(Reading time: 21 - 41 minutes)

டந்ததைக் கேட்ட வைஜெயந்தி, மகனை ஆத்திரம் தீரும் வரையில் அடித்துவிட்டு, “உன்னால என் அண்ணன் குடும்பமே இப்போ உயிரோட இல்லடா… உனக்கு இப்போ சந்தோஷமா?...” என புலம்ப,

அவன், தான் அவளை ஏமாற்றவில்லை என்றும், அவளை திருமணம் பேசி முடிக்கவே இன்று உன்னையும் அழைத்து வந்தேன் என கலங்கியபடி சொன்ன மகனை முறைத்த ஜெயந்தியை, கோகிலவாணி சமாதானம் செய்து பேரனை தூக்கி கைகளில் கொடுக்க, அவனை அணைத்து உச்சி முகர்ந்தார் வைஜெயந்தி…

கணவரிடம் பேசி அவரையும் அழைத்து வருவதாக சொல்லி சென்ற வைஜெயந்தியுடன் ருணதியை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே சென்ற ஜிதேந்தரை கவனித்தார் கோகிலவாணி…

அவர்கள் சென்றதும், தனதறைக்கு சென்ற ருணதி செல்போனை எடுத்து பார்த்துவிட்டு, அமைதியாக திரும்பி வருவதைக் கண்டவர், அவளை அழைத்தார்…

“என்ன பேரு வைக்கலாம்னு ஜெயந்தி கேட்டா தான?.. நீ என்ன சொன்ன அவகிட்ட?...”

“யோசிச்சு தான் அத்தை வைக்கணும்னு சொன்னேன்…” என்றாள் அவள்…

அவளை யோசனையாக பார்த்தவர், “யோசிச்சிட்டியா?...” எனக் கேட்க,

“ஹ்ம்ம்… ஆமா பாட்டி…” என்றதும்,

“நீ யோசிச்சிருப்பன்னு தெரியும்…” என்றவர், “வைஷ்ணவி குழந்தையை நீ அம்மாவா இருந்து வளர்ப்பேன்னு சொல்லி தான அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்த… இப்போ ஜிதேந்தர் வந்து அடுத்த வாரம் பிள்ளையை கேட்டா அவர் கிட்ட அவனை கொடுத்துட்டு நீ ஒதுங்கி தான போகணும்…” என சொல்ல, அதிர்ந்து நிமிர்ந்தாள் அவள்…

“நீ இப்படி அதிர்ந்து போற அளவுக்கு நான் எதையும் சொல்லலையே… உண்மையை தான சொன்னேன்… அடுத்த வாரம் வந்து கேட்பார்… அவர்கிட்ட பிள்ளையை தூக்கி கொடுத்துட்டு உன் தங்கச்சிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காத்துல பறக்க விட்டுட்டு போய்கிட்டே இரு…” என இலகுவாக அவர் சொல்ல, அவள் மேலும் அதிர்ந்தாள்…

“பாட்டி… அவன் நம்ம வைஷ்ணவி குழந்தை… நமக்கும் உரிமை இருக்கு… அவர் அப்பாவாகவே இருந்தாலும், தனியா குழந்தையை எப்படி வளர்ப்பார் அவர்?...” என கேள்வியை அவள் எழுப்ப,

“ஏன் அங்க வைஜெயந்தி இருக்குறா தான… அவ வளர்த்துப்பா… அப்புறம் என்ன சொன்ன, உரிமையா?... என்ன உரிமை… அக்கா என்ற உரிமையா?.. அது எத்தனை நாளைக்கு?..” என பதில் கேள்வியை அவளின் முன் வைத்தார் அவர்…

‘அத்தை வளர்ப்பாங்க தான்… நான் இல்லன்னு சொல்லலை… ஆனா குழந்தைக்கு அம்மா பாசம் முக்கியம் பாட்டி… அம்மா என்ற உறவு குழந்தைக்கு வேணும்…”

“சரிதான்… அப்படி அம்மா வேணும்னு நீ நினைச்சா, ஜிதேந்தரை நீ கல்யாணம் பண்ணிக்க…” என்றதும்

