(Reading time: 25 - 50 minutes)

மாடி ஏறியதும் நேர் எதிரில் தெரியும் கதவு மாடியிலிருக்கும் அறைக்கானது. இடதுபக்க கதவு மொட்டை மாடிக்கு செல்லும் வழி. இவள் மாடி படியேறும் போதே அறைக் கதவை திறந்து வைத்தபடி அங்கு நின்றிருந்தாள் விஜிலா….

அவளை கண்டதும் இயல்பாய் ஒரு புன்னகை இவளிடம்…. “எந்திருச்சுடீங்களா விஜிலா?...இப்ப எப்டி இருக்கீங்க? ஃபீலிங் பெட்டர்?.....குட்டிப்பையன் என்ன சொல்றார்? உங்களுக்கு சாப்ட எதாவது எடுத்துட்டு வரட்டுமா..?” கேட்டுக் கொண்டே இவள் படியேற….

அவளோ அவசரமாக வந்து இவளது இரு கைகளை பிடித்து தானிருந்த அறைக்குள் கூட்டிப்  போனவள்…. “அவங்கெல்லாம் போய்ட்டாங்கதான மனோ?...தயவு செய்து நான் சொல்றத கேளு….நீயும் போய் அந்த வீட்ல மாட்டிகிடாத….என்னை மாதிரி ஏமாந்து வந்து நிக்காத…. அந்த மித்ரன் உனக்கு வேண்டாம் மனோ…..அவங்க குடும்பமே அப்படித்தான்…….விரும்புன ஜாமனை என்ன விலை கொடுத்துனாலும் வாங்குவாங்க…..போரடிச்சதும் அதை அப்படியே தூக்கி தூரப் போட்டுடுவாங்க….. உயிரில்லாத ஜாமானைப் பத்தி விஷயம் இல்லை….ஆனா கல்யாணம் செய்ற பொண்னுங்களையும் அவங்க அந்தமாதிரி ஜாமான் லிஸ்ட்ல தான் வச்சிருப்பாங்க…..”

கண்ணில் கண்ணீர் வடிய கை கால்கள் நடு நடுங்க உதடு துடிக்க விஜிலா பேசிக் கொண்டு போக….திக்ப்ரமித்துப் போய் நின்றிருந்தாள் மனோ….

“என்னாச்சு விஜிலா….? ஏன் இப்டி சொல்றீங்க….? மித்ரனை உங்களுக்கு தெரியுமா? முதல்ல உட்காருங்க நீங்க..” நடுங்கியவளை தன் கைபிடியாக நடத்தி அங்கிருந்த கட்டிலில் அமரச் செய்தாள் மனோ…

“மித்ரனை நான் இதுவரை நேர்ல பார்த்தது இல்ல…. ஆனா இப்ப வந்த அவங்க அம்மாவை நல்லாவே தெரியும்…..அவங்கதான் என் எக்‌ஸ் ஹஸ்பெண்ட் மிஸ்டர் நேச வர்ஷனோட அம்மா…. எனக்கு இவ்ளவு நாளும் மாமியாரா இருந்தவங்க….”

“வாட்????” அதிர்ந்து போனாள் மனோ…இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்????

“என்ட்ட எதையும் கேட்காத மனோ….யோசிச்சு சொல்ல மனமும் இல்லை….தெம்பும் இல்ல….ஆனா அந்த நேச வர்ஷன் என்னை திட்டம் போட்டு துரத்தி துரத்தி காதலிச்சு கல்யாணம் செய்தது நிஜம்….. அந்த கல்யாணத்துக்காக என் குடும்பம் என் சொந்தம் எல்லாத்தையும் பகைச்சுகிட்டு நான் போனது முட்டாள்தனம்….. இப்ப நடு தெருவுல யாரும் இல்லாம எதுவும் இல்லாம….குழந்தைய விட்டுட்டு சாகவும் மனசு வராம நான் நிக்றது நிதர்சனம்…. இத்தனைக்கும் நேசனை அவன் அம்மா எப்பவும் தலைல தூக்கி வச்சுதான் ஆடுவாங்க… என் மகனை மாதிரி வருமா…ரொம்ப நல்லவன்னு……ஆனா அந்த மித்ரனை பத்தி அப்பவுமே எதுவும் நல்லதா நான் கேள்வி பட்டதில்லை….. நல்லவங்கன்னு நம்புனவங்களே இப்டி துரத்திட்டாங்க…..இதுல மித்ரனை நம்பி போய் மாட்டாத மனோ….” சொல்லி முடிப்பதற்குள் முகம் வெளிறி,  வியர்வை பெருக்கி, கிடு கிடுத்துப் மயங்கி சரிந்தாள் விஜிலா…

