(Reading time: 5 - 9 minutes)

சிறுகதை - அன்னையின் ஆசை - தஞ்சை சீனி.அரங்கநாதன்

Mother's wish

ரு வழியாக பேருந்து கன்னியாகுமரியை வந்தடைந்தது.தன் மனைவி,இரண்டு குழந்தைகளுடன் பேருந்தை விட்டு இறங்கினான் கண்ணன்.

நீண்ட கடற்கரை, கரை ஒதுங்கிய படகுகள் ,எங்கும் ஜனத்திரள் பகவதியம்மன் கோயிலை ஒட்டிய சாலையில் பாசிமணி விற்றபடி பெண் குழந்தைகள்.

படகு போக்குவரத்திற்காக விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்காக மக்கள் கூட்டம்.

கடலை நோக்கினால் எங்கும் தண்ணிர், அலை அலையாக அடித்துக் கொண்டு வருவது நம்மை நோக்கி மிரட்டுவது போல் தோன்றுகிறது.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் விவேகானந்தர் மண்டபம். புத்தருக்கு போதி மரம் போல், விவேகானந்தருக்கு கன்னியாகுமரி.

அதன் அருகிலேயே ஓங்கி வளர்ந்து அலைகள் எல்லாம் அவரிடம் வந்து திருக்குறள் பயில்வது போல் 133 அடி வானுயர்ந்த அய்யன் திருவள்ளுவர் சிலை.

அம்மாவிற்கு அளவிட முடியாத பற்று விவேகானந்தரிடமும், திருவள்ளுவரிடமும், காந்தியிடமும் தான்.அம்மா ஆசிரியை அதனால் கல்வியின்   அவசியத்தை பற்றிச் சொல்லும் போதெல்லாம் சுவாமிஜி சொன்ன கல்வி ஒன்றே நமக்குத் தேவை, ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்த நாட்டு மக்கள் பெற்றிருக்கும் கல்வி,அறிவாற்றல் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது.இது நாட்டுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு வீட்டுக்கும் தான் என்பார் அம்மா.தினம் ஒரு திருக்குறளையும், அதன் பொருளையும் வலுக்கட்டாயமாக உணவோடு ஊட்டி விடுவார்.

காந்தியின் அஸ்தி வைத்துள்ள காந்தி மண்டபம்.உண்மை பேசினால் நன்மை உண்டு என்ற காந்தியின் கதைகளையும், அஹிம்சா போராட்டத்தையும் சின்னஞ்சிறு வயதில் அம்மா சொல்லச்சொல்ல நான் உம் கொட்டிக் கொண்டே அம்மாவை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டேயிருப்பேன்.

சிறுவயதிலேயே அப்பா இறந்ததினால் அம்மா சொல்லே வேதமானது அமிர்தமானது.நானும் நன்றாகப்படித்து  பள்ளியில் முதல் மதிப்பெண்ப பெற்றபோது  அம்மாவை தலைமையாசிரியர் அழைத்து பிள்ளையை நன்றாக  வளர்த்துள்ளிர்கள்  பெரிய ஆளாக வருவான் என்று பாராட்டிய போது கண்ணில் வழிந்த நீரை துடைத்தாள் அம்மா. அது ஆனந்த கண்ணீரா அல்லது மேலே படிக்க பட்டிணம் செல்ல போகிறானா என்ற கண்ணீரா என்று அப்போது தெரியவில்லை.

கல்லூரி விடுதி படிப்பு என்று என் வாழ்க்கை திசை மாறியது.அம்மாவின் கல்வி போதனை மட்டும் வேராய் என் உள்ளத்தில் படிந்தது.வாரம் ஒரு கடிதம் அம்மாவிடமிருந்து வரும். படி, சாப்பிடு உடம்பைக் கவனமாக பார்த்துக் கொள்.மிக நன்றாக படித்த காரணத்தால் கல்லூரியல் கேம்பஸ்  இண்டர்வியுவில் தேர்வு செய்யப்பட்டேன்.

அவனின் அறிவாற்றலை அந்த கம்பெனி நன்றாக பயன்படுத்தி கொண்டது. அயல்நாடு  ப்ரோஜெக்ட்டுகாக இவனை தேர்வு செய்து லண்டன்  அனுப்பியது.அம்மா தான் பாவம் ஓடிஓடி வேலை செய்ததால் உருமாறி விட்டாள். வேலையை விடச் சொல்லி விட்டான்.தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி என்பதால் அவர்களும் சேவையை பாராட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்தான் கண்ணன் வீட்டோடு அம்மாவை பார்த்துக்கொள்வதற்காக.இடையில் வருடங்கள் உருண்டோடின.லண்டனில் தன்னுடன் வேலைப் பார்க்கும் சுபாவை காதலித்து அம்மாவின் ஒப்புதலோடு திருமணம் செய்து கொண்டான்.