“பாட்டி…………..” என நெருப்பு பட்டது போல் துடித்தவளை பார்த்தவர்,

“நீ தான சொன்ன… குழந்தைக்கு அம்மா வேணும்னு… வேற ஒருத்தியை ஜிதேந்தர் கல்யாணம் பண்ணினா, கண்டிப்பா அவ இந்த குழந்தையை நல்லா பார்த்துப்பான்னு எந்த உத்திரவாதமும் கிடையாது… அதுமட்டும் இல்லாம, காலப்போக்கில, உன் அப்பாவுக்கு தோணின மாதிரி ஜிதேந்தருக்கும் தோணிடுச்சுன்னு வை, அப்போ அந்த குழந்தை நிலைமை என்ன?... அம்மாவும் இல்லாம, அப்பாவும் இல்லாம அது அநாதையா நிக்கணுமா?.. சொல்லு?... இதுக்குத்தான் நீ வைஷ்ணவிக்கு சத்தியம் செஞ்சு கொடுத்தீயா அம்மாவ இருந்து பார்த்துபேன்னு….” என அவளை பேசவிடாது அடுத்தடுத்து கேள்வியால் அவளை அடித்தவர்,

அவள் வலியோடு அவரை பார்ப்பதையும் பொருட்படுத்தாது, “நீ எதுக்காக அந்த சிலுவையை கழுத்துல போட்டிருக்கேன்னு எனக்கு தெரியாது தான்… ஆனா, நம்ம குடும்பத்துக்கு இன்னொரு காதல் கல்யாணம் வேண்டாம்னு நான் நினைக்கிறேன்...” என சொன்னதும், விழி முழுக்க நீரோடு அவரை பார்த்தவள்,

“பா….ட்….டி…. நா….ன்…..” என சொல்ல முயன்றவளை தடுத்தவர்,

“நீ எதுவும் சொல்ல வேண்டாம் நதி… என்னால இன்னொரு இழப்பை தாங்கிக்கிற தெம்பில்லை… வைஷ்ணவி பையனை அம்மாவா இருந்து நீ தான் வளர்க்கணும்… ஜிதேந்தரை கல்யாணமும் செய்துக்கணும்… இதுதான் உன்னை இத்தனை வருஷமா வளர்த்து ஆளாக்கினதுக்கு தட்சனையா நான் கேட்குறது… வேண்டுறது… தருவீயா நதி?... சொல்லு… பாட்டி தான் நான் உனக்கு… ஆனா அம்மாவா இருந்து தான் வளர்த்தேன்… இன்னொரு இழப்பை இந்த மனசு தாங்காதுடீ…. நான் சொல்லுறபடி நடந்துப்பேன்னு எனக்கு சத்தியம் செய்து கொடு நதி… செய்து கொடு…” என கேட்ட கோகிலவாணியிடம், தன்னிலையை புரிய வைக்க அவள் முயல, அவர் காது கொடுத்து கூட அதை கேட்பதாயில்லை..

“சத்தியம் மட்டும் செய்…” என்ற ஒரே பிடிவாதமாய் அவர் இருக்க,

மனதினில் எழுந்த பேரலையை மனதினுள் கஷ்டப்பட்டு அடக்கி, கண் முன் மகத்தினை கொண்டு வந்தாள்… அவன் இதை எவ்வாறு தாங்குவான்?... அவனை மறந்துவிட்டு என்னால் இருக்க முடியுமா?... என்னவன் அவன் இல்லையா?... வேறொரு வாழ்க்கை அவன் இல்லாமலா?... முடியுமா என்னால் அது?... சாத்தியம் தானா?... என பல கேள்விகளை தனக்குள் கேட்டுக்கொண்டவள், கண் முன் சிரித்த மகத்தின் முகம் நினைவு வர, அவனை நினைத்தபடியே, உறுதியுடன் கோகிலவாணியை ஏறிட்டாள் கிருஷ்ணா…

“என் தங்கை குழந்தைக்கு அம்மாவா இருந்து நான் வளர்க்குறேன்… ஆனா, என்னால யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது… அவனுக்கு அம்மாவா மட்டும் கடைசி வரை நான் வாழ்ந்துப்பேன்… அதையும் மீறி நீ எனக்கு கல்யாணம் செய்துக்கணும்னு நீ நினைச்சா, என் பிணத்திற்கு தான் கல்யாணம் செய்து வைக்கணும்…” என சொல்லிவிட்டு மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த கோகிலவாணியிடமிருந்து விலகி தனதறைக்குச் சென்று கதவை மூடினாள் அவள்…

மூடிய கதவுகளுக்கு பின்னே, அவள் உள்ளமும் மூடப்பட்ட ஒன்றாக தோன்ற, அதற்கு மேலும் அவளை வற்புறுத்த விரும்பாது, அமைதியாக இருந்துவிட்டார் கோகிலவாணி…

அவருக்கு ஒரு நம்பிக்கை… குழந்தையை வளர்க்கும் பொறுப்பை இவள் ஒப்புக்கொண்டு ஜிதேந்தரின் வீட்டுக்கு சென்றுவிட்டால், அதன் பின் அவளின் மனநிலை மாறிடும் என்ற நம்பிக்கை தான் அது…

