(Reading time: 44 - 88 minutes)

 

இரவு 11 மணி

சென்னையில் தான் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள வீட்டிற்கே வடிவை அழைத்து வந்தான் பாண்டியன். அவளை தனது கட்டிலில் படுக்க சொல்லி விட்டு தரையில் துணி மெத்தையை விரித்து படுத்த பாண்டியனுக்கு தூக்கம் வரவில்லை. விடலை பருவத்தில் தன்ராஜிடம் வாங்கிய அடிகள்….

 

“மயங்கி கிடந்த பிள்ளைகிட்ட கண்ட இடத்திலையும் கைய வைக்கிற ராஸ்கல்? உனக்கு கொடுக்கிற கொடுப்பில இனி எந்த பயலும் என் பிள்ளைகளை நிமிந்து கூட பாக்க மாட்டான்” என சொல்லி விட்டு இடுப்பில் இருந்த பெல்ட்டை கழட்டி மாட்டை போட்டு அடித்தது, உடம்பில் ஒரு இடம் பாக்கி இல்லாமல் பட்டையான ரத்தக் கோடுகள்…இப்பொழுது தான் நடந்தது போல அப்படியே அவன் நினைவில் வந்து நின்றது…..

 

“அடுத்த வேளை சாப்பாடுக்கு வழியில்லாத நாயி உனக்கெல்லாம் லவ் லெட்டர்க்கு கேக்குதோ… மிதிக்கிற மிதில செத்து போவடா ****”” என்று வலியில் துடித்தவனை தன்ராஜின் அண்ணன் செருப்புக் காலால் முகத்தில் எட்டி உதைக்க, பற்கள் உடைந்து வாயெல்லாம் ரத்தமாகி மயங்கி விழுந்தது….அதை பார்த்து கொதித்த வடிவின் உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்கள் சண்டைக்கு வர…. தன்ராஜின் உடன்பிறப்பு மற்றும் உறவினர்களுடன் வந்த கைகலப்பு.. குடும்பத்தில் பிளவு….

 

ஊரார் பார்த்த பார்வை, தாயின் வளர்ப்பை மட்டுமல்லாமல் அவள் நடத்தையையே கிண்டிப் பார்த்த உறவினர்….எத்தனை நாள் அழுதிருப்பாள் அம்மா. ஒரே நாளில் தங்கள் குடும்பத்திற்கு அவமானத்தை உருவாக்கி விட்டு ஊருக்கு பறந்து விட்டாரே தன்ராஜ். அன்றாடம் எத்தனை ஏச்சு பேச்சுகளை தாங்கி கொண்டு போராடியிருப்பான்.

 

“அந்நியத்தில் செய்து கண் காணாத இடத்துக்கு அனுப்புறியே பிள்ளைய? பாண்டியனை மருமகனாக்க வேண்டியது தான தன்ராசு! கெட்டிக்காரன். நல்ல படிப்பு. படிப்புக்கேத்த சம்பாத்தியம். அவ அம்மா ஏமாந்த அத்தனை சொத்தையும் மீட்டுட்டான்னா பாத்துக்கோ ” அந்த ஊர் பெரிசுகள் பூமாவிற்கு திருமணப் பத்திரிக்கை வைக்க போகும் போதே தன்ராஜிடம் சமாதானம் பேச வைக்கும் அளவிற்கு முன்னேறி ஊர் வாயை அடைத்தது...

 

முத்துப்பேச்சிக்கு (தண்டட்டி பாட்டி) நடக்க முடியாமல் இருந்த போது தோட்டி வேலையெல்லாம் பார்த்தாளே அம்மா. அத்தனையும் எதற்காக? அந்த தன்ராஜையும் சந்தியாவையும் பழிவாங்கத் தானே? சந்தியாவின் ஏளன பார்வை, நினைக்கும் போதே நெஞ்சம் கொதித்தது. அவளை எனதாக்கி ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்ற வெறியில் தானே சாதாரண பத்திரிக்கையாளனாய் சேர்ந்து இப்போது தேசிய நாளிதழின் முழு சென்னைக் கிளையை நிர்வகிக்கும் அளவிற்கு அல்லும் பகலும் உழைத்து முன்னேறினேன்...அவள் இல்லை என்றால், இந்த பத்து வருட போராட்டம், முயற்சி எல்லாம் வீணே…...

 

மாப்பிள்ளையாக்கிறேன்னு ஆசை காட்டி கழுத்தறுத்த தன்ராஜ், என்னை கேவலமா பாத்து இழித்த சந்தியா...உங்க ரெண்டு பேரையும் என் உயிரே போனாலும் சந்தோசமா இருக்க விட மாட்டேன்….மனதில் மீண்டும் மீண்டும் உறுதி பூண்டான். செய்யாத குற்றத்திற்கு தான் பெற்ற தண்டனை பசு மரத்தாணி போல மனதில் பதிந்திருக்க, குற்றம் செய்து வரப்போகும் விளைவுகளை பற்றி எல்லாம் அவன் கவலைப்படவில்லை. மனது பழி வாங்க உலண்டு, என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என யோசித்துக் கொண்டே பிரண்டு பிரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.

 

“தூங்கலையா ராசா “ கரிசனத்துடன் கேட்டாள் வடிவு.

