(Reading time: 10 - 20 minutes)

ப்போது பேசிவிட்டு வைத்தது ப்ரியாவின் ஆருயிர்த்தோழி வர்ஷினி என்னும் அம்ரிதவர்ஷினி; கல்லூரியில் கண்டெடுத்த முத்து. இருவருக்கும் கண்டதும் நட்பு (கண்டதும் காதல் மட்டுமல்ல மக்களே, நட்பும் மலரும்). பின் நான்கு வருடம் இவர்கள் கல்லூரியை கெடுத்தது போதாதென்று இவர்களை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டு விழி பிதுங்கிப்போய் நிற்கிறது ஒரு புகழ்பெற்ற கம்பெனி. இவர்கள் வந்த நேரம், கம்பெனியின் லாபம் எக்கச்சக்கமாக எகிற, ஏதோ இவர்கள் உழைத்துதான் லாபம் ஈட்டியது போல் இவர்கள் செய்த அழிச்சாட்டியம் இருக்கிறதே (சத்தியமா சொல்றேங்க, தூங்காம நாள்முழுக்க வேலை செய்தவன் கூட silentஆ தான் இருந்தான்).

அம்ரிதவர்ஷினியின் சொந்த ஊர் மல்லியின் மணம் பேசும் மதுரை என்றாலும், பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். பெற்றோர்க்கு இவளும் ஒற்றைப் பிள்ளையாய்ப் போனதாலோ என்னவோ, இவளுக்கும் ப்ரியாவிற்கும் நட்பைத்தாண்டிய ஒரு உறவு. அம்ரிதா, (இவங்க ஆளு அப்படி கூப்பிட்டதுக்கு என்னை முறைக்கிறாரு, மன்னிச்சிடுங்க சார்) வர்ஷினியின் தாய் தந்தையர் பெயர் லக்ஷ்மணன் – வைதேகி. இருவரையும் பார்ப்பவர்கள் இப்படி ஒரு கருத்தொருமித்த தம்பதியா? என கண்டிப்பாக வியப்பர். இருவரும் ப்ரியா, வர்ஷினியின் நட்பை ஆறு வருடங்களாக பார்த்ததாலோ இல்லை, ப்ரியாவின் மேல் தோன்றிய தனிப்பட்ட பாசமோ, ஏதோ ஒன்று அவளையும் தம் பிள்ளையாகவே நினைக்க வைத்தது. இப்பொழுது ப்ரியா கிளம்பிக்கொண்டு இருப்பது வர்ஷினியின் வீட்டுக்கே. இன்று வர்ஷினியின் தாய் தந்தையரின் திருமண நாள். எனவே, ப்ரியாவின் ஆலோசனைப்படி காலை கோவிலில் பூஜை, பின் ஓர் ஆசிரமத்தில் காலை உணவு. இது தான் இன்றைய நாளுக்கான அட்டவனை. இந்நேரத்தில் ப்ரியா ரெடியாகி இருப்பாள் என நினைக்கிறேன். அவளது அறைக்குள் நுழையலாமா?

ப்ரியா ஒரு மஞ்சள் நிறத்தில் பச்சை பூக்கள் தூவிய காட்டன் புடவையில் (என் கண்ணு சரியா தான் பார்க்குதா? என்ன ஒரு அதிசயம், சாரியில் இருக்காங்க) கண்ணாடியின் முன் நின்று இறுதிக்கட்ட அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தாள். முடித்துவிட்டாள் போல. தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அறையின் நடுவில் இருந்த கட்டிலின் அருகில் சென்று அதில் இருந்த ஒரு மூட்டையை உலுக்கினாள்.