டுத்த நாள் சீக்கிரமே கிளம்பி முகத்தில் துடைத்துவிட்ட உணர்ச்சியுடன் வெளியே வந்தவளைக் கண்டவரிடம், வெளியே போய்விட்டு சிறிது நேரம் கழித்து வந்துவிடுவதாக சொன்னவள், நேராக பார்க்கச் சென்றது மகத்தினை…

ஆறு மாதம் கழித்து திரும்பி வந்தவனிடம் ஏதேதோ காரணங்கள் சொல்லி அவன் மனதை கொன்று விட்டு, வந்து அழுது தீர்த்தாள் அவள்…

இந்நிலையில் ருணதிக்கும், ஜிதேந்தருக்கும் திருமணம் நடத்திட எண்ணிய கோகிலவாணி அதை ஜெயந்திக்கு தெரிவிக்க,

மகனிடம் அதுபற்றி அவர் கேட்டபோது, அவனும் சரி என்று சொல்ல அவருக்கும் பூரண சந்தோஷம்…

வைஜெயந்தி தனது கணவர் கேசவனிடம் வைஷ்ணவி விஷயத்தை சொல்ல, அவரோ மறுத்தார்… தன் மகன் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்க மாட்டான் என…

பாதிக்கப்பட்டது, என் அண்ணன் குடும்பம் தான்… என வைஜெயந்தி எடுத்து சொல்ல, அவருக்குள், பழைய வன்மம் எட்டிப்பார்த்தது…

வைஜெயந்தியை காதலித்த காலத்தில், கேசவனின் மீது தீராத வெறுப்பை கொண்டிருந்தார் சேஷாத்திரி… வேதாத்திரியும் அது போலவே… எனினும் தங்கையின் மனது அறிந்து சற்றே அந்த வெறுப்பை குறைத்துக்கொண்டார் வேதாத்திரி… இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாது கேசவனைப் பார்க்கும்போதெல்லாம் முறைத்த வண்ணமே இருந்தனர் சேஷாத்திரியும், வேதாத்திரியும்…

அனைத்தையும் மீறி, வைஜெயந்தியை கேசவன் கரம் பிடிக்க, சேஷாத்திரி கேவலமாக வசை பாடினார் கேசவனை… அந்த அவமானம் தந்த காயத்தோடு அங்கிருந்து வைஜெயந்தியை பிறந்த வீட்டின் சுவடே இல்லாது அழைத்துக்கொண்டு வேறொரு ஊருக்கு அழைத்துச் சென்று விட்டார் கேசவன்…

நடந்து முடிந்த நிகழ்வுகள் அவருக்கு மீண்டும் தனக்குள் உறங்கிக்கொண்டிருந்த வன்மத்திற்கு தூண்டுதலாய் அமைய, அவர் கோகிலவாணியையும், ருணதியையும் வீட்டிற்கு அழைத்துவரும்படி சொன்னார்…

அவரின் பேச்சைக் கேட்டு வைஜெயந்தியும் தனது அன்னைக்கு தகவல் சொல்ல, அவர் ருணதி, மற்றும் பேரன் சகிதம் கேசவன் வீட்டிற்கு வந்தார்…

வந்த இடத்தில், “யாரிடமோ கெட்டுப்போய் வந்த உங்க பேத்தியோட குழந்தையை என் பையன் தலையில கட்டப்பார்க்குறீங்களா?.. அது நான் இருக்குற வரை இந்த வீட்டில நடக்காது…” என அவர் பேரிடியை அனைவரின் தலையிலும் இறக்க,

வைஜெயந்தி அவரின் பேச்சைக் கேட்டு துடித்தார்…

“அவன் நம்ம பேரங்க… நம்ம ஜித்தோட ரத்தம்… உங்க பையங்கிட்ட ஏமாந்து போனது என் அண்ணன் பொண்ணுங்க…” என ஆதங்கத்தோடு அவர் பேச,

“யாருக்கு யாருடீ பேரன்… இவன் என் பேரனா?... உன் அண்ணன் பொண்ணு… யார்கிட்டயோ ஏமாந்து போனதுக்கு என் பையனா பொறுப்பு?... உன் அண்ணன் குடும்பம் இப்போ நிற்கதியா நிக்குதுதான்… பாவம் தான் உன்னோட ஒரு அண்ணனோட குடும்பம் இப்போ உயிரோடவே இல்ல… இதுல இன்னொரு அண்ணன் பொண்ணு கையில குழந்தையோட நிக்குறா… பாவம் தான்…”

