(Reading time: 15 - 30 minutes)

காஃபியை எடுத்துக்கொண்டு யுவியைத் தேடிச் சென்றாள் மேலே…

ஜாக்கிங்க் முடித்துவிட்டு வந்தவன், குளித்துவிட்டு வந்து உடை மாற்றிக்கொண்டிருந்தான்…

தனது டையை சரி செய்த வண்ணம் அவன் திரும்ப, அவள் அறை வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது…

“உள்ளே வா…” என்ற அவனின் அழைப்புக்கு இணங்கி, அவள் அறைக்குள் வர, அவன் அவளைக் கடந்து சென்று கதவைத் தாழ் போட்டு வந்தான்…

“இப்போ எதுக்காக கதவைச் சாத்துறேன்னு பார்க்குறியா?... இந்த அறைக்குள்ள பேசிக்கிறது நமக்குள்ள மட்டும் இருக்கணும்னு நினைக்கிறேன்… அதனால தான்…” என்றவன்,

அவள் முகத்தினைப் பார்த்தவாறே, “சில விஷயங்கள் சொல்லிப் புரிய வைக்க முடியாது… தானாவே உணரனும்...” என சொல்லியவன், அவள் அவனை விழி அகற்றாமல் பார்ப்பதை பார்த்துவிட்டு,

“இந்த அறைக்குள்ள நீ நீயா இருக்கலாம்… அதுக்கு எந்த விதத்திலும் நான் தடையா இருக்க மாட்டேன்… ஆனா அதே நேரத்துல இந்த அறைக்கு வெளியே, நீ என் மனைவியா தெரியணும்… இருக்கணும்னு நான் ஆசப்படுறேன்… நடக்குமா???....” என அவன் கேட்ட மாத்திரத்தில் அவள் சட்டென ஹ்ம்ம் என்று தலை அசைத்தாள்…

“ஹ்ம்ம்… எனக்கு என் தேவிம்மா முக்கியம்... அதவிட அவங்க சந்தோஷம் ரொம்பவே முக்கியம்… அது உனக்கும் முக்கியம்னு நான் இன்னைக்கு தெரிஞ்சிகிட்டேன்… நீ ராத்திரி முழுக்க தூங்கவே இல்லைன்னு எனக்கு தெரியும்… அதே மாதிரி ஏன் லேட்டா கீழே போனேன்னும் எனக்கும் தெரியும்… பெரியவங்க மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு நினைக்குற உன் மனசு எனக்குப் புரியுது… அதனால தான் நானும், அவங்க சந்தோஷத்துக்காக எல்லார் முன்னாடியும் உங்கிட்ட பேசினேன்… நீ மட்டும் தனியா சிரமப்பட வேண்டாம் இனி அவங்களை சந்தோஷமா வச்சிக்க… நானும் உனக்கு உன் கணவனா உதவி செய்யுறேன்…” என்றான்…

“சரிங்க…”

“ஹ்ம்ம்… சரி… நீ கீழே போய் தேவிம்மாகிட்ட பேசிட்டிரு… நான் இப்போ வந்துடுறேன்...” என்று சொல்ல,

அவள் செல்லாமல் அங்கேயே நின்றாள்..

“என்ன வள்ளி…” என அவன் மென்மையாக கேட்க…

அவள் கைகளிலிருந்த காஃபியை அவனை நோக்கி நீட்டினாள்…

மெல்ல அவனுக்கே உண்டான பிரத்யேக கீற்றுப் புன்னகை லேசாக எட்டிப்பார்க்க, அவளிடமிருந்து காஃபியை வாங்கி அருந்தினான்…

காலிக்கோப்பையை அவளிடம் கொடுத்தவன், அறைவாசல் வரை அவள் சென்றதும், “காஃபி ரொம்ப நல்லா இருக்கு…” என்றான் மெதுவாக…    

“ஹ்ம்ம்…” என்றவாறு திரும்பாமலே தலை அசைத்துவிட்டு அவள் செல்ல, அவன் “ஹ்ம்ம்ம்…” என்றவாறு மீண்டும் தனது டையினை சரி செய்ய ஆரம்பித்தான்…

யுவியின் அறைக்குள் வள்ளி காஃபியோடு சென்றதையும், பின்னர், நெடு நேரம் கழித்து திரும்பி வந்ததையும், வள்ளியின் முகத்தில் இருந்த அழகானப் புன்னகையையும் கண்ட தேவி மனம் நிம்மதியில் சற்றே ஆசுவாசமடைந்தது…

ப்போது…

“என்னங்க… எழுந்திருங்க…” என்றபடி வ்ருதுணனை எழுப்பிக்கொண்டிருந்தாள் பாலா…

எழுப்ப எழுப்ப அவன் அசையாமல் படுத்திருப்பதை பார்த்தவள், “காஃபி ஆறிப்போயிடுங்க… எந்திங்க…” என்றாள் மெல்ல…

“சரி நீங்க எந்திக்க வேணாம்… நான் போறேன்…” என்றபடி அவள் நகர முயல, சட்டென எழுந்து அவள் கரம் பற்றி தடுத்தான் வ்ருதுணன்…

“ஹேய்… எங்க போற?... நில்லு…”

“அப்போ இவ்வளவு நேரம் முழிச்சு தான் இருந்தீங்களா?...” என அவள் முறைக்க…

“ஹ்ம்ம்… நீ எப்படி கொஞ்சி எழுப்புவன்னு பார்க்க ஆசையா இருந்துச்சு… அதான்…” என அவன் பாவமாக சொல்ல…

“அதுக்காக இப்படியா ஏமாத்துவீங்க?...”

