(Reading time: 8 - 16 minutes)

மௌனமான நேரம் - வத்சலா

This is entry #08 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

ங்களது வீட்டு பால்கனியில் அந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் சௌம்யா. அவளுக்கு திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. அவளது கணவன் கெளதம்!!!! .அவளுடைய வாழ்கையில் வசந்தத்தை அள்ளி இறைக்க முயன்று கொண்டுதான் இருக்கிறான் அவன். அவளும் எல்லா சந்தோஷங்களையும் தனதாக்கி கொள்ளத்தான் நினைக்கிறாள்.

எத்தனை எத்தனை சந்தோஷங்கள் கிடைத்தாலும் அவளுடைய மனதில் அவளது முதல் காதல் விட்டு சென்ற வெற்றிடம் மட்டும் மறைய மறுக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப அந்த காதலால் மட்டுமே இயலுமா என்ன????

அவளது கணவனுக்குமே அது புரிகிறது. அவளை முழுவதுமாக, புரிந்துக்கொண்டவன் கெளதம். அவளை பல வருடங்கள் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்து யாருக்கும் தெரியாமல் அணு அணுவாக காதலித்தவன் கெளதம். அதனாலேயே அந்த விபத்து நடந்த பிறகும், அவனது வீட்டில் இந்த திருமணத்தில் யாருக்கும் விருப்பம் இல்லாத போதும் அவளை பிடிவாதாமாக மணந்துக்கொண்டான்.

Mounamana neramதிருமணம் முடிந்து விட்டால் அவளை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்து விடலாம். அவள் இழப்பை சரிக்கட்டி விடலாம் என்று தான் நினைத்தான் அவன்.. இரண்டு மாதங்களில் அவன் செய்த முயற்சிகளுக்கு முழு வெற்றி கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படி மனதாலும் உடலாலும் துவண்டு போனவளாக அவளை பார்க்கும் சக்தி அவனிடம் இல்லை. அதனாலேயே ஒரு முடிவுக்கு வந்திருந்தான் அவன்.!!!! அவளது முதல் காதலுடன் அவளை சேர்த்துவிடும் முடிவு!!!!

அவளது கையில் அவளது மொபைல் போன். விரல்களால் அதனுடன் விளையாடிக்கொண்டே இருந்தாள் அவள். சொல்லபோனால் இவளது முதல் காதலுக்கு, அந்த தீராத காதலுக்கு மிகப்பெரிய சாட்சி, உறுதுணை அந்த மொபைல் போன் மட்டுமே. அந்த மொபைல் போன் முழுவதும் அவளது காதலின் சுவடுகள். அதன் அடையாளங்கள். ஆனால் அவற்றால் இப்போது என்ன பிரயோஜனம்? அவளால் அவற்றை இப்போது பார்க்க மட்டுமே முடியும்.

'விண்ணிலே பாதை இல்லை........ உன்னை தொட ஏணி இல்லை...'

இந்த வரிகளே அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. இது போன்ற பல நூறு வரிகள் அவள் காதலை அவளுக்கு நினைவு படுத்திக்கொண்டேதான் இருக்கும். ஏதேதோ நினைவுகளுடன் சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள் அவள்.

கையில் இரவு உணவுடன் அவள் அருகில் வந்து அமர்ந்தான் கெளதம். அவனை பார்த்த மாத்திரத்தில் அவளுக்குள்ளே கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.

'இப்படி சாப்பிடாம இருந்தா என்ன அர்த்தம்? உடம்பிலே தெம்பு வேண்டாமா?' சொல்லிய படியே கையில் உணவை எடுத்து அவளுக்கு ஊட்ட முயன்றான் கெளதம். அவன் முகத்தையே பார்த்திருந்தாள் அவள்.

பின்னர் மெதுவான குரலில் 'எனக்கு ரொம்ப பயமா இருக்கு கெளதம்...' என்றாள் சௌம்யா.

இவ்வளவு தூரம் கடந்து வந்த பிறகு, இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில்  இப்போது பயமாக இருக்கிறது என்றால் என்ன செய்ய முடியுமாம்?

இடம் வலமாக தலை அசைத்தவன் 'சாப்பிடு......முதலிலே .' என்றபடி உணவை ஊட்ட ஆரம்பித்தான்.

ஏதோ பெயருக்கு சாப்பிட்டு முடித்தாள் அவள். கையை கழுவிக்கொண்டு வந்து அவள் முகத்தை கைகளில் ஏந்திக்கொண்டான் அவன். 

'நான் இருக்கேன். உன் கூடவே இருப்பேன். எல்லாம் சரியாகும். நீ சந்தோஷமா இருப்பே. சரியா???' நிறுத்தி நிதானமாக அவள் கண்களுக்குள் பார்த்து சொன்னான் கெளதம். அவன் முகத்தையே பார்த்திருந்தாள் அவள். அவனது ஸ்பரிசமும், உறுதியான பார்வையும் அவளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது.