“இப்படி பேசாதீங்க… அந்த கடவுளுக்கே அடுக்காது… ருணதி வைஷ்ணவிக்காக அந்த குழந்தைக்கு அம்மாவா மாறியிருக்குறா… அவளை நம்ம ஜித் கல்யாணம் செஞ்சிகிட்டா, நம்ம பேரனும் நமக்கு கிடைப்பான்… ஜித்துக்கும் நல்ல மனைவி கிடைப்பா… அந்த பச்ச மண்ணுக்கும் அம்மா கிடைக்கும்…” என கணவரிடம் அவர் கெஞ்ச

மனைவியின் கெஞ்சலில் கொஞ்சம் கரைந்தவர், ருணதியைப் பார்த்துவிட்டு சற்று நேரம் யோசித்தார்… பின், “நீ சொல்லுறதுக்கு நான் சம்மதிக்கிறேன்… ஆனா, ஒரே ஒரு கண்டிஷன்… இந்த குழந்தையை எங்கேயாவது ஆசிரமத்துல விட்டுட்டு இவ வரணும்… வந்தா, இவளுக்கும் என் பையனுக்கும் நானே ஜாம் ஜாமுன்னு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்…” என சொன்னதும், அதுவரை அமைதியாக இருந்த ருணதி வெடித்தாள்…

“என் பையனை எப்படி வளர்க்குறதுன்னு எனக்கு தெரியும்… உங்க பையனுக்கு வேற பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சு சந்தோஷப்படுங்க… வா பாட்டி…” என கோகிலவாணியை அழைத்துக்கொண்டு, கெஞ்சலோடு பின்னாடியே வந்த வைஜெயந்தியிடம், “எங்களை விட்டுடுங்க அத்தை… ப்ளீஸ்…” என சொல்லியவள், அங்கே சிலையாக நின்றிருந்த ஜிதேந்தரின் மீது அருவருப்பான வெறுப்பான பார்வையை உதறிவிட்டு, கைகளில் குழந்தையோடு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் அவள் புயலென…

தலையினில் அடித்துக்கொண்டு அழுத கோகிலவாணியிடம், “இவனுக்கு என்ன பேரு வைக்கப்போறன்னு கேட்டல்ல… கேட்டுக்கோ… இவன் பேரு துருவன்… என் வாழ்க்கைக்கு இனி இவன் தான் வழிகாட்டி…” என்றபடி அவனை தூக்கி அணைத்துக்கொண்டாள் நெஞ்சோடு…

நாட்களும் விரைந்து ஓட, மருத்துவப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கரெஸில், டிகிரி படித்துக்கொண்டே, வேலைக்கும் சென்றாள் அவள்…

அந்நேரம் திருச்சிக்கு மீண்டும் வர வாய்ப்பு ஒன்று உருவாக, அவனுடன் வாழத்தான் முடியவில்லை… அவன் வளர்ந்த இடத்தில் வேலைப் பார்க்கவாவது ஒரு வாய்ப்பு கிடைத்ததே என்றெண்ணி அங்கு வர தீர்மானித்தாள் அவள்…

கோகிலவாணியும் வைஜெயந்தியிடம் பேசி, திருச்சிக்கு வருமாறு சொல்ல, அவரும் ஜித்திடம் பேசி, அங்கே ஒரு வீட்டை விலைக்கு வாங்கி குடிபெயர்ந்தனர்…

திருச்சிக்கு கிளம்பும் முன்னர், கோகிலவாணி, ருணதியிடத்தில், அது நீ பிறந்து வளர்ந்த ஊரு, அங்க நீ கழுத்துல தாலி இல்லாம, குழந்தையோட போனா, ஊர் உலகம் என்ன சொல்லும்…?... அது உன் குழந்தை இல்ல, வைஜெயந்தியோட குழந்தைன்னு சொன்ன, வைஜெயந்தி கதையை நாம சொல்ல வேண்டி வரும்… அது தேவை தானா?... வேண்டாம்… என்றவர்,

ஒரு தாலிச்செயினை அவளிடம் கொடுத்து, இப்போதைக்கு கடவுள் முன்னாடி நின்னு இதை கழுத்துல போட்டுக்கோ… என சொல்ல, சில கணம் யோசித்தவள், சரி என அதை தனதறைக்கு எடுத்து சென்று சற்று நேரம் கழித்து திரும்பி வர அவள் கழுத்தில் அவர் கொடுத்த தாலிச் செயின் இருந்தது…

ஆனால் அவர் அறியாத ஒன்று அவள் அதில், மகத் கொடுத்த சிலுவையை தாலியை எடுத்துவிட்டு கோர்த்து போட்டிருப்பது தான்…

தொடரும்

Episode # 31

Episode # 33

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.