(Reading time: 13 - 26 minutes)

அமேலியாவிற்கு மெல்ல விழிப்பு வந்தது. தான் காரில் படுத்திருப்பது அவளுக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியை கொடுத்தது. தான் எவ்வாறு இங்கு வந்திருப்போம் என்று யோசித்தவளுக்கு வசந்தின் முகத்தைக் கண்டதும் எல்லாம் புரிந்துவிட்டது.

"நீ ஏன் எப்போ பாத்தாலும் மயக்கம் போட்டுட்டே இருக்க?"

அமேலியாவிற்கு புரியவில்லை. அதை பார்வையால் வசந்திடம் கூறினாள். வசந்த் மீண்டும் தண்ணீரை குடித்தான். அவன் இதயம் அமைதியடையத் தொடங்கியது.

காரின் ஜன்னல் வழியே இயற்கையை ரசிக்கத் தொடங்கினாள் அமேலியா. புயலால் மரங்கள் ஒடிந்து விழுந்திருந்தாலும் இயற்கை அன்னையின் பச்சை நிறத்தை ரசிப்பது அமேலியாவிற்கு பிடித்திருந்தது. தூரத்தில் தெரியும் மலைகள், அதன் மேல் கிரீடமாய் மேகங்கள், இரை தேடிச் செல்லும் பறவைகள்! அமேலியாவின் மனதிலுள்ள சோகங்கள் பனி போல் உருகி  லேசாயின.  

காரில் தன் தந்தையுடன் சென்ற ஞாபகம் அமேலியாவிற்கு வந்தது. அவளது புன்முறுவல் மறைந்து மனதில் சோகம் குடிகொண்டது. இயற்கையை ரசிக்க மறந்து தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.

கண்ணாடி வழியே அவளது சோக அமைதியைக் கண்ட வசந்த், 'அவளது சோகத்திற்கான காரணம் என்னவாக இருக்கும்? அவளது விருப்பமில்லாமல் அழைத்து வந்துவிட்டோமோ' என்று வருந்தியவன், அந்த நிலைமையை எவ்வாறு கையாள்வது என்று சிந்தித்தான்.

சமாதானம் கூறி அவளை சாந்தப்படுத்த வசந்திற்கு வழி தெரியவில்லை. மீண்டும் ஜெஸிகாவின் வீட்டிற்கு சென்று அமேலியாவை விட்டுவிட்டு வரலாமா என்று சிந்தித்தும் பயனில்லை. வேறு வழியில்லாமல் காரில் மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்தான், அவ்வப்போது அவன் கண்கள் கண்ணாடி வழியே அமேலியாவை நோக்கியபடி இருந்தன.  

சோகங்களை மறந்து மீண்டும் இயற்கையை கவனிக்கத் துவங்கினாள் அமேலியா. அவளின் இதழ்கள் சில நேரங்களில் புன்னகை செய்தன. அவள் மகிழ்ச்சி அடைந்ததைக் கண்டு வசந்திற்கும் சற்று நிம்மதி பிறந்தது.  

இளையராஜாவின் பாட்டினை ஒலிக்க விட்டான் வசந்த்.

"தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல....."

அவர்களின் தனிமையான பயணமும் இயற்கை சூழலும் அவர்களது காதலும் ஒன்றாக இணைந்து அவர்களையே மறக்க செய்தன. என்ன பாடுகிறார்கள் என்று அமேலியாவிற்கு புரியாவிட்டாலும் பாடலின் இசை அவளை மிகவும் கவர்ந்தது. 'ஆணும் பெண்ணும் சேர்ந்து பாடுகிறார்கள், நிச்சயம் இது காதல் பாட்டு தான்' என அமேலியா புரிந்துகொண்டாள்.  

அவளின் எண்ணங்கள் வசந்தை நோக்கி திரும்பின. கண்ணாடி வழியே வசந்த் தன்னை பார்ப்பதை அமேலியாவும் பார்த்தாள். இருவரின் விழிகளும் ஒன்று சேர்ந்தன.  

இசை, மொழி கடந்து இரு மனங்களுடன் காதல் கீதம்

பாடிக்கொண்டிருந்தது.

ங்களால் முடிந்த அளவு குப்பைகளை அகற்றிவிட்டு சோர்வாக மரத்தடியில் அமர்ந்தனர் ஜானும் ஜெஸிகாவும். இருவருக்கும் அதிகமாக மூச்சு வாங்கியது. காரணம் தெரியாமல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். இரண்டு பேரும் இத்தனை நாட்கள் சோம்பேறித்தனமாய் வளர்ந்து வந்திருக்கிறோம் என்ற பொருள் அவர்களின்  சிரிப்பில் ஒளிந்திருந்தது.

குளிர் தென்றல் அவர்களின் உடலைத் தீண்டி சில்லிட வைத்தது. புயலில் எங்கோ ஓடி ஒளிந்திருந்த பறவைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரங்களில் அமர்ந்து கிரீச்சிட்டுக்கொண்டிருந்தன. கொந்தளித்த கடலின் ஓசை செவிகளில் புகுந்து மனதிற்கு இதம் சேர்த்தது. இருவரும் தங்களை மறந்து இயற்கையோடு பேசிக் கொண்டனர்.

காலையில் இருந்த வருத்தமான மனநிலையை விட்டு ஜான் ஏதோ ஒரு வகையான நிம்மதியில் இருந்தான். இது அவனுக்கு புதுமையாக இருந்தது. தன்னிடமிருக்கும் பொருள் ஒன்று தொலைந்து போனாலோ அல்லது உடைந்து போனாலோ குறைந்தது சில நாட்களாவது மனதினுள் வருத்தம் கொண்டிருக்கும் ஜான், தன் வீடு புயலால் சேதமடைந்தும் வெகு விரைவில் மனம் மாறியது அவனுக்கே வியப்பாக இருந்தது. நீண்ட நேர யோசனையின் முடிவில் மனமாற்றத்திற்கான காரணம் ஜெஸிகா என புரிந்து கொண்டான்.

கஷ்டத்தில் கூட இருக்கும் துணையின் தன்னம்பிக்கை நம்மை வீழாது தாங்கிப் பிடிக்கும். எத்தனை சோதனைகள், இடர்பாடுகள், தோல்விகள் வந்தாலும் நம்பிக்கையான துணை ஒன்று இருந்தால் அத்தனையும் சமாளித்து விடலாம்.

இத்தகைய எண்ணங்களில் மூழ்கியவாறு ஜெஸிகாவை பார்த்துக் கொண்டிருந்தான் ஜான். அவளோ பறவைகளைக் காண்பதிலேயே லயித்திருந்தாள்.

"ஜான்"

"சொல்லு ஜெஸ்ஸி"

"பறவைகளுக்கு பணம்னா என்னனு தெரியுமா?"

"அதுங்களுக்கு எப்படி தெரியும்? நம்மளை போல கடையிலயா காசு கொடுத்து வாங்கி சாப்பிடுதுங்க?"

"பறவைகளுக்கு பிடிச்ச விஷயம் என்ன?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.