(Reading time: 11 - 22 minutes)

19. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

கடல் வாழ் உயிரனமான ஆக்டபஸ்க்கு மூன்று இதயங்கள் உண்டு

தொழில் ரீதியான உறவைத் தாண்டி வருணும் கணேஷ் ராமும் நல்ல நண்பர்கள் ஆகி விட்டிருந்தனர். அதிலும் நியூயார்க்கில் நல்ல ப்ரேக்டீஸ் இருந்தும் அதை விட்டுவிட்டு இங்கே தங்களது மருத்துவமனையில் இலவசமாக மருத்துவம் புரிய சம்மதித்ததும் இல்லாமல் தன்னால் இயன்ற நன்கொடைகளையும் பெற்றுத் தந்திருந்தான் கணேஷ் ராம்.

“கணேஷ், உங்க நட்பு கிடைச்சதுக்கு நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும். நீங்க பின்தங்கிய நாடுகளுக்கு மெடிகல் கேம்ப் எல்லாம் செய்திருகீங்கன்னு தெரிஞ்சு எனக்கு உங்களை நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு” வருண் நெகிழ்ச்சியாய் சொல்லவும்

“எந்த வித லாப நோக்கமும் இல்லமால் இவ்வளவு பெரிய ஹாஸ்பிடல் கட்டி அதை நிர்வாகமும் செய்து இலவச மருத்துவம் தருவதும் சாதாரண விஷயம் இல்லை வருண்” கணேஷ் ராம் மனம் திறந்து வருணை பாராட்டினான்.

“இந்த பாராட்டு எல்லாம் என் அத்தை பெண் அம்முவை தான் சேர வேண்டும். அவளோட கனவு லட்சியம் இந்த ஹாஸ்பிடல். எங்களுக்கு கௌரி என்டர்ப்ரைஸ் கௌரி கன்ஸ்ட்ரக்ஷன்ன்னு லாபகரமான பரம்பரை தொழில்கள் நிறைய உண்டு. இருந்தும் என் அத்தையை இழந்தோம். அதன் பாதிப்பு தான் இந்த மருத்துவமனை” என்று சுருக்கமாக தனது அத்தை கௌரியின் கதையை கணேஷ் ராமிற்கு கூறினான் வருண்.

காயத்ரிக்கும் கணேஷிற்கும் தொழில் ரீதியான பரஸ்பர அறிமுகம் ஓர் ஹாய் ஹலோ எப்போதும் உண்டு.

“எங்க என்கேஜ்மன்ட்க்கு உங்க குடும்பத்தோட கட்டாயம் வரணும் கணேஷ்” என்று வருண் காயத்ரி இருவரும் பத்திரிக்கை நீட்டவும் கட்டாயம் வருவதாக உறுதி சொன்னான் கணேஷ் ராம்.

கடந்த ஓர் வருடமாகவே இவ்வாறான விழாக்களை தவிர்த்து விடுபவன் வருண் மீதும் அவன் குடும்பத்தின் மீதும் பெரும் மதிப்பு கொண்டிருந்தமையால் விழாவிற்கு செல்ல முடிவு செய்தான்.

“அம்மா அப்பா நீங்க நேரே என்கேஜ்மன்ட்க்கு வந்திடுங்க. நான் ஹாஸ்பிடல் போயிட்டு அங்கிருந்து நேரே அங்க வந்திடுறேன்” வருண் காயத்ரி நிச்சயதார்த்த நாள் அன்று பெற்றோரிடம் கூறிவிட்டு கணேஷ் ராம் ஓர் முக்கிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி மருத்துவமனை சென்றான்.

அன்று சீக்கிரமாகவே சர்ஜரி முடிந்து விட்டிருந்தது.

காயத்ரிக்கும் வருணுக்கும் பரிசுப் பொருள் ஏதேனும் வாங்கிச் செல்லலாம் என்று அருகில் இருந்த மாலில் நுழைந்தான்.

ஆர்ட் கேலரியில் சுற்றிக் கொண்டிருந்தவன் கண்ணில் சீதா சுயம்வர வண்ண ஓவியம் தென்பட அதை பார்த்தபடியே நின்ருவிட்டிருந்தான்.

சீதை ராமனின் கழுத்தில் மாலை அணிவிப்பதை போல இருந்த அந்த ஓவியத்தில் சீதையாக வர்ஷினி தெரிய கண்களை கசக்கியவன் சற்றே பக்கவாட்டில் பார்க்க அங்கே ராமன் இடத்தில் இருந்தது சாட்சாத் அவனே தான்.

கண்களை மூடியவன் இமைகளுக்குள் வர்ஷினி சிரித்துக் கொண்டிருந்தாள்.

“சீதையை தேடி ராமன் தான் வரணும்” கலகலவென சிரித்தாள்.

சட்டென கண்களை திறந்தான் கணேஷ். இது என்ன உணர்வு என்று புரியாமல் விழித்தான்.

“என்ன மாதிரி ஓவியங்கள் பார்க்குறீங்க சார்” அங்கிருந்த பணியாளர் ஒருவர் வினவவும் ராதை கிருஷ்ணரின் அழகிய ஓவியம் கண்ணில் பட அதை கிப்ட் பேக் செய்ய சொல்லி வாங்கிக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்தான்.

கதவை திறந்து கொண்டு வந்தவன் யார் மீதோ மோதவும் சாரி சாரி என்றான்.

“இட்ஸ் ஒகே” என்று கூறிய அந்த நபர் “சார் நீங்க...டாக்டர் கணேஷ் ராம்” ஆச்சரியத்தில் கூவினான்.

“நீங்க ஸ்ரீதர் தானே. மிஸ்டர் ஈஸ்வர் வீட்டு விழாவில் சந்திச்சோமே” கணேஷும் பதிலுக்கு அவனை அடையாளம் கண்டுகொண்டதை தெரிவித்தான்.

“எப்படி இருக்கீங்க ஸ்ரீதர்”

“நல்லா இருக்கேன் சார்”

அவனிடம் வர்ஷினியை பற்றிக் கேட்கலாம் தான். ஆனால் அவனுக்கு எவ்வளவு தூரம் இவர்களின் பந்தம் தெரிந்திருக்கக் கூடும். ஓர் தயக்கம் ஏற்பட அவனிடம் இருந்து அவசரமாக விடை பெற்றான்.

“ஸ்ரீதர் நான் அவசரமா ஓர் பங்க்ஷனுக்குப் போக வேண்டி இருக்கு. வில் சி யூ லேட்டர்” என்று தனது விசிடிங் கார்ட்டை ஸ்ரீதரிடம் கொடுத்தான்.

அந்த கார்டைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீதர் அதை பார்த்ததும் ஆச்சரியம் கொண்டான்.

“இந்த வர்ஷினி சுத்த மோசம்....” என்று அவன் முணுமுணுக்க அது கணேஷ் ராமின் செவிகளில் விழ ஸ்ரீதரை நோக்கி திரும்பினான்.

“என்னவோ சொல்ல வந்தீங்க போல ஸ்ரீதர்”

“ஒண்ணுமில்ல சார். இந்த வர்ஷினி என்கிட்டே சொல்லவே இல்ல சார். நீங்க அவ ஹாஸ்பிடல்ல தான் வொர்க் செய்றீங்கன்னு. உங்களை அப்போவே வந்து மீட் செய்திருப்பேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.