(Reading time: 18 - 35 minutes)

ஏமாற்றமும் வருத்தமும் மனதில் முட்டிக்கொண்டிருந்த சமயம்...சரயூ அவனை தேடியதும், அவள் கிளம்பும் வேளையில் எங்கிருந்தோ வந்தவனின் கண்கள் அவளிடம் காதல் கதை பேசிட... யஷ்விதாவின் இதயத்தில் இடியென இறக்கியது உண்மை.  அதே வேளையில் கண்கள் கண்டதை உண்மையென ஒப்பு கொள்ளவும் முடியாது, அழுது தன்னை தேற்றவும் முடியாது நரகத்தில் நின்றிருந்தாள்.   

“அன்னைக்கு உங்க ஃபேவ்ரட் கலர்ல, உங்களுக்கு பிடிச்ச மாதிரி ட்ரெஸ் எடுக்கலாம்னு எத்தனை ஆசையா இருந்த....அது நடக்காத போதும், நீங்க பார்க்கனும்னு கல்யாணத்தன்னைக்கு அழகா அலங்கரிச்சிட்டிருந்தா....என் ஆசையெல்லாத்தையும் குழி தோன்டி புதைச்சிருச்சு உங்க கண்ணுல இருந்த காதல்” கசங்கிய முகத்தில் ஒரு வெற்று புன்னகை.

“உங்க கண்ணுல நான் எதிர்பார்த்த காதல் தெரிஞ்சது...ஆனா...ஆனா அந்த காதல் எனக்கு சொந்தமில்லைனு தெரிஞ்சபோது....” என்றவளின் உதடுகள் துடிக்க, கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“அப்படியிருந்தும் மனசுல ஏதோ ஒரு மூலையில என்னோட காதல் கைகூடும்னு சின்ன நம்பிக்கையும், அது நடந்திட கூடாதானு ஏக்கமும் இருக்கதான் செய்தது.  ஆனா அதுவும் நிலைக்காம போன போது, நான் உடைஞ்சு போயிட்ட, ஜெய்.  மைத்ரீ நிச்சயத்துக்காக வந்து, உங்களுக்கும் சரயூக்கும் நிச்சயம் நடந்ததை தெரிஞ்சுக்கிட்டனே, அந்த நிமிஷம் என்னோட மனசு துடிச்சதை யாருக்கிட்டயும் சொல்லி வாய்விட்டு கதறவும் முடியாம, அங்கிருந்து உடனே கிளம்பவும் முடியாம, நெருப்பு மேல நின்னதை இன்னைக்கும் என்னால மறக்க முடியலை!” அன்றைய நினைப்பில் உடல் நடுங்க அவன் கையை இறுக்கமாக பிடித்து கொண்டு கதறிவிட்டாள். 

யஷ்விதாவின் காதல் தெரிய வந்ததில் ஜெய்யின் உலகம் ஸ்தம்பித்து நின்றுவிட்டது.

இவள் என்னை காதலிக்கிறாளா?! பார்த்த முதல் நாளே பிறந்த காதல்! அவள் சொல்லாத போதும் அவனால் ஏன் புரிந்து கொள்ள முடியாமல் போனது? அன்றே தெரிந்திருந்தால் சரயூவை காப்பாற்றியிருப்பானே! அப்படியென்றால் மனைவியின் துன்பத்திற்கு அவன் தான் காரணமா?

முதல் நாள் யஷ்விதாவின் அறிமுகத்தில் புரியவில்லை என்றாலும் அடுத்தடுத்த வந்த எத்தனை சந்தர்ப்பங்கள்? ஒரு முறையாவது, இதை கவனித்திருந்தால் நடந்த அனர்த்தங்களை தடுத்திருக்கலாமே.

அவள் காதலை அறியாது போனது அவன் முட்டாள் தனமா அல்லது விதியின் சதியா?

அவள் பிடித்திருந்த தன் கையை உருவியவன், “காதல் யாரோட விருப்பத்தையும் தெரிஞ்சுக்கிட்டு வருவதில்ல.  ஏன் காதலிக்கிறவங்களோட விருப்பத்தை கூட தெரிஞ்சுக்காம வருவது தான் காதல்! என்னால உன்னை புரிஞ்சுக்க முடியும்....ஏன்னா நானும் காதல்ல விழுந்து அதிலிருக்கும் சுக துக்கத்தை அனுபவிச்சிட்டிருக்க... மனசுக்கு பிடிச்சவங்க நம்மளை விட்டு பிரியுற வலி கொடுமையானது.  கண்ணெதிரேயே என்னை வச்சுக்கிட்டு நீ எவ்வளவு தவிச்சிருப்பனு புரியுது!” அவளையும் அவள் காதலையும் சரியாக புரிந்து கொண்டாலும் அவனேதும் செய்ய முடியாத நிலை.

“ஆனா....என்னை மன்னிச்சிடு யஷ்விதா! மனசு முழுக்க ஒருத்தி இருக்க இன்னொருத்தியோட ஆசைக்காக எதையும் மாத்திக்க முடியாது.  அப்படியே நான் செய்தாலும், அது காதலுக்கு அசிங்கம்.  நான் கிடைக்கலையே என்ற வேகத்துலயும் கோபத்துலயும் உன்னோட புத்தி சரி தப்பு பிரிச்சு பார்க்க தெரியாம குழம்பியிருக்கும்.  அதுல நீ எதையாவது தப்பா செய்திருந்தா இல்லை இதுக்கப்றம் செய்தாலும் அது உன்னோட காதலை கொச்சை படுத்துற மாதிரி யஷ்விதா.  காதலுக்கு இன்னொருத்தரை காயபடுத்த தெரியாது!” என்றவனின் கூர்மையான விழிகள் அவளை துளைத்தன.

அதை தாங்கதவளாக, “அப்படி பார்க்காதீங்க ஜெய்! நான் எந்த பெரிய தப்பும் செய்யல! உங்க மேலிருந்த காதல்ல சில பொய்கள் சொல்லியிருக்கேனே தவிர வேறேதும் செய்ததில்லை!”

தன்னை வார்த்தைகளால் சுடாது, பெண்ணுக்குள் பிறந்தாலும் காதல் அதன் தகுதியை இழக்காது என்பதை அழகாய் வெளிபடுத்தியவனிடம் மனம் மண்டியிட்டது.  இப்படிபட்டவனின் காதலில் குளிக்க முடியாது போன அவளுடைய துரதிர்ஷ்டத்தை நினைத்து உள்ளம் வெந்தது.  

யஷ்விதா பொய் சொன்னதுண்டு என்று சொன்ன போது சரயூவை பற்றி அவள் சொன்னதும் பொய்யாக இருந்திட கூடாதா! பேராசை அலைகள் நெஞ்சை நனைக்க...

“சரயூவை ஏமாத்த தானே அவக்கூட பழகின? சொல்லு யஷ்விதா...என்ன பொய் சொல்லி சரயூவை இந்தளவுக்கு மாத்தி வச்சிருக்க? உனக்கு கொஞ்ச கூட மனசாட்சியே இல்லையா? அவளும் உன்னை மாதிரி ஒரு பொண்ணு தானே? அவளோட மனசை பத்தி யோசிச்சியா? இப்படி செய்ய, உன்னால எப்படி முடிஞ்சது?” மனைவி படும் பாட்டை பொறுக்க முடியாமல் குமுறிக்கொண்டிருந்த ஜெய், மனதின் ஆதங்கத்தை கேள்விகளாய் கேட்டுவிட்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.