(Reading time: 18 - 35 minutes)

“சரயூவோட பழக ஆரம்பிச்சதென்னவோ ஏதாவது செய்து உங்களை எனக்கு சொந்தமாக்கிகனும்னுதா...ஆனா தப்பே செய்யாத ஒருத்தியோட வாழ்க்கை உங்க சூழ்ச்சியால நாசமாகுறது பிடிக்கல.  உங்களை நான் கல்யாணம் செய்துட்டா என்னோட ஆசையும் நிறைவேறும்; சரயூவோட வாழ்க்கையும் தப்பிக்கும்.  ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! அம்மா அப்பாவாக்காவாவது அவள் கல்யாணம் செய்துக்கனும்னு வற்புறுத்துன.  முதல்ல முடியவே முடியாதுனு மறுத்தவளை உருட்டி மிரட்டி ஒத்துக்க வச்சு...என்னோட கசின்ட்ட சரயூவை பத்தி சொல்லி, எல்லா சரியா நடக்கும்னு நினைச்ச நேரத்துலதா நீங்க வந்தீங்க.  நான் ஊரிலில்லாத இரண்டு நாள்ல என்ன மேஜிக் நடந்ததுனு புரிஞ்சுக்க முடியல.  நான் சொன்னதுக்கெல்லா தலையாட்டின சரயூ, அப்படியே தலைகீழா மாறிட்டா! உங்களைதா கல்யாணம் செய்துக்குவனு ரொம்ப பிடிவாதமா இருந்தா... அப்போதா உங்களை வந்து பார்த்து, இந்த கல்யாணம் வேணாம்னு கூட சொன்ன.  அதுல என்னோட சுயநலமிருந்தாலும், சரயூவோட நல்லதும் இருக்கதா செய்தது.  ஆனா எல்லாமே உங்க ப்ளான்படிதா நடந்தது” கடைசி வரியில் தான் குற்றம் சாட்டபடுவதில் அதிர்ந்து போனான்.

“எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்லை ஜெய்! என்னோட காதலை புரிஞ்சுக்க முடிஞ்ச உங்களால எப்படி காதலுங்கற பேர்ல சரயூவை பழிவாங்க முடியுது?”

சரயூவை அவன் பழிவாங்க நினைப்பது தெரிந்ததிலிருந்து, மனதை குடைந்த கேள்வியை கேட்டுவிட்டாள்.  என்னதான் ஜெய்யின் மேல் கண்மூடிதனமான காதலிருந்த போதும், அவன் செய்வதெல்லாம் சரியென்று சொல்லும் ரகம் அவளல்ல.

யஷ்விதாவின் கேள்வி அபத்தமென்றாலும் அதில் அசந்து போனான்.  உண்மையை மறைக்க எத்தனை அழகாய் தன் மீதே தவறிருப்பதாக ஒரு கதையை சொல்கிறாள்! மனதில் மூண்ட எரிச்சலோடு...

“மறுபடியும் பொய் சொல்லாதே யஷ்விதா! உனக்கு என்னதா பிரச்சனை? முதல்ல என்னை காதலிக்கிறதா சொன்ன....இப்போ என்னோட காதலே பொய்யுங்குற...எல்லாத்தையும் மாத்தி மாத்தி பேசி என்னை குழப்புறதால உனக்கென்ன லாபம்?”

“நான் எதையும் மாத்தியும் பேசலை...பொய்யும் சொல்லலை! அன்னைக்கு கோயில்ல சொன்னதுதா உண்மை! சரயூ, அவளோட கற்பை இழந்தானா, அதுக்கு காரணம் நீங்கதா” உறுதியாக ஒலித்த வார்த்தைகளில், இத்தனை நேரமாக மறைந்திருந்த கோபம் தலைக்கேறியது.

மலர் போன்றவளின் பெண்மை பறிக்கபட்டதுக்கு அவன் தான் காரணமாம்.  அவளை காக்க முடியாது போன தன்னையே மன்னிக்க முடியாது தவித்து கொண்டிருப்பவன் மேல் இப்படியொரு பழியை சுமத்தினால் நியாயமா? பொங்கிவிட்டான்!

கோபத்தில் அறைந்திட உயர்ந்திருந்த ஜெய்யின் கையை அசட்டை செய்தவளின் உதடுகள் இகழ்ச்சியாக வளைய... தன்னிலை அறிந்து கையை பின்னுக்கு இழுத்துகொண்டான்.

“இப்பவும் சொல்ற என்னோட காதல் புனிதமானது! அது ஜெயிக்கலனாலும் உங்ககிட்ட வந்து சேர்ந்துருச்சு! இதுவே எனக்கு போதும்! ஆனா உங்க காதல் பொய்!”

மீண்டும் கோபமாக எதையோ சொல்ல வந்தவனை கையமர்த்தி தடுத்து, “அப்படியில்லை...உங்க காதல் உண்மைனு சொன்னீங்கனா, எதுக்காக சரயூங்குற அப்பாவி பொண்ணை பழிவாங்க நினைக்குறீங்க? அதுவும் அவள் செய்யாத தப்புக்கு தண்டனை கொடுக்க நினைக்குறது சரியா?” கேள்விகளை அடுக்கியவள் எழுந்து கொண்டாள்.

“இந்த கேள்விகெல்லாம் எனக்கு பதில் சொல்ல வேணா.  எத்தனை சொல்லியும் என் பேச்சை கேட்காம உங்களை கல்யாணம் செய்துகிட்டாளே, அந்த பைத்தியக்காரி, அவட்ட போய் சொல்லுங்க”

நின்றபடி பேசிமுடித்தவள், “குட் பை!” இதோடு எல்லாம் முடிந்தது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு அவ்விடத்திலிருந்து நடந்தாள்.

காதலர்கள் அதிகமாக வரும் அந்த காஃபி ஷாப்பில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக அழகான வேலைப்பாட்டுடன் கூடிய கண்ணாடிகளை தடுப்புகளாக பயன்படுத்தி சிறு சிறு அறைகளாக பிரித்து ஒவ்வொன்றிலும் ஒரு மேஜையும் நான்கு நாற்காலிகளும் போட பட்டிருந்தது.  தனிமையில் பேசுவதற்கு வசதியாக இருக்குமென்று தான் ஜெய், யஷ்விதாவை இங்கு வரசொன்னான்.  அவள் சென்ற பிறகு சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனுக்கு அங்கிருந்த தனிமை பெரிதும் உதவியது.

சரயூ, அவளோட கற்பை இழந்தானா, அதுக்கு காரணம் நீங்கதா!

யஷ்விதாவின் வார்த்தைகள் காதில் ரீங்காரமிட, அவள் சுமத்திய பழி வண்டாக மனதை துளைத்தது.

என் சரயூவை நான் பழிவாங்குறேனாம்! என்னோட காதல் பொய்யாம்! தானாக உதித்த விரக்தி புன்னகை அவனுள்ளத்தை படம்பிடித்து காட்டியது.

பி.யூ முதலாமாண்டு (+1) மாணவர்களில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து உதவி தொகை வழங்கி, அவர்களின் புத்திகூர்மையை கௌரவிப்பதற்காக நடைபெறும் அந்த தேர்வு மிகவும் பிரசித்தமானது.  மாநில அளவிலான இந்த தேர்வில், உதவி தொகைக்காக பங்கெடுக்கும் மாணவர்களை காட்டிலும் தேர்ச்சி பெற்றால் கிடைக்கும் சான்றிதழுக்கும் அதனால் கல்லூரியில் கிடைக்கும் பாராட்டுக்காகவும் எழுதுபவரே அதிகம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.