(Reading time: 11 - 21 minutes)

06. காற்றாக நான் வருவேன் - Anna Sweety

நீங்க எப்ப வெளிய போனீங்க  சுஜநி..? சொல்லாம போய்டீங்களா?...”

பரிதவிப்புடன் கேட்ட தயனியை வினோதமாக பார்த்தாள் சுஜநிஷா.

“நாங்க ரெண்டு பேரும் நைட் தூங்க போகும் முன்னால உங்கட்ட சொல்லிட்டுதானேமா போனோம்..” ப்ரியத்தம்தான் பதில் சொன்னான். அவன் முகத்தில் ஆறுதலும் கேள்வி குறியும்.

Katraga naan varuven

பீதியின் உச்சத்திற்குபோன தயனியின் இதயம் அங்கேயே நின்றது.

அப்படியானால் நேர்று இரவு இவளுடன் இருந்தது யார்? ஒரு நறுமணம் நாசியை உரசி சென்றது. லாவண்டர் பெர்ஃப்யூம். எமிலியினுடையது. தொடர்ந்தது துர்நாற்றம்.

எமிலி!! அது இங்கேதான் இருக்கிறதா????

சட்டென ஒரு சிந்தனை கீற்று. இந்த சுஜநியும் ப்ரியத்தமும் மனிதர்கள்தானா? இல்லை இதுவும்????

மிரண்டு போனாள்.

“பயந்துட்டீங்களா?” சுஜநி இவளை நோக்கி ஆறுதலாக கை நீட்ட அதிர்ந்து விலகினாள். சுற்றிலும் கண்களை ஓடவிட்டாள்

இவளறைக்கு முன்பிருந்த சிறு லான்ஞ்சிலும் அறையை ஒட்டி இறங்கிய படிகளையும் மட்டுமாய் சூழ்ந்திருந்தது வெளிச்சம். உபயம் ஒற்றை மின் விளக்கு. மற்றபடி எங்கும் இருள் மயம். மயான அமைதி.

கொலுசு சத்தம். சல்..சல்

“என்னாச்சு தயனி?” நெருங்கி வந்து மீண்டுமாய் கேட்டாள் சுஜநிஷா.

வெளிறி நடுங்கிய தயனி படிபக்கமாக விலகினாள். “வே...வேண்டாம்” முகம் ரத்த சிவப்பு கொள்ள கொட்டிய வியர்வைக்கு மத்தியில், பயத்தில் அலறிவிடாது இருக்க தன் வாயை கையால் பொத்தினாள் பெண்.

“என்ன நீங்க..?” என்றபடி வந்த  சுஜநியின் அடுத்த எட்டில் பயத்தில் விலகிய தயனி கால் தடுமாறி படிகட்டில் உருண்டு கொண்டிருந்தாள். “அப்..................பா”!!!!!

ஐயோ தன்னு குட்டி...” என்று பரிதபித்தபடி மேகமாய் சூழ்ந்து அவளுடன் பயணித்தது ஒரு உணர்வு. எமிலி அன்பாய் அழைக்கும் விதம் அது.

மயங்கிபோனாள் தயனி.

மீண்டும் விழிக்கும்போது மருத்துவமனை படுக்கையில் இருந்தாள் மங்கை நல்லாள். மண்டையில் ஒரு புது கட்டு.

கஷ்டபட்டு விழித்து பார்த்தால் எதிரே ஒரு வழுக்கை தலை முதியவர் பாசமும் கனிவுமாய் பார்த்துக்கொண்டிருந்தார்.

“என்னமா....இப்ப எப்படி இருக்க? பிரவாயில்லையா...?” தந்தை பாசம் வழிந்தது அவர் குரலில்.

“ம்...நா...நான் நல்லாருக்கேன்” மரியாதைக்காகவாவது பதில் சொல்ல வேண்டுமே! சொன்னாள். ஆனால் அவர் யார் என்று புரியவில்லை இவளுக்கு. எங்கோ பார்த்த ஞாபகமும் இருக்கின்றது. எங்கே பார்த்தாள்??

“நான் நிகரோட அப்பாமா....நீ என்னை பார்த்ததில்ல...அவனுக்கு அங்க அவசர வேலை..எப்படியும் நாளைக்குள்ள வந்திருவான்.....எனக்கு மனசு கேட்கலை...அதான் நான்...முன்னாலே வந்துட்டேன்....அருகிலிருந்த மேஜைமேலிருந்து மென் பிங்க் நிற ரோஜா பொக்கே ஒன்றை எடுத்து இவளிடமாக நீட்டினார்.”

ஓ...அபியோட அப்பாவா?

“ப்ரைஸ் த லாட் அங்கிள்” சிரத்தையுடன் கை கூப்பினாள்.

கோபம், சிடுசிடுப்பு, வெறுப்பு எல்லாம் வந்தது அவர் முகத்தில். வேகமாக வெளியே போய்விட்டார்.

கோபமா? ஏன்?

மீண்டும் சில நிமிடங்களில் திரும்பி வந்தார்.

