(Reading time: 22 - 44 minutes)

ராஜகோபால் ஏதும் பேசாமல் அமைதியாக அவர் மனைவியின் முகத்தையே பார்த்தார்.

“என்ன எதுவும் பேச மாட்றீங்க”

“இல்ல. நீ எப்போத்துல இருந்து இப்படி மாறிட்டன்னு பாக்கறேன். அப்படின்னா நீ சொல்றது சரின்னு சொல்றவங்களை எல்லாம் நீ உன் பக்கம் சேர்க்கற அப்படி தானே. ஆனா ஒன்னு மட்டும் நியாபகம் வச்சிக்க. நான் எப்பவுமே உன் பக்கம் சேர மாட்டேன். என் பொண்ணு என்ன தான் நீ சொல்றதுக்கு சரின்னு சொன்னாலும் அது அவ மனசுல இருந்து வராது. நான் கடைசி வரைக்கும் என் பொண்ணு பக்கம் தான். அவ வாழ்க்கை நல்லா இருக்கறது தான் எனக்கு முக்கியம். என்னால முடிஞ்ச வரைக்கும் நான் அதுக்காக போராடுவேன்” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று அங்கிருந்து சென்று விட்டார்.

ப்ப ஏன்டீ எட்டு மணிக்கெல்லாம் அங்க போகணும்ன்னு குதிக்கற” என்று காரை ஒட்டியவாறே கேட்டார் ராஜகோபால்.

“ஏன் போனா என்னவாம்”

“இல்ல இனியா கூட ரெடி ஆகலை, அப்புறம் வரேன்னு சொல்லிட்டா. நீ அவளை விட்டுட்டு கூட அப்படி ஏன் சீக்கிரமா அங்க ஓடுற. எதாச்சும் பிளான் பண்றியா என்ன”

“இப்ப ஏன் உங்க புத்தி இப்படி போகுது. நான் என்ன பண்ண போறேன். ஒன்பது மணிக்கெல்லாம் ஐயர் வந்துடுவாரு. அதுக்குள்ளே அவருக்கு தேவையானது எல்லாம் எடுத்து வைக்கணும். சீக்கிரம் போய் உங்க தங்கச்சிக்கு ஹெல்ப் பண்ணலாமேன்னு பார்த்தா ரொம்ப தான் பண்றீங்க. நான் ஏதும் பிளான் பண்ண வேண்டிய அவசியமே இல்ல. என் பொண்ணு நான் சொன்னா கேட்பா”

“அந்த திமிருல தானே நீ ஆடுற”

“என்ன”

“ஆமா. நான் கூட உன்னை போய் ஏமாளி. அப்படி இப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா எல்லாம் இப்ப தானே தெரியுது”

“என்ன தெரிஞ்சிது உங்களுக்கு. சொல்லுங்க சொல்லுங்க”

“நீ ஏமாளி எல்லாம் இல்லை. நான் நினைச்சதை விட நீ ரொம்ப விவரமானவன்னு தான்”

“சரி போங்க. இத்தனை நாள் தான் விவரம் இல்லாம இருந்துட்டேன். இதுக்கு அப்புறமாவது விவரமா இருந்துக்கறேன்”

அதற்குள் இளவரசனின் வீடு வந்து விடவே அவர்களின் பேச்சு அதற்குள் நின்று விட்டது.

“வாங்க வாங்க. அண்ணி சீக்கிரம் வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்.” என்றார் ராஜி.

லக்ஷ்மி கணவரை திரும்பி ஒரு முறை முறைத்து விட்டு “நீங்க வாங்க அண்ணி. நாம போய் வேலையை பார்க்கலாம்” என்று விட்டு உள்ளே சென்றார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் ஜோதியும் அபியும் வந்து விட்டார்கள்.

“வா வா ஜோதி. என்ன உன் வீட்டுக்காரர் வரலையா”

“இல்ல அத்தை. அவருக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்காம். அதான் அவர் வரலை. வேலை முடிஞ்சிட்டா வேணும்னா வரேன்னு சொன்னாரு”

“சரிம்மா. வேலை இருந்தா என்ன பண்ண முடியும். முடிஞ்சிட்டா கிளம்பி வந்துட சொல்லு”

“சரி அத்தை. எங்க உங்க பசங்க யாரையும் காணோம்” என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே சந்துரு வந்தான்.