குழந்தை பெற்ற பச்சை உடம்பல்லவா…..அதீத படபடப்பை அவளால் தாள முடியவில்லை….

“அம்மா…… அம்மா இங்க வாங்கம்மா…” மனோ அம்மாவை பதறி கூப்பிட்டுக் கொண்டே அவசர அவசரமாக அறையின் மூலையிலிருந்த தண்ணீரை எடுத்து வந்து இவள் முகத்தில தெளிக்க…அதற்குள்…. மனோவின் இத்தனை பெரிய சத்தத்தில் குழந்தை விழித்து வீரிட்டு அழ……

அடுத்து அம்மா வந்து …..விஜிலா கன்னத்தை தட்டி மயக்கம் தெளிவித்து எழுப்பி… குழந்தையை கையில் வைத்து ஆட்டியபடி….. “மனோ  ப்ரெட் பாக்கெட்டை திறந்து விஜிக்கு சாப்ட கொடு….அதோட நீ போய் ஃப்ரிட்ஜ்ல  பால் பாக்கெட் இருக்கு, காய்ச்சி எடுத்துட்டு வா….” என ஏவினார்.

மனோ முதல் காரியமாக ப்ரெட்டை எடுத்து கொடுக்க “குழந்தைக்கு ஃபீட் பண்ணனும்னா நீ முதல்ல ஒழுங்கா சாப்டு “ என்ற அம்மாவின் அதட்டலில் விஜிலா அதை வாங்கிக் கொள்ள…. இவள்  சமயலறைக்கு ஓடினாள் பால் காய்ச்ச….

அடுத்து மனோ பாலோடு விஜிலா அறைக்கு சென்றால்….”அவ குடிச்சுட்டு குட்டிப்பையனுக்கு ஃபீட் பண்ணுவா….நீ போய் தியாட்ட பேசு……நீ பேசுன பிறகுதான் அகிய பேச சொல்லனும் “ என அம்மா அனுப்பி விட்டார்……

அதுவும் சரிதான்…அழும் குழந்தையை கவனிப்பதுதான் இப்போது முக்கியம்….. மனோ தியாவிடம் பேசச் சென்றாள். இதுக்கும் மேல பேசாம இருந்தாலும் திரவியா வகையில் என்னமோ ஏதோ என்று எண்ணக் கூடும்…..

தியாவோ எக்கசக்க சந்தோஷத்திலும்….இவள் மீது மட்டுமாக சிறு மனதாங்கலிலும் இருந்தாள்.

“ப்ளான் பண்ணி என்னை ஏமாத்தி அனுப்பிட்டு நீ மட்டும் வராம இருந்துகிட்ட என்ன?” என ஆரம்பித்த தியாவிடம் இவளால் அழுத வடியவெல்லாம் முடியவில்லை….

“மங்குனி அமைச்சர் மாதிரி இருந்துட்டு அமுக்குனியா அத்தனை வேலையும் பார்த்துட்டு நான் உன்னை ஏமாத்திட்டேன்னு கதை சொல்லிகிட்டு அலையுற என்ன?.....நாத்தனாராங்கும் நான்….மரியதையா உன் லவ் ஸ்டோரியல்லாம் ஒழுங்கா அப்டேட் பண்ணு….இல்லைனா என் கொடுமைய அனுபவிக்க வேண்டி இருக்கும்…..”

ஒரு வழியாய் தியாவிடம் பேசி முடித்து வரும் போது இவளுக்குமே மனது ப்ரச்சனைகளை ஒதுக்கி வைத்து சற்று இலகுவாகி இருந்தது….

போய் விஜிலாவைப் பார்த்தால் அசந்து சோர்ந்து அவள் தூங்கிக் கொண்டு இருந்தாள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.