(Reading time: 18 - 36 minutes)

இத்தனை வருடங்களாய் அறையிலேயே முடங்கி கிடந்தவளிடம், இன்று சிறு நிமிர்வை கவனித்தவருக்கு, ஜெய்யை பார்த்ததற்கே இவளிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம்...இனி மகளை அவன் பார்த்துகொள்வான் என்ற நம்பிக்கை உதித்தது.

ஜெய் கூடிய விரைவில் திருமணத்தை நடத்த வேண்டுமென்ற தன் ஆசையை வடிவின் மூலம் நிறைவேற்றி கொள்ள, ஒரு மாத இடைவெளியில் கல்யாண தேதியும் குறிக்கபட்டது.

விஷயம் தெரிந்த யஷ்விதா, பொங்கி பொரிந்து தள்ளிவிட்டாள்.

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா சரயூ? அந்த சஞ்சய் எப்படிபட்டவனு தெரிஞ்சும் அவனை கல்யாண பண்ணிக்க சம்மதிச்சிருக்க? அவனால தானே இன்னைக்கு நீ இப்படி நிக்குற? அவனுக்கு இது பத்தலையாமா....மறுபடியும் இங்க வந்திருக்கா? அவனை சொல்லி என்ன செய்ய? செய்ய வேண்டியவளே சும்மா இருக்கும் போது....” கோபமாக ஆரம்பித்து சலிப்பாக நிறுத்தியவள், தன் பேச்சுக்கு சரயூவிடம் எந்த மாறுதலும் இல்லை என்றதும் வருத்தமுற்றாள்.

“ரெண்டு நாளைக்கு முன்ன, நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கவும்....நான் எவ்வளவு சந்தோஷபட்டே தெரியுமா? எங்கக்காக்கு ஃபோன் பண்ணி என்னோட கஸின் உனக்கு சூட் ஆவானானு விசாரிச்சு...நேத்தைக்கு அவங்கிட்ட பேசிட்டு வருறதுக்குள்ள என்னெல்லாம் செஞ்சு வச்சிருக்கடி நீ?”

எல்லாரிடமிருந்து தன்னை தனிமை படுத்தி கொண்ட சரயூவிடம், நட்பு கரம் நீட்டிய யஷ்விதாவை ஒதுக்க முடியவில்லை.  அன்று ரிசார்ட்டில் நடந்ததை சஞ்சய் மூலமாக மைத்ரீயும் சரயூவிடமிருந்து யஷ்விதாவும் தெரிந்து கொண்டனர்.  சரயூவின் நிலையறிந்து நல்ல தோழியாக அவளுக்கு துணை நின்றாள் யஷ்விதா.  இவள் தான் பேசி உருட்டி மிரட்டி சரயூவின் பெற்றோரின் கவலையை எடுத்து சொல்லி என்ற பல வித்தைகளை கையாண்டு, அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தாள்.  சரயூவின் மாற்றத்தை அவள் பெற்றோருக்கு தெரிவித்து மகிழ்ந்தவள்...இனியாவது அவளின் வாழ்வில் வசந்தம் வருமென கற்பனையில் மிதக்க....ஜெய் மற்றும் சரயூவின் திருமணத்தின் தகவலை ப்ரியாவின் மூலம் தெரிந்து கொண்டவள் கொதித்து விட்டாள்.

“நா ஒருத்தி இங்க காட்டு கத்தல் கத்திக்கிட்டு இருக்க, உன் காதுல விழல? என்டி உன்னோட வாழ்க்கையை நீயே அழிச்சுக்க முடிவெடுத்துட்டியா? பதில் சொல்லு சரயூ?” என்றபடி அவளை பிடித்து உலுக்க...

இத்தனை நேரம் காத்த அமைதியை உடைத்து, “நான் அவனை தான் கல்யாணம் செஞ்சுக்க போறே” என்று அழுத்தமான வார்த்தைகளை உதிர்த்தவள்....இதற்கு மேல் பேச ஏதுமில்லை என்பதாக கையை கதவு பக்கம் நீட்ட, யஷ்விதாவுக்கு கோபம் தலைக்கேறியது.

“உனக்கெல்லாம் நல்லது சொன்ன பாரு, என் புத்திய சொல்லனும்... எப்படியோ போடி” என்றவள் கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறினாள்.

என்ன தான் சரயூவின் செயலில் அவமானமாக உணர்ந்தாலும், இந்த கல்யாணம் நடப்பது ஆபத்தென்று நினைத்து ஜெய்யை சந்தித்தாள்.  ரிசார்ட்டில் நடந்தது தனக்கு தெரியுமென்பதை வெளிகாட்டாது, பொதுவாக அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை எடுத்து சொல்லி இந்த கல்யாணம் புத்திசாலி தனமான முடிவல்ல என்று சொல்லி பார்த்தாள்.  ஆனால் ஜெய்யும் தன் முடிவில் உறுதியாக இருந்து விட... ஒரு வித இயலாமையுடன் நடப்பது நடக்கட்டும் என்று அந்த விதியை நொந்துகொள்வதை தவிர வேறேதும் செய்ய முடியாமல் முடங்கினாள் யஷ்விதா.

நாட்கள் வேகமாக ஓடி மறைய குறித்த நாளில் ஜெய் சரயூவின் திருமணமும் இனிதே நடந்து முடிந்தது.

சரயூவை தன்னவளாக்கி கொண்ட நிம்மதியை தவிர, அவர்கள் திருமணத்தை நினைத்து சந்தோச பட எதுவுமே இல்லாமல் போனது.  எப்படியெல்லாம் கனவு கண்டிருந்தான்... மனம் முழுக்க காதல் சுமந்து, மணமேடை ஏற...நட்பு மற்றும் சொந்தகளின் கேலியில் வெட்கம் படர...ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து அனுபவித்து, இவனும் இவளும் திருமண பந்தத்தில் இணைய நினைத்திருந்தான்.  மனம் விரும்பியவளையே மனைவியாக்கி கொண்டான் தான்.  ஆனால் அவன் நினைத்ததில் ஒன்று கூட இன்று காலை நடந்திருக்கவில்லை. 

ஒரு வித பதட்டத்தோடு அவள் மணமேடையில் அமர....அவளின் கடைக்கண் பார்வைக்காக தவமிருக்க...அவளோ மறந்தும் கூட இவன் பக்கம் திரும்பவில்லை.  குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தவளின் கண்களை சந்தித்திட அவன் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிய....ஐய்யர் சொன்ன சடங்குகளை செய்யும்போது தடங்கலாக இருந்த வளையல் அவனுக்கு உதவியது.  அவளின் வலையல்களை நகர்த்தும் சாக்கில் அவள் கையை தொட்ட நொடி, பயத்தில் உடல் குலுங்க கையிலிருந்த பொருளை தவரவிட்டவளின் முகம் வெளிறியதை பார்த்தவன் நொறுங்கி போனான்.  அவளிடம் வெளிப்படையாக தெரிந்த பயத்தில் அதற்கடுத்து அவளை சீண்டாமல் சடங்குகளை செய்து கொண்டிருந்தான் ஜெய்.  முகூர்த்த நேரத்தின் முடிவில் மாங்கல்யத்தை அணிவித்த போதும், தலை குனிந்தபடியே இருந்தாள் அவள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.