“வா வா சந்துரு. உன்னை தான் கேட்டுகிட்டே இருந்தேன்”

“என் பக்தர்கள் என்னை எப்போதெல்லாம் தேடுகிறார்களோ அப்போதெல்லாம் நான் அவர்களுக்கு காட்சி அளிப்பேன்” என்று கையை ஆசிர்வதிப்பது போல் வைத்து கொண்டு சொன்னான்.

ஜோதியோ அவனை முறைத்துக் கொண்டிருக்க, அபியோ “அம்மா. நேத்து அந்த சாமி கதை போட்டாங்க இல்லை, அதுல அந்த சாமி பேசின டயலாக் பேசறாரும்மா இந்த அங்கிள்” என்றாள்.

“ஐயய்யோ. கண்டுபிடிச்சிடுச்சே இந்த குட்டி” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அபி “காபி காட்(CAT)” என்றாள்.

“என்ன” என்றான் சந்துரு.

“ஆமா. டிவில பேசினதை காபி அடிச்சி பேசறீங்க இல்ல, அதனால நீங்க காபி காட் தான்”

“ஏய் என்னையா அப்படி சொல்ற” என்று அவன் அபியை துரத்த ஆரம்பித்தான்.

அபி ஓடி சென்று எதிரில் வந்த இளவரசன் பின்னால் ஒளிந்துக் கொண்டு “அங்கிள் அங்கிள் காப்பாத்துங்க” என்றாள்.

அங்கு நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டே வந்ததால் அவன் முகத்திலும் புன்னகை அரும்பியிருந்தது.

அபியை தூக்கி கொண்டான்.

லக்ஷ்மி இளவரசனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தார்.

அவனால் நம்ப முடியாமல் இருந்தாலும் ஏதும் சொல்லாமல் வாங்கி கொண்டான். அவரும் புன்னகையுடனே சென்று விட்டார்.

“அண்ணா அந்த குட்டியை என் கிட்ட கொடுங்க. அது என்னை காபி காட்னு சொல்லுது. என் கிட்ட மட்டும் குடுங்க. அதை என்ன பண்றேன்னு பாருங்க”

“ஐயய்யோ அங்கிள். என்னை கீழே விட்டுடாதீங்க. நான் உங்களுக்கு சாக்லேட் வாங்கி தரேன். ப்ளீஸ்” என்றாள் அழகாக கண்ணை சுருக்கி கொண்டு.

இளவரசன் அவள் செய்வதை ரசித்து பார்த்து “ஓ அப்படியா. நீங்க அவ்வளவு பெரிய மனுஷியா. இதுக்குள்ள லஞ்சம் கொடுக்க ஆரம்பிச்சிட்டீங்களா” என்றான்.

“ப்ளீஸ் அங்கிள். கீழே மட்டும் விட்டுடாதீங்க. ப்ளீஸ்” என்றாள்.

“சரி டா. நீங்க இவ்வளவு ரெக்வஸ்ட் பண்ணி கேட்கும் போது நான் எப்படி விடுவேன். விட மாட்டேன். ஓகே”

ராஜி தன் மகன் இயல்பாக பேசுவதையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

எதேர்ச்சையாக தன் தாயை பார்த்த இளவரசனால் அவன் புன்னகையை தொடரவும் இயலாமல் முகத்தை கடினமாக்கவும் இயலாமல் ஒரு நிமிடம் தவித்து பின்பு பார்வையை வேறு புறம் திருப்பினான்.

அதற்குள் இனியா வீட்டிற்குள் நுழைந்தாள்.

“சித்தி” என்று கத்தினாள் அபி.

இனியாவின் பார்வை அபியை தொடர்ந்து அவளை தூக்கி வைத்திருந்த இளவரசன் மேல் படிந்தது.

அவனும் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு வேறு பக்கம் பார்த்தான்.

பின்பு அபியை கீழே இறக்கி விட்டு விட்டு, தன் அறைக்கு செல்ல எத்தனித்தவனை லக்ஷ்மி தான் “இருப்பா. எங்க போற. ஐயர் இப்ப வந்துடுவாரு. நீ தானே எல்லாம் பண்ணணும்” என்றார்.

அவனும் “சரிங்க அத்தை” என்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.