(Reading time: 12 - 24 minutes)

மனதோர மழைச்சாரல்... - 02 - வத்ஸலா

ஸ்டார்ட் கேமரா ! ஆக்ஷன்! இயக்குனரின் குரல் ஒலிக்க ஓடத்துவங்குகிறது கேமரா!

பாடலின் பின்னணி இசை ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

அவனுக்கு மிக நெருக்கமாக அவள். 'ரோஜா....ப்பூ.... ஏதாவது.... பேசுடா...' கிசுகிசுப்பாய் ஒலிக்கிறது அவன் குரல்.

Manathora mazhai charal

அவள் வெட்கத்துடன் சிரிக்க, அவன் சிரித்தபடியே அவள் கையிலிருந்து  குடையை பிடுங்கி தூக்கி எறிகிறான். பறக்கிறது குடை. மழை இருவரையும் நனைக்க, அவள் சிணுங்கி விலக, அவளை இழுத்து தன்னோடு சேர்த்து, ஒற்றை புருவம் உயர்த்தி கண் சிமிட்டுகிறான் சிமிட்டுகிறான் ரிஷி.

.துவங்குகிறது பாடல்......

மழை தேடி காத்திருந்தேன்...... காத்திருந்தேன்.......

மனம் தேடும் மழையானாய்...... மழையானாய்.....

அவனை கொஞ்சமாய் தள்ளி விட்டு அவள் விலக எத்தனித்து,  அவன் கைப்பிடியில் சுழன்று திரும்பி, அவனிடம் தஞ்சமாகி, அவன் கைகள் இடை வளைக்க, வெட்க குளிரில் அவள் நடுங்குவதை உணர்கிறான் அவன்.

கேமரா அவர்களை விழுங்கிக்கொண்டிருக்க.... பாடல் தொடர்கிறது...

அவள் கண்களில் சந்தோஷ சாரல். அவளது விழி ஈர்ப்பில் விழுந்துவிடாமல் இருக்க முயன்று முயன்று தோற்றுவிட்டிருந்தான் அவன்.

கரைந்தேனடி கண்களில்....

விழுந்தேனடி வெள்ளத்தில்....

மேகத்தில் நடப்பதை போன்றதொரு உணர்வில் இருவரும். அவன் கைகளுக்குள் அவள். பாடலுக்கு ஏற்றபடியான உதட்டசைவுடன், அவள் நெற்றி முட்டுகிறான் ரிஷி.

கரைசேர்ப்....

திடுக்கென்று விழித்துக்கொண்டான் ரிஷி. காரினுள் ஒலித்துக்கொண்டிருந்தது அந்த பாடல். இரண்டரை, மூன்று வருடங்களுக்கு முன்னால் அவன் நடித்த ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் அது.

அந்த பாடலும், பாடலென்ன???? அந்த படமே அவனது பொக்கிஷம்.!!!

அந்த பாடலின் ஒவ்வொரு அசைவையும் சிந்தாமல், சிதறாமல் மனதிற்குள் பொத்தி வைத்திருக்கிறான் அவன். இதோ கண் மூடிய நொடியில், கனவாக அதுவே மலர்கிறது.

மெலிதான ஒரு பெருமூச்சு அவனிடம். மெல்ல கண்மூடிக்கொள்கிறான். மறுபடி அந்த கனவுக்குள் நுழைந்து விட முடியுமா என்றொரு பேராசை. கிட்டவில்லை அந்த கனவு.  பாடல் காருக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

அந்த பாடலில் அவனுடன் கரைந்தவளின் முகம் அவன் கண்களுக்குள்.

'ரோஜாப்பூ... கொஞ்சம் கண்ணை திறந்துதான் பாரேன்....' பாடலின் இடையே ஒலிக்கிறது அவன் குரல். அந்த பாடலின் இடை இடையே ஒலிக்கும் அவனது குரலே, அந்த பாடலின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது.

'ரோஜாப்பூ...' அந்த படம் முழுவதும் அவளை அப்படிதான் அழைப்பான் அவன்.

ரோஜாப்பூதான் அவள்.!!! நிஜமாகவே ஒரு முள்ளில்லா ரோஜாதான் அவள்.!!! அவள் அவனுடைய முதல் கதாநாயகி.!!!