“ஹேய்… சாரிடி திரபா…”

“ஹ்ம்ம்ம்… ஒன்னும் வேண்டாம்…”

“சரி எனக்கும் காஃபி வேண்டாம்…”

“விதுன்…” என அவள் சத்தமாக அழைக்க…

“நீ கொஞ்சி எழுப்புறதை கேட்க ஆசையா இருந்துச்சு… அதான் எழுந்துக்கலைன்னு சொன்னா, நீ என்னை ஏமாத்துவீங்களான்னு கேட்குற?... போ… எனக்கு காஃபியும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்…” என மீண்டும் படுத்துக்கொள்ள,

அவளுக்கு அவன் செய்கை சிறு குழந்தை அடம்பிடிப்பதைப் போல் இருக்க…

“விதுன்…” என்றபடி அவனது தலைகோதி விட்டவள்,

“சாரி விதுன்… இனி கொஞ்சியே எழுப்புறேன்… இப்போ நல்ல பிள்ளையா எழுந்து காஃபி குடிங்க… ப்ளீஸ்….” என அவள் கெஞ்ச…

“ஒகே திரபா…” என்றவன் காஃபியை குடித்துவிட்டு, அவளிடம் கப்பை கொடுக்க, அவள் நகர முயன்றாள்…

“உனக்கு இந்த வீடு, முதல் நாள், ஹ்ம்ம் அப்புறம் வீட்டுல இருக்குறவங்க… ஹ்ம்ம்… பிடிச்சிருக்கா?...” என அவன் கேட்டான்…

“ரொம்ப பிடிச்சிருக்கு… இந்த செல்ல விதுனையும் சேர்த்து…” என்றவள், அவன் கன்னத்தைக்கிள்ளி தன் உதட்டில் வைத்து முத்தமிட, அவன் அழகாக சிரித்தான்…

“இந்த சிரிப்பு இப்போ இன்னும் பெருசாகும்… நான் ஒரு விஷயம் சொன்னா….” என அவள் பீடிகை போட.

“என்ன விஷயம்டா… சொல்லு… பார்ப்போம்….” என்றான் அவனும்…

“ஹ்ம்ம்…” என்றவள் சற்று நேரத்திற்கு முன் நடந்த நிகழ்வினை சொல்ல, அவன் புன்னகை அவள் சொன்னது போல் பெரிதானது…

“பார்த்தீங்களா… நான் சொன்னேன்ல… நீங்க சிரிப்பீங்கன்னு…”

“ஹ்ம்ம்… அதுவும் உண்மைதான்டா… ஆனா, நான் அதுக்கு மட்டும் சிரிக்கலை… என் தங்கை வாழ்க்கை எப்போ யுவியோட முடிவானதோ அப்பவே அவ கண்டிப்பா சந்தோஷமா இருப்பான்னு எனக்கு தெரியும்…  இப்போ நீ சொன்னதுனாலயும் சந்தோஷம் தான்… ஆனா, அதைவிட பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா?... நீ தான்…” என்றவன் அவள் எதிர்பாராத நேரத்தில் சட்டென்று அவளை இழுத்து அணைத்தான்…

“விடுங்க… விதுன்… விடுங்க… சொன்னா கேளுங்க…” என விலக முயல, அவன் கொஞ்சமும் அவளை விடவில்லை…

“முடியாது… திரபா… விடமாட்டேன்…”

“என்னால என்ன சந்தோஷம்… அதை சொல்லுங்க… முதலில்…”

“என் திரபாவுக்கு என் தங்கை வள்ளி மேல இன்னும் கோபம் இருக்குதான்… ஆனாலும், அவளைப் பார்த்தா முகத்தை திருப்பிக்காம, அவ சந்தோஷமா இருக்குறத, சந்தோஷமா வந்து எங்கிட்ட சொல்லுறாளே… இதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு வேற என்ன வேணும்???….” என அவன் கேட்க…

“உண்மைதான் விதுன்… முழுசா அவளை என்னால ஏத்துக்க முடியுமான்னு தெரியலை… ஆனா, அவ மேல எனக்கு இருந்த வெறுப்பு கொஞ்சம் விலகிட்டோன்னு தோணுது… அதும் நீங்க நேத்து ராத்திரி சொன்ன விஷயங்களுக்குப் பிறகு, அவளைப் பார்த்தா முகம் திருப்பிக்கணும்னு எனக்கு தோணலை… ஹ்ம்ம்ம் அப்புறம் அம்மாவ பார்க்க கூட்டிட்டு போவீங்களா விதுன் இன்னைக்கு???” என்றாள் அவள் யோசனையுடன்…

“கண்டிப்பா போகலாம்டா… ஆனா, அதுக்கும் முன்னாடி எனக்கு நீ ஒரு பதில் சொல்லணும்… நேத்து ராத்திரி நான் வேற எதுவும் சொல்லலையா?... ஹ்ம்ம்…” என புருவம் உயர்த்தி கேட்க…

“போங்க…. விதுன்…” என்றவாறு அவனது மார்பில் ஒன்றிக்கொண்டாள் அவள் வெட்கத்துடன்…

அவள் மனம் முழுமையாக மாறிடும் என்ற நம்பிக்கையோடு அவளை இறுக அணைத்தான் அவன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.