 

“இல்ல ஆத்தா. கொசுக் கடி அதான்” என இழுத்தான்.

 

“என்ன ராசா… ஏசி ரூமுல கொசுக்கடிக்குதாயா? இந்த பட்டிக்காட்டுக்காரி விவரமில்லாதவன்னு நெனக்குதியா? இன்னும் ஏன் அந்த சிரிக்கிய பத்தி ரோசனை பண்ணுத? என் சத்தியம் பொய்யாகிடாது …நீ நிம்மதியா தூங்கு” என்று தேற்றுதலாய் சொல்லி விட்டு கண்ணயர்ந்தாள்.

 

மே 20, திங்கட்கிழமை

 

காலையில் யாரோ கதவை தொடர்ந்து தட்டும் சத்தம் கேட்டு திறந்த பாண்டியன், சீருடை அணிந்த இரு போலீஸ்காரர்கள் நிற்க அதிர்ந்தான்.

 

“நீ தான் பாண்டியனா?”

 

“ஆமா. நீங்க இங்க?” திடீரென அவர்கள் நிற்பது புரியாமல் விழித்த பாண்டியன் தயங்கியவாறு கேட்க,

 

“நட ஸ்டேஷனுக்கு” அதிகாரமாய் சொன்னான் ஒரு போலீஸ்காரன்.

 

திடீரென்று வந்து நின்றதால் முதலில் குழம்பிய பாண்டியன் இப்போது தைரியத்தை வரவழைத்து, “வாரன்ட் இருக்கா?” எதிர் கேள்வி கேட்டான்.

 

“வா ன்னா… வரணும். தேவையில்லாம போலீஸ்காரனை முறைக்காத” வந்த மற்றொரு போலீஸ்காரன் மிரட்டல் விடுத்தான்.

 

“அதே தான் நானும் சொல்றேன். நான் பிரஸ். தேவையில்லாம முறைக்காத” பதிலுக்கு பாண்டியனும் மிரட்ட,

 

“எங்களையே மிரட்டுறியா? போலீஸ்காரனை பகைச்சா சும்மா விடுவோமா?” என்று பாண்டியனின் சட்டையை பிடிக்க போக, அதை தடுத்த உடன் வந்த மற்றவன், “இங்க பாரு. உன் மேல கேசு எழுதாம முடிக்கலாம்ன்னு பாக்கிறோம். வாரன்ட் அது இதுன்னு வம்பு பண்ண, கேசு போட்டு கைல விலங்கு மாட்டி தர தரன்னு இழுத்துட்டு போக வேண்டு வரும்” பின் விளைவுகள் சொல்லி மிரட்டும் போதே, நொண்டி நொண்டி அங்கு வந்த வடிவு,

 

“அய்யோ போலீசு...என்ன ராசா இது” நெஞ்சம் பதற அதிர்ச்சியில் பாண்டியனைப் பார்த்தாள்..

 

“என்னை ஸ்டேஷனுக்கு கூப்பிடுறாங்க ஆத்தா ”, உணர்ச்சியை துடைத்த முகத்துடன் சொன்னான் பாண்டியன்.

 

“என்னது? என் புள்ள எந்த தப்பும் செய்யாதே! ஐய்யா நீங்க வீடு மாத்தி வந்துட்டீயலா ” குழம்பிப் போய் காவலர்களிடம் கேட்டாள் வடிவு.

 

“நாங்க தெளிவா தான் இருக்கோம். உனக்கு தான் புத்தி பேதலிச்சு போச்சு. இதெல்லாம் பெரிய இடத்தோட உன் மகன் வம்பு பண்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும் “ என்று வடிவிடம் சொல்லி விட்டு “யேய் நடய்யா ஸ்டேஷனுக்கு. “ அதட்டினான் பாண்டியனிடம்.

 

வீட்டின் வாசலில் இந்த பேச்சு நடந்து கொண்டிருக்க அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அதை நோட்டமிட்ட படி தத்தம் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். பாண்டியனுடன் சிநேகமாய் பேசிய அக்கம் பக்கத்துக்காரர்கள் கூட சந்தேகமாகவும், தனக்கும் அவனுக்கும் சம்மந்தம் இல்லை என்பதும் போல வெவ்வேறு உணர்ச்சிகளை முகத்தில் காட்டி கண்டும் காணாதும் இருந்தனர். இதற்கு மேல் வீட்டிற்கு வெளியே நின்று போலீஸ்காரர்களுடன் பிரிச்சனை செய்ய வேண்டாம் என்று எண்ணி,

 

“ஆத்தா நான் போயி என்னன்னு கேட்டுட்டு வந்துடுறேன்” வடிவிடம் சொல்லி விட்டு கிளம்பிய பாண்டியனிடம் “ராசா...நம்ம குடும்பத்தில் யாரும் போலீஸ் ஸ்டேஷன் வாசப்படியே மிதிச்சது கிடையாதே. அய்யோ நான் என்ன செய்யுவேன்” அழுது புலம்பிய வடிவை தேற்றி விட்டு தன் நண்பன் எண்ணிற்கு அழைக்குமாறு சொல்லி விட்டு அவர்களுடன் சென்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.