“ஏய் திவி, எந்திரிடி. நான் வர்ஷ் வீட்டுக்கு போகனும்”

“தூங்க விடு ப்ரி” என ஒரு அழகிய குரல் மட்டும் வெளிவந்தது போர்வையுள்ளிருந்து. (ஓஓ அது ஒரு பெண் போல)

“கதவ லாக் பண்ணிட்டு வந்து படுடி. உனக்காக நான் காபி கூட போட்டு flaskல வெச்சுட்டேன். டிஃபன் உனக்கு மட்டும் பண்ணிடு. நான் வர்ஷ் வீட்டுல வீட்டுல தான் இன்னைக்கு முழுக்க” என்று அவள் கூறிமுடிப்பதற்கும் திவ்யா பதறியடித்து எழுவதற்கும் சரியாக இருந்தது.

“என்னது, நீ போட்ட காஃபியா? எனக்கு இன்னைக்கு ஆபிஸ் இருக்குடி. இப்படி என்ன ஹாஸ்பிட்டல் போக சொல்றியே” என அங்கலாயித்தாள்.

“என் காபிக்கு என்னடி? நல்லாதான் போடுவேன்” என சிலிர்த்தாள் ப்ரியா.

“ஆமா, நீ போடுவது தான் எனக்கு தெரியுமே. நெஸ்காஃபி சன்ரைஸ் காஃபியா டீயான்னு கேட்டியே, அதுலயே தெரியுதே”

“அது டீதானடி” என ப்ரியா கேட்டு, திவ்யா ‘ஐயோ’ என பார்த்த தருணம், அவர்களை மேலும் பேசவிடாமல் பாடியது ப்ரியாவின் அலைபேசி, வர்ஷினியின் பெயருடன்.

“வர்ஷ் கால் பண்றா. நான் கிளம்புறேன்டா. Bye” என சிட்டாய் பறந்தாள் ப்ரியா, தரைத்தளத்தில் இருக்கும் தன் இருசக்கர வாகனத்தை நோக்கி.

சரியாக ஆறரை மணிக்கு வர்ஷினியின் வீட்டிற்குள் நுழைந்தாள் ப்ரியா, “அம்மா” என்ற கூவலோடு. அவளை எதிர்கொண்டு வரவேற்றது வைதேகியம்மாள், வர்ஷினியின் தாயார். அவர் இளம்பச்சை நிறத்தில் சிறிய பார்டர் வைத்த பட்டுப்புடவை அணிந்து, மஞ்சள் பூசிக் குளித்ததற்கான அடையாளத்துடன் நெற்றியில் திலகமும் கூந்தலில் மல்லியும் வைத்திருந்தார். இவை எல்லாவற்றையும் விட அவர் முகத்தில் வசீகரமாக இருந்தது அவரது புன்னகையே. அவரைக் கண்டவுடன் கட்டிக்கொண்டு வாழ்த்துக்களைக் கூறினாள் ப்ரியா.

“இனிய திருமண நாள் வாழ்த்துகள் அம்மா. இந்த புடவை எப்படி இருக்குமா? நீங்க வாங்கித் தந்தது”

“ரொம்ப நல்லா இருக்குடா உனக்காகவே செய்தமாதிரி” என்று கூறி ப்ரியாவிற்கு தன் கண்மையினால் திருஷ்டிப்பொட்டு வைத்துவிட்டார். பின், தன் கையில் இருந்த மல்லிச்சரத்தை அவள் கூந்தலில் இட்டு இரு தோள்களிலும் வழியவிட்டார்.

“தாங்க்ஸ்மா. அப்பாவும் வர்ஷினியும் எங்கேம்மா?”

அப்போது உள்ளேயிருந்து “வாம்மா” என வந்தார் லக்ஷுமணன். அவரிடமும் தன் வாழ்த்துகளைக் கூறி காலில் விழுந்து பணிந்து எழுந்த நேரம் “வந்துட்டியா வானரமே” என்று நின்றாள் வர்ஷினி, ஆடம்பரம் அதிகம் இல்லாத ஃபேன்சி சாரியில். அந்த பிங்க் வண்ணம் வர்ஷினியின் வெண்மை நிறத்திற்கு மேலும் அழகு சேர்த்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.