(Reading time: 48 - 95 minutes)

ந்நேரம் அங்கு வந்த கஸ்தூரி அவன் வள்ளியின் போட்டோவை பார்ப்பதை பார்த்துவிட்டு, “இந்த போட்டோ எடுத்து ஒன்பது வருடம் இருக்கும் மாப்பிள்ளை… ப்ளஸ் டூ படிக்கும்போது இந்த தாவணி எடுத்துக்கொடுத்தார் அவளோட சின்னப்பா… என் வீட்டுக்காரர்… திருவிழாக்கு போறாம் இதை போட்டுக்கோன்னு எடுத்துக்கொடுத்தார்… அப்பவே அவளை போட சொல்லி இந்த போட்டாவை எடுத்து வைச்சோம்… நல்ல வேளை… அப்பவே எடுத்து வைச்சோம்… இல்லன்னா, இந்த தாவணி போட்டாவும் இருந்திருக்காது எங்ககிட்ட….” என அவர் சொல்லியதும், அவன் புரியாமல் அவரைப் பார்க்க…

அவர் பாலா-வள்ளி இடையில் நடந்த நிகழ்வுகளை ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டு, “அந்த திருவிழாக்குப் பிறகு இப்போ வரை நாங்க யாரும் அந்த பக்கம் போகவே இல்லை…. வள்ளி தாவணி அன்னைக்கு முள்ளில் பட்டு கிழிசலோடு இருந்தது… அதை அதன் பிறகு அவள் உடுத்தியதே இல்லை… அதுமட்டும் அல்ல, அதன் பின், தாவணியும், சரி, புடவையும் சரி அவள் அணிந்து கொள்ளவே மாட்டேன் என்று சொல்லிவிட்டாள்… ஏன் என்ற காரணம் மற்றவர்களுக்கு தெரியாமல் போயிருக்கலாம்… ஆனால் எனக்கு தெரியும் மாப்பிள்ளை…”

“அன்று என் பெண்ணின் மானத்தை காப்பாற்றியது மற்றவர்கள் நினைப்பது போல் ஒரு பெண் அல்ல, ஒரு ஆண்… திருமணத்தை தள்ளிப்போட வள்ளிக்கு பாலா ஒரு காரணம் என்றால் அன்று அவளுக்கு உதவி செய்த பையனும் ஒரு காரணம்…. சில நிமிட நிகழ்வில் தன் மானத்தை காப்பாற்றியவனுக்கு தன் மனதில் இடம் கொடுத்துவிட்டு அவனையே நினைத்து உருகிக்கொண்டிருந்தவளிடம், அவளின் திருமணம் பற்றி பேச்சு எடுக்கும்போதெல்லாம் கோபமும் ஆற்றாமையும் வெளிப்படும் அவளிடமிருந்து… ஆனால், உங்களை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தோம் என சொன்னதிலிருந்து அவளிடமிருந்து கோபம் வரவில்லை… மாறாக ஏதோ குழப்பம் உண்டானது… ஏனோ அவளின் மனதுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது போலும்… அவள் உங்களைப் பார்க்கும்தருவாயில் நான் அதனை கண்டு கொண்டேன்… உங்களுக்கும் அப்படித்தான் என எனக்கும் தெரியும்…” என அவர் சொல்லியதைக் கேட்டு அதிர்ச்சி மட்டும் அல்ல, ஆச்சரியமும், உற்சாகமும் அவனின் இதயத்தில் பொங்கியது…