நடிக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லாத போதிலும், அவனுடன் மட்டும் சில படங்களில் நடித்தவள். அவனுக்காகவே அவனுக்கு மட்டுமே கதாநாயகியாக நடித்தவள் அவள்.

அவள் இயக்குனர் இந்திரஜித்தின் மகள்!!! இயக்குனர் இந்திரஜித் இவனது கலையுலக குரு!!! அவர் இல்லையென்றால் இவன் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது.!! அருமையான மனிதர் அவர்.!!!!

முன் சீட்டிலிருந்து திரும்பி பார்த்தான் சஞ்சீவ். 'என்னடா எழுந்துட்டியா அதுக்குள்ளே?' இன்னும் கொஞ்ச நேரம் கனவிலே டூயட் பாடுவேன்னு நினைச்சேன். அதுக்குத்தான் உன் பட பாட்டெல்லாம் போட சொன்னேன்'

ஜன்னலுக்கு வெளியில் பார்வையை திருப்பியபடியே ஏதோ அந்த பாடலில் நாட்டமே இல்லாதது போன்ற ஒரு முக பாவத்துடன் ''ரொம்ப முக்கியம்.!!!' தூக்கம் கெட்டுப்போச்சுடா டேய்.....' என்றான் ரிஷி.

இப்போதெல்லாம் பொய் எப்படி இவ்வளவு சுலபமாக வருகிறதோ? அவனுக்கே புரியவில்லை.!!!

நடிகனான பிறகு நடிப்பதை நிறுத்தவே முடியவில்லையோ அவனால்.???? எல்லாரிடமும், எப்போதும் ஏதாவது ஒரு காரணத்திற்காக நடிக்க வேண்டியதாகவே இருக்கிறது.

இதோ நடித்துக்கொண்டே இருக்கிறான்.!!!!! அவள் தனது மனதில் இல்லவே இல்லை என இந்த நிமிடம் அவள் உட்பட எல்லாரிடமும் நடித்துக்கொண்டே இருக்கிறான்.!!!!

கையை திருப்பி நேரம் பார்த்தான். மணி அதிகாலை மூன்றரை.

சூடா ஒரு காபி குடிக்கறியாடா? என்றபடியே பிளாஸ்க்கிலிருந்து சுடச்சுட காபியை ஒரு கோப்பையில் ஊற்றி ரிஷியை நோக்கி நீட்டினான் சஞ்சீவ்.

காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார் பரந்தாமன். சஞ்சீவ் இறங்க அவன் பின்னாலேயே இறங்கினான் ரிஷி.

அதிகமான வாகன போக்குவரத்து இல்லாமல் தேசிய நெடுஞ்சாலை கொஞ்சம் அமைதியாகவே இருந்தது. சாலையின் இரு புறத்திலும் மரங்கள்.

அப்படியே கொஞ்ச தூரம் நடந்திட்டு திரும்பலாமாடா? ரோட்டிலே நடந்து ரொம்ப நாள் ஆச்சு.

'எவனாவது பார்க்க போறான்டா' என்றான் ரிஷி.

'அதெல்லாம் எவனும் பார்க்க மாட்டான் நீ வா'

சில்லென்று வருடிய அதிகாலை நேர காற்றை அழாமாக ஸ்வாசித்தபடியே, கையில் இருந்த காபியை ருசித்துக்கொண்டு  நடந்தனர் இருவரும். சஞ்சீவின் கண்கள் மட்டும் ஒரு பாதுகாப்பு உணர்வுடன் அவ்வப்போது இங்குமங்கும் சுழன்று திரும்பிக்கொண்டிருந்தது.

சில அடிகள் தாண்டி ஒரு மரத்தின் பின்னாலிருந்து இவர்கள் வருவதை பார்த்தபடியே நின்றிருந்தனர் அந்த இரண்டு அடியாட்கள்.

நடந்தனர் இருவரும். 'சஞ்சா...' என்றான் ரிஷி மெல்ல. 'நான் என் கெஸ்ட் ஹவுசுக்கே போறேண்டா. உங்க வீட்டிலே கல்யாண வேலைகள் இருக்கும். நடுவிலே நான் இருந்தா சரியா வராது. தேவை இல்லாம யாராவது....'

