(Reading time: 30 - 59 minutes)

" னா , பெத்த மக நீ கூட இருக்குற மாதிரி ஆகுமா ? ஏன் இப்படி அவங்களை பிரிஞ்சு இருக்க ? யாருக்கு இந்த தண்டனை ?"

" தண்டனையா ? தண்டனை கொடுக்க எனக்கு என்ன தகுதி இருக்கு மாமா ? உங்க எல்லாருடைய சந்தோஷத்தை கெடுத்ததுக்காக இது நானே தேடிக்கிட்ட முடிவு .."

" நீ ஒரு தப்பை சரி படுத்துறேன்னு சொல்லி மறுபடியும் தப்பு பண்ணுறன்னு தோணுது கவிதா " என்றார் மீரா ...

" அத்தை .. !"

" உண்மைதான் கவிதா .. உன் கல்யாண வாழ்க்கையை பத்தியோ , இல்ல அடுத்து என்ன செய்ய போறன்னு நான் கேட்க போறது இல்லை .. என் மகனை பற்றி கூட உன்கிட்ட நான் பேசபோறது இல்லை தான் .. என்னுடைய கவலை உன்னை பெத்தவங்க பற்றிதான் .. உங்க அளவுக்கு எங்களுக்கு இளமையும் இல்ல வயசும் இல்ல கவிதா .. இன்னைக்கு கண் முன்னாடி இருப்போம் .. நாளைக்கே எங்க வாழ்கை பயணம் முடிஞ்சு போயிடலாம் "

" அத்தை ..!!"

" நான் எதார்த்தத்தை சொல்லுறேன் கவிதா .. கொஞ்சம் கூட நிரந்திரமில்லா இந்த வாழ்க்கையில் பிரிவு ஒரு சாபம் தான் .. ! நீ உன் பெத்தவங்களுக்கு ஒரே பொண்ணு .. இப்படி உன் அடையாளத்தை மறைச்சு , கைக்குழந்தையோடு நீ இப்படி இருக்குற விஷயத்தை கூட நீ மறைச்சு இருந்திருக்க .. உன் கணவர் தவறிய நேரம் உன் அம்மா ,அப்பா திருப்பதிக்கு போயிருந்தாங்க .. அதனால் அவங்களுக்கு இது பத்தி எதுவும் தெரியாமல் போய்விட்டது .. அவங்க திரும்பி வந்தும் இந்த விஷயம் அவங்களுக்கு தெரியாது .. நீ உன் புகுந்தவீட்டுக்கு போகும்போதே உன் அம்மா அப்பா அங்க வரகூடாதுன்னு சத்தியம் வாங்கி வெச்சு இருந்திருக்க .. உன்னுடைய சரியானவிலாசம் கூட அவங்ககிட்ட இல்லை .. உன் மகனை நான் உன் கண்களுக்கு தெரியாம மறைச்சு வெச்சா நீ தாங்குவியா ? அப்படிதானே அவங்களுக்கும் இருக்கும் ?" யாருக்கும் தெரியாது என்று மறைத்து வைத்திருந்த செய்தி எல்லாம் இவருக்கு எப்படி தெரிந்தது என்று விழித்தாள்  அவள் .

" இதெல்லாம் உங்களுக்கு ?"

" ரெண்டு வாரம் முன்னாடி தேனீக்கு  போனபோது, கிரிதரன் தான் உன் அம்மா, அப்பாவை பார்த்து இருக்கான் .. ஜீவனே இல்லாத ஒரு  வாழ்க்கையை அவங்க வாழ்ந்துகிட்டு இருக்காங்க ..உன் கணவர் தவறிய செய்தி அவங்களுக்கு தெரியாதுன்னு கிரிதரன் பேசினதை வெச்சே தெரிந்துகொண்டான் .."

" அப்படின்னா, இப்போ அவங்களுக்கு ?"

" அவன் சொல்லலை ... என்னதான் இருந்தாலும் இது உன் வாழ்க்கை விஷயம் .. அவன் எப்படி உரிமை எடுத்து சொல்ல முடியும் ?" என்றார் மீரா .. எப்போதும் கோடுபோட்டு தனித்து இருப்பவள்தான் அவள் .. ஆனால் தானே  இப்படி ஒதுக்கபடுவது அவளுக்கு வருத்தமாய் இருந்தது .. இருப்பினும் அவள் விலகி போகும்போது மற்றவர்களுக்கும் எப்படி இருக்கும் என அவள் உணரவேண்டும் என்பதற்காகவே கடுமையாய் பேசினார் மீரா. இந்த குழப்பத்திலும் அவள் மனதிற்குள் ஆறுதல் அளிக்கும்படி ஒரு செய்தி மட்டும் அவள் மனதில் நின்றது .. ஆக, கிரிதரன் அவளை தொடர்ந்து இருக்கிறான் .. அவளை பற்றிய செய்திகள் அவனுக்கு தெரிந்து இருக்கிறது . இதில் சந்தோஷப்பட எதுவும் இல்லைதான் .. ஆனால் ஏனோ அவன் பார்வையில் தான் இருந்திருக்கிறோம் என்ற ஆறுதல் தோன்றியது அவளுக்கு . 

" இது பாரு கவிதா .. நீ என் மகனுக்கு மனைவி ஆகலைன்னாலும் எனக்கு உன் மீது அக்கறை இருக்கு.. இதுவரை போனது போகட்டும் ..இனியும் நீ இப்படி இருக்குறத என்னாலே ஏற்றுகொள்ள முடியாது .. இன்னும் ஒரு வாரத்தில் தேனீக்கு  போயி அப்பா அம்மாவை நீ பார்க்கணும் .. இல்லன்னா அதற்கு அடுத்த வாரம் நானே அவங்களை இங்கு வரவழைப்பேன் " என்று உறுதியாய் கூறினார் அவர் .. அவரது கண்டிப்பான குரலில் அவள் தடுமாறவோ அல்லது கோபப்படவோ இல்லை .. நீண்ட நாட்களுக்கு பிறகு அக்கறை கொண்ட கோபங்களை அவள் இப்போதுதான் எதிர்கொள்கிறாள் ..முதலில் வருண் , இப்போது மீராவதி ...

