(Reading time: 18 - 36 minutes)

23. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

ன் விருப்பத்தை முன்னிருத்தி, மாமனார் முடிவை சொன்னதில் பெருமித பூரிப்போடு அவள், தாயை பார்க்க....

புகுந்த வீட்டில் மகளுக்கு கிடைத்திருக்கும் உயர்ந்த நிலையும், உரிமையையும் கண்டு மகிழாது, பெறாத பிள்ளையின் வாழ்விற்காக வருந்தியவர், மைத்ரீயின் பெருமித பார்வையை அசட்டை செய்து முகத்தை திருப்பி கொள்ள... வாய் வசை பாடுவதை நிறுத்தவில்லை,

“சண்டாளி...ஜெய்யோட வாழ்க்கையில விளையாட இவளுக்கு எப்படிதா மனசு வருதோ? ஒன்னா பிறக்கலைனாலும் ஒன்னா ஒட்டிக்கிட்டு திருஞ்சதெல்லாம் மறந்து போச்சோ.... எப்படி சாமர்த்தியமா, சம்மந்தியையே, இவளுக்கு சாதகமா பேச வைச்சிட்டா பாரு” என்று முணுமுணுத்த வடிவு, “அம்மா...ஆட்டுக்குட்டினு, வீட்டுக்கு வா.... இருக்கு உனக்கு” இதை மட்டும் சத்தமாகவே சொல்லியிருந்தார்.

கேட்டிருந்தவளோ, “ஏன்? வந்தா என்னவாம்?” என்று நக்கலாக கேட்கவும்

“அவ்ளோ தைரியமாடி உனக்கு? வா... வந்து பாரு... தெரியும்” கோபத்தில் வடிவு கத்தவும்

“மைத்ரீ! சும்மா இருக்கமாட்டியா நீ?” என்று அவளை அதட்டிய ப்ரியா, “என்ன அத்தை இது? கொஞ்சம் அமைதியா இருங்க” என்று வடிவை சமாதானம் செய்தாள்.

அம்மாவும் அண்ணியும் திட்டி அதட்டியதில் மனம் சுணங்கியதும், எல்லாமே இவனால் தான் என்று ஜெய்யிடம் குறை கண்டது மனம்.

கோபத்தோடு அவனை முறைக்கவும், ஜெய் எழுந்து, இவளை நோக்கி வந்தான்.  அவன் செயலை சற்றும் எதிர்பாரதவளின் விரிந்த கண்களில் கோபத்தோடு ஆச்சரியமும் சேர்ந்து கொள்ள சிலையாய் அவள் மாறிட, கையை பிடித்தவன், “மைதி ப்ளீஸ்....உனக்கு எம்மேல என்ன கோவமிருந்தாலும்....இதுல, அதை காட்டாதே ப்ளீஸ்... உனக்கே தெரியும், எனக்கு சரயூ எவ்வளவு முக்கியம்னு....ப்ளீஸ் மைதி....அங்கிள் கிட்ட சொல்லு மைதி” என்றபடி அவள் கையை பிடித்து ரவிகுமாரிடம் அழைத்து வந்திருந்தான்.

அவன் மீதிருந்த கோபத்தை அந்த நொடி மறந்தவளாய், நண்பனின் பேச்சில், மைத்ரீயின் மனம் உருகியது.  ஜெய்யின் பழைய தோழியாக மாறியிருந்தவள் அவனோடு நடந்திருந்தாள்.

“சொல்லு மைதி! ஜெய்க்கே சரயூவை கொடுத்திடலாம்னு சொல்லு மைதி!” என்று அவள் கைகளை பிடித்து உலுக்கவும், அவளோ பேச மறந்தவளாக ஜெய்யின் முகத்தையும் மாமனாரின் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தாள்.

அவர்களின் நட்பை அறிந்திருந்த வடிவிற்கு மகள் ஒரு வார்த்தையும் பேச போவதில்லை என்று புரிந்து, “இவ்ளோ நேரமா எப்படியெல்லா பேசுனியே, இப்போ பேசே, ஜெய் சொல்றானே, இப்போ பேசே...பார்ப்போம்” கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி, மகளுக்கு எட்டாவிடினும் மெதுவாக சொல்லிகொண்டார்.

“எனக்கு சரூவை ரொம்ப பிடிக்கும் அங்கிள்.  மைதிக்கு கூட அது தெரியும்.  சரூவை மட்டும் எனக்கு கொடுக்க மாட்டேன்னு சொல்லாதீங்க... என்னோட வாழ்க்கையில எதுவுமே சரியா இருந்ததில்லை.  இப்போ சரூவும் இல்லைனா நான் என்ன செய்ய?”

மகளின் மேலிருந்து அளவு கடந்த பாசம் கண்களை மறைக்க... அவளின் விருப்பத்தை கேட்காமாலேயே அன்று இவர்களுக்கு நிச்சயம் செய்வித்ததே மகள் ஆசைபட்டது கிடைக்க வேண்டும் என்பதற்காகவே.  அவள் விரும்பியது, அவளுடைய வாழ்க்கையானாலும் சரி அல்லது அவருடைய உயிரானாலும் சரி, மகளுக்கு கிடைக்க வேண்டும்!

படிப்பு முடிந்து, வேலையில் சேர்வதற்காக குதூகலித்திருந்த சரயூ, அந்த சுற்றுலா கழித்து வந்ததிலிருந்து எல்லாவற்றையும் மறந்து போனாள்.  அவள் வேலையை மட்டும் மறந்திருந்தால் அதை ரவிகுமார் ஒரு பொருட்டாகவே நினைத்திருக்கமாட்டார்.  ஆனால் அவள் மறந்தவைகளில் அவளின் சிரிப்பு, கலகலப்பான பேச்சு, சந்தோஷம், துருதுருப்பு, குறும்பு என எவையெல்லாம் அவளின் அடையாளங்களோ அவையனைத்தும் அடங்கியது...அந்த அன்பு அப்பாவை வேதனையில் ஆழ்த்தியது.

அப்படியிருக்கும், தற்போதைய மகளின் நிலையில் அவளுக்கு விருப்பமில்லாத எதையும் செய்ய அவர் தயாராக இல்லை.  அவருக்கு புரிந்த மட்டும் சரயூவிற்கு இதில் விருப்பமில்லை.  இவனை வருட கணக்கில் பார்க்காமல் தவிர்க்கிறாள் எனும்போது அவனோடு திருமணம் என்றால் சரியென்றா சொல்ல போகிறாள்....

அதே சமயம் ஜெய்யின் நிலையும் புரியாமலில்லை.  தனி ஒருவனாக நின்று அத்தனை பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை ஆளுவனன் என்பதையும் மறந்து சிறு குழந்தை போல் நின்று சரயூவை வேண்டினான்.  அவன் கண்களின் ஏக்கமும், மனதை பிரதிபலிக்கும் முகத்தின் வேதனையையும் காண சகியாது கண்களை மூடிக்கொண்டார் ரவிகுமார்.

அவரின் கையை பிடித்த ஜெய், “அன்னைக்கு எம்மேல எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தா, நிச்சயம் செய்திருப்பீங்க....அதுல ஒரு சதவீதம் கூடவா இன்னைக்கு இந்த ஜெய் மேல இல்லாம போச்சு அங்கிள்?”

அவன் என்னவோ ரவிகுமாரிடம் தான் கேட்டான்.  ஆனால் அந்த கேள்வியோ மைத்ரீ மனதை தொட்டு அவளை அசைத்து பார்த்தது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.