(Reading time: 8 - 15 minutes)

01. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

தொலைகாட்சி நேயர்கள் அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கம்.  இன்னைக்கு நாம பாக்கப் போறது நம்ம நாட்டுல பெண்கள் எப்படி எல்லாம் திருமணத்தால் ஏமாத்தப் படறாங்கன்னுதான்.   கல்யாணத்துக்கு அப்பறம் சில பெண்கள் தங்கள் புகுந்த வீட்டால் ஏகப்பட்ட இன்னல்களுக்கு ஆளாகறாங்க.  காலம் காலமா கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு அதெல்லாம் அன்றாடம் நடக்கற நிகழ்ச்சியா ஆகிடுச்சு.  கல்யாணத்துக்கு அப்பறமாதான் புகுந்த வீட்டால பிரச்சனை வருதுன்னு நாம நினைக்கிறோம்.  ஆனா நாம இன்னைக்குப் பார்க்க போற நிகழ்ச்சி அப்படி இல்லைன்னு சொல்லுது.  ஒரு ஒரு அம்மாவும், அப்பாவும் ஏகப்பட்ட கஷ்டங்களுக்கு இடையிலதான் தன்னோட பெண்ணிற்கு திருமணம் செய்யறாங்க.  நிச்சயம் எல்லாம் முடிஞ்சு, கிட்டத்தட்ட கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருக்கற நிலைல ஒரு பெண்ணிற்கு திருமணம் நின்றால் அந்தக் குடும்பம் என்னப் பாடுபடும்.  அப்படி கல்யாணம் நின்ன ஒரு பெண்ணைத்தான் நாம இன்னைக்கு சந்திக்கப் போகிறோம்.  இந்தப் பெண்ணின் பெயர் விமலா” 

“வாம்மா விமலா.  வணக்கம்.  நீங்கதானே எங்க நிகழ்ச்சிக்கு தொலைபேசி மூலமா தொடர்பு கொண்டு பேசினது”

“வணக்கம் மேடம்.  ஆமாம் நான்தான் பேசினேன் மேடம்.  எங்க வீட்டுல கூட இதைப் பெரிசு பண்ண வேண்டாம்னுதான் சொன்னாங்க.  ஆனால் எனக்குத்தான் விட மனசில்லை”

Vidiyalukkillai thooram“ரொம்ப நல்ல வேலை பண்ணி இருக்கீங்க. அதே சமயம் சரியான இடத்துக்கும் வந்திருக்கீங்க.  உங்களுக்கு ஞாயம் கிடைக்கற வரை நாங்களும் விட மாட்டோம்.  எதைப் பத்தியும் கவலைப்படாம, யாருக்கும் பயப்படாம உங்களுக்கு நடந்த அநியாயத்தை மட்டும் சொல்லுங்க”

“யாருக்கும் பயப்பட மாட்டேன் மேடம்.  இந்த நிகழ்ச்சி மூலமா நீங்க நிறைய பேருக்கு நல்லது பண்ணி இருக்கீங்க, அந்த நம்பிக்கைலதான் நான் வந்திருக்கேன்”

“கண்டிப்பாமா உன் நம்பிக்கை வீண் போகாது.  இப்போ உங்களைப் பத்தி சொல்லுங்க.  நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க”

“நான் BE முடிச்சுட்டு ‘XXX’ சாப்ட்வேர் கம்பெனில ப்ரோக்ராம் அனலிஸ்ட்டா இருக்கேன் மேடம்”

“எங்க இங்க சென்னைலதான் வேலை செய்யறீங்களா? உங்க குடும்பத்துல எத்தனை பேர்?”

“ஆமாம் மேடம், OMRலதான் ஆபீஸ்.  நான், என் தங்கை, அப்பா, அம்மா நாங்க நாலு பேர்தான் மேடம்”

“ஹ்ம்ம் சரி.  இப்போ உங்ககூட உங்க குடும்பத்துல இருந்து யாராவது வந்து இருக்காங்களா?”