“என் பொண்ணு அந்த பையனைப் பார்த்தது கூட இல்லை மாப்பிள்ளை… அந்த பையனும் தான்… பத்து நிமிட சந்திப்பு என் பொண்ணை காலம் பூரா இப்படி திருமணமே வேண்டாம் என்று முடிவெடுக்க வைத்தா ஒரு தாயா நான் என்ன பண்ணுவேன் மாப்பிள்ளை??... என் பொண்ணு மனசை முடிஞ்ச அளவு மாற்ற முயற்சி செய்யத்தான் செஞ்சேன்… ஆனா, என்னால முடியலை… ஒரு கட்டத்திற்குப் பிறகு, அவனை நீ மறந்துடணும்னு என் பொண்ணுகிட்ட கெஞ்சி கேட்டுகிட்டேன்… அப்பவும் அவ மாட்டேன்னு தான் சொன்னா… அப்புறம், நான் செத்து போயிடுவேன்னு மிரட்டின பின்னாடி கொஞ்சம் அமைதி ஆகினா… அந்த சந்தர்ப்பத்துல தான் உங்களை அவ பார்த்திருக்கா… ஏனோ உங்களை பார்த்த பின்னாடி அவ முகமும் சரி, அவ மனசும் சரி, ஒருவித சந்தோஷப்படுறதை நான் கவனிச்சேன்… உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவகிட்ட கேட்டப்போ, அவ முகத்தில் பலவித உணர்ச்சிகள் வந்து போனது… அவளுக்கு உங்களை பிடிச்சிருக்கு… ஆனா, மனசில தேவை இல்லாததுக்கு இடம் கொடுத்ததினால உங்களை விட்டு விலக முயற்சி பண்ணினா… அந்த நேரத்துல தான், கோவிலில் வைச்சு உங்க இரண்டு பேர்கிட்டயும் சம்மதம் கேட்டோம்… கடவுள் புண்ணியத்துல அவ உங்களைப் பார்த்துகிட்டே சம்மதம் சொல்லிட்டா… நிச்சயமும் நல்லபடியா நடந்து முடிஞ்சிட்டு….” என்றவர் அவன் அமைதியாகவே இருப்பதை பார்த்துவிட்டு,

“என் பொண்ணு மேல எந்த தப்பும் இல்ல மாப்பிள்ளை… உங்க கிட்ட நான் சொல்லலைன்னாலும் அவளே சொல்லியிருப்பா… அப்படி அவளே சொல்லுற பட்சத்துல நீங்க என் பொண்ணை விலக்கி வைச்சிட்டா, என்னால தாங்க முடியாது மாப்பிள்ளை… அதான் நானே எல்லாம் சொல்லிட்டேன்… இனி முடிவு எடுக்க வேண்டியது உங்க கையிலதான் இருக்கு… நிச்சயம் முன்னாடியே இதை சொல்லணும்னு தான் எவ்வளவோ முயற்சி பண்ணினேன்… ஆனா முடியலை… இன்னைக்கு உங்களை பார்த்ததும் சொல்லியே தீரணும்னு தான் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன்… சொல்லவும் செஞ்சிட்டேன்… என் பொண்ணு மேல எந்த தப்பும் இல்ல மாப்பிள்ளை… இனி உங்க கையில தான் எல்லாம் இருக்கு மாப்பிள்ளை… நீங்க என்ன சொன்னாலும் அந்த முடிவு எனக்கு சம்மதம்… அது என் பொண்ணுக்கு சாதகமா இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன் மாப்பிள்ளை… அப்படி இல்லன்னா….” என அவர் முடிக்கும் முன்

“வள்ளி எனக்கு வரமா வந்த என் மனைவி அத்தை… அவளை விட்டு நான் பிரியவும் மாட்டேன்… என்னை விட்டு அவ பிரிய நான் அனுமதிக்கவும் மாட்டேன்… இது நான் உங்களுக்கு செய்து தருகிற சத்தியமும் கூட… பாலாவுக்கும் வள்ளிக்கும் இடையில இருக்குற பிரச்சினையை இனி நான் பார்த்துக்குறேன்… இனி நீங்க அதைப் பற்றி கவலைப் படாதீங்க… அடுத்த திருவிழாவில் நாம எல்லாரும் ஒன்னா ஒரே குடும்பமா அங்க இருப்போம் அத்தை… இது நான் உங்களுக்கு கொடுக்குற உத்திரவாதம்… எங்கிட்ட சொன்னதை இனி நீங்க யாரிடமும் சொல்ல வேண்டாம் அத்தை… வள்ளிகிட்ட கூட எங்கிட்ட சொன்னதா காட்டிக்கொள்ள வேண்டாம்… இனி அவ என் பொறுப்பு…” என கஸ்தூரியின் கைப்பிடித்து அவன் சொல்ல, அவர் கண்கள் நீரால் நிறைந்து தளும்பியது….

