(Reading time: 38 - 75 minutes)

27. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

உன் நேசமதே என் சுவாசமாய் போட்டிக்கு உங்கள் யூகங்களை பகிர்ந்துக் கொண்ட தோழமைகளுக்கு நன்றி.. சில பேர் உங்க மனசோட வச்சிருந்திருப்பீங்க.. உங்க அனைவரின் யூகத்துக்கும் இந்த அத்தியாயத்துல விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன்படிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க..

ர்மதாவை திடீரென அங்கு பார்த்ததும் கோமதி கொஞ்சம் மனதுக்குள் நடுங்கி தான் போனார்.. அவர்கள் இருவரும் பேசியதை நர்மதா கேட்டிருப்பாளோ?? என்ற சந்தேகமும் எழுந்தது.. இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல், விளக்கை அணைத்தவர்.. அறையை விட்டு வெளியே வந்தார். பதட்டத்தை மறைத்தப்படி,

“நீ எப்பம்மா வந்த..” என்றுக் கேட்டார்..

“நான் இப்போ தான் வந்தேன் அத்தை.. ஆமாம் விஜிம்மாக்கு இப்போ எப்படி இருக்கு..??”

“கொஞ்சம் பரவாயில்லம்மா.. பி.பி திரும்ப ஏறிடுச்சாம், இப்படி அடிக்கடி ஏறி இறங்காம பார்த்துக்கங்கன்னு டாக்டர் சொன்னாரு.. நீ சாயந்தரம் மெதுவா வந்துருப்ப.. இப்படி அவசர அவசரமா உன்னை வரவச்சுட்டேனேம்மா..”

“இருக்கட்டும் அத்தை.. அதனால என்ன?? இப்படி ஒரு அவசரத்துக்கு நாங்க இங்க இல்லாம போயிட்டோமேன்னு எனக்கு கஷ்டமா இருக்கு.. ஆமாம் விஜிம்மா ஏதாச்சும் சாப்டாங்களா??”

“ம்ம் சாப்பாடெல்லாம் கொடுத்தாச்சு.. இப்போ டாக்டர் கொடுத்த மாத்திரை போட்டுக்கிட்டு தூங்கறா??”

“நீங்க ஏதாச்சும் சாப்டீங்களா அத்தை..??”

“இல்லம்மா.. விஜிக்கு அப்படி ஆனதும் எனக்கு ஒன்னுமே ஓடல.. இப்போ தான் கொஞ்சம் மனசுக்கு நிம்மதியா இருக்கு..”

“சரி அத்தை இருங்க உங்களுக்கு ஏதாச்சும் சாப்பிட கொண்டு வரேன்” என்றவள், கோமதியை சாப்பிட வைத்ததும், அவருக்கு தேவையான மாத்திரைகளை கொடுத்தாள், அவர் கொஞ்சம் ஆசுவாசமான பிறகு,

“அத்தை கங்கா யாரு?” என்று கேட்டு கோமதியை அதிரவைத்தாள்.

நர்மதா விஜியும் தானும் பேசியதை முழுமையாக கேட்டிருக்கிறாள் என்பதை அந்த கேள்வியிலேயே கோமதி உணர்ந்துக் கொண்டார்.. ஆனால் அதற்கு என்ன விளக்கம் கொடுப்பது என்று தெரியாமல் குழம்பினார்..

“சாரி அத்தை.. அவசர அவசரமா விஜிம்மாக்கு என்ன ஆச்சோன்னு பார்க்க தான் ரூம் பக்கம் வந்தேன்.. உள்ள வரும்போது விஜிம்மா ஜோசியர் சொன்னதைப் பத்தி உங்கக்கிட்ட பேசினது காதில் விழுந்துச்சு.. மாமாக்கு இனி கல்யாணமே நடக்காதுங்கிற மாதிரி ஜோசியர் சொன்னதா விஜிம்மா பேசவே நின்னு கேட்டேன்.. ஆனா நீங்க பேசினதை முழுசா கேட்டதும், மனசுக்கு நான் செஞ்சது தப்போன்னு பட்டுச்சு.. நான் கேட்டதை உங்களுக்கு தெரியாம பார்த்துக்கலாம்னு தான் நினைச்சேன்.. ஆனா அது முடியல அத்தை..

