(Reading time: 27 - 53 minutes)

ஹேய், எங்க போறீங்க. நில்லுங்க” வாசுகியின் கைகளை பிடித்து தடுத்து நிறுத்தினாள் சுகா. வாசுகியை இரண்டாவது முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போலவே வழிந்து கொண்டிருந்தான் முகுந்தன். பார்த்து ஒரு வருடம் ஆனதால் ஏதும் மாற்றம் உள்ளதா என்று தேடிக் கொண்டிருந்தான் போலும்.

“நாம பக்கத்துல இருக்கிற காஃபி ஷாப்ல உட்கார்ந்து பேசலாம் வாங்க” வாசுகியின் கைகளை பிடித்துக் கொண்டு நடந்தாள் சுகௌரி.

“இல்ல நான் போகனும். ப்ளீஸ்”

“அட, சும்மா வாங்க”

“இந்த ஏரியா உங்களுக்கு நல்லா தெரியும் போல” சிறு பதட்டமும் பயமும் கலந்த குரலில் கேட்டாள் வாசுகி. கடத்தி செல்ல வந்தார்கள் என்றே நினைத்து விட்டாள் போலும்.

“உங்கள கடத்திட்டு போக தான் இத்தனை ப்ளானும்” சிரித்துக்கொண்டே நடந்தாள்.“நம்ம ஹீரோ முகுந்தன் இன்னும் அங்க தான் நிற்கிறார்”.

“யார் அவரு? உங்க ப்ரெண்டா.. அங்கயே நிக்கிறார். நீங்களும் சொல்லாம வந்துட்டீங்க”

“பாருடா! அவனும் வருவான். அவன் தான் முக்கியமான ஆளே.” வாசுகிக்கு புதிர் மேல் புதிர்கள் கொடுத்து விட்டு, அவனை நோக்கி கையசைத்துவிட்டு சி.சி.டி உள்ளே நுழைந்தாள் சுகௌரி.

க்யூபிட் சுகௌரி ரூபத்தில் வந்து தன் காதலை காப்பாற்றினால் போதும் என நினைத்துக் கொண்டே அவர்கள் பின்னாலே வந்தான் முகுந்தன்.

வன் கொடுத்த பூங்கொத்தை காஃபி டேபிளின் மீது வைத்துவிட்டு பெண்கள் இருவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். இதுவரை இருந்த  கலக்கங்கள் கொஞ்சம் தெளிந்தது வாசுகியின் முகத்தில். முகுந்தன் வரும் வேலையில் இருவரும் அடுத்த சனிக்கிழமை சந்திப்பதாக முடிவு செய்திருந்தனர்.

முகுந்தன் இன்னமும் ஏதும் பேசாமல் இருந்தான். வாசுகியே பேசினாள். “உங்கள எங்கேயோ பாத்த மாதிரியே இருக்கு. இதுக்கு முன்னாடி எங்காவது பார்த்திருக்கோமா?”

‘இனிமேல் நான் பார்த்துகிட்டே இருக்க போற ஓரே பொண்ணு நீதான் சுகி…’ சொல்லிடு சொல்லிடு என்று அவன் இதயம் துடித்தது. அவனுக்கு அன்று நல்ல நேரம் போலும். காஃபி ஷாப்பின் இசையை மீறவில்லை அவன் இதயத்துடிப்பு.

“ஆமாம் வாசுகி. அ…அதனால தான்… நான் மறுபடி உன்ன… அ..ம்.. சாரி உங்கள பாக்க வந்திருக்கேன்.”

அவன் தயக்கத்திற்கு விடுதலை கொடுக்க வந்தார் வெய்ட்டர். ஆர்டர்களை கொடுத்து விட்டு கவனத்தை முகுந்தனிடம் திருப்பினாள் வாசுகி.

“நான் ஜெயந்தோட ப்ரெண்ட். அவனோட கசின் கல்யாணத்துல பாத்திருப்பீங்க.”

“அட ஆமா. நீங்களும் வந்திருந்தீங்களா சுகா?” ஆர்வமாக விசாரித்தாள் வாசுகி. வாசுகிக்கு மிகவும் பிடித்த தருணங்கள் அவை. அவள் வேலைக்கு சேரும் முன்பு சொந்தங்களுடன் கழித்த அழகிய தருணங்கள் அவை.

வாசுகி சுகௌரியிடம் பேச அவனுக்கு சற்று மூச்சு விட நேரம் கிடைத்தது. தன் காதலை சொல்லி விடுவேனா என்று பெரும் பயத்துடன் இருந்தான். அவனது தயக்கத்தை உணர்ந்ததாலோ இல்லை சுகௌரியை அன்னியப்படுத்தி விடக்கூடாது என்று நினைத்தாளோ என்னவோ, யாரேனும் பேசட்டும் என்று பொறுத்திருந்தாள் வாசுகி.

அதே இடைவெளியில் ஜெயந்த்தின் நினைவுகள் தோன்றின. கீர்த்தனா அக்காவுடன் வேலை செய்தது, அவர் கல்யாணத்தில் ஆனந்தமாக சுற்றியது, மணப்பெண் தோழி போல கீர்த்தனா அக்காவுடனே இருந்தாலும் ஜெயந்த்தை கடைக்கண்ணால் தேடியது, ஜெயந்த்தனை பார்க்கும் சாக்கில் அவனுடைய தம்பிகளை எல்லாம் நண்பர்களாக்கியது என இரண்டு வருடம் முன்னோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

“இல்ல, சுகா வரல. நான் மட்டும் தான் வந்திருந்தேன். அங்க தான் பாத்திருப்பீங்க.”

“ஓ.. ஓ.கே. சரி சொல்லுங்க. ஏதோ பேசனும்னு சொன்னீங்க” வாசுகி சுகாவிடம்.

“நம்ம பேச வேண்டியது எல்லாம் முடிஞ்சுது வாசுகி. நெக்ஸ்ட் வீக்கெண்ட் மூவி புக் பண்ணிட்டு கால் பன்றேன்.”

முகுந்தனுக்கு தூக்கி வாரிப் போட்டது. ‘அடிப்பாவி. எனக்கு சொந்த காசுல நானே சூணியம் வெச்சுகிட்டேன். உன்ன கூட்டிட்டு வந்த நேரம் நான் தனியாவே வந்திருப்பேன். சே!’ கிடைத்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாதென முடிவு செய்தவாறு பேச ஆரம்பித்தான் முகுந்தன்.

“நான் தான் உங்கள பாக்கனும்னு வந்தேன். நானும் சுகாவும் காலேஜ் ப்ரெண்ட்ஸ். எப்படி தனியா மீட் பன்றதுனு தெரியல. அவ வந்தா உங்களுக்கும் கம்ஃபர்டபிளா இருக்கும்னு தோனுச்சு. நான் சென்னைல வொர்க் பன்றேன். ஜெயந்த்தும் எங்க காலேஜ் ப்ரெண்ட் தான். அவன் மூலமா தான் உங்கள தெரியும்.”

“நைஸ்.. நான் இங்க தான் வொர்க் பன்றேன், 2 வருஷமா.”

‘எதுக்கு வந்தார்னு தெரியலயே, கேட்டுடலாமா’ நினைத்தவாறே பேச தொடங்கினாள், “நான், உங்களுக்கு எதாச்சும் ஹெல்ப் பன்னணுமா?”

இதைக் கேட்டதும் வாய்விட்டு சிரித்தாள் சுகௌரி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.