ரவு நேர தனிமையில் தனது அறையில் நின்று கொண்டு எப்பவும் போல் அந்த நிலவை அவன் பார்த்த போது, இது நாள் வரை அவன் ஏங்கிய பொழுதுகள் மளமளவென கழிந்தது போலவும், மனது பாரத்திலிருந்து இறங்கியது போலவும் இருந்தது அவனுக்கு…

‘என் த்வனி நீதானா?... எனில் என் மனம் உன்னைப் பார்த்த போது அமைதியானது இதற்காகத்தானா?... நீதானா நான் தேடிய வரம்???... இத்தனை நாள் நான் உன்னையே நினைத்து வாழ்ந்தது போல் என்னையே நினைத்து நீயும் வாழ்ந்தாயா கண்மணி?... சில நிமிட சந்திப்பு என்னை உன் மனதிற்குள் கொண்டு வந்துவிட்டதா என் அன்பே… நான் உன் மேல் காதல் கொண்டது போல் நீயும் என் மேல் காதல் கொண்டுவிட்டாயா???... எனக்காக காத்திருந்தாயோடீ இத்தனை நாட்கள் ஏக்கத்தில்?... நான் தான் உன் ப்ரத்யுஷ் என்று உன்னிடம் சொன்னால் உன் முகம் எப்படி மாறும்?... என்ன செய்வாய் த்வனி???....” என கஸ்தூரியிடம் அனுமதி கேட்டு வாங்கி வந்திருந்த அவளின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டே அவன் கேட்க… அவள் புகைப்படத்தில் சிரித்தாள்…

“த்வனி…. ஹ்ம்ம்… தாவணி என்று உன் தோழி சொன்னது எனக்கு த்வனி என்று கேட்டு, நான் அதுவே உன் பெயரென எண்ணி இன்று வரை அவ்வாறு தான் அழைத்துக்கொண்டிருக்கிறேன்... லூசாக்கிட்ட டீ நீ என்னை…” என சிரித்துக்கொண்டிருந்தவன், திடீரென சிரிப்பதை நிறுத்திவிட்டு, அவளைக் கூர்மையாக பார்த்தான்…

“நான் உன்னை காதலிக்கிறேன் என உன்னிடம் சொல்ல உள்ளத்தில் ஆசை பல மடங்கு கொட்டிக்கிடக்கிறதடி பெண்ணே… எனக்கு உன்னைப் பார்த்ததும் த்வனி வேறு நீ வேறு என்று எண்ண முடியவில்லை… அதுபோலே உனக்கும் தோன்றியதா???... நீ ப்ரத்யுஷை காதலிக்கிறாய் என நான் இன்று தெரிந்து கொண்டேன்… ஆனால், வேலனாக இருப்பதும் உன் ப்ரத்யுஷ் தான் என்பதை எப்போது நீ அறிந்து கொள்வாய்??? உனக்கு என்னைப் பார்க்கும்போது தோன்றவில்லையா உன் ப்ரத்யுஷ் நான் தான் என்று….???...” என அவளிடம் அவன் மானசீகமாக பேசிக்கொள்ள அவள் அப்போதும் புன்னகைத்தாள்…

“காத்திருப்பேன் கண்மணி… நீ என்னை சேரும் நாள் வரை நான் காத்திருப்பேன்…” என்ற முடிவோடு அவளின் புகைப்படத்தை நெஞ்சோடு சேர்த்து வைத்து அணைத்துக்கொண்டவன் அப்படியே உறங்கி போனான் பல வருடம் இழந்த நிம்மதியை அந்த ஒரே நாளில் திரும்ப பெற்றுக்கொண்டவனாய்…