யோசித்து பார்த்தாள்  அவள் நிதர்சனத்தை .. அவர் கூறுவதும் உண்மைதானே ? போதும் இந்த தண்டனை காலங்கள் .. பெற்றோரின் தோள்  சாய்ந்து துயரங்களை இறக்கி விட்டால்தான் என்ன ? தனக்காக இல்லை என்றாலும் கூட, ஜீவாவிற்காக இதை செய்துதான் ஆகவேண்டும் .. அவனுக்கு சில உறவுகள் வேண்டுமல்லவா ? தன் மகனின் வாரிசாக இல்லாதபோதே மனம் நிறைய அன்பை வெளிபடுத்தினர் மீராவும் , கண்ணனும் .. அப்படித்தானே தனது பெற்றோருக்கும் இருக்கும் ? ஜீவா அரவிந்திற்கு மட்டுமா மகன் ? தனக்கும் தானே ? ஏதோ பெரிய பாரம் நீங்கியது போல இருந்தது அவளுக்கு .

" கண்டிப்பா போகிறேன் அத்தை " என்றாள்  அவள் .. அதுவரை பார்வையாளராய் இருந்த வானதியை அப்போதுதான் பார்த்தாள் .. கவிமதுரா விளக்கம் அளிக்குமுன்னே ,

" நீங்க எதுவும் சொல்ல வேணாம் அண்ணி .. இவங்க உங்கமேல உண்மையான அக்கறை உள்ளவங்கன்னு நான் புரிஞ்சுகிட்டேன் ..அந்த ஒரு அறிமுகம் எனக்கு போதும் " என்று உரைத்து மேலும் சூழ்நிலையை சுமூகமாக்கினாள்.. நொடிகள் நிமிடங்களாய் கரைந்தோட ராம், ஜானகி சந்தோஷ் அனைவரிடமும் இயல்பாய் பேச தொடங்கினாள்   கவிமதுரா ... ஒரு பிரச்சனை முடிந்த பெருமூச்சில் இருந்த வானதிக்கு தெரியாது , அவளது அன்பானவனுக்காக அடுத்த பிரச்சனை  தொடங்கி விட்டது என்று .. இதெயெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்தே ரசித்து கொண்டிருந்தான் கிரிதரன் .

அனைவரும் அங்கிருந்து புறப்பட எத்தனித்த நேரம், சாஹித்யாவிற்காக கார் கதவை திறந்து விட்டான் அருள், ட்ரைவர்  சீட்டில் அமர்ந்தபடி .. காரில் ஏறாமல் அவளோ , பின்சீட்டில் இருந்த பெற்றோரை பார்த்தாள் ..

" என்னம்மா ?" என்றார் ரவிராஜ் ..

" நான் சைந்தவி அக்கா கூட வரேன் ரவிப்பா "

" சந்தோஷ் கூட வர ஆசையா இருக்குன்னு உண்மைய சொல்லு டீ " என்று சிரித்தான் அருள் .. அதற்குள் சுமித்ரா

" இல்ல சத்யா ,ராத்திரி நேரமாச்சு .. இன்னைக்குதான் நாம சந்திச்சு இருக்கோம் .. இவ்வளவு வேகமா இருக்குறது தப்பு .. நீ இப்பவும் நம்ம வீட்டு பொண்ணுதான் " என்றார் வழக்கம் போல கறார் பேர்வழி முகத்தை காட்டி .. சலிப்பாய்  முகத்தை சுளித்தவள் தன் தந்தையை பார்த்தாள் ..

" அப்பா , என்மேல நம்பிக்கை இல்லையா ? இல்ல சந்தோஷ் குடும்பம் மேல நம்பிக்கை இல்லையா ? நம்பிக்கை இல்லாமல்தான் இன்னைக்கு இப்படி உறவாடி பேசினிங்களா  ? போகதேன்னு நீங்க சொல்லுங்க  அப்பா , நான் போகல " என்றாள்  வெடுக்கென ..

" ஆஹா , இப்படி நம்மை கோர்த்து விட்டுடாளே ... அம்மாவுக்கும் பொண்ணுக்கும்  நடுவில் மத்தளமாய் மாறுவதே எனக்கு வேலையாய்  போச்சு " என்று மனதிற்குள் சொன்னவர்,

" நீ போயிட்டு வா டா " என்றார்..

" தேங்க்ஸ் அப்பா .. " என்றவள் அருள் திறந்துவிட்ட கார் கதவை லேசாய் அறைந்து சாத்தினாள் ..

" என்னங்க இது ?" - சுமித்ரா ..

" அவ என்ன கேள்வி கேட்டான்னு நீயும் பார்த்துகிட்டு தானே இருந்த சுமி ? அவ கேள்வியில் ஏதும் தப்பு இருக்கா ? ரெண்டு காரும் ஒரே ரோட்டில் தானே போக போகுது .. அபப்டி  இருக்கும்போது ஏன் இப்படி சின்ன விஷயத்தை பெருசு பண்ணுற ? "

" அப்படி இல்லைங்க , சம்பந்தி என்ன நினைப்பாங்க ?"

" உன் பொண்ணு ஒரே பார்வையில் மனசை எடை போடுற ஆளு .. அவங்க தப்பா நினைக்கிற ஆளா இருந்திருந்தா அவ அங்க போகவே மாட்டா .. "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.