(Reading time: 13 - 26 minutes)

அமேலியா - 38 - சிவாஜிதாசன்

Ameliya

ன்னை மடியில் கன்று உறங்குவது போல தன்னை மறந்து உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் அமேலியா. அவள் உறங்குகிறாள் என்று சொல்வதை விட திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியால் மயக்கம் கொண்டாள் என்று சொல்லலாம்.

தன்னுடைய வாழ்க்கையே அதிர்ச்சிகள் நிரம்பியதாக இருக்கின்றது என்று பலமுறை எண்ணியிருக்கிறாள் அமேலியா. யாருமே செல்லமுடியாத முற்றிலும் வித்தியாசமான பாதையில் கடவுள் தன்னை பயணம் செய்ய வைப்பதை எண்ணி சில நேரங்களில் மகிழ்ச்சியும் பல நேரங்களில் துக்கமும் அடைந்திருக்கிறாள்.

அவளது நினைவுகள் சிறு வயதை நோக்கி பயணம் செய்தன. மனிதனின் கடந்த காலங்களில் நுழைந்து பயணம் செய்யும் டைம் மெஷின் நினைவலைகள் மட்டுமே.

தந்தை தன்னை காரில் அழைத்து செல்லவில்லை என்று சிறு வயது அமேலியா தரையில் படுத்தபடி அழுதுகொண்டிருந்தாள். தானும் எதிர்காலத்தில் இதை விட பெரிய கார் வாங்கி தாய் தந்தையை அந்த காரில் ஏற்றி செல்லாமல் தான் மட்டும் பயணம் செய்து அவர்களை மூக்குடைக்க வேண்டும் என்று எண்ணினாள்.

சிறியவர்களுக்கே உண்டான முதிர்ச்சியற்ற கற்பனை அது. எதிர்காலத்தில் அக் கற்பனை எந்தளவு உண்மையாகும்? எந்த வேலை செய்து கார் வாங்குவது? என்ற கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லாத பருவம். ஆனால், நம்பிக்கை நிறைந்த காலகட்டம் அது. வளர வளர எதார்த்தங்களை நம்பிக்கைகளை கொன்று எந்த ஆசைகளும் நிறைவேறாது என்ற உண்மையை காலம் நமக்கு கூறும்.

பல அரைவேக்காட்டு கற்பனையில் மூழ்கியபடி அழுதுகொண்டிருந்தாள் அமேலியா. திடீரென கதவு திறக்கும் என்றோ அவள் தந்தை வருவாரென்றோ கற்பனை செய்ய தவறிவிட்டாள். சிறிது தூரம் பயணம் செய்த அமேலியாவின் தந்தை யூசுப் மனம் மாறி அமேலியாவை அழைத்து செல்ல வந்துவிட்டார். அமேலியா செய்யாத கற்பனை ஒன்று அன்று நிஜமாகியது.

அதை சற்றும் எதிர்பார்க்காத அமேலியா மகிழ்ச்சியும் அழுகையும் கலந்த உணர்ச்சியோடு ஓடிச் சென்று தந்தையை கட்டிப்பிடித்துக் கொண்டாள். அன்று அவள் எண்ணியபடி காரில் ஜன்னலோர பயணம். அவளது மகிழ்ச்சி எல்லைகளைக் கடந்து நீண்டு கொண்டே சென்றது. அதன்பின் அப்படியொரு மகிழ்ச்சியை சந்தித்திருக்கிறாளா என்பது கேள்விக்குறி.

அந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் கழித்து அதே போல் மீண்டுமொரு காட்சி. அதனால் தான் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்று மயக்கம் கொண்டாள் அமேலியா.