அதன் பின்னர், மணநிறைவுடன் அவளைக் கைப்பிடித்தவன், அவள் மனது தெரியும் வரை தேவிம்மாவிடமும் அந்த உண்மையை மறைத்து வைக்க முடிவு செய்தான்…

அதுபோலவே திருமணத்தின் முதல் நாள் இரவன்று தனதறைக்குள் நுழைந்தவளிடம் பேச எண்ணியிருந்தவன், அவள் எதுவோ சொல்ல நினைப்பதை புரிந்து கொண்டு அவளிடமே கேட்டான்…

சட்டென நிமிர்ந்தவளின் பார்வையை அருகே எதிர்கொண்டவனுக்கு வார்த்தையே எழவில்லை… இருவரும் மௌனமாக நின்றிருந்த நேரத்தில் அறை சுவர் கடிகாரம் எழுப்பிய ஒலியில் தன்னுணர்வு பெற்ற சமயம், அவளை அவன் பார்த்தான்….

இனியும் இங்கே நின்றால் அவ்வளவு தான் அவளிடம் காதலை சொல்லிவிடுவோம் என்ற பயத்தில், “அசதியா இருக்கும் நீ தூங்கு…” என சொல்லி சென்றுவிட்டான்…

சென்றவன், அலுவலக அறையில் தன்னையே கடிந்து கொண்டான்… நல்ல சந்தர்ப்பத்தை மிஸ் பண்ணிட்டியேடா… அவகிட்ட காதலை சொல்லியிருக்கலாமேடா… என அவன் மனம் அவனை திட்ட,

“எப்படிடா சொல்ல சொல்லுற?..... ஒரு வேளை நான் காதலை சொல்லி, அவ இல்ல எனக்கு பிடிக்கலைன்னு சொன்னா என்னால எப்படிடா தாங்கிக்க முடியும்?....” என எதிர்கேள்வி கேட்டான் மனதிடம்…

‘நீதானடா ப்ரத்யுஷ்… உன்னை எப்படி பிடிக்கலைன்னு அவ சொல்லுவா?...”

“அது உனக்கும் எனக்கும் மட்டும் தானடா தெரியும்?... அவளுக்கு தெரியாதே….”

“அட ஆமா… ஆனாலும் நீ காதல் சொல்லியிருந்தா அவ மறுத்திருப்பான்னு நினைக்கிறியா?...”

“தெரியலைடா… ஆனா, நான் இப்போ காதலை சொன்னாலும் அவ பார்வைக்கு நான் வேலன், அவள் கணவனா தான் தெரிவேன்… அவ காதலன் ப்ரத்யுஷ் அப்படிங்கிற உண்மை அவளுக்கு நான் சொன்னாலொழிய தெரிய வாய்ப்பில்லையே… அப்படி இருக்கும்போது நான் யாரா காதலை சொல்லடா அவகிட்ட?... அவளோட ப்ரத்யூ-ஆ நான் காதலை சொன்னா, என்னோட த்வனி என்னை ஏத்துப்பா தான்… ஆனா, திருமணத்தில் இணைந்திருக்கிற இந்த வேலனுக்கும் வள்ளிக்கும் வேலை இல்லாம போயிடுமேடா… அவளைப் பொறுத்த வரை நான் அவளோட கணவன் மட்டும் தான்… ப்ரத்யூ இல்லை… அது போல எனக்கும் அவ இப்போ வள்ளி தான்… த்வனி இல்லை… ப்ரத்யூ-ஆ த்வனியை அளவே இல்லாம காதலிச்சிட்டேண்டா… ஆனா வேலனா வள்ளியை காதலிக்கிறதுல தான் உண்மையான காதலோட சுகமே இருக்குன்னு நான் நினைக்கிறேண்டா… நான் சொல்லுறது சரிதானாடா?.... நீ என்ன சொல்லுற?...” என அவன் தன் மனசாட்சியிடம் கேட்க

அவன் மனமோ சந்தோஷத்தில், அவனைக் கட்டிக்கொண்டது….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.