(Reading time: 14 - 27 minutes)

"ய்யோ இப்போ என்ன பண்ணுவது?.."

"ஒன்னும் பேசாதே.. நல்லபடியா கல்யாணம் பண்ணிண்டு புருஷன் வீட்டுக்கு போ.. வீணாக குழம்பாதே.."

மனம் பரிதவிக்க மஹதி,"நீ என்ன சொல்லிட்டே..எனக்கு ராத்திரி தூக்கம் இல்லை இதை படித்து விட்டு..", என்றாள் கண்களில் நீர் ததும்ப..

மஹதியை அனணத்து தட்டி கொடுத்த பைரவி.. "என்ன நீ குழந்தை மாதிரி அழறே..போ.. போய் ஆற வேலையை பார்ப்போம்.. இதோ இன்னும் கொஞ்ச நேரத்துலே வீடு நிறைய மனுஷா வரப்போறா.. உன் அக்காலாம் ஏற்கனவே வந்தாச்சு.. இன்னிக்கு சுமங்கலி பிரார்த்தனை வச்சிருக்கு...இப்போ போய் கலங்கறயே.." என்றபடி அவளை சமாதானப்படுத்தினாள்.

"சரி சரி வா போகலாம்", என்று மஹதியின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு படியிறங்களானாள் பைரவி.

கையை பிடித்தபடி இறங்கும் பைரவியை பார்த்தவளுக்கு, 'இவள் எவ்வளவு எளிதாக விஷயங்களை கையாள்கிறாள்.. இத்தனைக்கும் நம்மை விட சின்னப் பெண், ', என்று நினைத்தாள்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நன்றாய் பழகியதாலோ என்னமோ இருவருக்குள்ளும் எந்த வித பசாங்கும் இல்லாத ஒரு வித பாசமும் நட்பும் அழகாய் மலர்ந்திருந்தது.. வசந்த்துடனும் அப்படி தான்,

மஹதிக்கோ அஜய் மேல் ஒரு வித இனம்புரியா உணர்வே அதிகமாக இருந்தது.. அவள் எண்ணத்தின் நாயகனே எதிரே வந்த வண்ணம் இருந்தான்,              

"படி இறங்கும் போதே எதிரே வந்தான் அஜய்,

"மஹதி அது என்ன பாட்டு.. வாராயோ தோழி..ன்னு கையை பிடிச்சுண்டு உன் ஃப்ரெண்ட் உன்னை கூட்டிண்டு வரா..", என்று வம்பிழுத்தான்.

"அஜய், இன்னிக்கு வெறும் சுமங்கலி பிரார்த்தனை தான்..சோ அந்த பாட்டெல்லாம் இன்னும் ரெண்டு நாளைக்கப்புறம்தான்..", என்ற பைரவியிடம்.

"ம்ம்.. இன்னும் ரெண்டே நாள் தான் அப்புறம் மஹதி மாமியாரத்துக்கு போயிடுவா.. இந்த வீடே காஞ்சு போய் க்ரீனா இல்லாம போயிடும்..ஏதோ கண்ணுக்கு குளிர்ச்சியா ரெண்டு பொண்கள் இருந்தேள்..அப்புறம் எனக்கு சென்னை போர் தான்..". என்று பகிரங்கமாய் சைட் அடித்தான் அஜய்.

"போதும் அஜய் வழியாதே..உன் ரூட்டே தனிங்கறது எனக்கு நன்னாத் தெரியும்..சோ. கட் தெ க்ராப்..", என்று கூறி அவனை ஒரு பக்கமாக தள்ளிவிட்டு கீழே போனாள் பைரவி.

வீட்டிற்குள் நுழைந்தவர்கள்..சாரதாவும் ராமமூர்த்தியும் கையை பிசைந்தபடி நின்றிருப்பதை கண்டார்கள்.

பைரவி ஒன்றும் பேசாமல் கூடத்தில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டாள்.