“இல்லை மேடம், அந்த பிரச்சனை நடந்த அப்பறமா, அப்பாக்கு கொஞ்சம் உடம்பு முடியாமப் போச்சு.  அம்மா அவங்களை கவனிச்சுக்கறாங்க.  தங்கை ரொம்ப சின்னப் பொண்ணு.  அதனால நான் மட்டும்தான் வந்திருக்கேன்”

“ஓ சாரிம்மா.  சரி, பிரச்சனைக்கு வருவோம். உங்க கல்யாணம் ஏதோ நிச்சயம் வரை வந்து அப்படியே நின்னு போச்சுன்னு போன்ல சொல்லி இருந்தீங்க.  என்னாச்சு, எப்படி நின்னுதுன்னு கொஞ்சம் விவரமா சொல்ல முடியுமா”

“ஓகே மேடம்.  என்னோட கல்யாணம் அம்மா,அப்பா பார்த்து நிச்சயம் பண்ணின கல்யாணம்தான் மேடம்.  அவங்க ஊர் காரைக்குடி.  எனக்கு பார்த்த பையன் சென்னைலதான் வேலை பண்றாங்க. அவரோட அம்மா, அப்பாலாம் ஊர்லதான் இருக்காங்க.  பொண்ணு பார்த்துட்டு போன அன்னிலேர்ந்து நிச்சயம் வரைக்கும் அந்தப் பையனோட அம்மாதான் எங்க கிட்ட அடிக்கடி போன் பண்ணி பேசி இருக்காங்க.  நானும், அவரும் ஒரே ஒரு வாட்டிதான் பேசி இருக்கோம்.   அந்த அம்மாவும் எப்பவும் அதிகாரமாதான் பேசுவாங்க”

“ஏம்மா உனக்கு அவங்க பேசறது முதல்லையே பிடிக்கலைன்னா அப்போவே உங்க பெற்றோர்கள் கிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை தடுத்திருக்கலாமே,  நிச்சயம் வரை வந்திருக்காது இல்லை’

“நான் அவங்க கிட்ட பேசின முதல் வாட்டியே அம்மாக்கிட்ட சொன்னேன் மேடம்.  அம்மாதான் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.  சில பேர் பேசறது தடாலடியா இருந்தாலும், மனசுல ஒண்ணும் வச்சிருக்க மாட்டாங்க.  இப்போ உங்க அத்தைலாம் இல்லையா.  அவங்க பேசாததா.  நீ எப்படியும் அவரோட சென்னைல  தனிக்குடித்தனம்தான பண்ணப் போற அப்பறம என்னன்னு சொன்னாங்க.  நானும் சரின்னு விட்டுட்டேன்”

“ஓ சரி,  அவங்க பொண்ணு பார்த்துட்டு போனதுக்கும், உங்க நிச்சயதார்த்தத்துக்கும் கிட்டத்தட்ட நாலு மாசம் இருந்திருக்கு.  அது வரைக்கும் அந்தப்  பையன் ஒரு வாட்டிக்கூட உங்க கூட பேசலையா’

“ஒரே ஒரு வாட்டி பேசினாங்க மேடம்.  அப்போக் கூட என்னோட வேலை, சம்பளம் இதைப் பத்தி எல்லாம் கேட்டுட்டு வச்சுட்டாங்க”

“ஓ சரி,  நிச்சயம் முடிஞ்சு என்ன ஆச்சு?”

“நிச்சயம் அன்னைக்கும் அவங்க அம்மா, சொந்தக்காரங்க இவங்க கூடலாம்தான் அவர் பேசிட்டு இருந்தார்.  என்னோட பேசவே இல்லை.  அவங்க அம்மா, சொந்தக்காரங்க எல்லாம் ஏகப்பட்ட கெடுபிடி பண்ணிட்டு இருந்தாங்க.  நாங்க வச்ச சீர் எல்லாம் சரியே இல்லைன்னு எதுல பாரு குத்தம் சொல்லிட்டு இருந்தாங்க.  எங்க சைடுலேர்ந்து நாங்க எதுவுமே பேசலை.  நாம பேச, அவங்க பேச சண்டைதான் வரும் அதனால சும்மா இருக்க சொல்லி அப்பா சொல்லிட்டாங்க.  அம்மாவும் அமைதியா அவங்க சொல்றதுக்கெல்லாம் தலை ஆட்டிட்டு பேசாம விட்டுட்டாங்க”