காதல் என்றால் என்ன? ஒருவரது அழகில் ஒருவர் மயங்கி கண்களும் கண்களும் சந்தித்துக்கொண்டவுடன் கன்னங்கள் சிவப்பாகி போவது தான் காதல் என்றால், இவளது முதல் காதல் அந்த ரகத்தை சேர்ந்தது அல்ல!!!!

விரலோடு விரல் கோர்த்து, இதழோடு இதழ் சேர்த்து மயங்கி கிடப்பது தான் காதல் என்றால் இவள் முதல் காதல் அந்த ரகத்தை சேர்ந்ததும் அல்ல!!!!

மிகப்பெரிய பரிசுகள் கொடுத்து ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்வது தான் காதல் என்றால் அவளது முதல் காதல் இந்த ரகத்தை சேர்ந்ததும் அல்ல!!!!!

'கண்ணை மெல்ல மூடி சாய்ந்துக்கொள்ளும் போது மடியாக...' இருந்திருக்கிறது அவளது உயிரோடு கலந்து விட்ட  முதல் காதல்.

'தட்டு தடுமாறி சோர்ந்து விழும் போது...' பல நேரங்களில் பிடியாக இருந்து அவளை புத்துணர்வுடன் எழுப்பி அமர வைத்திருக்கிறது அவளது பல வருட காதல்.

நடந்திருக்க வேண்டாம் அந்த விபத்து. அவளையும் அவளது காதலையும் பிரித்த அந்த விபத்து. இவள் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த நிகழ்ந்த அந்த பெரிய விபத்து. அவள் தனது காதலுடன் பயணித்த கடைசி நிமிடம் அது.

'எந்த சொந்தங்கள் யாரோடு என்று காலம் தான் சொல்லுமா'

பூக்கள் சொல்லமல் பூ தூவும் மேகம் தேதி தான் சொல்லுமா?

பாடல் ஹெட் போனில் காதில் ஒலித்துக்கொண்டிருக்க, அவள் தனது வாகனத்தை செலுத்திக்கொண்டிருக்க ஒரு திருப்பத்தில் ..........

அதோடு அவளை விட்டு அவள் கைக்கெட்டாத தூரத்துக்கு சென்று விட்டிருந்தது அவளது முதல் காதல்!!!!

ழைய நினைவுகளிலிருந்து விடு பட்டவளாக 'நீயும் என் கூடவே இருப்பே தானே கெளதம்...' கேட்டாள் சௌம்யா.

'கண்டிப்பா...' அவள் கரத்தை அழுத்திக்கொடுத்தான் கெளதம். அவன் மடியில் சாய்ந்து அப்படியே உறங்கிப்போனாள் சௌம்யா.

அந்த நாளும் வந்தது. அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினான் கெளதம். காரை அவன் செலுத்திக்கொண்டிருக்க அவனருகில் அமர்ந்திருந்தாள் சௌம்யா.

'கொஞ்சம் சிரி..' என்றபடி முகமெங்கும் தவிப்பு பரவிக்கிடந்தவளின் கன்னம் தட்டி அவளை புன்னகைக்க வைத்து விட்டு, காரை செலுத்திக்கொண்டே ஒரு கையால் அவளை தனது பக்கம் இழுத்து அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்து விட்டு 'எல்லாம் சரியாக நடக்கும்..' என தனக்கு தானே சொல்லிக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் சாலையை பார்த்து காரை செலுத்த துவங்கினான் கெளதம்.

துவக்கத்தில் இதை செய்வதா வேண்டாமா என்று சின்னதாக ஒரு யோசனை அவன் மனதில் உறுத்திக்கொண்டேதான் இருந்தது. அவன் அவள் மீது வைத்திருந்த காதல் மட்டுமே இந்த தயக்கத்திற்கு காரணம்.

'நான் அவளை இப்படியே என் கண்களுக்குள்ளே வைத்து பார்த்துக்கொள்ள மாட்டேனா? அவளது முதல் காதலை அவள் மறுபடியும் அடைவது என்றால் பல சோதனைகளை, வலிகளை கடந்து வந்தாக வேண்டுமே???. அவன் மனம் ஒப்புக்கொள்ளவே இல்லை.

யோசித்து யோசித்து அவள் முகம் பார்த்து, தவிப்பை பார்த்து கடைசியில் இதை செய்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தான் கெளதம்.

இது அவளது சந்தோஷத்திற்காக மட்டுமே. அவன் அவளை ரசித்து ரசித்து காதலித்த நாட்களில் அவன் அவள் முகத்தில் பார்த்த பழைய சிரிப்பை, குதூகலத்தை, உற்சாகத்தை பார்த்து ரசிப்பதற்காக மட்டுமே!!!!!

இதில் அவளுக்கு எந்த பிரச்னையும் வந்து விடாமல். எந்த ஆபத்தும் அவளை நெருங்கி  விடாமல் காப்பாற்று என் இறைவா. எல்லாவற்றையும் வெற்றி கரமாக முடிக்க எனக்கு சக்தி கொடு.....' வேண்டிக்கொண்டேதான் காரை செலுத்திக்கொண்டிருந்தான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.