'பச்... உன்னை ஈ.சி.ஆர். லே தனியா விட்டுட்டு என்னாலே இங்கே நிம்மதியா இருக்க முடியாது. ரிஷி. புரிஞ்சுக்கோடா. இந்த ஊரை விட்டு நீ திரும்ப போற வரைக்கும் என் கூடத்தான் இருக்கணும்.' அந்த மரத்திற்கு கொஞ்சம் அருகில் வந்துவிட்டிருந்தனர் இருவரும்.

'சரி. ஒண்ணு பண்ணலாம்.' என்றான் சஞ்சீவ். 'என்னோட திருவான்மியூர் கெஸ்ட் ஹவுஸ்லே இரு. அங்கே நீ ப்ரீயா இருக்கலாம். நான் நைட்லே உன் கூட வந்து இருக்கேன் சரியா?

ரிஷி பதில் சொல்வதற்குள் அந்த மரத்தின் பின்னாலிருந்து சட்டென வெளிப்பட்டு இவர்களை வழி மறித்தனர் அந்த அடியாட்கள்.

திடுக்கிட்டு பின்வாங்கினர் இருவரும். ஒரு முறை இருவரின் கண்களும் சந்தித்து திரும்பின.

டேய்... நம்ம எஸ். கே சார்டா என்றான் ஒருவன். சார் நான் உங்க பரம விசிறி சார்'

டேய்.... இது ஆர்.கே டா. இவன் எதுக்குடா இங்கே வந்தான்? ---- இது மற்றொருவன்.

சஞ்சீவ் ரிஷியின் கையை பற்றி மெல்ல அழுத்த, சூழ்நிலையை உணர்ந்து திரும்பி காரை நோக்கி நடக்க துவங்கினர் இருவரும்.

அவர்களுடனே பக்கத்துக்கு ஒருவனாய் நடந்தனர் அந்த இரண்டு ரௌடிகளும். ரிஷியின் கையை பிடித்தபடி நடையில் வேகம் கூட்டினான் சஞ்சீவ்.

'அதுதான் பயந்து ஓடி போனே இல்லே. எதுக்குடா இங்கே திரும்பி வந்தே? என்ன தைரியம் உனக்கு?'

பதில் பேசவில்லை இருவரும். கிட்டத்தட்ட காரை நெருங்கி விட்ட நிலையில்......

'எங்கேடா அந்த ராங்கிக்காரி? அவளும் இருக்காளா உன்கூட? என்றான் ஒருவன். அவன் யாரை குறிப்பிடுகிறான் என்று புரிய ரிஷியினுள்ளே எரிமலை.

அவன் உதிர்த்த அடுத்த சில வார்த்தைகளில் கொதித்து போய் தன்னை மறந்தவனாய், கையிலிருந்த காபி கோப்பையை கீழே போட்டுவிட்டு, அவன் கோபம் அறிந்து அவனை தடுக்கும் விதமாக அவனை அழுத்தமாக பற்றியிருந்த சஞ்சீவின் கையை உதறி விட்டு. அவன் மீது பாய்ந்திருந்தான் ரிஷி.

அடுத்த நான்கு நொடிக்குள், ஒருவன் ரிஷியை அருகிலிருந்த மரத்தின் மீது சாய்த்து அழுத்தி பிடித்திருக்க, மற்றொருவன் கையில் பளபளக்கும் கத்தியை ஏந்தி இருந்தான்.

ரிஷி சுதாரித்து திமிறி எழ, அதற்குள் சஞ்சீவின் காருக்குள் இருந்த கைத்துப்பாக்கி அவன் கைக்கு வர, அடுத்த நொடி கத்தியை ஏந்தியவனின் நெற்றிப்பொட்டில் இருந்தது அது. 'கத்தியை கீழே போடு தம்பி........'

இவற்றையெல்லாம் அதிர்ச்சியுடன் பார்த்தபடியே காரை விட்டு இறங்கினார் பரந்தாமன்

கத்தி கீழே போடப்பட ரிஷி மீதிருந்த மற்றொருவனின் பிடி தளர்ந்தது.

'ரிஷி காரிலே ஏறுடா' என்ற சஞ்சீவ். அவர்கள் இருவரையும் துப்பாக்கி முனையில் நிறுத்தியபடியே கேட்டான் 'உங்களை அனுப்பினது யாருடா?'

'அஸ்வத் சார்' பதில் வந்தது ஒருவனிடமிருந்து.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.