(Reading time: 44 - 88 minutes)

“எப்படி?”

 

அவள் கேட்ட போது வீட்டின் அழைப்பு மணி அடிக்க திறக்க போன பூமா சந்தியாவிடம் தன் பேச்சை தொடர்ந்தாள்.

 

“பிளைட்ல இருந்து எங்க வீட்டுக்கு சரக்கை டேரக்ட் டெலிவரி பண்ண வந்துட்டாருடி. சகலகலா வல்லவனா போட்டோகிராபி, பாட்டு, லெக்சர்ன்னு கலக்குறார். டவுன் டு எர்த்தா பழகுற மனுஷனை அன்னைக்கு திமிர் பிடிச்சவன்னு சொன்ன?” என்று மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டே கதவை திறந்தாள்.

 

கார்த்திக் பால்கனியில் முறைத்த பக்கத்து வீட்டு இளம்பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் பூமாவின் நெருங்கிய தோழி. “லைன்ல இரு சந்து” என்று சொல்லிவிட்டு, அந்த இளம்பெண் கையில் கொடுத்த பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாங்கிக் கொள்ள, அவளோ புத்தகத்தை கொடுத்த படி “அந்த திமிர் பிடிச்ச தடியன் போயாச்சா?” ரகசியமாக கேட்டாள். அது மறுமுனையில் இருந்த சந்தியாவிற்கு சன்னமாக கேட்க, மீண்டும் பூமா பேச ஆரம்பித்தவுடன் “என்ன பூ டவுன் டு எர்த் பழுகுற மனுஷன் தான அந்த திமிர் பிடிச்ச தடியன்?” சிரித்துக் கொண்டே கேட்டாள் சந்தியா.

 

பால்கனியில் நடந்ததை ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டிருந்தாளே பூமா! அவள் கார்த்திக்கின் செயலை நியாப்படுத்தினாள்.

 

“சரியான திமிர் பிடிச்சவன். சகுனி” பட படவென பொரிந்தாள் சந்தியா. தனக்கு கேட்கும் படி பாடவில்லையே என்ற ஏக்கமும் பொறாமையும் வர அவனை தாளித்தாள்.

 

“என்னடி கோபம் உனக்கு? எதுக்கு சகுனின்னு சொல்ற?” அவள் பேசுவது அவனுக்கு கேட்டு விடுமோவென மெல்லிய குரலில் கேட்டாள் பூமா.

 

“என்னை எப்ப பாத்தாலும் யார்கிட்டயாவது போட்டு கொடுத்துகிட்டே இருப்பான்” என்று குறை சொன்னாள் சந்தியா.

 

அதை கேட்டு சிரித்த பூமா “அது என்னவோ உண்மை தான்டி. சொர்ணாக்கா ன்னு அவங்க அம்மாக்கு நாம வைச்ச பேரை போட்டு கொடுத்துட்டாருடி. குணா ஒரே அட்வைஸ். சொர்ணாக்கா நீ தான் அப்படி பேரு வைச்சன்னு நம்பவே இல்லையாம். அதை கேட்டப்போ எனக்கே ஒரு மாதிரி இருந்தது.”

 

“ஓ….” என்றவளுக்கும் அது சங்கடமாக தோன்ற “அதான் அன்னைக்கே சொன்னேனே. அவங்ககிட்ட அந்த பழைய கெத்து இல்லைன்னு. வீட்டுக்காரருக்கு ஒரு நோய்ன்னா ஆளே இப்படி மாறிடுவாங்களான்னு ஆச்சர்யமா இருக்கு“

 