துஷ்யந்த் மாமாக்கு ஏற்கனவே கல்யாணம் பேசி அது நின்னு போச்சுன்னு நீங்க சொன்னதா அம்மா என்கிட்ட சொல்லியிருக்காங்க.. அவர் நடக்கவிருந்த கல்யாணத்தை நிறுத்தினதும், அந்த பொண்ணை அவரால மறக்க முடியல போலன்னு தான் நினைச்சேன்.. ஆனா இப்போ நீங்க பேசினதை வச்சு பார்க்கும்போது பெருசா ஏதோ இருக்குன்னு தோனுது.. என்னப் பிரச்சனைன்னு தெரிஞ்சிக்க எனக்கு உரிமை இருக்கான்னு எனக்கு தெரியல.. ஆனா உங்க மனபாரத்தை கொஞ்சம் இறக்கி வச்சா உங்களுக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.. இப்போ பாருங்க ஜோசியர் சொன்னதை மனசுக்குள்ளேயே வச்சு விஜிம்மாக்கு உடம்பு சரியில்லாம போச்சு.. அதுக்கு தான் சொல்றேன்.. அப்படியும் உங்களுக்கு சொல்ல விருப்பமில்லைன்னா விட்டுடலாம் அத்தை..”

“சொல்லக் கூடாதுன்னு இல்லம்மா.. நீ எல்லாம் கேட்டப்பிறகு உன்கிட்ட சொல்லாம இருக்கறதும் தப்பு தான்.. ஆனா எப்படி சொல்றதுன்னு தான் தெரியல.. உனக்கும் ராஜாக்கும் தான் கல்யாணம் நடக்க இருந்தது.. அப்படிப்பார்க்கும் போது, உனக்கும் உங்க அப்பா, அம்மாக்கும் இதை முன்கூட்டியே சொல்லாம மறைச்சிட்டோமேன்னு ஒரு குற்ற உணர்வு இருக்கு.. ஆனா இப்போ நீ செல்வாவோட பொண்டாட்டி.. இந்த வீட்டை பத்தி உனக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கனும்.. ஒருவேளை அந்த ஜோசியர் சொன்ன மாதிரி ராஜாக்கும் கல்யாணம் நடக்காமலேயே போயிட்டா, இந்த வீட்டு மருமகளா எனக்குப் பிறகு எல்லாமே நீதானே பார்த்துக்கனும்.. அந்த விதத்துல உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கனும்..”

“முடிஞ்சதும் முடிஞ்சதாகவே இருக்கட்டும் அத்தை.. என்கிட்ட உங்களுக்கு எந்த குற்ற உணர்வும் வேண்டாம்.. நான் உங்களை தப்பா எடுத்துப்பேன், உங்க மேல கோபப்படுவேன்னு நீங்க நினைச்சுக்காதீங்க.. நீங்க சொன்னமாதிரி நான் இந்த வீட்டு மருமக, இந்த குடும்ப பிரச்சனைல எனக்கும் பங்கு உண்டு, இந்த குடும்பத்தோட நலனில் எனக்கும் அக்கறை இருக்கு, அதனால என்கிட்ட நடந்ததை சொல்றதுல எந்த தயக்கமும் வேண்டாம்..

“உன் நல்ல மனசு எனக்கு புரியுதும்மா.. இருந்தாலும் எனக்கும் மனசாட்சி இருக்கும்மா.. நான் சொல்றதையெல்லாம் கேட்டா நீ இப்போ சொல்ற மாதிரியே அப்பவும் சொல்லுவியான்னு எனக்கு தெரியாது? இருந்தும் சொல்றேன்..

நான் கங்காவைப் பத்தி மட்டும் சொல்ல போறதில்ல, கங்கா எங்க ராஜா வாழ்க்கையில வந்ததுக்கு காரணம் என்ன? அதையும் சொல்லனும்.. எங்க குடும்பத்துல நடந்த பிரச்சனைங்களுக்கு காரணம் இப்போ உண்டானதில்ல, ஆரம்பத்துல இருந்து நடந்துக்கிட்டு இருந்த ஒன்னு தான்.. அது ராஜாவோட கொள்ளு தாத்தா இருந்த காலத்துல ஆரம்பிச்ச பிரச்சனை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.