வசந்த் ஒரு பக்கமாக உட்கார்ந்திருந்தான்.

ரஞ்சனியும் கல்யாணியும் முகம் சிவக்க தங்களுக்குள் ஏதோ முணுமுணுவென்று பேசிக் கொண்டிருந்தனர்.

"என்னம்மா ரஞ்சு..ஆத்துக்கு பெரிய பொண்ணு நீ நீயே இப்படி பேசினா எப்படி?", என்று வருத்தத்துடன் கேட்ட தந்தையை பார்த்து,

"ஆமாம்ப்பா நான்னா உங்களுக்கு அவ்வளவு உசத்தி இல்லை?..எப்பவும் ஆத்துக்கு பெரிய பொண்ணுன்னே சொல்லி என்னை ஏய்ச்சி காட்டறதே வேலையா போச்சு உங்களுக்கு...அங்கே என்னடான்னா உங்க மாப்பிள்ளை தாண்டவம் ஆடறார்.. பத்து லட்சம் கேட்டேன் பிஸாத்து பணம்..அது தர மாட்டேன்னிட்டு காரு நகைன்னு தூள் கிளப்பறார் உங்கப்பா..எப்படி வந்துதுன்னு கேக்கறார்? சொல்லுங்கோ?. என் கிட்ட பதில் இல்லை..", என்று விசும்பினாள் ரஞ்சனி.

"நீ ஏண்டி அழறே..அப்பா அம்மாக்கு என்னிக்கும் மஹதியும் வசந்தும் தான் உசத்தி.. உனக்காவது பரவாயில்லை உங்காத்துக்காரர் நியாயமா எல்லாத்தையும் பட்டு பட்டுன்னு கேட்கறார்..ஆன்னா எங்காத்து மனுஷா மொத்த பேரும் இவா கையிலே.. என்னமோ நான் தான் இவாளை கசக்கி பிழியறாப்போலே பேசுவா..எல்லாம் என் விதி..", என்று அலுத்து கொண்டாள் கல்யாணி.

"அக்கா ஏங்கா இப்படி பண வெறி பிடிச்சு ஆடறேள் ரெண்டு பேரும்?. அப்பாம்மா கஷ்டம் கொஞ்சம் கூடவா புரியலை?.. ஏங்க்கா இப்படி பண்ணறேள் ரெண்டு பேரும்?? ஆத்துலே ஒரு நல்ல காரியம் நடக்கப்போறது.. இப்படி மூஞ்சியை தூக்கிண்டு கலாட்டா பண்ணா எப்படி?", என்ற வசந்தை பார்த்து ஒரு முறை முறைத்த கல்யாணி,

"வாடாப்பா இன்னமும் வால் ஆடலையேன்னு பார்த்தேன்.. அப்பா அம்மாவை ஒன்னு சொல்லிடப் படாதே.. உடனே எங்கேன்னு வரிஞ்சு கட்டிண்டு வந்துடுவியே.... நாட்டாமை நீயே தீர்ப்பு சொல்லு இப்போ..நாங்க கேக்கறதுலே என்ன தப்பு இருக்கு?.. நாலு பசங்கள்ல ஒருத்திக்கு மாத்திரம் கார், அம்பது பவுன் நகைன்னு தரா..எங்களுக்கு இருபது பவுன் போட்டு ஓட்டி விட்டுட்டா.. குழந்தைகளுக்கு அஞ்சு பவுனும்..எப்படியும் இருபத்தி அஞ்சு பவுனுக்கு மேல ஒரு குந்து மணி கிடையாது..நாங்க கேக்கறோம்.. ஒன்னு எங்களுக்கும் மீதி பவுனை குடு இல்லாட்டி அவளுக்கும் இருபத்தி அஞ்சு பவுன் போடுன்னு சொல்லறோம்..அப்படி கஷ்டப்பட்டு ஏன் அம்பது பவுன் போடனும்? நீயே சொல்லு.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.