(Reading time: 17 - 33 minutes)

காற்றினிலே வரும் கீதம்... - 08 - வத்ஸலா

மொட்டை மாடியில் நடந்துக்கொண்டே இருந்தார் அப்பா. இரவு உணவு கூட அவர் சாப்பிடவில்லை. அவரது மனநிலை இரண்டு பெண்களுக்கும் புரிந்துதான் இருந்தது.

என்ன செய்வது என்று புரியாமல் பலவித மன உளைச்சல்களுடன், உறுத்தல்களுடன் தனது அறைக்குள்ளேயே இருந்தாள் வேதா.

ஒரு கட்டத்தில் இந்த மௌனத்தை உடைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து அறைக்குள் எட்டிப்பார்த்து வேதாவை அழைத்தாள் கோதை  'அக்கா.... மாடிக்கு வா...'

Katrinile varum geetham

'நான் அப்புறம் வரேன் நீ...'

'நீ இப்போ வரப்போறியா இல்லையா?' இடைமறித்து கோதை குரல் உயர்த்த விழி நிமிர்த்தி கோதையின் முகம் பார்த்த வேதா, என்ன தோன்றியதோ அவளை பின் தொடர்ந்தாள்.

மொட்டை மாடியில் சென்று அமர்ந்துக்கொண்டாள் கோதை. அவள் கையில் ஒரு பாத்திரம்.

'சாதம் கலந்துண்டு வந்திருக்கேன். அப்பா நீங்களும் வாங்கோ. சாப்பிடலாம்....'

'நேக்கு பசிக்கலைமா.....'

'இப்போ என்ன ஆயிடுத்துன்னு பசிக்கலைங்கறேள்? அதுக்கு மேலே உங்க பெரிய பொண்ணு. ஏனோ மூஞ்சிய தூக்கி வெச்சுண்டு உட்கார்ந்திண்டிருக்கா. இப்போ நீங்க ரெண்டு பேரும் சாப்பிடலைன்னா நான் ரெண்டு நாளைக்கு சாப்பிட மாட்டேன் சொல்லிட்டேன்'

அதற்கு மேல் வாதிட விரும்பாமல் இருவரும் அவள் எதிரில் வந்து அமர்ந்துக்கொண்டனர்.. பாத்திரத்தில் இருந்த சாதத்தை உருட்டி உருட்டி இருவர் கையிலும் கொடுக்க ஆரம்பித்தாள் கோதை. முன்னால் எப்போதோ அவர் மனைவி உயிருடன் இருந்தபோது இப்படி சாப்பிட்ட ஞாபகம் அவருக்கு. நெகிழ்வுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் அப்பா. ஏதேதோ எண்ண ஓட்டங்களில் அவர் கண்ணில் நீர் கட்டிகொண்டது.

அவர் முகத்தை பார்த்து  'அப்பா.....' இதமான குரலில் அழைத்தாள் கோதை. 'நீங்க தேவை இல்லாம மனசை குழப்பிக்கறேளோன்னு தோண்றதுபா'

'இல்லமா .....நேக்கு... நேக்கு என்னமோ மனசுக்கு பயமா இருக்குமா...' அவர் கொஞ்சம் தழுதழுத்த குரலில் சொல்ல ஒரு பாசமான தந்தையின் மகளாக வேதாவின் அடி மனம் பதறியது.

'அய்யோ.... இதற்கே என் அப்பாவின் கண்களில் கண்ணீர் வழிகிறதே. நான் இதைவிட அதிகமான வலியை அவருக்கு கொடுக்கப்போகிறேனே...'

You might also like - Manathora mazhai charal... A family oriented romantic story 

'நீங்க சாப்பிடுங்கோ முதல்லே அப்புறம் நான் சொல்றேன்' கோதை சாதத்தை கொடுக்க வேதாவும் அப்பாவும் சாப்பிட்டபடியே அவளையே பார்த்திருந்தனர்.

