(Reading time: 14 - 28 minutes)

காற்றினிலே வரும் கீதம்... - 05 - வத்ஸலா

ந்த 29 வருட வாழ்கையில் இப்படி எதற்காகவும் தவித்ததில்லை கோகுல். 'என்னதான் சொல்லப்போகிறாள் கோதை????' அவளையே பார்த்திருந்தான் அவன்.

நடந்துக்கொண்டிருந்த மூவருமே நின்றுவிட, அம்மாவின் கேள்வியில் திகைத்து போய் முகம் நிமிர்த்தினாள் கோதை. 'நானா??? நா..ன்.. எப்படி?' வேகமாக இடம் வலமாய் தலை அசைத்தாள் கோதை. திசைக்கொன்றாய் ஆடின அவள் காதில் தொங்கிக்கொண்டிருந்த தொங்கட்டான்கள்.

'ஏன்? நோக்கென்ன? நன்னா... லட்சணமா இருக்கியேடி மா... எங்காத்துக்கு மாட்டுப்பொண்ணா வந்துடு........

Katrinile varum geetham

'இல்..லை மாமி....' 'இவர்... நிறைய படிச்சிருக்கார்.... நா...ன் நா..ன்.... பிளஸ் டூ கூட முடிக்கலையே... நான் எப்படி....? ..... வே... வேண்டாம்....'  கெஞ்சலும், படபடப்பும் நிரம்பிய வார்த்தைகள் அவசரமாய் வெளியேற, திரும்பி  அவன் முகம் பார்த்து....

'வேண்டாம்...' 'நான்...உங்களுக்கு வேண்டாம்...' என்றாள் மெல்லிய குரலில். 'வேறே யாரவது நல்ல பொண்ணா...'... அவளை முடிக்க விடவில்லை அவன். முகம் கொஞ்சமாய் வாடிப்போக , தோல்வியில் ஊறிப்போன பாவத்துடன் அவள் பேசியதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை அவனால்.

'கல்யாணம்கிறது மனசு சம்மந்தப்பட்ட விஷயம் அதுக்கும் படிப்புக்கும் என்ன சம்மந்தம்னு நேக்கு புரியவேயில்லை. வெளிப்படையா சொல்றேன். உன்னை நேக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. வேறே எதை பத்தியும் நேக்கு கவலையே இல்லை... புரியறதா?...' கோவிலென்றும் பாரமால் பட் பட்டென வெடித்தான் அவன்.

'டேய்... டேய்... ஏன்டா? இரு ....' இடைப்புகுந்தார் அம்மா. 'நான் பேசறேன் இரு' என்றவர் கோதையின் முகத்தை தொட்டு நிமிர்த்தி சொன்னார்' அவனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. நோக்கும் அவனை பிடிச்சிருக்கோன்னோ....?

'ம்...' அவனையே பார்த்தபடி சின்ன தலையசைப்பு அவளிடம்.

அவளது தலையசைப்பிலேயே தணிந்து போனவன் தனது கோபமான முக பாவத்தை மட்டும் மாற்றிக்கொள்ளவே இல்லை.

'கல்யாணம் பண்ணிண்டா நீ கோகுலா நன்னா பார்த்துப்பியோன்னோ????'

ம்... புன்னைகையுடன் சொன்னாள் அவள்.

'இதுக்கு மேலே வேறே என்ன வேணும்.? சரின்னு சொல்லிடு அவன் கிட்டே. பாரு கோபமா இருக்கான் பாரு....'

அவள் பதில் சொல்லாமல் அவனையே பார்த்திருக்க 'நீ இந்த சினிமாவெல்லாம் பார்ப்பியா?' கேட்டார் அம்மா.

'ம்....'

'அதிலெல்லாம் வர மாதிரி கல்யாணம் பண்ணிண்டா உன்னைத்தான் பண்ணிப்பேன். இல்லைனா காலம் பூரா இப்படியே இருப்பேன்னு சொல்லிண்டு இருக்கான். அவன் கல்யாணமே பண்ணிக்காம இருந்தா நோக்கு பரவாயில்லையா?' 

'அதெல்லாம் இல்லை...' பதில் கோகுலிடமிருந்து வந்தது. 'இன்னொரு வாட்டி இவ நான் படிக்கலை கொள்ளலைன்னு ஏதானும் பேசட்டும், இன்னொரு பொண்ணை கூட்டிண்டு வந்து இவ முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கறேனா இல்லையா பாரு...' அவன் முகத்தில் அவன் இதுவரை கஷ்டப்பட்டு இழுத்து பிடித்துக்கொண்டிருக்கும் கோபத்தின் சாயல்..

'அச்சச்சோ.... வேண்டாம்.... வேண்டாம்.... சீக்கிரம் சரின்னு ...சொல்லிடு....' சிரித்துக்கொண்டே சொன்னார். அம்மா.

'நேக்கு ... அப்பா....கிட்டே... கேட்....கணும்...' தயங்கி திணறி வெளி வந்தன கோதையின் வார்த்தைகள்.

'நானும், கோகுலோட அப்பாவும் உங்காத்துக்கு வந்து அப்பாகிட்டே பேசுவோம். அதுக்கு முன்னாடி நீ ஓ.கே சொல்லணும். அதுதான் முக்கியம்  இப்போ சொல்லு... ஒகேவா?'