“நிச்சயம் முடிஞ்சு உங்க அம்மா, அப்பா அவங்க கிட்ட பேசினாங்களா, இல்லை அவங்க போன் பண்ணினாங்களா?  நிச்சயத்துக்கப்பறம் உங்க கல்யாணத்துக்கு ரெண்டு மாசம் டைம் இருந்தது இல்லை”

“இல்லை மேடம் அவங்க உடனே பேசலை, நிச்சயம் முடிஞ்சு ஒரு மாசம் கழிச்சு பேசினாங்க.  அவங்க சொந்தக்காரங்க ஒரு நூறு பேர் வருவாங்க.  எல்லாரும் தங்க சத்திரம் பக்கத்துல ரூம்ஸ் போடணும், அதுவும் கொஞ்சகூட நியாயமே இல்லாம கிட்டத்தட்ட நாப்பது ரூம்ஸ் புக் பண்ண சொன்னாங்க.  அதுவும் அவங்க சொன்ன ஹோட்டல்ல ரூம் வாடகை ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ரெண்டாயிரம் ரூபா.  அது தவிர முதல்ல அவங்க பேசி இருந்தது நூறு பவுன் நகையும்,  அம்பது கிலோ வெள்ளியும்தான்.  இப்போ போன் பண்ணும்போது வைர நகை செட் இன்னும் ஒண்ணு அதிகமாப் பண்ணனும், அது தவிர எங்களுக்கு குடம் வைக்கற முறை உண்டு, அதனால பெரிய சைஸ்ல ஒரு குடம் வாங்கிடுங்கன்னு சொல்லிட்டாங்க.  அதுவும் தவிர பையன் இப்போ வண்டிதான் வச்சிருக்கான்.  அவன் ஆபீஸ் போக வர ஒரு கார் வாங்கிக் கொடுத்துடுங்கன்னு அது வேற சேர்த்துக்கிட்டாங்க.”

“ஓ என்ன அநியாயமா இருக்கு.  எத்தனை யுகம் ஆனாலும் நம்ம நாட்டுல இந்த வரதட்சணை வாங்கறது மட்டும் குறையாது போல இருக்கு.  அதுவும் இவங்களுக்கு பார்த்திருக்கற பையன் நல்லா படிச்சு பெரிய வேலைல இருக்கான்.  அவனே கை நிறைய சம்பாதிக்கறான்.  அப்படியும் இந்தப் பொண்ணு வீட்டுல இருந்து வாங்கனும்ன்னு நினைக்கறாங்களே, இவங்கள்லாம் மனுஷங்கதானா. உங்கப்பா அவங்க கேட்டதுக்கு என்ன சொன்னாங்க”

“எங்க அப்பா திடீர்ன்னு கேட்டா என்ன பண்ண.  கிட்டத்தட்ட ஏழெட்டு லட்சம் இதெல்லாம் பண்ண ஆகும்.  அதனால ரூம்ஸ் மட்டும் வேணா புக் பண்றோம்.  மத்தது எல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டாங்க.  அதுக்கு அந்த அம்மா உடனே, அப்போ நாம கல்யாணத்தை நிறுத்திடலாம், எங்களுக்கு இதுக்கு மேல உங்க சம்மந்தத்தை தொடறரதுல விருப்பம் இல்லைன்னு பட்டுன்னு சொல்லிட்டாங்க.  எங்க அப்பாவும், அம்மாவும் எத்தனையோ பேசியும், கெஞ்சிக் கேட்டும் அவங்க ஒத்துக்கலை.  அவங்க கேட்டது எல்லாத்துக்கும் சரின்னா மேல பேசுங்கன்னு சொல்லிட்டாங்க.  அம்மாவும், அப்பாவும் அதுக்கு மேல என்ன பண்ண அப்படின்னு தெரியாம வந்துட்டாங்க.  மறுநாளே இந்தக் கல்யாணம் நின்னுப் போனதா அவங்க சொந்தக்காரங்களுக்கெல்லாம் போன் பண்ணி சொல்லிட்டாங்க.  எங்க சொந்தக்காரங்களுக்கும் விஷயம் தெரிஞ்சு ஒரு ஒருத்தரா போன் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.  திடீர்ன்னு கல்யாணம் நின்னு போச்சுன்னா, எங்க  மேலதான் ஏதோ தப்புப் போலன்னு கண்டபடி பேச ஆரம்பிச்சுட்டாங்க.  அவங்க பேசறத கேட்ட அப்பாக்கு அன்னைக்கு ராத்திரியே உடம்பு முடியாமப் போயிடுச்சு”

