(Reading time: 19 - 38 minutes)

வர்கள் சென்றவுடன் இரண்டு நாளுக்கு முன் தான் பிரசவித்திருந்த கமலா அத்தனை நேரமாக சாரதாவுடன் பேசிக் கொண்டிருந்தவர் அசதி மிகுதியால், தனது படுக்கையில் சாய்ந்தார்.

விஸ்வனாதன் அவளருகே அமர்ந்து கொண்டவர், "கமலா, உன்னை பார்த்தாலே ரொம்ப களைச்சித் போய் தெரியரே.. ஏதாவது சாப்பிடறயா?.. சமயத்துல உன்னை பார்த்துகறத்துக்கு யாருமே இல்லை பாரு.. அம்மாவுக்கு தகவலே சொல்ல முடியலே?.. அவா இருந்தாலாவது உனக்கு ஏதோ பத்திய சாப்பாடு பண்ணி கொடுத்திருப்பா.. இப்போ இந்த ஹாஸ்பிடல் சாப்பாட்டேயே கொடுக்க வேண்டியதா போச்சு பாரு.. நான் வேணா ஆத்துக்குப் போய் எதையாவது சமைச்சி எடுத்துண்டு வரட்டா"  என்றவருக்கு,

"பரவாயில்லேன்னா..  அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. எப்படியாவது அம்மாவுக்கு தகவல் கொடுக்க பாருங்கோ"  என்ற கமலம் கண்களை  மூட,

ஏதோ அரவம் கேட்டு திரும்பினார் விஸ்வனாதன்.

ஒரு கையில் சாப்பாட்டு கேரியர் கூடையும், இன்னொரு கையில் மஞ்சள் பையில் பிதுங்கிய துணிகளையும் அடைத்தபடி அங்கே வந்த அந்த பெரியவர்களை கண்ட விஸ்வனாதன், சற்று முன்னர் பிரவச வார்ட்டுக்குள் சென்ற சாரதாவின் பெற்றோர்களாகத்தான் அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தவர்,

"நீங்கள், அந்த பக்கம் படுத்திருந்த சாரதாவின் பெற்றோர்களா?"  என்று அவர்களிடம் கேட்டு விட்டு,

"உங்க பெண் சாரதாவுக்கு பிரசவ வலி அதிமாகி, அவர்களை உள்ளே அழைத்துச் சென்று விட்டார்கள்.. நீங்க வந்தால் தகவல் சொல்ல சொன்னார்கள்" என்றார் விஸ்வனாதன்.

"ஓ.. அதுக்குள்ளே வலி எடுத்துடுத்தா.. நேரமாகும் என்றாரே டாக்டர்... நான் ஆத்துக்குப் போயிருந்தேன்.. ரொம்ப நன்றிப்பா.. ஆமாம் இவா உங்காத்துக்காரியா?.. பிரவிச்சிருக்காளோ?"  என்று கேட்ட சாரதாவின் அன்னைக்கு,

"ஆமாம் மாமி.. நான் விஸ்வனாதன், இவ என்னோட மனைவி, கமலா.. நான் காது, மூக்கு தொண்டை எல்லாம் பாக்கிற டாக்டரா இருக்கேன்.. கமலாவுக்கு முதல் பிரசவம் இது.. பத்து வருஷம் கழிச்சு ஆண் குழந்தை இப்போ பிறந்திருக்கு"  என்று பெருமூச்சு விட்டார்.

"ரொம்ப சந்தோஷம்ப்பா"  என்றவர்,  "கொஞ்சம் டாக்டரிடம் போய் விஜாரிச்சுண்டு வாங்கோ.. சாரதாவுக்கு எப்ப குழந்தை பிறக்கும் என்று" தன் கணவரிடம் சொல்லி அவரை வெளியே அனுப்பியவர்,

"அந்த பகவாந்தான் என் குழந்தைக்கு இந்த வாட்டியாவது ஆண் குழந்தையை கொடுத்து ரட்ஷிக்கனும்", என்ற சாரதாவின் தாய் விசாலம்,

"கமலா ஏன் சோர்ந்து படுத்துண்டு இருக்காள்.. சாப்பாடு கொடுத்தேளா?.. அவளோட துணைக்கு பொம்மனாட்டிகள் யாரும் இல்லையா?.." என கேட்க,