இரண்டு பிள்ளைகளுடன் வருடம் ஒருமுறை அம்மா வீட்டிற்கு வருவான்.கூட வந்துவிடு என்றால் தந்தை வாழ்ந்த வீடு என்று மறுத்து விட்டாள்.

அம்மாவிடம் உனக்கு என்ன வேண்டும் என்று பலமுறை கேட்டபோதும் நீ குடும்பத்தோடு நல்லா இருந்தா போதும் என்பாள்.

கடந்தமுறை ஊர் புறப்படும்போது கண்ணா எனக்கு கன்னியாக்குமரியைப் பார்க்க வேண்டும் போல் உள்ளது என்றாள்.

என்னம்மா நீ ஊருக்குப் புறப்படும் போது சொல்கிறாயே, என்று வருத்தப்பட்டுக் கொண்டே அடுத்த முறை வரும்போது, முதலில் கன்னியாகுமரி தான் என்று சொல்ல கண்ணில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள் அம்மா.

வருடத்திற்கு 15 நாள் மட்டுமே விடுமுறை அதில் மனைவி வீட்டுக்கு முதலில் பயணம், மச்சினன் வீடு, அவள் உறவுகள் என்று பத்து நாட்கள் சென்று விடும்.தன் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் இரண்டு நாட்கள் தங்கி பழய கதைகள் பேசி, அம்மா கையால் சாப்பிட்டு முடிக்கும் போதே , வளவளவென பேசிக்கிட்டே இருக்காதீங்க லண்டன் நண்பர்கள் கொண்டு வர சொன்ன சாமான்கள் வாங்க வேண்டும் கிளம்புங்க என்பாள் சுபா.பட்டணம் 3௦௦ கிலோ மீட்டர் தூரம் போய் திரும்ப முடியாது.இரண்டு நாள் முன்னதாக சென்னை சென்று விடுவோம். தலையாட்டிக் கொண்டே அம்மாவிடம் பிரியா விடை பெற்றுத் திரும்புவான்.

அடுத்த வருடம் முதலில் அம்மா வீடுதான்.அம்மாவை “கன்னியாகுமரி”  காட்டி இரண்டு நாட்கள் தங்கி சுற்றிக் காட்ட வேண்டும் என மனதில் முடிவு எடுத்துக் கொண்டான்.

தீடிரென்று அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக வேலைக்காரி போன் செய்தால்.

உடன் ப்ளைட்டை பிடித்து ஆஸ்பத்திரி வருவதற்குள் அனைத்தும் முடிந்து விட்டன.அம்மா இப்போது கண்ணாடி பெட்டியில் விட்டத்தைப் பார்த்தப்படி ஏண்டா கண்ணா, என்னை ஏமாற்றி விட்டாயே என்பது போல் பார்த்தன.

இளமையில் காதல் வரும் , ஆசை வரும் ஆனால் உனக்கும் முதுமை வரும் என்றது போல் இருந்தது அம்மாவின் பார்வை.அதான் நம் கண்ணன் கண்ணீரோடு அம்மாவின் அஸ்தியோடு  கன்னியாகுமரியில் ஒவ்வொரு இடமாய் போய்க் கொண்டிருக்கிறான்.அவன் மனைவிக்கு புரியவில்லை, அஸ்தியைக் கரைக்காமல் ஒவ்வொரு இடமாக கண்ணன் ஏன் செல்கிறான் என்று.அப்போது ரேடியோவில்

கூட்டை விட்டு பிரிந்தபோதும்

கூடப்பறந்தவள்

இன்னொரு கூட்டுத் துணையைத்

தேடியபோதும்

கொஞ்சி சிரிப்பவள்

என்ற கவிதை வாசிக்கப்பட்டது.

தாயை நேசிப்பவர்கள் அவள் ஆசையை அவள் இருக்கும் போதே பூர்த்தி செய்யுங்கள்.அல்லது கண்ணனைப் போல் அஸ்தியை தூக்கிக் கொண்டே அலைய வேண்டியதுதான்

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.