அனைத்தையும் சொல்லிவிட்டு விமலா அழ ஆரம்பிக்க, தொகுப்பாளர் அவளை ஆருதல் படுத்துகிறார்.  

“நீ பேசறதைக் கேக்கவே கஷ்டமா இருக்குமா.  சரிம்மா, இப்போ எங்க கிட்ட இருந்து எந்த விதமான உதவி நீ எதிர்பார்க்கற”

“மேடம் நான் மெயினா இங்க வந்த ரீசன் இந்த மாதிரி ஆளுங்களும் இருக்காங்க அப்படின்னு எல்லாருக்கும் தெரியனும்ன்னுதான்.  அப்பறம் நிச்சயம் நடந்து, அதுக்கப்பறம் இந்தக் கல்யாணம் நின்னதால எங்க சொந்தக்காரங்க, நண்பர்கள் மத்தில ரொம்ப அவமானமா போச்சு.  அதுக்கு அவங்க வீட்டு ஆளுங்க பகிரங்கமா மீடியா வழியா மன்னிப்பு கேட்கணும்.  அதே மாதிரி இந்த கல்யாணம் பண்ண முடிவு பண்ணினதுல இருந்து நிச்சயம் வரை கிட்டத்தட்ட ஒரு மூணு லட்சம் வரை எங்க அப்பா செலவு பண்ணி இருக்கார்.  அது எல்லாத்தையும் அவங்க திருப்பி தரணும்”

“நீங்க இது பத்தி போலீஸ்ல ஏதானும் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கீங்களா?”

“இல்லை மேடம்.  போலீஸ் கிட்ட போனா, அவங்க ஆதாரம் அது இதுன்னு இழுத்து அடிப்பாங்க.  இப்போ அப்பா உடம்பும் சரி இல்லாத நிலைல, அதுக்கெல்லாம் அலைய முடியாது.  ரெண்டாவது, நாம கல்யாணத்துக்கு செலவழிக்கற பைசாக்கெல்லாம் ரசீதா மேடம் வாங்கி வைக்க முடியும், அவங்களுக்கு நாங்க செலவு செய்த பணத்துக்கு ஆதாரம் அப்படின்னு ஒண்ணு எங்க கிட்ட இல்லை மேடம்.  ஆனால் போலீஸ் முதல்ல அதைத் தானே கேப்பாங்க”

“ஹ்ம்ம் நீங்க சொல்றதும் ரொம்ப சரிதான்.  கண்டிப்பா நீங்க சொல்ற எல்லாத்தையும் அவங்க குடும்பத்துக்கிட்ட இருந்து உங்களுக்கு நாங்க வாங்கி தரோம் விமலா.  கவலைப்படாதீங்க.  நேயர்களே, இந்தப் பொண்ணு பேசப் பேச இப்படிக் கூட ஒரு குடும்பம் இருக்குமா அப்படின்னு எனக்கு கொதிக்குது.  நாம இப்போ இந்தப் பொண்ணுக்கு நிச்சயம் பண்ணி இருந்த பையன் ஸ்ரீதரை கூப்பிட்டு பேசலாம்”

தொடரும்

Episode # 02

{kunena_discuss:857} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.