(Reading time: 19 - 38 minutes)

"இன்னும் எனக்கு பிரசவத்துக்கு பதினைந்து நாள் இருக்கு.. அதுக்குள்ளேயே எனக்கு குழந்தை பிறந்துடுத்து.. மாமியாருக்கு இன்னும் தகவலே சொல்லமுடியலை.. அவாத்துல எல்லோரும் மதுரையிலிருந்து எங்கேயோ ஷேத்ராடனம் போயிருக்கா.. எனக்கு வலி வந்து இதோ இரண்டு நாள்களுக்கு முன் குழந்தையும் பிறந்தது..  ஆனால்,...." மீண்டும் அழத் தொடங்கினாள் கமலா...

"என்னாச்சு கமலா.. அழாதே..  இத்தனை நாள்ல எத்தனையோ சமாளிச்சியிருக்கே.. அதான் ராஜா மாதிரி ஆண் குழந்தை பொறந்தாச்சே.. இனிமேல் பாரு, விட்டு போன சொந்தமெல்லாம் இனிமேல் ஒன்னா சேர்ந்துடும் பாரு"  என ஆறுதலாக சொன்ன சாரதாவை,

"நானும் அப்படித்தான் நினைச்சேன் சாரதா... ஆனா என்னோட குழந்தை பிழைக்குமா?"  கேளிவியாக நோக்கியவளை,

"என்ன சொல்லறே நீ?.. ஆமாம் உன்னோட குழந்தை இப்போ எங்கே?.. நானும் உன்னோட இத்தனை நேரமா பேசிண்டு இருக்கேன்?.. குழந்தையை குளிப்பாட்ட நர்ஸ் எடுத்துண்டு போனாளா என்ன?"

"இல்லை சாரதா.. என் குழந்தைக்கு பொறக்கும் பொழுதே என்னவோ பிராப்ளமாம்... கழுத்துல கொடி சுத்திண்டு மூச்சு திணறல் அதிகமாயிருந்தது.. கஷ்டப்பட்டு தான் எனக்கு பிரசவம் ஆச்சு.. எனக்கு ரொம்ப வருஷம் கழிச்சு உண்டானதுல, என்னென்னவோ கர்பப்பை பையில ப்ராப்ளமாம்.. எப்படியோ குழந்தையை காப்பாத்தி என்னையும் காபாற்றிட்டா... இனிமேல் எனக்கு குழந்தையும் பிறக்காதாம்.. கொஞ்ச நாள் கழிச்சு என் கர்ப்பப்பையே எடுக்க வேண்டி வரலாமாம்"...

"பிறந்த குழந்தையை இன்னும் ஏதோ இன்குயூபெட்டரில் வைச்சி பார்த்துண்டு இருக்கா.. எங்காத்துக்காரரே, டாக்டர் தானே?.. எனக்கு பிரசவம் பார்த்தவாளுமே எங்களுக்கு தெரிஞ்ச பெண் டாக்டர்தான்.. என்னென்னவோ சொல்லறா.. இன்னிக்கு பொழுது தாண்டியாச்சுன்னா பரவாயில்லையாம்.. இல்லைன்னா அவாளாலே ஒன்னும் பண்ண முடியாதாம்"..

"அந்த ஈஸ்வரன் என்னை எடுத்துண்டு போயிருக்க கூடாதா?.. பாரு நான் கல்லு குண்டு மாதிரி உட்கார்ந்துண்டு இருக்கேன்.. இன்னும் என்ன வச்சிருக்கு எனக்கு.. இனிமேல் எனக்கு வாழ்க்கையில என்ன இருக்கு, சொல்லு.. ஏற்கனவே என் மாமியார் என் குடும்பத்தை எப்பப்பாரு மலட்டு குடும்பம்ன்னு சொல்லி வைவா.. இனி கேட்கவே வேண்டாம்..  இந்த குழந்தை மாத்திரம் தக்கலைன்னா, நான் உசிரோட இருக்கரதுல அர்த்தமே இல்லை.. அரளி விதையை அரைச்சி முழுங்க வேண்டியதுதான்"  என்ற கமலாவிற்கு,

"கமலி, என்ன பேசறே?.. உனக்கே நன்னா இருக்கா?.. உனக்கு ஏதாவது ஆனால், நான் மட்டும் உயிரோடு இருப்பேனா என்ன?" என்று அதட்டி விட்டு, "ஒரு டாக்டர் பெண்டாட்டியா தைரியமா இருக்க வேண்டாமா?.. நம்ம குழந்தைக்கு ஒன்னும் ஆகாது.. நீ வேணால் பாரேன்.. உன் உடம்பை பார்த்துக் கொள்ளும்மா.. அலட்டிக் கொள்ளாதே"  ஆறுதலாக அப்பொழுது அங்கே வந்த விஸ்வனாதன் சொல்ல...