"இவளுக்கு தலை பிரசவம்.. சொன்ன தேதிக்கு ஒரு இருபது நாளுக்கு முன்னாலேயே ஆகிவிட்டது.. என்னோட அம்மா என் தங்கை ஆத்துக்கு அவ பையனுக்கு உடம்பு சரியில்லேன்னு போனா.. அப்படியே என்னவோ நேர்த்திகடன் பண்ண ஷேத்ராடனம் போயிருக்கா..  நாளைக்கு மதுரைக்கு திரும்பி வந்துடுவா.. இன்னும் தகவல் சொல்ல முடியலை.. அவ அண்ணாக்கும் விஷயம் தெரியாது.. நீங்க கமலாவை கொஞ்சம் பார்த்துக்கறேளா. நான் இங்கே கீழே இருக்கற கடையில சாப்பிட ஏதாவது வாங்கிண்டு வரேன்" என தயக்கமாக உதவி கேட்க,

"இதுக்கெலாம் தயங்கனமா என்ன.. எதுக்கு வெளியிலிருந்து உணவு வாங்கனும்.. உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, நானே இட்லி எடுத்துண்டு வந்திருக்கேன்.. கொடுக்கட்டுமா.. ஆத்து சாப்பாடு உடம்புக்கு ஒன்னும் பண்ணாது" என்றவர்,  ஒரு சின்ன தட்டை எடுத்து, இட்லிகளை வைத்து கொடுத்தவர்,

"டாக்டர் தம்பி நீங்களும் எடுத்துக்கோங்கோ"  என உபசரித்தார்.

அவர் பேச்சை தட்ட முடியாமல் விஸ்வனாதன் கமலாவுக்கு உணவை கொடுத்து விட்டு தானும் எடுத்துக் கொண்டார்.

"ரொம்ப வருஷம் கழிச்சு குழந்தை பிறந்துருக்கா?.. குழந்தை எங்கே காணோம்.. என்று விஜாரித்த விசாலதிற்கு,

"இல்லை மாமி.. குழந்தை பிறந்த போதே ரொம்பவும் மூச்சு திணறலோடு தான் பிறந்தது .. அதுலேயும் கழுத்துல கொடி சுத்தி ரொம்ப கஷ்டப்பட்டுதான் பிறந்தது.. குழந்தையை 'இன்குபேட்டரில் வைச்சி இருக்கா.. செயற்கையா சுவாசிக்கிற மாதிரி இப்போதைக்கு மிஷின் வைச்சி இருக்கா.. இன்னிக்கு சாயங்காலத்துக்கு அப்புறம்தான் தெரியும்.. குழந்தைக்கு என்ன நிலமைன்னு.. எங்களுக்கும் ஒன்னும் புரியலை.. இவளுக்கும் ரொம்ப வருஷம் கழிச்சி பிறந்தததுனாலே ஏதோ கர்ப்பப்பையில கோளாறாம்.. இனி வேற குழந்தை பாக்கியம் இருக்காதுன்னு சொல்லிட்டா"..

"ஒரு டாக்டரா எனக்கு இதை பற்றி தெரிஞ்சாலுமே, நானும் ஒரு மனுஷன் தானே மாமி..  ஒரு தகப்பனா, எனக்கு மனசு அடிச்சிக்கறது.. எப்படியாவது இந்த ஒத்த பிள்ளையாவது காப்பாற்றி தான்னு அந்த அம்பிகையை வேண்டிண்டு இருக்கேன்.. "  என கலங்கிய கண்களை துடைக்க, அவரைக் கண்ட கமலாவும் கண் கலங்கினார்.

"விசாலம் கமலத்தின் அருகே அமர்ந்தவர், "கலங்காதேம்மா.. நல்லபடியா உன் குழந்தை பிழைக்கும் பாரேன்.. பிள்ளை பெத்து இரண்டு நாள் கூட முழுசா ஆகலை.. இப்படி நீ கண் கலங்கினால், உடம்புக்கு தான் வரும்.. உடம்பை பார்த்துக்க வேண்டாமா நீ.. நீ கண்ணு கலங்கினா, அவருக்கும் மனசு தாங்குமா சொல்லு"  என்றவர்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.