தன்னை விட்டு வசந்த் சென்றுவிட்டான் என்று கலங்கியவளுக்கு மீண்டும்  வசந்த் கதவைத் திறந்து கொண்டு வந்தது அதிர்ச்சியை அளித்து பின் மகிழ்ச்சியை அளித்தது. கதவைத் திறந்ததும் வசந்தின் முதல் பார்வையில் இருந்த பதற்றத்தை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்று அமேலியாவிற்கு தெரியவில்லை. அந்த பார்வை தன்னிடம் எதையோ கூற நினைத்தது மட்டும் அவளுக்கு புரிந்தது. அவள் மனதில் சொல்லமுடியா பயம் படர்ந்து உலகமே இருட்டியபடி மயக்கத்தின் கடைசி நிமிடத்தில் வசந்த் தாங்கிப் பிடித்தது அவள் இதயத்தில் சந்தோச வலிகளை ஏற்படுத்தியது. அதன் பின் என்ன நடந்தது என்று அவளுக்கு தெரியவில்லை.

காரை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்த வசந்தின் கண்கள் நிமிடத்திற்கு ஒருமுறை அமேலியாவை நோக்கின. நடந்தவற்றை மனக்கண் முன் ஓட்டினான். மயக்கம் கொண்ட அமேலியாவை தூக்கிக்கொண்டு லிப்ட்டை நோக்கி நடந்த நேரம் வசந்திற்கு இதயமே நின்றுவிட்டது. பயம் உடல் முழுவதும் பரவியதால் வியர்வை முத்துக்கள் அரும்பி இதயத்துடிப்பும் கன்னாபின்னாவென்று எகிறியது. லிப்டில் ஏறியபின் தான் அவனுக்கு நிம்மதியே வந்தது. இருந்தும் பயம் விட்டபாடில்லை.

லிப்ட்டை விட்டு இறங்கியதும் அருகிலேயே அவன் கார் நின்று கொண்டிருந்ததால் அமேலியாவை காரின் பின் இருக்கையில் படுக்க வைத்துவிட்டு காரை வேகமாய் செலுத்தினான் வசந்த். இருந்தும் அமேலியாவை தூக்கிக்கொண்டு வந்ததை யாராவது பார்த்திருந்தால் என்ன நினைத்திருப்பார்கள். பெண்ணைக் கடத்திக்கொண்டு செல்லும் கடத்தல்காரன் என்றல்லவா நினைத்திருப்பார்கள். காவல் துறைக்கு தகவல் சென்று, வந்தவன் யாரென விசாரித்தால் ஜெஸிகாவின் வீட்டிற்கு அடிக்கடி செல்லும் தன்னை அடையாளம் காண்பது அவ்வளவு கடினமா? விரைவிலேயே தான் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படலாம்.

வசந்தின் கற்பனை தாறுமாறாக சென்றது. பயந்தவர்கள் கற்பனை செய்வதென்பது பறக்கும் குதிரையை கண்டுபிடித்து அதன் மேல் சவாரி செய்வது போன்றது. வசந்தோ பல பறக்கும் குதிரைகளின் மேல் சவாரி செய்யத் தொடக்கி விட்டான். மாரடைப்பு ஏற்பட்டவனை போல மூச்சு வாங்கினான், காரை நிறுத்திவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து தொண்டையை நனைத்தான். அவனது கற்பனைகள் கொஞ்சம் குறைந்திருந்தன.

ஏன் இப்படி முட்டாள்தனமா யோசிக்கிறேன்? என தனக்குத்தானே கேட்டுக்  கொண்டவன் சிறிது நேரம் தீவிர யோசனையில் ஆழ்ந்தான். 'யாரும் பார்த்திருக்கிருக்க வாய்ப்பு இல்லைனு தான் தோணுது. ஆனா நாம நடந்துகிட்டது அசல் பைத்தியக்காரதனமான செயல். திரும்ப நான் ஏன் ஜெஸிகா வீட்டுக்கு போகணும். இவளை தூக்கிட்டு வரணும். என்ன கண்றாவியோ' என்று தன்னைத்தானே நொந்துகொண்டான் வசந்த்.  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.