'அப்பா.... சாயங்காலம் ஏதோ விளையாட்டுக்கு பேசிண்டு இருந்ததை போய் நீங்க பெருசா எடுத்துக்கறேள்ன்னு தோண்றதுபா. அக்கா மேலே மட்டும் இல்லபா நேக்கு கோகுல் மேலேயும் நம்பிக்கை இருக்குபா. அவ்வளவு பெரிய பணக்காரா பிளஸ் டூ கூட பாஸ் பண்ணாத என்னை எதுக்குபா தேடி வரணும் சொல்லுங்கோ....' என்றாள் கோதை.

'நேக்கு அதுதான்மா பயமா இருக்கு..... அவா பணக்காரா.... யோசிச்சு பார்த்தா நான் அவசர பட்டுட்டேனோன்னு தோண்றது மா... 'அப்பாவின் மனதின் ஓரத்தில் கொஞ்சமான அவ .நம்பிக்கை விதைகள் விழுந்திருந்தன. அவர்கள் பணக்காரர்கள் என்பதாலேயே இன்னமும் ஆழமாக.....

கோதையால் அப்பாவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். 'என்னதான் மிக சாமர்த்தியமான, உலகம் அறிந்த பெண்ணாக கோதை இல்லாவிட்டாலும் கோகுலிடம்  எந்த தப்பும் இருக்க முடியாது என்று பெண்ணான அவளின் உள்மனம் அவளுக்கு சொல்லிக்கொண்டேதான் இருந்தது. ஆனால் இதை அப்பாவுக்கு எப்படி புரியவைப்பது.?

'இந்த அப்பாக்கு பெரிய வசதி எல்லாம் இல்லைமா. ஆனா என் பொண்கள் எப்பவும் சந்தோஷமா இருக்கணுன்னு ஆசை மட்டும் இருக்குமா. அதுகள் வாழ்க்கை தப்பா போயிடுத்துன்னா அதை சரி பண்ற சக்தி கூட நேக்கு இருக்கான்னு...' அப்பா பேசிக்கொண்டே இருக்க வாயில் இருந்த சாதத்தை கூட விழுங்க முடியாமல் கண்களில் கண்ணீர் கட்டிக்கிடக்க அப்படியே அமர்ந்திருந்தாள் வேதா.

'அப்பா... ஏம்பா? சரி மத்த எல்லாத்தையும் விடுங்கோ... நீங்க மந்திரம் சொல்லி மனசார அவா நன்னா இருக்கணும்னு நினைச்சிண்டு எத்தனை பொண்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்கேள்? அப்படி  இருக்கறச்சே உங்க பொண்களுக்கு தப்பா எதுவும் நடக்காதுபா....' கோதை சொல்ல, கண்களில் நீர் பளபளக்க அவளை பார்த்தார் அப்பா.

'தினமும் கண்ணனை சேவிக்கறேளோன்னோ அவன் எங்க கூடவே நிற்பான் பா...'  கோதை உறுதியாக சொல்ல மனதில் புதிதாக ஒரு நம்பிக்கை பிறந்தது போலே இருந்தது அப்பாவுக்கு. மறைந்து போன தனது மனைவி நேரில் வந்து சொல்வதை போல் ஒரு உணர்வு அவருக்கு.  அதே நேரத்தில் பொங்கி வழிந்த கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் அப்படியே உடைந்தாள் வேதா.

'அட ராமா... நோக்கு என்னாச்சு' கோதை கேட்க, அவளது மன பாரத்தை வெளியில் சொல்ல முடியாமல் ஒன்றுமில்லை என அவள் இடம் வலமாக தலை அசைக்க, அவள் பயந்து விட்டாள் என்ற எண்ணத்தில்......

'எல்லாம் சரியா நடக்கும்மா. நீ கவலை படாதே... இப்போ கோதை பேசினது நேக்கு உங்க அம்மாவே வந்து பேசினா மாதிரி இருந்ததும்மா..... கண்ணன் பார்த்துப்பான். எல்ல்லதையும் கண்ணன் பார்த்துப்பான்....' அவள் தலை வருடியபடி அப்பா சொல்ல அப்படியே அவர் மடியில் சாய்ந்து கண் மூடிக்கொண்டாள் வேதா. 'நான் பேசாமல் அப்பா சொல்வதையே ஏற்றுக்கொள்ளவா?' அவள் மனம் அலைபாய துவங்கியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.