“இத்தனைக்கும் பிறகும் அந்த கடவுளை நம்புறியா நீ?  முட்டாளாம்மா நீ?....அந்த ராட்சசி....அதான் உன் அத்தை உன்னை என்ன பாடுபடுத்திட்டா?.....அப்ப இந்த கடவுள் எங்கபோனாராம்? சரி அதவிடு.......சாப்டிரியாமா?”

இதுக்குதான் இவ்வளவு கோபமா? அத்தை படுத்தியபோது இவர் எங்கே போனாராம்? யோசனையாய் பார்த்தாள்.

 “ நீங்க எங்க இருந்தீங்க அங்கிள்? நான் உங்கள பார்த்ததே இல்லையே?” குறை சொல்லும் தொனி குரலில் வராமல் பார்த்துகொண்டாள் தயனி.

“அங்கதான்மா இருந்தேன்...அவ..அந்த ராட்சசி என்ன ரூமில பூட்டிவச்சுட்டா”

“??????????????”  தயனி அதிர்ந்தே போனாள்.

“அவ அப்படித்தாம்மா...பாவம் அவளால நீயும் நிகரும்தான் ரொம்ப கஷ்டபடுறீங்க...இப்ப அவன் வந்துதான் என்ன திறந்துவிட்டான்....அங்க லீகல் இஷ்யூ ஆகிட்டுது....எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்திடுவான்....அவன் கூட வரதாதான் இருந்தேன்....உனக்கு இப்படின்னு கேள்விபட்டதும்.....மனசு கேட்க்கல...அதான் முன்னமே வந்து இரண்டு வார்த்தை ஆறுதலா சொல்லலாமேன்னு....மன்னிச்சுகோம்மா.....உனக்கு எந்த உதவியும் பண்ணாம இருந்துட்டேன்....இந்த கையாலாகாத மாமனாரை நிகர் அப்பாங்கிற ஒரே காரணத்துக்காகவாவது மன்னிச்சிடு...ப்ளீஸ்..”

“பரவாயில்லை அங்கிள்...” முகத்துக்கு நேரே மன்னிப்பு கேட்பவரிடம் வேறு என்ன சொல்ல? ஆனாலும் ஆண்களுக்கு அத்தனை வகையிலும் உதவியாக இருக்கும் அந்த நாட்டில் ஒரு ஆணை ஒரு பெண் எப்படி சிறை செய்ய முடிந்தது? வாய்விட்டு கேட்க கூடிய உறவு முறையில் அவர் இல்லையே!

“நீ என்ன நினைக்கன்னு புரியுதுமா...அவ ஒரு பெரிய சாலகாரி....அவளால எல்லாம் முடியும்.....அதான் அவட்ட இருந்து உன்னை காப்பாத்ததான் பறந்து வந்தேன்....அவ உன்ட்ட வர்றதாதான் இருக்கா...அத தடுக்கதான் நா...நானும் எ....எமிலியும் வ..வந்தோம்”.

பாசமும் பதவிசுமாய் பேசிக்கொண்டிருந்தவரின் குரல் கடைசி வரியில் அமனுஷ்யத்தை அடைந்தது.

எமிலியா???, விபரீதம் உறைக்க துணைவரமாட்டேன் என்ற உடலை தூக்கிகொண்டு ஓட துடித்தாள் தயனி.

எதிரிலிருந்தவரின் முடியற்ற வழுக்கையான உச்சந்தலையிலிருந்து வழிய தொடங்கியது கரு நிற ரத்தம். அவர் பார்வை நிலை குத்த, கருவிழி காணாமல் போனது.

ப...பயபடாதே.....எ..என்னை....பார்த்து....ஆஆனானா சொ...சொன்ன்ன்.....னனததத கே...கேளு...அவவவ.........வே....வேண்ண்.....டாடாம்ம்......”

பேச பேச வழிந்த ரத்தம் ஊற்றாகி கொட்ட மணல் சிற்பம் இடிந்து விழுவது போல் உச்சந்தலையிலிருந்து சரிந்து கலைந்து விழுந்தார் அவர். அது????

 மிஞ்சியது கைபிடி அளவு சாம்பல். அந்த சாம்பல் மீதும் சிறு காற்று தொட்டு சுழன்று அதை அள்ளிகொண்டு போனது சுவர் வழியாக.

அலறினாள் தயனி. ஐயோயோயோயோ..........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ரு கைகளையும் தன் காதுகளின் மேல் வைத்தவாறு மெத்தையிலிருந்து துடித்தவாறு அவள் அலறிய அலறலில் சுஜனி, ப்ரியத்தம் மற்றும் சில நர்ஸ்கள் அங்கு ஆஜர்.

இவங்களையாவது நம்பலாமா? இல்லை இதுவும் ஏதாவது??? இன்னும் பயபட தெம்பில்லை தெய்வமே! சோர்ந்து போனாள்.

ஏற்கனவே முழுவதும் குணமாகியிறாத உடல், தொடர்ந்த மன உளைச்சல், நடந்தவிழா, தொடரும் விபரீதங்கள், அருகிலில்லாத அபிஷேக்...அமைதியாக சுருண்டாள் தயனி படுக்கை மேலே.

மனது அபிஷேக்கின் மடி தேடி அலைந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.