"பார், இப்படி அக்கறையா சொல்லற ஆத்துக்காரர் இருக்கும் பொழுது உனக்கு என்ன கவலை  கமலா?.. கவலைப்படாதே உன் குழந்தை நல்லபடியா பொழைச்சிப்பான் பாரு"  என்ற சாரதா,

"ஹா...   அம்மா வலிக்கறதே"  என்று சாரதா சட்டென்று வயிற்றை பிடித்துக் கொள்ள,

"கமலா... இந்த பொண்ணு யாரு.. பிரசவ வலி வந்துடுத்து போல இருக்கே... ஒரு நிமிஷம் நீ அவளை பாரு.. நான் வெளியே போய் டாக்டரை கூப்பிடுகிறேன்"  என ஒரு பொறுப்பான மருத்துவராய் அங்கிருந்து விரைந்து வெளியேறினார் விஸ்வனாதன்.

பெண் மருத்தவரை அழைக்க விரைந்த தன் கணவர் விஸ்வனாதன் கேட்டுக் கொண்டது படி, கமலம் சாரதாவை தாங்கிப் பிடித்துக் கொண்டு அருகேயிருந்த மர பெஞ்சில் உட்கார வைத்தார்.

"சாரதா, கொஞ்சம் வலி பொறுத்துக்கங்கோ.. உங்களுக்கு பிரசவ வலி நன்னா ஆரம்பிச்சிடுத்துன்னு நினைக்கிறேன்.. இன்னும் கொஞ்சம் நேரத்துல அவர், டாக்டரை அழைச்சிண்டு வந்துடுவார்.. லேபர் ரூமுக்கு அழைச்சிண்டு போயிடுவா.. ஆனா உங்காத்து மனுஷா யாரையும் இன்னும் காணலியே?"  என பதட்டப் பட்டார் கமலா.

"அம்மா... வலி உயிர் போறது கமலா.. தாங்கவே முடியலை"  என வயிற்றை பிடித்துக் கொண்ட சாரதா,

"கமலா.. ஒரு உதவி செய்யுங்கோ.. ஒருவேளை என் அம்மாவும், அப்பாவும் வரதுகுள்ளே என்னை பிரவிசவிக்கிற ரூமுக்கு அழைச்சிண்டு போயிட்டா,  அவா வந்த பின்னாலே விஷயத்தை சொல்லிடுங்கோ.. இல்லாட்டி, அம்மா பாவம் என்னை காணாம பதறிப் போயிடுவா"  என்றவள், வலி அதிகமாக உணர்ந்து  தன் வயிற்றை பிடித்துக் கொண்டு துடிக்க,

அந்த சமயத்தில் விஸ்வனாதனுடன் உள்ளே வந்தார் டாக்டர் மாலதி..

பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கும் சாரதாவின் நாடி பிடித்து பார்த்து விட்டு, தன்னுடன் உடன் வந்த செவிலியிடம், "இவர்களை லேபர் ரூமுக்கு அழைத்துக் கொண்டு மெதுவாக போங்க.. நானும் தயாராகி வந்து விடுகிறேன்"  என்று சொல்லிவிட்டு, சாரதாவிடம் திரும்பி, "தைரியமாக போங்கம்மா.. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கு குழந்தை பிறந்து விடும்" என்று அவளை அனுப்பிவிட்டு, தன் மருத்துவ நண்பன் விஸ்வனாதனிடம் தலையாட்டி விட்டு,  அவசர அவசரமாக வெளியேறினார்.

கமலா சாரதாவின் கையை பிடித்துக் கொண்டு, "சாரதா.. நீங்க கவலைப் படாமல் உள்ளே போங்கோ..  நான் உங்க மனுஷாளுக்கு அவர்கள் வந்தவுடன் தகவல் சொல்லி விடுகிறேன்"  என்று சொல்ல, தலையாட்டியபடியே செவிலி கையை பிடித்துக் கொண்டு பிரசவ அறைக்குள் சென்றார் சாரதா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.