இமை குடைகள் தாழ, இதழ்களில் வெட்கம் கலந்த மென் சிரிப்பு ஓட,  'ம்...' என்றாள் கோதை. அம்மாவின் முகம் மலர்ந்தது. மகன் விருப்பம் நிறைவேற கொஞ்சமாக வழி வகுத்த சந்தோஷம். நேற்று கிடைத்த ஏமாற்றத்தில் வந்த மனமாற்றத்தில் ஏற்பட்ட நிறைவு.

இதழோரம் பூக்க காத்திருந்த புன்சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் கோகுல். அவனது கோப பாவம் மாறவே இல்லை. மூவரும் நடந்தனர். அம்மா ஏதேதோ பேசிக்கொண்டே வர, அவளது விழிகள் மட்டும் அவனை உரசி உரசி மீண்டுக்கொண்டே இருந்தன.

'உங்க ஆம் எங்கிருக்கு?' கோவிலின் வாசலுக்கு வந்து செருப்பை அணிந்த படியே கேட்டார் அம்மா. 

'இங்கிருந்து நடந்து போற தூரம் தான். ஆத்துக்கு வாங்கோ...'

அவள் கன்னம் வருடினார் அம்மா. 'சீக்கிரமே ஒரு நல்ல நாள் பார்த்து மாமாவையும்  அழைச்சிண்டு வரேன். நீ இப்போ காரிலே ஏறிக்கோ. உன்னை ஆத்து வாசலிலே விட்டுட்டு போறேன்.'

காரை செலுத்திக்கொண்டிருந்தான் கோகுல். காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தாள் கோதை. அவனது சின்ன சிரிப்பையே எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்தவளின் தவிப்பை  அவனுக்கு காட்டிக்கொண்டிருந்தது காரின் முன் பக்க கண்ணாடி.

அவள் வீட்டை அடைந்து அவள் கீழே இறங்கி, அம்மாவிடம் விடை பெற்றுக்கொண்டு அவன் பக்கம் வந்தாள் கோதை . ஸ்டியரிங்கின் மீது விரல்களால் தாளமிட்டபடியே அமர்ந்திருந்தவன், அவளை நோக்கி பார்வையை திருப்பினான்.

படபடக்கும் கண்களுடன் அவள் அவனையே பார்த்திருக்க மெது மெதுவாய் இதழ்கள் விரிய, அவளைப்பார்த்து கண் சிமிட்டி சிரித்தான் கோகுல். 'இனிமே இப்படி பேசக்கூடாது சரியா?.

இமை ஓரத்தில் சட்டென பூத்த ஒற்றை நீர்த்துளியுடன் தலை குனிந்து அழகாய் சிரித்தபடி தலையசைத்தாள் அவள். அவளிடம் கையசைத்து விடைப்பெற்று கிளம்பினர் அம்மாவும் மகனும். இதுவரை அனுபவித்திராத ஏதோ ஒரு சிலிர்ப்பு உடலெங்கும் பரவ வீட்டுக்குள் ஓடினாள் கோதை.

தே நேரத்தில் அலுவலகத்தில் தனது தோழி கவிதாவுடன் கான்டீனில் இருந்தாள் வேதா. கடந்த மூன்று நாட்களில் ஐந்தாவது முறையாக அவளை எச்சரித்து கொண்டிருந்தாள் கவிதா.

'எனக்கென்னமோ அந்த கோகுலை பார்த்தா சந்தேகமா இருக்கு வேத்ஸ். நீ கண்ணை மூடிட்டு அவனை நம்பறியோன்னு தோணுது.'

'இல்லைப்பா... அவர்...'

'ரொம்ப நல்லவரா தான் தெரியறார் இதைத்தானே சொல்லப்போறே?? 'ஸீ நான் ஜி.கே ஃபேமிலி பத்தி கேள்விப்பட்டிருக்கேன். அவங்களோடது பிராமின் ஃபேமிலி, உங்க குடும்பம் மாதிரியே, தெரியுமா உனக்கு?"

ஒரு சின்ன திடுக்கிடல் வேதாவிடம்.

'இந்த கோகுல், அவனோட பேசுற ஸ்டைல், இது எல்லாத்தையும் பார்க்கும் போது எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு வேதா. இன்னொண்ணு அவங்க பரம்பரை பணக்காரங்க. திஸ் ஃபெலோ டஸ்ஸின்ட் சீம்ஸ் டு பி ஸோ. பார்த்து நடந்துக்கோ. அவ்வளவுதான்' சொல்லிவிட்டு எழுந்து விட்டாள் கவிதா.

அவள் சென்ற பின்பும் உழன்றன வேதாவின் எண்ணங்கள். ஆனால் அவர்கள் இருவரும் ஒரு விஷயத்தை கவனிக்க தவறி இருந்தனர். இவர்கள் பேசியதை அவர்கள் பின்னால் அமர்ந்திருந்த விக்கி கேட்டுக்கொண்டிருந்தான் என்பதை உணர தவறி இருந்தனர் இருவரும்.

அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் இருவரும் பேசிய வார்த்தைகள் அட்சரம் பிசகாமல் சரவணனிடம் ஒலிபரப்பு ஆகியிருந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.