“ஆமாடி, மாறிடுவாங்க. கல்யாண ஆன பிறகு புருஷன் இல்லாத வாழ்க்கை நினைச்சுக் கூட பாக்க முடியாது. அப்பா பீப்பாவை பல விஷயங்களை மன்னிச்சு விடுறதும் அதுனால தான். அம்மா கல்யாணம் ஆகி போன நாள்ல இருந்து அம்மா கூடவே பீப்பா எப்போதும் போட்டி போடுமாம். பீப்பா அப்போ நல்லா வசதியா இருந்திருக்கு. அம்மா கஷ்டப்படுற குடும்பத்தில இருந்து வந்தவங்கன்னு இளக்காரமா பேசுமாம். ஆனா டவுசர் சின்ன வயசா இருக்கிறப்ப அவங்க அப்பா இறந்ததுட்டாங்க. பீப்பாக்கு வர வேண்டிய சொத்தை எல்லாம் சொந்தக்காரங்க ஏமாத்தி பிடுங்கிட்டாங்க. இள வயசுல புருஷனையும் சொத்தையும் இழந்ததுல பீப்பாக்கு நம்ம அம்மா மேல பொறாமை அதிகமாகிடுச்சு. அதுனால அம்மாவை எப்ப பாத்தாலும் அப்பாகிட்ட சொல்லிக் கொடுத்து சண்டையிழுத்து விடுமாம். அப்பா கொஞ்ச நாள்ல அதை பத்தி தெரிஞ்சிகிட்டு அம்மாகிட்ட சொன்னாங்களாம், “நான் இல்லாத வாழ்க்கையை உன்னால நினச்சு பாக்க முடியுமா? அவ அந்த கஷ்டத்தை தான் பட்டுகிட்டு இருக்கா. அவ உன்னை வேதனை படுத்துறது நான் இல்லாம நீ படுற வேதனையை விட அதிகமா இருந்தா சொல்லு அவளை நான் என்ன ஏதுன்னு கேக்குறேன்” அப்படின்னு சொல்லிட்டாங்களாம். அதான் அம்மா பீப்பா என்ன சொன்னாலும் பொறுத்து போயிடுவாங்க. “ என பூமா சொல்லிக் கொண்டிருக்கும் போதே சந்தியாவின் தலையணையில் வந்து படுத்துக் கொண்ட யாழினி, “சித்தி கதை சொல்லுங்க” நச்சரித்தாள். “பேசி முடிச்சிட்டு சொல்றேன்டி” சைகையில் சொல்ல, சரியென தலையாட்டி சித்தியின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அரவிந்தோ அவள் போன் பேச ஆரம்பித்த சில நொடியில் தூங்கி விட்டான்.

 

கழுத்தை கட்டிக் கொண்ட யாழினியின் முடியை கலைத்து விளையாடிக் கொண்டே பூமா பேசியதை கவனித்தாள் சந்தியா.  

 

“நீ நேத்து ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ அம்மா அவங்க வாழ்க்கை சக்கரத்தை ரிவர்ஸ்ஸா சுத்தி ப்ளாஷ் பேக் சொன்னாங்க. வாழ வேண்டிய வயசுல வாழ்க்கையை தொலைக்கிறது கொடுமை. அதைக் கேட்டு பீப்பா மேல எனக்கே கொஞ்சம் இரக்கம் வந்தது.” என்றாள் பூமா. அப்போது தன் அறையில் இருந்து வெளிப்பட்ட கார்த்திக், பூமா போன் பேசுவதை பார்த்து, லேப்டாப்பில் முழ்கி இருந்த குணாவை நோக்கி நடந்தான்.

 

“ஆனா அவ அம்மா உயிரையே குடிக்க பாத்தாளே! அவ வாயில் இருந்து விஷத்தை கக்கினாளே! உன்னை என்னவெல்லாம் சொன்னா! அய்யோ முருகா! பூமாக்கு கவசமா இருந்து அந்த பிள்ளையை உலகத்திற்கு கொண்டு வா” மனமுருக முருகனை வேண்டியவள் பக்தி பரவசத்தில், “பூ கார்த்திக் சிக்கல் சிங்காரவேலர் பிரசாதம் கொடுத்தாராடி? “ என கேட்க,

 

“சந்து, நீ எங்கிட்ட சொன்னது எப்படி உங்க பாஸ்க்கு கேட்டிருக்கு? நீ சொல்லும் போதே பிரசாதத்தை எடுத்திட்டு வந்து குணாட்ட நீட்டுறார். அவர் உன் பாஸ்ஸா , இல்லை நீ அவருக்கு பாஸ்ஸா?”

 

சந்தேகமாய் கேட்டுக் கொண்டே கார்த்திக்கை பார்த்து புருவத்தை உயர்த்தி புன்னகைத்தாள். பூமா “சந்து” என்று விளித்த போதே அவனுக்குள் மின்சாரம் பாய ஆர்வமாய் பூமாவைப் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக். அவன் கண்களில் தெரிந்த ஆவலை புரிந்து கொண்ட பூமா, “உன் பாஸ்க்கு தேங்கஸ் சொல்லு” என போனை கார்த்திக்கிடம் நீட்டினாள்.

