுக்கு வட்டி கொடுக்க முடியாதது தவறாகவே பட்டது.அவனது நேர்மையான மனது அவனை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியது.கோவாலு ஒரு கறார் பேர்வழி.அவன் பேரில் குற்றமில்லை.வட்டிக்குக் கடன் கொடுப்பவர்க்கு இயற்கையாகவே குணம் அப்படி அமைந்து விடும் போலும்.பாலாஜியை

சந்திக்கும் இடங்களிலெல்லாம் அவனை கன்னாபின்னாவென்று காது கொடுத்துக் கேட்கமுடியாத வார்த்தைகளை பேசுவான்.கூசிக்குறுகிப் போவான் பாலாஜி.

அண்ணே..குடுத்துர்றேன் அண்ணே...வீட்டுல மாசமா இருக்காங்க..அதான் கொஞ்ச்ம் செலவு ஆயிடுதுண்ணே..கொஞ்சம் பொறுங்கண்ணே..ரொம்ப பணிவா சொல்லுவான்...

அடுத்த மாசம் எல்லா வட்டியையும் சேத்துக் குடுக்கல ஒன்னிய சும்மா வுடமாட்டேன்..ஆமா..

பாத்துக்க...பதில் சொல்ல முடியாமல் நிற்பான் பாலாஜி.

இனிமே கோவாலுட்டவும் கேக்க முடியாது...சே..என்ன பொழப்பு இது.. நார பொழப்பு...வெறுப்பாய் இருந்தது பாலாஜிக்கு.

காலை எட்டு மணிக்கே வெயில் காந்த ஆரம்பித்தது.சுளீரென.. போட்டிருந்த சட்டையையும் தாண்டிவெயிலின் சூடு உடலைச் சுட்டது.கட்டியிருந்த வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டான் பாலாஜி.பாலாஜி ஓரளவு நல்ல கலர்தான்.வெயிலில் அலைந்து திரிந்து வியாபாரம்செய்வதால் உடுத்தியிருக்கும் ஆடைக்கு வெளியே இருக்கும் உடலின் பாகங்கள் வெயிலால் கறுத்துப் போயிருந்தன.இதில் செல்விக்கு ரொம்ப வருத்தம்.ஏம்மாமா...நீங்க எம்புட்டு கலரா இருப்பீங்க..

இப்ப பாருங்க..நீங்க காய் வியாபாரத்துக்குப் போனபிறகு இப்பிடி கறுத்துட்டீங்களே மாமா..

அடி...என் அழகு பொண்டாட்டியே..ஒம் மாம என்ன மஞ்சக்குப்பம் மைனரா?வீட்டுக்குள்ளாரையே குந்திக்கிட்டு பாலும் பழமுமா துண்ணுக்கிட்டு பொண்டாட்டியோட மஜா பண்ணிக்கிட்டு இருக்க? நாமல்லாம் ஒழைக்கும் வர்க்கம்டி..ஒழச்சாதான் காசு...அப்பறம் எப்பிடி ஒன்னையும் பொறக்கப்போற எம் புள்ளையையும் காப்பாத்துறது?சொல்லுடி எம் பச்சக் கிளி முத்துச்சரம் பவளக்கொடி.....

சள சளவென்று வியர்வை வழிந்தது கழுத்திலிருந்தும் சட்டைக்குள்ளிருந்தும்....நான்காய் மடித்து வண்டியில் வைத்திருந்த துண்டை எடுத்துப் பிரித்து அழுந்தத் துடைத்துக்கொண்டான் கழுத்து மற்றும் கைகளை.முகத்தை அழுத்தித் துடைத்தபோது முகம் எரிச்சலாய் எரிந்தது.காலை எட்டுமணிக்கே இப்பிடின்னா இன்னும் ரெண்டு கிலோமீட்டர் நடக்கணும் இந்ரா நகருக்கு.போய் திரும்புங்காட்டிலும் வெயிலு ஒரு வழிபண்ணிடும் நம்மள.. நினைக்கும்போத ஆயாசமாக இருந்தது பாலாஜிக்கு.

எதிரே வேலப்பன் டி.வி.எஸ் XL லில் வருவது தெரிந்தது.தொத்தல் சைக்கிளில் வந்தவன் இப்போது XL லில்...அவனுக்கு வந்த வாழ்வு...அவன மாரில்லாம் எத்துலயே பொழைக்க தெரிஞ்சா..இப்பிடி நாய்படும் பாடு படவேண்டாம்..நம்ம ஆத்தாதான் நம்மள இப்பிடி நியாயம் நேர்மன்னு வளத்துப்புடுச்சே நமக்கு ஏமாத்துப் பொழபெல்லாம் வராது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.