 

திடுதிப்பென்று போனை கார்த்திக்கிடம் கொடுக்க நுரையீரல் சுவாசிப்பதை மறந்து மூச்சடைத்துப் போய், என்ன பேசவென்றே தெரியவில்லை. எத்தனை கேலி, கிண்டல், வம்பு வாக்குவாதம், விவாதம், விவரித்தல் என அவனுடன் கடந்த ஒரு வாரத்தில் செய்திருப்பாள்! நடுநிசி என்று பாராது தூங்குபவனை எழுப்பி விட்டு சளைக்காமல் பேசியவள், இன்று நன்றியை தெரிவிக்க தயக்கத்துடன் மவுனித்தாள்.

 

அவள் மவுனம் அவனை வதைத்தது. “ஏன்டி என்கூட பேசக் கூட பிடிக்கலையா..”, அவள் குரலை கேட்க தவியாய் தவித்தான்.

 

அவள் இதற்கு மேல் பேச மாட்டாள் என தானே ஆரம்பிப்போம் என “ஹலோ” என்று ஆரம்பிக்க அவள் அதை சொல்லி முடித்திருந்தாள்.

 

இருவரும் ஒரே நேரத்தில் ஹலோ என்ற பின் மீண்டும் அமைதி. அவளே பேசட்டும் என கார்த்திக் ஆர்வத்துடன் பொறுமை காத்தான்.

 

கண்ட நாள் முதல் அவன் அவளுக்கு...அவளுக்காகவே மெனக்கெட்டு செய்த உதவிகள் ஒன்றா...இரண்டா...நினைக்கும் போதே இன்னது என விவரிக்க முடியாத உணர்ச்சியுடன் உள்ளம் நெகிழ

 

 “தேங்க்ஸ் கார்த்திக்…... எல்லாத்துக்கும்”

 

கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல மெல்லிய சத்தத்துடன் நடுக்கத்துடன் வந்தது அவள் குரல். தொண்டைக் குழியில் சிக்கி சிரமப்பட்டு வெளியில் வந்த வார்த்தைகளை வாய் மொழிய பெரும்பாடு பட, கண்களோ காதலில் கசிந்து உருகி கலங்கியது.

 

சித்தி எப்போது பேசி முடிப்பாள் மீதி கதையை கேட்கலாம் என்று ஆர்வமாக அவளை பார்த்துக் கொண்டிருந்த யாழினி, அவள் கண்கள் கலங்குவதைப் பார்த்து முகத்தருகே வந்து “சித்தி அழறீங்களா?”, கவலையுடன் கேட்ட யாழினியிடம் இல்லையென தலையசைத்து புன்முறுவலுடன் தன்னுடன் அணைத்து கார்த்திக்கின் மறுமொழிக்கு ஆர்வமாய் காத்திருந்தாள்.

 

ஏற்கனவே உற்சாகமின்றி சன்னமாக ஒலித்த அவள் குரலில் நொறுங்கி போனவன், மழலையின் பேச்சு கேட்டு மேலும் உடைந்தான்.

 

நெஞ்சில் பெரும் பாரம் அழுத்த, அதற்கு மேல் அதை தாங்க மனதில்லாமல் “இட்ஸ் மை ப்ளஷர் சந்தியா. பூமாகிட்ட பேசு” , முடிந்தவரை இயல்பான குரலில் பேச முயன்று போனை பூமாவிடம் கொடுத்து விட்டச் சென்றான்.

 

சந்தியாவிற்கோ அவன் ஏன் விலகிப் போகிறான் என புரியவில்லை. அவன் இனி பேச மாட்டான் என அறிந்து இணைப்பை துண்டித்தவளின் கண்கள் மடை திறந்த வெள்ளமாக கண்ணீரை செறிய, “சித்தி அழாத. எனக்கு அழகை வருது” என்று சிணுங்கிய படி யாழினியும் அவள் கழுத்தை கட்டிக் கொண்டு அழ, குழந்தையின் பாசத்தில் நனைந்தவளின் கண்கள் வற்றி, “சரி அழ மாட்டேன். நீயும் அழக்கூடாது” என்று அன்புக் கட்டளையிட்டு அணைத்து முத்தமிட்டாள். சற்று நேரத்தில் மீதி கதையை கேட்டு முடித்து யாழினி கண்மூடி தூங்க, சந்தியாவின் இதயம் விழித்து அழ ஆரம்பித்தது..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.